Friday, October 22, 2021

வடைகளிலே பல வகை உண்டு

புரட்டாசி மாதம், மகாளய பக்ஷம்(காலம்)  என ஒரே பக்தி சிரத்தையாக காலத்தை  கடத்தி, ஒரே கோவில் குளம்னு சுத்தி ஆன்மீகமாகவே போஸ்ட் போட்டு அலுத்துட்டதுனால வரப்போற தீபாவளிக்கு முன்னோட்டமா ஒரு "தீனி பக்ஷம்" .

இந்தப்  பதிவுல சதுர அடைப்புக்குறிக்கு [  ] உள்ளே இருக்கும் கமெண்ட் அடியேனின் மனசாட்சி. ஏதோ  ஒரு ஃ ப்ளோவில் ஓவரா புருடா விட்டா மனசாட்சி காட்டிக் கொடுத்துவிடும்.

எண்  சாண்  உடம்பிற்கு வயிறே பிரதானம்  என்பதால்  சாப்பாடு சம்பந்தமான ஒரு பதிவு [ அண்ணே, எண்  சாண்  உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுதானே பழமொழி

சரி ! சரி ! மனசாட்சி டூட்டி  சரியாய்ப் பார்க்கிறதா என்று சோதித்துப் பார்ததேன் .  ஒழுங்காகத்தான் வேலை பார்க்கிறது !


 வடைகளிலே பல வகை உண்டு

அதில் நான் கண்ட வகையும் சில உண்டு

வெண்மை  நிறம் அது உளுந்த வடை 

பவள நிறம் அது ஆமை வடை 

பச்சை நிறம் அது கீரை வடை 

மஞ்சள் நிறம் அது தவல வடை 

வான வில்லின் நிறம் அது மசால் வடை !

எத்தனை நிறமாய் அவற்றின் உடை 

கொலஸ்ட்ரால் இருந்தால்  எல்லாம் தடை !  


மலர்களில் பல நிறம் கண்டேன் என  பெரியாழ்வார்  வேடத்தில் சிவாஜி பாடியது நினைவுக்கு வந்தால் அது என் தவறல்ல.  அந்தப் பாடலின் காப்பி அல்ல .... ஒரு உத்வேகம் ...இன்ஸ்பிரஷன் தான் .  [ ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்தால் திருட்டு.... பல புத்தகங்களில் இருந்து எடுத்தால்  திரட்டு என்பார்களே அது போலவா அண்ணே  !] 



வடை என்பது உளுந்த வடை, ஆமை வடை என்று  மட்டும் நம் வட்டத்தை சுருக்கிக் கொள்ளாமல் பரந்த நோக்குடன் பார்த்தால்  வடை என்பது  ஒரு  கை  விரல்களால் எண்ணக்கூடியதல்ல !


உலகெங்கும் பறந்து வடையின் வட்ட, விட்ட, ஆரத்தை ஆராய்வோம் !


முதலில் வடை என்பதன் இலக்கணம்.   பருப்பு, அரிசி போன்ற தானியங்களின் கலவைகளை எண்ணையில் இட்டு பொரிப்பது . கையளவு மனசு இருக்கலாம் ஆனால் கையளவே வடை என்று இலக்கணத்தை சுருக்கினால் நஷ்டம் நமக்கே.   பல வகை வடைகள் விட்டுப்போய் விடும். 


முதலில் நம்மூரில் இருந்தே வருவோம் .  அதிகப் பிரசித்தமானது உளுந்த வடை....  நல்லது  கெட்டது  என எல்லா வீட்டு விசேஷங்களிலும் ஆஜராவது.   நீரில்லா நெற்றி பாழ் , வடையில்லா  உண்டி பாழ்  என்பது ஒளவையார் வாக்கு !  [ ரைமிங்கா வரணும்னா வரைமுறை இல்லாமல் ஒளவையை இழுப்பது அராஜகம் அண்ணே !


மெது வடை alias  உளுந்த வடை 


அன்றரைத்த  மாவின் சுவை செந்தாமரையை வென்றதம்மா என்பார்  ராமாயணத்தில்  [ ஓ .... கம்பர் வரைக்கும் போயிட்டீங்களோ .... நல்ல வேளை  கம்பர் எழுதியது பாரதம்னு சொல்லலியே.... அந்த மட்டுக்கும்  கம்பர் தப்பிச்சார் ! 


அப்போது அரைத்த உளுந்த மாவில் கிரமப்படி பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை , உப்பு போட்டு மந்த்ரா கடலெண்ணெயில்  பொரித்தெடுத்தால்  கிடைப்பது சொர்க்கத்தின் முதல் படி.  [ டிங்...டிங். டிங் ... இந்த வரியை உங்களுக்கு வழங்குபவர்கள் இதயம் எண்ணெய்  நிறுவனத்தார்]

 

அடேய் மனசாட்சி.... கம்பேனி  சீக்ரெட்ட வெளில சொல்லாதேடா !


பொரித்த உடன் சாப்பிட்டால் மெல்லும்  போதே வாயில் ஒலி  எழுப்பும். கரக்கு முருக்கென்று   [ அண்ணே ! பொரித்த  உடனே சாப்பிட்டால் நாக்கும் பொரிந்து  போகும் ஜாக்கிரதை !. பொறுத்தார்தான்  பூமியாள்வார் ]. 


ஆறிய பிறகு சாப்பிட்டால்   ஒலி  கிடையாது ! ருசி மட்டும்.


நாலு பேர் இருக்கும் வீட்டில் டஜன் கணக்கில் செய்து விட்டு திண்டாடுபவர்களும் உண்டு. பலர் வீட்டில் ஹோட்டலில் செய்வது போல் சரியான பக்குவம் வராது.  சிலர் செய்யும் வடை தட்டை மாதிரி ஆகி விடும்... சிலர் செய்வது இட்லி போல் நடுவில் மாவு வெந்தும் வேகாமலும்... . கணவன்மார்களுக்கு வேறு வழியில்லை விட்டத்தை பார்த்துக்  கொண்டே ஒரு வழியாக முழுங்கி விடுவார்கள்.  ஆனால்  குழந்தைகள் அப்படிக் கிடையாது பிடிக்கவில்லை என்றால் எழுந்து ஓடி விடுவார்கள். 


மூன்று வேளை  கட்டாயப்படுத்தி சாப்பிட்டும் தீராமல் இருக்கும் வடைகளை சாம்பார், ரசம், தயிர் என்று எல்லாவற்றிலும் ஊறப்போட்டு வித விதமாய், வடையில் நூல் வரும்வரை சாப்பிடலாம் எனக் கண்டுபிடித்தது தமிழர்கள்தான்!  


அதே உளுந்தவடையில், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் சப்பையாகத் தட்டி ஸ்பெஷல் வடை, செட்டிநாடு வடை என இஷ்டத்துக்கு பேர் வைத்து  அதிக விலையில் சங்கீதா, சரவணபவனில் போணி  செய்வார்கள் !  காலை அரைத்த பழைய மாவுதான் இப்படி தசாவதாரம் எடுக்கிறது என்பது தெரியாமல் சொத்தைக் கரைக்கும் அப்பாவித்  தமிழனை  என்ன சொல்ல  !


உளுந்த வடைக்கு மெது வடை என ஒரு செல்லப்பெயரும் உண்டு.  இந்தாப்பா மெது வடை, உன் சுரைக்கப்பரையை  காண்பி என்று பிச்சைக்காரனுக்குப் போட்டு கப்பரையில்  ஓட்டை விழும் அளவுக்கு மெதுவான வடை பற்றி 70களில்  குமுதத்தில் ஜோக் படித்திருக்கிறேன்.  


அதே உளுந்தமாவில் பாசிப்பருப்பு சேர்த்தோ சேர்க்காமலோ  தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து மிகவும் சன்னமாகத் தட்டும் வடை வட தமிழ்நாட்டு ஆஞ்சநேயர் கோவில்களில்  வடைமாலையாக உருவெடுக்கும். ஒரு வேளை  வடதமிழ்நாடு, வடதமிழ்நாடு என் பெருமையாகச் சொல்வதற்கு இதுதான் காரணமோ !

 

தென் தமிழகத்து வடை மாலை அன்றே  காலி செய்து விடவேண்டும்.  வட தமிழகத்து வடை மாலையை விபூதி குங்குமம் போல பல மாதங்கள் வைத்துக் கொள்ளலாம்.  இந்த வடைக்கு ஆஞ்சநேயர் வடை என்பது காரணவாகுபெயர்.


ஆஞ்சநேயர் வடை 

ஆஞ்சநேயர் வடை கடைகளில் கிடைக்காது... கோவிலில் மட்டுமே .  வருடம் ஒரு முறை மினரல் வாட்டர் பாட்டிலுடன் தமிழகம் வரும் NRIக்கள்   , ஒரே மாதத்தில் எல்லா உணவுகளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்ற ஆர்வத்தை உபயோகப்படுத்தி அடையார் கிராண்ட் சுவீட்ஸ் அறிமுகப்படுத்தியது மிளகு வடை . ஆஞ்சநேயர் வடை+ மிளகு - பச்சைமிளகாய் = மிளகு வடை என்பது அதன் சீக்ரெட் ஃபார்முலா. அடையார் கிராண்ட் சுவீட்ஸ் ரெட்டியார்  வேட்டி  துண்டு தவிர ஆசைப்படாத தொழில் பக்தியாளர். அவர் ஆட்டோவில் சென்று கூட யாரும் பார்த்ததில்லை. ஆனால்  அவரது சந்ததியினர் அவர் விட்டுச் சென்ற நற்பெயரை  உபயோகப்படுத்தி மெர்சிடிஸ் / அவ்டி காரில் வலம்  வருகின்றனர். அவர்கள் கோட்டை விட்டது 'பொருட்களின் தரம்" . 


மிஞ்சிய வடையை தயிர், ரசம்,  சாம்பாரில் போட்டு மேலே கொத்தமல்லி, காராபூந்தி தூவி தயிர் வடை , ரசம்வடை ,  சாம்பார் வடை என விதவிதமாக நாடு முழுதும் ஏமாற்றப்படுகிறோம்.  இதில் இன்னொரு தொழில் ரகசியம் சொல்லட்டுமா. ஹோட்டல்களில் வடைகளை வெந்நீரில் தான் ஊறப்போட்டு மொத்தமாக வைத்திருப்பார்கள். நீங் கள்  தயிர் வடை கேட்டால், நீர்வடையை ஒரு கிண்ணத்தில் போட்டு  தயிர், காராபூந்தி, கொத்துமல்லி போட்டு மேக்கப் போட்டு   மணப்பெண் போல எடுத்து வருவார்கள். அதிக விலைக்கு மேல் ஸ்தல வரிகள் தனி !


சாம்பார் வடை கேட்டால்  நீர்வடையை சாம்பார், வெங்காயம், கொத்துமல்லி போட்டு GST யுடன்  பரிமாறுவார்கள். மோர்க்குழம்பு வடையும் ,ரச வடையும் அப்படித்த்தான் !   வராதது பாயச வடை மட்டும்தான் . அதுவும் சத்தமாகச் சொல்லக்கூடாது, எவனாவது  ஹோட்டல்காரன்  கேட்டு விடுவான் 


நாடு கடத்தப்பட்ட தயிர் வடையின் பஞ்சாபி அவதாரம்தான் தஹி-பல்லா (Dahi -Bhalla ). அந்த ஊரில் மேக்கப் சாதனங்கள் மாத்திரம் சற்று மாறும்.  கொஞ்சம் உப்பு தூக்கலாக, எருமைத்தயிர், சாட்-மசாலா எல்லாம் தூவி ஹோலி அன்று வெளியில் வரும் பாமரேனியன் நாய் போல...... வடை ஊசிப்போய்  நூல் வராமல் இருக்க ஜிலுஜிலுப்பாக வைத்திருப்பார்கள் ! 


தஹி பல்லா 

சாதா உளுந்த வடை மொறு மொறுப்பாக இருக்க  அரைத்த உளுந்த மாவில் ப்ரெட்-பொடி  தூவி நம் கண்ணில் மண் தூவுவார்கள். 

உளுந்த வடை தட்டுவதும் ஒரு கலை . வாழை இலையில் சிறிது எண்ணெய்  தடவி வடை தட்டி அதை  உருமாறாமல்  வாணலியில் இட  வேண்டும். கொஞ்சம் தப்பினால் எண்ணெய்  மேலே தெறிக்கும்.  பல இல்லத்தரசிகள் வடை தட்டத் தெரியாமல் கரண்டியால் மாவை அள்ளி  வாணலியில் ஊற்றுவார்கள்.  முதலில் பலகாரம் செய்யலாம் அதற்குப்பிறகு அதற்கு வடை, போண்டா, குணுக்கு என்று  நிலைமைக்குத்  தகுந்தாற்போல் ஏதாவது ஒரு பெயர்  வைத்துக் கொள்ளலாம் என்பது அவர்கள் கணக்கு .  [குழந்தைக்கு பெயர் குழந்தை பிறந்தபிறகுதானே வைக்கிறோம். வடைக்கு மாத்திரம் ஏன்  முதலிலேயே பேர் வைக்கவேண்டும் ]


நான் கூட மனசாட்சி உறங்கி விட்டதோ என்று நினைத்தேன்... இல்லை 😅😅😅


ஓரு உணவகத்தில் வாழை இலைக்குப் பதில் பால்  கவரில் வடை தட்டினார்கள்.  பஜ்ஜியில் நடுவில் வாழைக்காய்க்குப் பதிலாக பிளாஸ்டிக் பேப்பர் வரும் நாள் தொலைவில் இல்லை ! 


மெது வடையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மலையாளி, என்ன பார்க்கிறாய் என்று கேட்டதற்கு, வடை  செய்த  பிறகு எப்படி இவ்வளவு அழகாக துளை போடுகிறீர்கள் என்ற ஜோக் 1960லேயே பிரசித்தம் !  சந்தர்ப்பம் நழுவிவிட்டதே என்பதைச் சொல்ல இந்த நாளில் "வட  போச்சே " என்று சொல்வது முதல் வடை நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து விட்டது !


அதே வடை மாவு, ஒரு சில பல் தேங்காய் போட்டு வட்டத்துக்கு பதிலா உருண்டையாகத் தட்டி, பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செயதால் அதன் பெயர்   மைசூர் போண்டா !  பெங்களூர் MTR ல் அந்த போண்டாவை சாம்பாரும் இல்லாமல் ரசமும் இல்லாத ஒரு நடுவாந்திர திரவத்தில் முக்கித் தருகிறார்கள். அதன் பெயர் போண்டா- சூப்.  முதன்முதலாக செட்-தியரி எட்டாம் வகுப்பில் அறிமுகப்படுத்திய போது  புரிந்தது போலும்  இருக்கும் ஆனால் புரியாது. அப்படி ஒரு இனம்புரியாத சுவை போண்டா சூப் ! 

மைசூர் போண்டா 

கர்நாடகத்தின் நாட்டுக்கான அர்பணிப்பு "மத்தூர் வடை (Maddur Vade)". மாண்ட்யா மாவட்டத்தின் மத்தூர் கிராமத்தில் தோன்றியதால் அந்தப் பெயர். அரிசி மாவில், சேமியா, மைதா சேர்க்கப்பட்டு உருவாவது.


 கர்நாடகத்தின்       அண்டைய மாநிலமான மஹாராஷடிராவின் கண்டுபிடிப்பு சாபுதான வடை. நீ சேமியாவில் வடை செஞ்சா நான் ஜவ்வரிசியில் செய்யமாட்டேனா என்று வந்தது சாபுதான வடை. செல்லப்பெயர் சாபு வடை. 




வடை உலகின் ராஜா  உளுந்த வடை அதனால்தான் அதைப்பற்றியும் அதன் சின்னவீடு போண்டா,  ஆசாரமான பெரிய வீடு ஆஞ்சநேயர் வடை, பரிவாரங்கள் சாம்பார், ரச, தயிர்  வடைகளைப்  பற்றி ஒரு பேருரை தேவைப்பட்டது. 


சோழ  மன்னன் உளுந்த வடை என்றால் பாண்டிய மன்னன் ஆமை வடை என்கிற பருப்பு வடை . புகழுக்கும், கீர்த்திக்கு குறைவில்லை.  உளுந்த வடை ஆசார சீலர் என்றால் ஆமைவடை யதார்த்தவாதி. உளுந்தவடைக்கு உளுந்து மாத்திரமே தேவை. ஆமை வடைக்கு மூன்று பருப்புகள் உபயோகப்படுத்தப்படும்   அந்த  பருப்புகளின் விகிதாசாரங்கள்  தெரிந்தோ தெரியாமலோ மாற்றப்படும் போது பல வகைகள் தோன்றும். 


கடலை, துவர , பாசிபருப்புகள் கலந்து , சற்று கரடு முரடாக அரைக்கப்பட்டு, காரம், உப்பு, பெருங்காயம் சேர்த்தால் வருவது ஆமை வடை. இந்த வடையின் வெளித்தோற்றம் ஆமையின் வெளிப்புறம் போல இருப்பதால் பருப்புவடைக்கு  ஆமை வடை என பட்டப்பெயர். எம்ஜியாருக்கு ராமச்சந்திரன் என்ற இயற்பெயரை விட வாத்தியார் என்ற பட்டப்பெயர் அதிகப் பிரசித்தம் ஆனது போல பருப்பு வடைக்கு ஆமை வடை என்ற பெயர் நிலைத்துவிட்டது .  [ உளுந்த வடைல உளுந்து இருக்கும் .....ஆமை வடைல  ஆமை இருக்குமாங்கிற 1950ன் கடி ஜோக் சொல்ல மறந்துட்டீங்க ]  


டிவியில் உண்மைச் சம்பவம்ன்னு சொல்லிட்டு எல்லாம் கட்டுக்கதையா இருக்குமில்லையா...அது போல ஆமைவடை  என்பது ஓர் தவறான சொல்வழக்கு (misnomer ). அது சுத்த சைவ உணவு !

ஆமை வடை 

சாதாரண பருப்பு வடையில்  வெங்காயம்,  கொத்தமல்லி தழை , புதினா, இத்யாதி இத்யாதி மசாலாக்கள் சேர்த்தால் வருவது மசால் வடை. ஈரோட்டில மசால் வடை செஞ்சா கரூர் வரை வாசனை வரும்.  முக்கியமான ஒரு தகவல். பூனைக்கு அடுத்தபடி அதிகமாக எலியைப்  பிடிக்க உதவியது இந்த மசால் வடை தான் என்கிறது நாசா வெளியிட்ட அதிரடி தகவல்  [அறிஞர் அண்ணணே  ! நீங்க சொல்றதை  அப்பாவிகள் நம்பனும்னு எதுக்கு நாஸாவை  இழுக்குறீங்க .  திருநள்ளாறுக்கு  மேலே சாட்டிலைட் ஸ்தம்பித்தது,  மீனாட்சி கோவிலின் அமைப்பைப் பார்த்து நாஸா  ராக்கெட் தடுமாறியது என்று யூடூப்பில்    யு-டியூபில் கட்டுக்கதை விடுறாங்ககளே .... அந்த பொழப்பு உங்களுக்கு தேவையா ! ]


எலிப்பொறிக்கு உற்ற தோழன் மசால் வடை. வெளிநாட்டு எலிக்கு வேணும்னா சீஸ் -cheese , pancake  சரிப்படும். ஆனால் நம்மூர் எலிக்கு  இல்லத்தரசிகள் நம்புவது மசால் வடைதான். அதுவும் வீட்டிலே பூர்ணா-கடலையெண்ணையில் செய்யும் வடையைவிட  கடையில் பாமாயிலில் செய்யும் மசால் வடைதான் எலிகளின் முதல் சாய்ஸ்  டிங்...டிங். டிங் ... இந்த வரியை உங்களுக்கு வழங்குபவர்கள் பூர்ணா  எண்ணெய்  நிறுவனத்தார் ]

மசால் வடை 

மசால் வடையின் ஒன்று விட்ட ஆசாரமான சகோதரன் தவலவடை. மசால்வடையில் வெங்காயம் வகையாறாக்களை நீக்கி தேங்காய்ப்பல்  கலந்து உருண்டையும் இல்லாமல், தட்டையும் இல்லாமல் நடுவாந்திரமாக செய்தால் அதுதான் தவலவடை ஆமை வடை போல தவலவடையும்  செய்யாத குற்றத்திற்கு  பழியை சுமந்து கொண்டிருக்கிறது. இதுவும் சுத்த சைவம்தான். தவளையெல்லாம் மாவில் கலக்கமாட்டார்கள்.  ஆமை, தவளை என்பதெல்லாம் எலியை ஏமாற்ற போட்ட சதித்திட்டமாக இருக்கும் !

தவல வடை 

பஞ்சாபில் அந்தக் காலத்திலேயே தோசையிலே  வன்முறையைப் புகுத்தி கீமா டோசா , மட்டன் டோசா  என ஏலம்  விட்டுக்  கொண்டிருந்தார்கள். நிச்சயம் வடையிலும்  கோழியையும், ஆட்டையும் புகுத்தி புரட்சி செய்திருப்பார்கள்.

வடைமாவுக்கான     பொருட்களை  ஒரு மாற்றத்திற்கு அரிசியும் சேர்த்து நிறம் மாற்றி சற்று காரம் சேர்த்து கரடு முரடாக உருட்டிப் பொரித்தால்  காரவடை  தயார். காராவடை  என்பதும் அதுவே. 


காராவடை 


ராஜஸ்தானில் கல்மி வடா  என்று ஒன்று உண்டு.




மெதுவடையின்  பரிணாம வளர்ச்சி மைசூர் போண்டா ... அந்த போண்டாவுக்குள் உருளைக்கிழங்கு மசால் திணித்து வந்த மற்றொரு பரிணாமம்  உ.கி. போண்டா. தமிழகத்தில் பிரபலம்.

அதே போண்டாவுக்குள் இனிப்பாக பருப்பு பூரணம்  நிரப்பினால்  அது சுகையல் / சுகையம் / சீயம். பருப்பு பூரணத்திற்கு பதிலாக தேங்காய் பூரணம் இட்டு பொரித்ததால் சோம்பேறிகளின்  கொழுக்கட்டை ரெடி.  அன்றன்றைய பூஜைக்கு / ஹோமத்திற்கு அன்றன்றைக்கு கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள்  பொரித்த கொழுக்கட்டையை சால்ஜாப்பாக செய்வார்கள்.

சுகையல் / சுகையம் / சீயம்

இதுவரை பார்த்தது இந்திய வடை வகைகள்தான்.  உலகெங்கிலும்  வடை வகைகள் உண்டு.  ஆனால் அதிகம் பிரசித்தி இல்லை. நாம்தான் ஓஸோன்  மண்டலத்தில் ஓட்டை விழும் அளவு வடை  சாப்பிடுகிறோம். 


கிரீஸில் மத்திய கிழக்கு நாடுகளில் பலாபெல்  (Falafel )  என்ற பெயரில் பச்சை  கொண்டைக்கடலையை  எள்ளுடன் அரைத்து வடை மாதிரி செய்வார்கள். 


பலாபெல்  (Falafel )

மத்தியகிழக்கு நாடிகளில் இருந்த யூதர்கள் அறிமுகப்படுத்த 19ம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவில் பலாபெல்  (Falafel ) உண்டு. பார்த்தீர்களா அதுவும் வட-அமேரிக்கா 

மெக்சிகன் பலாபெல்

தமிழர்கள், இந்தியர்கள்  தான் வீரமானவர்கள். வடையை தைரியமாக சாப்பிடுவோம். அரபு நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் வடையை சப்பாத்தியில் ஒளித்துவைத்து சாப்பிடுவார்கள்.... கோழைகள்  !

சப்பாத்தி தோல் போர்த்திய பலாபெல் 

வடையில் இத்தனை நிறங்கள்களா , வகைகளா என ஆச்சரியப்படும் விதத்தில் வெரைட்டி  !

நம்மூரில் வடைமாவில் உளுந்துக்கு பதிலாக அரிசி போட்டு, வெல்லமும்  ஏலக்காயும் போட்டு வடையில் அடுத்த பரிமாணத்தை கொணர்ந்தால் அது அதிரசம் மற்றும்  அப்பம்.

அதிரசம் 

வெள்ளைக்காரன் நமக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் அல்ல. நம் அதிரச பாணத்திற்கு அவன் விட்ட எதிர் பாணம்தான்  டோனட்  (DONUT ).   வடை மாதிரி எண்ணையில் பொரித்து பாதுஷா மாதிரி சர்க்கரைப் பாகில் நனைத்து எடுப்பார்கள்.  நாம் பாட்டி வடை சுட்ட கதையில் காகத்தை அறிமுகப்படுத்தியது போல வெள்ளைநாடுகளில் காகத்திற்கு டோனட்டை கொடுத்தார்கள் ~  அமெரிக்க காகம் டோனட் சாப்பிடுவதை டாம் & ஜெரியில்  பார்த்திருக்கலாம். 



சினிமாவில் கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரியை காப்பாற்றிய அந்தணர் சொல்லும் உபதேசம் " ஆயிரம் காகங்கள் வரினும்  ஒரு கல்லை எதிர்நிற்குமோ ! எத்தனை துன்பங்கள் வரினும் முருகனின் கருணை என்ற ஒன்று இருந்தால் போதும், எல்லாத்  துன்பமும் பறந்து போகும் "


மேற்சொன்ன  எல்லாப்பண்டங்களில்  இருக்கும் எண்ணெய் , மாவு, புரதம், உருளைக் கிழங்கு ஆயிரம் காகங்ககளைப் போல ஒரு சேர உங்களுக்கு கொடுக்க வல்லது 'வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரணம்".  அந்த துன்பங்களில் இருந்து முருகப்பெருமானின் கருணையைப் போல உங்களைக் காக்கவல்லது இஞ்சி  என்ற ஒரு அருமருந்து.  இத்தனை  வகை வடைகளையும்  தின்று விட்டு இஞ்சியை மறந்து விட்டால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். 


பிறவிப்  பெருங்கடல் என்ற துன்பத்திலிருந்து விடுபட பக்தர்களைக் காப்பாற்ற ஒரு ஓடம் தேவை. அந்த ஓடக்காரன்தான் சீர்காழியில் இருக்கும் தோணியப்பன்  (சிவபெருமான்).  அந்தப் பெயரை வேறு ஒரு மதத்தினர் காப்பியடித்து அந்தோணி என்று வைத்துள்ளார்களோ என்று அடியென்னுக்கு சந்தேகம்.  


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


என்று வள்ளுவர் நாலடியாரில் சொன்னது போல  [ அண்ணே  நான் முழிச்சுகிட்டு தான் இருக்கேன்.  தொல்காப்பியர் எழுதிய கம்பராமாயணம் என்று ஏதோ  முன்னாள் முதலமைச்சரை கேலி செய்வது போல இருக்கிறதே


தெரியும் தெரியும்... பதிவின் கடைசியில இருக்கோமுன்னு உன்னை எழுப்பினேன். மனசாட்சி தூங்கிடுச்சுன்னு வருங்கால சரித்திரம் என்னை பழிக்கக் கூடாது பாரு !

அப்பேர்ப்பட்ட  இஞ்சியை நாடினால் மட்டுமே வாயுத்தொல்லை என்ற பெருங்கக்கடலிலிருந்து மீளமுடியும் ! 

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். பாதம் அல்வா விலைக்கு தீபாவளி லேகியம் (கிராண்ட் சுவீட்ஸ்லில்  (போன வருடம் கிலோ 1200 ரூபாய் ...இந்த வருடம் எகிறியிருக்கும் ) விற்கும்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும், எது அதிகம் தேவை என்று. தீபாவளியை அளவாகக் கொண்டாடி வளமாக வாழ  மாதவத்தால் மட்டுமே அடையமுடியக்கூடிய மாதவனின் தாழ் வணங்கி வாழ்த்துகிறேன் !

இத்தனைக்கும் மேலே பிறவிப்பயன் என்று ஒன்று இருந்தால் அது அழகர்கோவில் தோசை தான்.  பேர்தான் தோசை... ஆனால் அது சற்று பெரிய வடை. கிடடத்தட்ட பருப்பு வடைக்கு போடும் பொருட்களை அரிசியுடன் அரைத்து தோசை போல் பெரிதாக ஊற்றி வடை போல் நெய்  (ஆமாங்க நெய்தான்)  வாணலியில் பொரித்து எடுப்பார்கள்.  அழகர்கோவில் பிரசாத ஸ்டாலில்  மற்ற எல்லா பக்ஷணங்களும் கவுண்டரிலேலேயே கிடைக்கும், இந்த தோசை மாத்திரம் டோக்கன் வாங்கி மடப்பள்ளியில் ஆர்டரின் பேரில் பொரிப்பார்கள்.   மேலும் தகவலுக்கு: https://www.vikatan.com/food/food/madurai-alagar-kovil-temple-special-samba-dosa

அழகர் கோவில் தோசை 

திருமாலிருன்சாலை என்ற அழகர்கோவிலைச் சுற்றி சோலைகள், வயல்வெளிகள். நூபுர கங்கையின் ஊற்று நீர், அறுவடை செய்ததும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்கும் தானியங்களின் சிறப்பு, கடவுள் தயை என எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தாலோ என்னமோ ஒரு தனி சுவை !  


 பின்குறிப்பு/ பொறுப்பு துறப்பு : இங்கே இருக்கும் தகவல்கள் தகவல்களே... பரிந்துரை அல்ல ! . எல்லாவற்றையும் செய்து, விழுங்கி உடம்புக்கு வந்தால் அடியேனோ கூகுள் நிறுவனமோ பொறுப்பல்ல.  வடை செய்து பார் என்று மட்டுமே சொல்லுவோம் . சாப்பிட்டுப் பார்ப்பது உங்கள் ரிஸ்க். 

Saturday, October 16, 2021

தமிழில் அர்ச்சனை

 ஸமஸ்க்ருதத்தில்  தமிழில் அர்ச்சனை 


இந்தக் கட்டுரையைப்  படித்து விட்டு அடியேன் ஏதோ தமிழினத் துரோகி, சங்கி, புல்லுருவி, என்று முடிவு கட்டி கீழே கமெண்ட் செக்ஷனில் தங்களுக்குத் தெரிந்த நல்வார்த்தைகளால் (சுபாஷிதானி )அர்ச்சனை செய்ப்பவர்களை தடுக்க மாட்டேன். ஆனால் ஒரே ஒரு தகவலைச் சொல்லிவிட்டு விட்டுவிடுகிறேன். 


எவர் ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன்  போன்ற  இரண்டு பாவக் கிரகங்கள்  இருக்கிறதோ அவரை  எதிர்ப்பவர் தொலைந்தார் ( ஆதாரம்: கல்யாண வர்மா 10ம் நூற்றாண்டில் எழுதிய ஸாராவளி). அடியேனுக்கு ஆறாம் வீட்டில் சூரியனையும் சேர்த்துஇரண்டு அல்ல.... மூன்றே மூன்று பாவக்கிரகங்கள்  ஆஜர், , என்று உங்கள்  நன்மைக்காக நினைவு கூர்கிறேன்.


 சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.....


1974ல் முதல் முறையாக மீனாக்ஷி  அம்மன் சன்னிதியில் ஒரு பலகை பார்த்தேன்.  "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என.



அது வரை கோவிலில் புரியாத சமஸ்கிருத  மந்திரங்களையே கேட்டுப்  பழகிய நமக்குப்  அது புதிதாக இருந்தது. எந்த மொழியில் இருந்தால் என்ன, நமக்கு கோவில் பிரசாதக் கடையில்  கிடைக்க வேண்டிய லட்டும், தேங்குழலும் கிடைத்ததால் போதும் என்ற பிள்ளைப்  பிராயம். பத்து  பன்னிரண்டு  வயதிலேயே  சீர் தூக்க்கிப் பார்க்க நாமென்ன திருஞானசம்பந்தரா ??


அரசியல் காரணங்களுக்காக தமிழில் அர்ச்சனை அறிமுகப்படுத்தப் பட்டாலும், கரைவேட்டிகளும், வட்டங்களும், மாவட்டங்களும் தங்களுக்கு எனும்போது  ஸமஸ்க்ரிதத்திலேயே அர்ச்சனை இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். தெய்வ குத்தமாயிடுச்சுன்னா கஷ்டமில்லையா ! பொது மக்களும் தமிழில்  அர்ச்சனை என்பதை பெரிதாகக்  கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் மறந்தும் விட்டோம்.

எப்படியும் கோவில் அர்ச்சகர்களும் 108 பகவன் நாமாக்களை  சொல்லப்போவதில்லை... அவர் பொதுவாக  "மாவும்" "மாவும்" (முதல் வரியின் அந்தம் நமஹ மற்றும் இரண்டாவது வரியின்ஆதி  ஓம் இரண்டும் சேர்த்தால்  வரவேண்டியது நமஹ.... ஓம் ஆனால் வருவது மாவும்) என்று சொல்வதுதான் நமக்குக்  கேட்கும். நாலு தடவை மாவும்  மாவும்  மாவும் என்று சத்தமிட்டு தேங்காயை "ணங்" என்று உடைத்து விட்டால் அவர் கடமை முடிந்தது. நமக்கு திருப்தி அவர் திரும்பி வரும் வரை இறைவன் சன்னதி முன் நிற்கும் அந்த தெய்வீக உணர்வு.



தமிழ் அர்ச்சனை வேண்டுமா வேண்டாமா என்பதல்ல இன்று நாம்  அசை  போடவிருக்கும் தலைப்பு. தாய் மொழியில் அர்ச்சனை இருந்தால் 200% சரிதான்.  தாய் மொழிதான் முதலில் !   மொழிபெயர்ப்பு மட்டும் போதுமா என்பதுதான் கேள்வி !


என்னதான் அமெரிக்காவில் இருந்தாலும், அந்த ஊர் ஆங்கிலத்தில்+ஆக்ஸெண்டில் பேசினாலும் கீழே விழும் பொது அம்மா என்று தான் தமிழில் (தாய் மொழியில்) அலறுவார்கள்.  முதலில் வருவது, தன்னிச்சை செயலாக தாய் மொழிதான்.



வாரியார் சுவாமி பாணியில் சொல்லவேண்டுமென்றால் லண்டனில் இருக்கும் பசுமாடு கூட அம்மான்னு தான் கத்தும். மதர்ர்ர்ர்னு கத்தாது !


கோவிலில் மற்றும்  வீட்டு பூஜை அறையில் கடவுளிடம் வேண்டும் போது தாய் மொழியில் தானே (மனதிற்குள்) பேசுகிறோம்.  கடவுள் எல்லா மதத்தினருக்கும் பொது, எல்லா மொழி பக்தர்களின் குறையையும் தீர்க்கிறார் எனவே எல்லா பாஷையும் அறிந்தவர் என்று அவரிடம் கையில் ஹிந்தி டிக்ஷனரியோ அல்லது Google  Translate app ஓ வைத்துக் கொண்டு நாமறியாத ஹிந்தியில் பிரார்த்திக்க மாட்டோமல்லவா !. 


எனவே தமிழ் வழிபாடு முற்றிலும் சரி. 


பிரச்னை பாஷையில் அல்ல! மற்ற மொழி தோத்திரங்களை, அர்ச்சனை நாமாக்களை  அந்த பாஷையில்  மொழிபெயர்க்க முயல்வது தீர்வல்ல !


உதாரணத்திற்கு  திவ்விய பிரபந்தத்தில் ஒரு பாசுரம் 


புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்

இகழ்வோம் மதிப்போம்  மதியோம் இகழோம்  மற்று-

எங்கள் மால்! செங்கண் மால்!  சீறல்நீ, தீவினையோம் 

எங்கள் மால் கண்டாய் இவை.  

இந்தப் பாடலை மொழிபெயர்க்கப்போனால் அதே பொருள் கிடைக்கும், ஆனால் அதே பாவம் (Bhavam ), அதே பக்தி, அதே எதுகை மோனை, அந்தாதி வடிவம் கிடைக்குமா ? !   (இதற்கு அடுத்த பாசுரம் இவை என்று தொடங்கும்)

பல இடங்களில்  மொழி பெயர்ப்பு என்பது சரியான பொருளைக் / அர்த்தத்தைக் குறிக்காது .  உதாரணத்திற்கு திருமாலை கேசவா  என்போம், பூவராஹா என்போம். அவற்றை நேராக  மொழிபெயர்த்தால் வருவது நாராசமாக இருக்கும் . கேசவா என்றால் மயிரை உடையவனே  என்றும் பூவராஹா என்றால் நிலப்பன்றி  என்றா சொல்ல முடியும் ( நன்றி: MC  ஹை ஸ்கூல் தமிழ்+ சமஸ்கிருத வாத்தியார் பி.எல். ராகவன் அவர்கள்...... அவர் கேசவன் என்ற வார்த்தைக்கு சொன்ன மொழிபெயர்ப்பை அச்சிடமுடியாது.   PLR  அவர்கள் தமிழ் பற்றாளர்+ ஆசிரியர்  ஆனாலும் மொழிமாற்றை கடிந்தவர் ) 


பூவராகன் என்ற சொல்லுக்கு உண்மையான (புதைந்துள்ள) பொருள்: கடலிலுள் மூழ்கிய பூமியை வராஹ அவதாரம் எடுத்து மீட்டு இந்த பூலோகத்தை ரட்சித்த மஹாவிஷ்ணுவே உனக்கு நன்றி !

மந்திரம் என்பது சூட்சமம்,  ஸ்தூலம் என்று இரண்டு பகுதியைக் கொண்டது.  (இந்த இடத்தில் சூட்சமம்,  ஸ்தூலம்  என்ற வார்த்தைகளை உட்கருத்து , வெளிக்கருத்து  என்று தோராயமாகக் கொள்ளலாம்). 

மொழி பெயர்த்தல் வெறும் ஸ்தூலத்தையே வெளிப்படுத்தும்.  சூட்சமக்  கருத்தை வெளிப்படுத்தாது .  

ஸமஸ்க்ரிதத்தை  தமிழில் மொழிபெயர்த்த்தாலும்,  தமிழை  ஸமஸ்க்ரிதத்தில்   மொழிபெயர்த்த்தாலும்  அதே கதி ...அதோ கதிதான். 

சென்னா  படூரா நன்றாக இருக்கும் அதே போல அடை அவியல் அபாரம். படூராவை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்களேன். ஹி ஹிஹி.. அது அப்படியப்படி  இருந்தால்தான் விசேஷம்.

இன்னொரு வகையில் பார்த்தால்  நமது பிரார்த்தனை இரண்டு வகைப்பட்டது.  (1)  FORMAT based - வடிவு-வரையறுக்குட்படுவது & (2) Free  form  - வரையறையற்றது 

முதலாவது  ஸ்லோகம் ( திவ்விய பிரபந்தம்,  லிங்காஷடகம்  போன்றது )....இரண்டாவது    உரை வடிவம் (பேசும் தமிழ்) .... 

உரைநடை வடிவ சம்பாஷணை கடவுளிடம் எப்படி வேண்டுமானால் இருக்கலாம்.... கடவுளை நீ, வா போ என்று ஒருமையில் அழைக்கலாம்.... என்னைக் கைவிட்டிட்டால் நான் உன் கோவிலுக்கு வரவே மாட்டேன் என்று உதார் காட்டலாம்,  என் பிரார்த்தனையை நிறைவேற்றினால் பக்கத்து வீட்டு சீனுவுக்கு மொட்டை போடுகிறேன் என்று டீல் பேசலாம்.... உங்கள் இஷ்டம்.



ஆனால்  முதலாவதான ஸ்லோகம் என்பது மிலிட்டரி ஆர்டர் போன்றது...அதது  அப்படித்தான் இருக்க வேண்டும்.  மாற்றக்கூடாது, மாற்றமுடியாதது.  ஸ்லோகம் சொல்வது கத்திமுனையில் நடப்பது போன்றது. சிறு தவறும் எதிர் மாறான   விளைவுகளை ஏற்படுத்தலாம்  


நான்கு வேதங்களையும் கரை கண்ட பிரம்ம தேவன் செய்த யாகத்திலேயே ஒரு வார்த்தையின் ஒரு எழுத்தின் உச்சரிப்பு  தவறானதால் "அஜம்" என்ற ஆடு தோன்றி கண்ணுக்கெட்டியதயையெல்லாம் அழித்தது  தெரிந்திருக்கலாம் ! அந்த ஆட்டின் ஆட்டத்தை அடக்க பல காலம் ஆயிற்று.


கம்ப்யூட்டர் காலத்தில்  புரியும் படி ஒரு உதாரணம் சொல்கிறேன்.   உங்களது இ-மெயில் அக்கவுண்டில் பாஸ்வேர்டில்  ஒரு சிறு தவறிருந்தாலும் உள்ளே விடாது இல்லையா !  நான் என் தாய் மொழியில் தான் போடுவேன் என்று வீம்புக்கு மூன்று தடவை உங்கள் மொழியில் தட்டினால், அது அக்கவுண்டையே லாக் செய்து விடும்.


கேவலம்.... இலவசமாகக் கிடைக்கும் ஒரு ஈமெயில் அக்கவுண்ட்  கதவு திறக்கவே இந்த வரைமுறை என்றால்  பாற்கடல் வாசனின் ஏழு கதவுகளும் திறக்க எவ்வளவு நெறிமுறை இருக்கவேண்டும்.


Netflix நெட்ப்ளிக்ஸ் அமேசான் ப்ரைம், யு-டுயூப்  கூறும்  நல்லுலகிற்கு அவர்களுக்கு புரியும் படி ஒரு உதாரணம்....

அரண்மனை-3 என்ற (தமிழில் மூலமான) திரைப்படத்தை தமிழில்  பார்க்க ரூபாய் 100. அதே திரைப்படம் "ராஜ் மஹால்-3 " என்ற பெயரில் ஹிந்தியில், ஒரியாவில், கொரியாவில்  பார்க்க வேண்டுமென்றால் இலவசம்.  மொழிபெயர்ப்பு (டப்பிங்) லக்‌ஷணம் அவ்வளவுதான்.

அரைத்த மாவையே திரும்பத்  திரும்ப பலமுறை பேய்களை வைத்து அரைத்த அரைகுறை திரைப்படத்திற்கே இந்த மரியாதை என்றால், வடதிசை தாழ்ந்து  தென் திசை உயர, அதை சமன் செய்த அகத்தியருக்கு பொதிகை மலையில்  பார்வதி திருமணம் லைவ் டெலிகேஸ்ட் செய்த சிவபெருமானுக்கு  என்ன மரியாதை கொடுக்க வேண்டும்....எந்த அளவு  பக்தி காட்டவேண்டும்.


சினிமாப்பாட்டுக்கு வேண்டுமென்றால் வைரமுத்துவை அழைத்து  ட்யூன் கொடுத்து வார்த்தைகளை  கோடிட்ட இடத்தில் நிரப்பவிடலாம். அவரும் "அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்கு மேலே தண்ணி ஊத்து " என்று எழுதி கலைமாமணி ஆகிவிடுவார்.  ஆனால் பக்தி என்பது அப்படிப்பட்டதல்லவே ! 


நால்வரில் ஒருவரான சுந்தரரின் பாடல் இனிமைக்காகவே திருக்கச்சூரில் வீடுவீடாக இரந்து  சோறு சமைத்த சிவபெருமானை சுந்தரர் பாடலால் பக்தி செய்தால்  கவர்வது எளிதல்லவா!


மந்திரங்கள் மிகவும் ஆராய்ந்து புனையப்பட்டவை. நமக்கு கண்ணுக்குத்  தெரிவது வார்த்தைகளாக இருக்கலாம் ....ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் (Frequency ) அதிர்வலைகள் கண்ணுக்குப் புலப்படா. 


தமிழில் சம்ஸ்கிருத மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் இருக்கலாம். தமிழில் புரந்தர தாசர் பாடல்  இருக்கலாம். ஆனால் அது வெறும் மொழி மாற்றத்தால் மட்டும் ஆகக்கூடியதல்ல.   அதற்கு ஒரு பெரியாழ்வாரையோ, ஒரு தாயமானவரையோ அல்லது அருணகிரியாரையோ அழைத்து வாருங்கள்.  

30 நாட்களில் TNPSC  வேலை என்ற புத்தகத்தை தேர்வுக்கு முதல் நாள் படித்து மறு  நாள் கக்கி என்னைபோன்ற முட்டாள்களில் முதல் ஆளாகத் தேர்ந்த ஒரு பாடநூல் கழக சிப்பந்தியால் முடியாத காரியம்..... விஷப் பரீட்சை.  (எனது சகோதரி பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்ன  போது  அவர் சொன்ன வசனம் தான் : இதென்ன பெரிய சமாச்சாரம்!  பரமக்குடியில்  இருக்கும் முட்டாள்களில்  முதல் ஆள்தானே 


பிரார்த்தனை  என்பது வாட்சப்  செய்தி மாதிரி.... சொற்குற்றம், பொருட்குற்றம், அச்சுப்பிழை,  என்ற எல்லாம் இருக்கலாம் கவலையில்லை. 


ஆனால் அர்ச்சனை, பாராயணம், ஸ்லோகம் போன்றவை பாஸ்வேர்ட் மாதிரி. ஒரு தவறு இருந்தாலும் வேலைக்கு உதவாது !


அர்ச்சனை போன்றவை அவற்றின் மூல பாஷையிலே இருக்கட்டும்.  இல்லை வீம்புக்கு நான் மொழி பெயர்ப்பேன் என்று சொல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள  Google  Translate உதவியுடன் செய்யப்பட்ட இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப்   படித்து புரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகலாம். 


மனதிடம் உள்ளவர்களுக்காக இதோ கட்டுரையின் மொழிபெயர்ப்பு (ஒரு பகுதி): 


After reading this article, I will not stop those who conclude that Adiyan is a Tamil traitor, chunky, mistletoe, and swear by the words they know (Subashithani) in the comment section below. But let me just say one piece of information and leave.


If there is a Sun and two more sinful planets in the sixth place for Lakkinam in one's horoscope, the opponent is lost. (Source: Saravana written by Kalyana Varma in 10th century). I remind you for your benefit that Adien has six sin planets in the sixth house, including Azar and the sun.

 Let us come to the subject .....


I first saw a board in 1974 at the Meenakshi Amman Sannidhi. As "Tamil is also worshiped here".


😆😆😆😆



Tuesday, October 12, 2021

சேயாறு (செய்யாறு) பாலகுஜாம்பாள் உடனுறை வேதபுரீஸ்வரர் திருக்கோவில்

தந்தை சிவபெருமானைத்துதித்து  தவமேற்றும் போது  மகனாகிய  முருகப்பெருமான் தோற்றுவித்த நதிதான் சேயாறு . சேய் +ஆறு = சேயாறு. அது தற்பொழுது செய்யாறு எனப்படுகிறது. செய்யாறு நதிக்கரையில் இருக்கும் ஊர் செய்யாறு என்ற குறு நகரம் சுமார் 50,000 மக்கட்தொகை கொண்டது.


சேயாறு நதிக்கரையில் அமைந்த திருக்கோவில் வேதபுரீஸ்வரர்  கோவில். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தின் தாத்பரியம் உணர இறைவன் ஓதியதால் திரு ஓதூர் என்று  பெயர் அமைந்தது.  தமிழுக்கு இனி மெல்லச் சாவு என்று புகழப்படும் நம் காலத்தில் இப்பெயர் உருமாறி திரு(வோ)ஓத்தூர் எனப்படுகிறது.


செய்யாறு நகரத்தில், நதியின் ஓர் ஓரத்தில் அமைந்த திருவோத்தூரில் அமைந்திருக்கிறது வேதபுரீஸ்வரர் கோவில். சைவக்குரவலர்கள்  நால்வரில் முதல்வரான ஞானசம்பந்தராலும்,  பக்தியில் சந்தத்தை  தந்த அருணகிரிநாதராலும்  பாடப்பட்ட  ஸ்தலம்.



நதிக்கரையில் அமைந்த இந்தக் கோவில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய ஒரு பக்தர் பனைமரங்களை நதிக்கரையில் வரிசையாக நட்டார் . ஆனால் அவை அனைத்தும் ஆண்  பனையென்பதால், காய்கள் காய்க்கவில்லை.  அக்காலத்தில் மிகுதியாக இருந்த ஜைனர்கள் (சமணர்கள்) அந்த பக்தரிடம் ஏளனமாக  'ஏன்  உன் அப்பன் பரமசிவனிடம் சொல்லி இந்த ஆண்  பனைமரங்களில் காய் வரச்செய்யக்கூடாதா"' என்று சொன்னார்கள். 


அந்த அன்பரும் ஏனைய பக்தர்களும் செய்வதறியாது பலநாட்கள் வெட்கத்தில் கழித்தனர்   இக்கோவிலுக்கு எழுந்தருளிய ஞானசம்பந்தர் 

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே.

என்று தொடங்கும் பதிக்கதைப் பாடினார் (திருக்கடைக்காப்பு). பதினோராவது பதிகம் பாடி முடிக்க அங்கிருந்த பனைமரங்கள் அனைத்தும் குறும்புகளை ஈன்று பிள்ளைப்பெருமானின் பெருமையையும் அவர் தொழும்  இறைவனின் மகிமையையும் நிலைநாட்டின. இப்பனைமரங்களின் வாரிசுகளை இன்றும் காணலாம்.

ஆடி மாதத்தில் வேதபுரீஸ்வரர்கோயிலில் உள்ள பனைமரத்தில் இருந்து தானாக விழும் பழங்களை எடுத்து குழந்தை இல்லாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.


பெரிய கோவில், ஆனால் ஒரே ஒரு வாசல் தான். கல்யாண கோடி என்ற பெயரில் ஒரு தீர்த்தம். பனை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஐந்து பாடல் பெற்ற  தலங்களுள் இதுவும் ஒன்று. 


அழகான கோவில் ....சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. பக்தர்கள் குறைவாக வருவதனாலோ என்னமோ ! நாங்கள் சென்ற நாளில் (செவ்வாய்க்கிழமை  - 12/10/2021) நாங்கள் மாத்திரமே !



திருவண்ணாமலை மாவட்டதிற்கு  வெளியே அவ்வளவாக பிரசித்தம் இல்லாததால், இந்தக் கோவிலைப் பற்றி அடியேன் அறிந்திருக்கவில்லை....இவ்வளவு பெரிய கோவிலை எதிர்பார்க்கவில்லை. 

கோவில் கொண்டுள்ள இறைவனின் திருமூர்த்தங்களின் வயது தெரியவில்லை. இன்று நாம் காணும் கோவில் வளாகம் ஆறாம் நூற்றாண்டில்  கட்டப்பட்டது. 



அரசு தூங்கினாலும் பக்தர்கள் தூங்கமாட்டார்கள். பக்த கோடிகளின் கைங்கரியத்தில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.  கோவிலில் தற்போது பாலாலயம்.  

என்று அரசு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்குமோ தெரியவில்லை! அரசின் ஒரே கைங்கரியம் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய பள்ளிக்கான 3-4 அறைகள் . இந்த சின்ன ஊரில் காலியிடத்திற்கு என்ன குறை. கோவில் நிலைத்தை ஆக்கிரமித்து, அழகைப் பாழடித்து ஒரு கட்டிடம் தேவையா??.... இத்தனைக்கும் 200 மீட்டர் தொலைவில்தான் அரசு பள்ளி.


கீழ்காணும் படத்தில் கண்ணை உறுத்தும் அந்த கட்டிடம் கோவிலின் ஒரு பகுதியல்ல. 2004ல் கட்டப்பட வகுப்புகள். 


மற்ற கோவில்களில் இல்லாத வகையில் நந்தி வாயிலை நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதம் ஓதும் போது  தகுதியில்லாவர்கள் வராமலும் தக்கவர்களை மாத்திரம் அனுப்பும் நிமித்தத்தில்  நந்தி வாயில் நோக்கி அமர்ந்திருக்கிறார்.



சிவபெருமானின் 14 தாண்டவங்களில் இங்கு வீர நடனம் (தாண்டவம்). 

ஞானசம்பந்தர் ஆண்  பனையை  பெண்ணாக மாற்றிய வரலாறை நினைவு கூரும் வகையில் கோவிலில் உள்  பிராகாரத்தில் ஒரு கல் பனை. இக்கோவிலின் இன்னொரு சிறப்பு ஒரே இடத்தில் நின்றவாறு இந்த கல்-பனை, சிவன், தேவி, முருகன் விநாயகர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்க முடியும்.



தந்தையின் புகழை அறிந்தோம். சேயாறு உருவாக்கிய சேயை மறக்க முடியுமா... இக்கோவிலில் கந்தக்கடவுளை அருணகிரியார் இவ்வாறாகப் பாடியிருக்கிறார் 


தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்

     தணியாச் சாகர மேழுங் …… கிரியேழுஞ் 

சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்

     தரிகூத் தாடிய மாவுந் …… தினைகாவல் 

துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்

     துணையாத் தாழ்வற வாழும் …… பெரியோனே 

துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்

     தொலையாப் பாடலை யானும் …… புகல்வேனோ 

பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்

     பழமாய்ப் பார்மிசை வீழும் …… படிவேதம் 

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்

     பறிகோப் பாளிகள் யாருங் …… கழுவேறச் 

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்

     டிருநீற் றாலம ராடுஞ் …… சிறியோனே 

செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்

     திருவோத் தூர்தனில் மேவும் …… பெருமாளே.

திருவண்ணாமலை செல்லும் போது  ஒரு மணி அதிகம் ஒதுக்கினால் செய்யாறு இறைவனை தரிசிக்கலாம்.  


கூகுள் மேப் உதவிக்கு: https://goo.gl/maps/49byZF7MCY8fEo9GA

யூடியூப் தரிசனத்திற்கு :  https://youtu.be/1qKz-ysTdQ4


மற்றுமொரு தகவல்:  மலைக்கோவிலான ஆவணியாபுரம்  லக்ஷ்மீ நரசிம்மர் கோவில் இங்கிருந்து 20 கிமீ தொலைவில் அருகில் . சிறு குன்று . ...200 படிகள் ஏற  வேண்டும். 



ஞானசம்பந்தரின் பதிகம் (முழுமையாக) 



பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே.

இடையீர் போகா விளமுலை யாளையோர்

புடையீ ரேபுள்ளி மானுரி

உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்

சடையீ ரேயும தாளே.


உள்வேர் போல நொடிமையி னார்திறம்

கொள்வீ ரல்குலோர் கோவணம

ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்

கள்வீ ரேயும காதலே.  


தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை

ஆட்டீ ரேயடி யார்வினை

ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்

நாட்டீ ரேயரு ணல்குமே.


குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்

அழையா மேயரு ணல்குமே.


மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம்மக்க ளீரென்

றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்

நக்கீ ரேயரு ணல்குமே.


தாதார் கொன்றை தயங்கு முடியுடை

நாதா வென்று நலம்புகழ்ந்

தோதா தாருள ரோதிரு வோத்தூர்

ஆதீ ரேயரு ணல்குமே.


என்றா னிம்மலை யென்ற வரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்

என்றார் மேல்வினை யேகுமே.


நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்

சென்றார் போலுந் திசையெலாம்

ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்

நின்றீ ரேயுமை நேடியே.


கார மண்கலிங் கத்துவ ராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்

சீர வன்கழல் சேர்மினே.


குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்

அரும்பு கொன்றை யடிகளைப்

பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்

விரும்பு வார்வினை வீடே.


Saturday, October 2, 2021

இடர்குன்றம் ஸ்வயம்பு லக்ஷ்மீ நரசிம்ஹர் கோவில்


Edarkundram Suyambu Sri Lakshmi Narasimhar Temple


அர்ச்சனை டிக்கெட்,  துளசி மாலை, தேங்காய் பழம், பெயர், கோத்திரம்  நக்ஷத்திரம் சொல்லி அர்ச்சனை, அரைமணி நேர க்யூ வரிசை, இடிபாடுகளுக்குப் பின் தரிசனம், உண்டியல்  இவைதான் சுவாமி தரிசனத்திற்கான இலக்கணம் என்றால்  மேற்படி கோவில் உங்களுக்கு செட் ஆகாது.


ஆளரவமற்ற கோவில், ஏகாந்தமான தரிசனம், கோவிலில் நானும் கடவுளும் மட்டுமே என்ற வகையில் தாங்கள் ஆசைப்பட்டால்,  இடர்குன்றம் போய் வாருங்கள்.


சென்னை, செங்கல்பட்டு வாசிகளுக்கு இக்கோவில் ஒரு வரப்பிரசாதம். திருப்போரூர்- செங்கல்பட்டு (100 அடி ) சாலையில்  பூண்டி எனும் கிராமத்தில் இருந்து பிரிந்து 4 கிமீ  பிரயாணித்ததால் பச்சை பசேல் என்ற கிராமங்களுக்கு மத்தியில்  இடர்க்குன்றம்  எனும் சிறிய குன்றினால் ஆன கிராமம். புதிதாக அகலப்படுத்தப்பட்ட திருப்போரூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சென்றால் , பிரயாணம்  மிகவும் எளிது ஆனால் கடைசி 3-4 கிமீ ஜாக்கிரதையாகச் செல்லவேண்டும். தார்ச்சாலை இருந்தாலும், வளைவுகள், பள்ளங்கள் அதிகம். 



மிகச்சிறிய கிராமங்களில் கூட இணைய இணைப்பு இருப்பதால்,  கூகுள் மேப் உங்களுக்கு வழிகாட்ட, நீங்கள் பாதுகாப்பாக செல்ல  முடியும்.


கூகுள் மேப் உதவிக்கு:  https://goo.gl/maps/g7Au8zV3LZiZDdbv7


சுமார் ஐம்பதே ஐம்பது கரடுமுரடான படிகள் ஏறினால்  கோவிலை அடையலாம்.  குடும்பத்தவரோடு, பகலிலே பிரயாணிப்பது உசிதம்.   சுத்தமான காற்று மற்றும் அழகிய காட்சிகள் கூடுதல் போனஸாக இருக்கும்.



இன்று புரட்டாசி சனிக்கிழமை.....ஏகாதசி வேறு.... பெருமாள் கோவில் வேண்டாம் கூட்டமாக இருக்கும், கிராமப்புறங்களில் இருக்கும் ஏதேனும் சிவன் கோவிலுக்குப் போகலாம் என்றே அடியேனும் ஒரு நண்பரும் கிளம்பினோம்.  

நாங்கள் தரிசிக்கவிருந்த சிவனே எங்களை இத்தலத்தில் பெருமாளை தரிசிக்கப் பணித்தார் என்று தோன்றுகிறது.  காட்டூர் வைத்தியலிங்கேஸ்வரர்  கோவில் காற்று கூட புகாத அளவு இறுக்கமாக மூடியிருக்க, வேறு ஒரு பூண்டி-மயிலை விஷ்ணு கோவிலுக்கு தேடிச் சென்ற நாங்கள் வழி  தவறி இந்தக் கோவிலுக்கு வந்தடைந்தோம்.  


"அவனருளாலே  அவன் தாள்   வணங்கி" என்பதை இறைவன் எங்களுக்கு பலமுறை காண்பித்திருக்கிறான். இன்றும் நிரூபித்த்தான். நாம் எங்கு தொழ  வேண்டுமென்பது கூட அவன் சித்தம்.  எனவே சிவன் கோவிலுக்கு தாழ்  இட்டு நரசிம்மர் தாள் பணிய எம்மைப் பணித்தான்.



இடர்குன்றத்தில்  நரசிம்மர்  சுயம்பு வடிவத்தில் இருக்கிறார் (உளியால் செதுக்கிய சிற்பம் அல்ல,  தானாகவே உருவானவர் ). (பாத்ரபாத)புரட்டாசி சனி அன்று  இங்கு செல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எங்களுக்குக் வாய்த்த   ஆசீர்வாதம்.


லக்ஷ்மீ  நரசிம்மர் ஸ்வயம்பு (தான்தோன்றி ).. மூலவர் மலைசுவர்களிலே தோன்றியுள்ளார். இடைக்காடர் என்ற சித்தருக்கு இங்கு தரிசனம் தந்ததால்  இவ்வூருக்கு  இடர்க்குன்றம் என்று  ஒரு தகவல் (ஆதாரம் கேட்டால்  என்னிடம் இல்லை).


சுமார் 1500 வருடங்களாக மக்கள் வழிபட்டு வருவதாக அறிகிறோம். ஸ்வயம்பு லக்ஷ்மீ  நரசிம்மரை தவிர சிலாரூபத்தில் ஒரு மூர்த்தியையும், உற்சவரையும் காண்கிறோம். 


நரசிம்மரே உக்ர ஸ்வரூபி.... இங்கு இருக்கும் நரசிம்மர் இன்னும் உக்கிரமாக காட்சியளிக்கிறார்.  மஹாலக்ஷ்மி தாயார் அருகிலிருப்பதால் இறைவனும் இறைவியும்  பக்தர்களுக்கு தந்தை தாயாராக அருள் பாலிக்கிறார்கள் .

மூலவரை புகைப்படம் எடுப்பது முறையன்று ....எனவே அடியேன்  எடுக்கவில்லை. வேறு ஒரு பக்தர் ஆர்வத்தினால் எடுத்ததை கீழே தந்திருக்கிறேன். 


அர்ச்சகர்  வழக்கமாக காலை 10 மணிக்கு வருவார் என்று அறிகிறோம் .


அரசின் சமுதாயக்காட்டின்  ஒரு பகுதியாதால்  நம் முன்னோர்கள் (குரங்குகள்) அதிகம். நம் கையில் சாப்பிடக்கூடிய பொருட்கள் இருந்தால்  கவனமாக இருக்க வேண்டும். நம் கையில் இருக்கும் பூக்களைக்  கூட பழங்கள் என்று தவறாக நினைத்து, அவர்கள் நம்மைக்  கைகுலுக்கவருவார்கள் ...எச்சரிக்கை .


இந்த இடம் மிகவும் தனிமையாக இருப்பதால், (ஆஜானுபாகுவான ) குடும்ப உறுப்பினர்கள்  உடன் வந்தால் மனம் சஞ்சலப்படாமல் தரிசனம் செய்யலாம்.  தனியே செல்லுவதைத் தவிர்க்கவும்.  இரவு பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.


பக்தர்கள் தங்கள் கவலைகளையும் , பிரச்சினைகளையும்   மாத்திரம் கடவுளிடம் விட்டுச் சென்றால் போதுமானது. ஆனால் நம்மில் சிலர்   பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகள் , பிஸ்கட் கவர்களையம் விட்டுச்செல்வது கவலைக்குரியது.   அது சுத்தமான இந்த கோவிலுக்கு  நாம் செய்யும் அநீதி.


கோவிலுக்கு என்று வருமானமின்மை, துப்புரவு ஊழியர்கள் இல்லாமை  காரணத்தால் சில பக்தர்கள் படிகளை சுத்தம் செய்வதைக் காண முடிந்தது, அவர்களது செயலுக்கு நன்றி .


குடும்பத்தார் சகிதமாக பகல்ப் பொழுதில் சென்று பெருமாளின் அனுக்கிரத்தைப் பெறுங்கள். 

யூடியூப் https://youtu.be/4rI4rE-2W7Y 


ஓம் நமோ நாராயணா ! 


‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

 தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’



A small temple on a hillock, in a non-descript village away from the noisy city life.

 

A good place for Chennai & Chingleput residents.

 

With the availability of the newly widened Thiruporur- Chingleput highway, your drive is pretty simple but for the last 3-4 kms.

 

With internet connectivity even in  the tiniest of  villages  and Google map to guide you, you can be safe.

 

Last three kms will be through winding & narrow  roads but there is no need to worry. Villagers can be helpful if you are anxious about the route.

 

A temple on a hillock, with fifty rough steps and minimal devotees will be the blessing of your weekend. Clean air and beautiful scenery will be an added bonus.

 

Lord Narasimha is in a Swayambhu form ( not chiselled but self created). Our blessing that we had the opportunity to go here on a Bhadrapada-Purattasi Sanivara.

 

Priest is  normally available at 10 am.

 

Many monkies to give you company, but we  should be careful if we have eatables in our hand. Even flowers in our hand can be mistaken for fruits and we might receive a handshake from them.

 

There were villagers at the foothill when we went.

 

As this place is very lonely it is better to go in the company of able family members. Night travel to be avoided.

 

Plastic bottles and sachets left behind as souvenirs are an eye sore at this otherwise clean temple.

 

Some of the devotees could be seen cleaning up the steps and we can't resist thanking them for their gesture.

 Youtube  link  : https://youtu.be/4rI4rE-2W7Y

Om Vajranakhaya Vidhmahe
Tiksnadamstraya Dheemahi
Tanno Narasimha Prachothayat










குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...