பங்குனி உத்திரத்தன்று இறைவனடி சேர்வது ...மன்னிக்கவும் இறைவனடி பணிவது சாலச்சிறந்தது என்று சைவ, வைணவ, கௌமார பக்தர்கள் ஒருங்கேற சொல்வதால் கோவிலுக்குச் செல்வது நல்லதென்று பட்டது. வடக்கு ரத வீதியை அடைந்த எனக்கு அங்கிருந்தே கோவிலுக்கு வரிசை தொடங்குவது சற்று ஆச்சரியமாக இருந்தது. இந்த கொரோனா காலத்தில் அவரவர்கள் வீட்டில் இருக்கக்கூடாதா, இப்படியா கூட்டம் சேர்வது என்று திட்டிக்கொண்டே வரிசையில் நின்றேன். நான் மட்டும் ஏன் கோவிலுக்குப் போகிறேன் என்கிறீர்களா ! அது வந்து... வந்து.... வந்து.....
இறைவனை ஆழ்ந்து தியானிப்பதே நல்லது. கோவிலுக்கு செல்லும் நினைவு வந்ததிலிருந்து, தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கும் வரை இறைவனைத் தவிர எந்த நினைப்பும் இருக்கக்கூடாது என்று நம்பும் எனக்கு வரிசையில் நின்றிருந்த மற்றவர்கள் மேல் கோபம் ! இருக்காதா பின்னே சள சளவெனப் பேச்சு, சிரிப்பு, கும்மாளம்.... தேவைதானா !
வரிசை எவ்வளவு நீளமென கேட்டேன்.... உங்கள் முறை வருவதற்கு நாலு மணி நேரமாகும் என்றார் முன்னிருந்த பேச்சாளி ! இருக்காதா பின்னே.... பங்குனி உத்திரம் கூட்டமென்றால் சாதாரணமா !
ஆண், பெண், ஏழை பணக்காரன் என்று ஜாதி பேதமின்றி பலர் வரிசையிலிருந்தாலும், பலர் நீரில்லாமல் பாழான நெற்றியுடன் இருந்தது சற்று உறுத்தலாக இருந்தது. அது சரி, பக்தி மனதில் இருந்தால் சரி ! பேண்ட் ஷர்ட்டுடன் ஒரு ஜென்டில்மேன், முண்டு சட்டையில் ஒரு குஞ்சுமோன், பர்தாவில் ஒரு பேகம், சரிதாண்டா என ஒரு சர்தார்ஜி என சமத்துவம் நிறைந்த வரிசை !
"டாக்டர் சர்டிபிகேட் வச்சிருக்கியா" பெரியவரே என்று கேட்டவரை முறைத்தேன் !
உலகத்துக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியநாத சுவாமியை பார்க்க வந்திருக்கும் எனக்கெதுக்கப்பா டாக்டர் சர்டிபிகேட் என்று திருவிளையாடற்புராண சிவனாகக் கொதித்தேன் !
எனக்குப் பின்னாலிருந்தவர் என்னை அமைதிப்படுத்தி.... "மாமா ! டாக்டர் சர்டிபிகேட் இல்லேன்னா ஊசி போடமாட்டாங்க" என்றார்
ஊசியா ! என்ன எழவுடா சொல்றே என்று கொதித்தேன்
முன்னாலிருந்த பாழும் நெற்றிக்காரரர் ......."ஏ...பெருசு... வரிசைன்னா என்ன ஏதுன்னு கேக்கறது இல்லையா ! இது தடுப்பூசிக்கான க்யூ ! கோவில் தொறக்க மணிக்கணக்குல ஆகும் ! கோவில் அய்யரே நமக்கு முன்னால வரிசைல தான் நிக்குறாரு ! அவர் ஊசி போட்ட பொறவுதான் கோவில் நடையத் தொறக்கணும்"
'அடப்பாவி எல்லாம் என் தப்பா! நாமதான் பக்தி முத்திப் போயி தப்பான கியூல நிக்குறோமா' என்று செந்தமிழில் இருந்து கடுந்தமிழுக்கு சிந்தனையின் ஃப்ரீக்வன்ஸியை மாற்றினேன் !
இதென்ன அத்திவரதர் தரிசன வரிசையை விட நீளமா இருக்கு. இந்த வரிசைல காத்திருந்தா கோவிட் வராமலேயே மோக்ஷம் கிடைச்ச்சுடும் போல இருக்கே !
நோயிலிரிருந்து இந்த உலகத்தைக் காக்க பவரோக வைத்தியநாதரை வேண்டலாம் என்று சந்நிதி சென்றடைந்தேன். கோவில் அர்ச்சகர் வேக்ஸின் (தடுப்பூசி ) வரிசையிலிருந்தாலும் புண்ணியவான் நடையை திறந்துவிட்டுப் போயிருந்ததால் சுவாமி தரிசனம் கிடைத்தது ! பாரதத்தையும் ஸர்வஜனங்களையும் கொரோனாவிலிருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர் சீனாவிடமிருந்து காப்பாற்று என்று கும்புடு போட்டு விட்டுக் கிளம்பினேன்!
சரியாக கிளம்பும்போது மொபைலில் அழைப்பு. சென்னையிலிருக்கும் என் மகளிடமிருந்துதான் ..... சென்னையில் கொரோனா ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டதாம். முதல் இன்னிங்ஸ் பிசுபிசுத்து விட்டாலும், இந்தியக் கிரிக்கெட் அணியைப் போல இரண்டாவது இன்னிங்ஸ் பலமாக இருக்குமாம் என்று பீதியைப் கிளம்பினாள்.
இந்த தடவை ஆண்களுக்குத்த்தான் பாதிப்பு பலமா இருக்குமாம்... அதுவும் அவிட்ட நட்சத்திரம்மூணாம் நாலாம் பாதம் ரொம்ப கஷ்டம்னு ஐராவதநல்லூர் ரத்தினசபாபதி இண்ணைக்கு காலைலதான் டிவில "கோட்சாரமும்,. கோவக்சினும்" ங்கிற ப்ரோக்ராம்ல சொன்னார். நீ அவிட்ட நட்சத்திரமோல்லியோ அதான் உனக்கு உடனே ஃ போன் செய்றேன்.
"வெளிலே வந்ததுதான் வந்தே அப்பிடியே வேக்சின் போட்டுட்டே வந்துடு ! அம்மாகிட்டே நான் சொல்லிக்கிறேன் " என்று என் பதிலுக்கு காத்திராமல் அடுக்ககிக் கொண்டே போனாள் . ....."ஆதார் கார்ட் கைல இருக்கோல்லியோ! "
"நான் என்ன சொல்றேன்னா" என்ற என் குரல் குறைப்பிரசவமாக முடிந்தது.
ஆண் பெண் சம உரிமை வேண்டும் என்று இனிமேல் ஆண்கள் போராடவேன்டும் . நம் பேச்சை யாரும் கேட்பதில்லை !
வீட்டுக்கு லேட்டா வந்தா அர்ச்சனா சுவீட்டோடதான் வரணும் என்ற பழைய விளம்பர பாணியில் நாம் வேக்சினேஷன் சர்டிபிகேட்டோட போனால் தான் வீட்டுக்குள் விடுவார்கள் என்று தோன்றியது .
அரசாங்க ஆஸ்பத்திரியில் வேக்சினேஷன் போட்டுக்கொண்டால் அமெரிக்காவில் இருக்கும் என் பையனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும். ப்ளடி கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல் என்று ஒன்றுக்கு 108 ஜபம் செய்வான் ! நம் கவர்ன்மெண்டை இந்தியாவில் இருக்கும் யார் திட்டினாலும் இந்த பித்த உடம்பு தாங்கிக் கொள்கிறது. ஆனால் இந்தியாவை நிர்க்கதியாக விட்டு விட்டு வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் எவர் சொன்னாலும் பேதை மனம் படாதபாடு படுகிறது.
இங்கு வேக்சினேஷன் போடப்படும் என்ற பெரிய பதாகையைப் பார்ததுவிட்டு அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தேன். குளுகுளு ஏசி, பீட்டர் இங்கிலீஷ் ரிசப்ஷனிஸ்ட், டெட்டால் மணம் எல்லாம் என் பர்ஸுக்கு வரவிருக்கும் வேட்டு பற்றி பறை சாற்றியது !
வேக்சினேஷன் செய்யவேண்டும் என்றததும் 'குழந்தை எங்கே' என்றாள். "
நான்தான் எங்கம்மாவுக்கு கடைசிக்கு குழந்தை, எனக்குத்த்தான் வேக்சினேஷன்" என்ற என்னைப் பார்த்து புன்னைகைத்தாள்.
அங்கிள் ! நாங்க DPT , போலியோ, சின்னம்மை, பெரியம்மைக்குத்தான் வேக்சினேஷன் போடுவோம். நீங்க எங்க போர்டுஐ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என்றாள்
ஏம்மா! ஊர் என்றால் உறையூர், மலரென்றால் தாமரை என்பது பழமொழி . அதுபோல இந்த கொரோனா காலத்தில வேக்சின்னு சொன்னா கோவிட் வேக்சின்னுதான் அர்த்தம் என்ற என்னை "ஜெயம்" திரைப்பட நாயகி பாணியில் வார்ததையில்லாமல் சைகையால் துரத்தினாள்.
இல்லை !!
இது எதுவும் இல்லேன்னா உங்களுக்கு வேக்சின் கிடையாது .....
வியாதி இல்லைங்கிறது ஏதோ கொலைக் குத்தம் போல பார்த்தார் !
"சரி போனாப் போகுது ! எங்க ஹாஸ்பிடல்ல அவுட் பேஷண்டா 3 மணி நேரத்துக்கு அட்மிட் ஆகுங்க. உங்களுக்கு எல்லா செக்கப்பும் எடுத்துட்டு எங்க டாக்டர் உங்களுக்கு வியாதி இருக்கிறது மாதிரி சர்ட்டிகிபிகேட் கொடுப்பார் . அதை வச்சு உங்களுக்கு வேக்சின் கொடுக்கலாம் . வேக்சின் வெறும் 250 தான்.!
அவுட் பேஷண்ட் சார்ஜ், ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் , எம்.ஆர். ஐ, எல்லாம் 20% தள்ளுபடியோட வெறும் 24,000 த்துல முடுஞ்சுடும். வேக்சின் போட்டதுக்கப்பறம் ஒரு அரை மணி நேரம் முற்றிலும் இலவசமா இங்கேயே தங்கலாம். எதுவும் இல்லேன்னா வீட்டுக்குப் போகலாம். எதுவும் பிரச்சனைன்னா ஒரு ரெண்டு நாள் தங்கி எல்லா டேஸ்டும் பண்ணிப் பார்த்துடலாம் !
ஆம்னி பஸ் அத்வான மோட்டலுள் நுழையும்போது சர்வர் மாஸ்டரை தோசைக்கல் காயப் போடச்சொல்வது போல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் என்னை பலிகடா போல் பார்த்தது என்னை மிரள வைத்தது !
ஆஸ்பத்திரி முதலாளி என்பவர் முன்னாள் கசாப்புக் கடைக்காரர் என்பது ஏனோ அபசகுனமாக நினைவுக்கு வர, இந்த தள்ளாத வயதிலும் (ரஜினி அரசியலை விட்டு ஓடியது போல ) குதித்து எஸ்கிப்பினேன் !
நமக்கெல்லாம் அரசே கதியென்று தோன்ற அரசு மருத்துவனைக்கு நடையைக் கட்டினேன்.
எதிர்பார்த்ததற்கு மாறாக, தடுப்பூசி மையம் சுத்தமாகவே இருந்தது ! பினாயில் மணம் சற்று மூக்கைத் துளைத்தது. டெட்டால் மணத்துக்கு ஆசைப்பட்டு பினாமி ஆஸ்பத்திரியில் சொத்தை இழப்பதற்கு பினாயில் நாற்றத்தை தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.
அரசனுக்கு ஆசைப்பட்டு புருஷனை பிடிக்காமல் போனது போல எல்லோரும் தனியார் ஆஸ்பத்திரி போனது எனக்கு சவுகரியமாகப் போய்விட்டது . இங்கு அதிக கூட்டம் இல்லை. பினாமி ஆஸ்பத்திரியில் இழந்த நம்பிக்கை இங்கு மீட்டெடுக்கப்பட்டது . மத்திய அரசின் திட்டம் என்பதாலும், தேர்தல் சமீபிப்பதாலும் ஒவ்வொரு மையத்திலும் 4-5 அலுவலர்கள், ஒரு டாக்டர், இலவச வேக்சின் , இலவச மாத்திரைகள், ஏகப்பட்ட கேள்விகள் என்று ஒரே உபசரிப்பு.
இப்பிறவிக்கு பெருமை சேர்க்க, மறுமையை எளிதில் எட்ட, பெயர் சொல்லும் படி எந்த வியாதியும் இல்லாத காரணத்த்தால் மீண்டும் நிராகரிக்கும் நிலைக்கு வந்தேன். அரசு அலுவலகங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு குறுக்கு வழி உண்டு என்பதால் , ஏதாவது ஒரு வியாதி இருப்பதாக ஒரு ஃ பார்மில் எழுதிவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள். அன்பளிப்பு ஏதும் எதிர்பார்க்காமல் !
உங்களுக்கு கோவிஷீல்டு வேணுமா இல்லை கோவாக்ஸின் வேண்டுமா ?????
எனக்கு கோவாக்ஸின் தான் வேண்டும்
எங்ககிட்ட கோவிஷீல்டு ஸ்டாக் தான் இருக்கு ! அதுதான் போடமுடியும்
பின்னே எதுக்கு எது வேணும்னு கேட்டீங்க
இது மத்திய அரசு உத்தரவு .... பேஷண்ட் கிட்ட கேட்டுட்டு அதுக்கப்புறம் எது ஸ்டாக் இருக்கோ அந்த ஊசி போடணும்னு ! (போங்கடா அப்ரசண்டிக்களா என்று மனதுக்குள் திட்டினேன் )
சரி சரியென்று ஒரு வழியாக ஊசி போடும் ஆண் நர்ஸ் முன்னால் உட்க்கார்ந்து கொண்டேன். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்... நமக்கெல்லாம் ஸ்நேகாவா ஊசி போட வருவா... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குன்னு உசிலை மணியோ ஊசிப்போன போண்டா மணியோ தான் !
ஊசி போடணும்னா பேண்ட் கழட்டணுமா ??? கேட்டது நான் !
பேண்ட் கழட்டுறதும் கழட்டாததும் உங்க இஷடம் ..... நான் கைலதான் ஊசி போடுவேன் ..... விவேக் சமேத டாக்டர் மாத்ருபூதம் நினைவுக்கு வந்தார் !
ஊசி போட்டுக்கொண்ட பிறகு ஒரு அரை மணி அவர்களது கண்காணிப்பில் காத்திருக்கவேண்டியிருந்தது. என்னுடன் இருந்த சக காத்திருப்பாளர்கள் பல விதத்தில் பீதியைக் கிளப்பினார்கள். அவர்கள் வாட்ஸெப்ப்பால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்தது.
கோவிஷீல்ட் போட்டுக்கொண்டால் காது மந்தமாயிடுமாமில்லே !
முதல் டோஸ் போடும்போது வலியில்லேன்னா மருந்து வேலை செய்யலைன்னு அர்த்தமாம் ! வேறே வாக்சின் போடணுமாம் !
முதல் டோஸைவிட இரண்டாவது டோஸ்தான் பக்கவிளைவுகள், வலி ஜாஸ்தியா இருக்குமாம் !
ஊசி வலியை விட வதந்திகள் அதிக தொந்திரவு செய்ததனால் மௌனம் கலைத்த்தேன்
ஒண்ணு புரிஞ்சுக்கோங்க ! இது வரைக்கும் யாருக்குமே ரெண்டாவது டோஸ் கொடுக்கவே ஆரம்பிக்கல . அப்படி இருக்கும்போது 2வது டோஸ் அதிகம் வலிக்கும்னு சொல்றது புருடான்னு புரியலையா !
நான் சொன்னது உரைத்ததோ இல்லையோ எல்லோரும் படபடவென நான் சொன்ன தகவலை தங்களது சொந்தக் கண்டுபிடிப்பாக உடனே வாட்ஸெப்பில் அனுப்பி ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்!
செலவில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெருமையில் போரில் வென்ற மாவீரனைப்போல் பூரித்து வீட்டுக்கு வந்த எனக்கு ஆச்சர்யம் காத்த்திருந்தது. வீட்டு வாசலில் என்னை வரவேற்க கையில் ஆரத்தித் தட்டுடன் என் மனைவி.
ஆனாலும் ஒரு வேக்ஸின் போட்டுக் கொண்டதற்கு ஆரத்தி, வரவேற்பு எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற எனக்கு கைமேல் மூக்குடைப்பு கிடைத்தது.
ஆரத்தி ஒண்ணுதான் குறைச்சல். பீட்ரூட் நறுக்கின தண்ணியை வாசல்ல இருக்கிற செடிக்கு ஊத்தலாம்னு வந்தேன் !
"அதெல்லாம் போகட்டும். இப்போ முனிசிபாலிட்டிலேயிருந்து வந்தாஙக. இல்லதரசிஙகளெல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னு வீட்டுகே வந்து வேக்சின் போட்டுட்டுப் போனாங்க. 10 க்ரோசின் மாத்திரை ஃப்ரீயா கொடுத்துட்டு போனாங்க !
ரெண்டு நாளைக்கு ஜுரம் வரலாமாம். அதுனால நான் சமைக்க மாட்டேன். நீங்களே சிம்பிளா சமைச்சிடுங்க ! ஸ்விக்கியோ, போக்கியோ அதில் ஆர்டர் பண்ணி பணத்தை கரியாக்காதீங்க.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்!
ஆண்டவா இதென்ன சோதனை... கஷ்டமே படாதவங்க ரெஸ்ட் எடுக்கிறதும், கஷ்டப்பட்டு வந்த ஆண்கள் மீண்டும் மீண்டும் துவைக்கப்படுறதும் !
இதுக்கு ஒரு முடிவே இல்லையா !
அஅஅஅவ்வ்வ்வ் !