ஸமஸ்க்ருதத்தில் தமிழில் அர்ச்சனை
இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு அடியேன் ஏதோ தமிழினத் துரோகி, சங்கி, புல்லுருவி, என்று முடிவு கட்டி கீழே கமெண்ட் செக்ஷனில் தங்களுக்குத் தெரிந்த நல்வார்த்தைகளால் (சுபாஷிதானி )அர்ச்சனை செய்ப்பவர்களை தடுக்க மாட்டேன். ஆனால் ஒரே ஒரு தகவலைச் சொல்லிவிட்டு விட்டுவிடுகிறேன்.
எவர் ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் சூரியன் போன்ற இரண்டு பாவக் கிரகங்கள் இருக்கிறதோ அவரை எதிர்ப்பவர் தொலைந்தார் ( ஆதாரம்: கல்யாண வர்மா 10ம் நூற்றாண்டில் எழுதிய ஸாராவளி). அடியேனுக்கு ஆறாம் வீட்டில் சூரியனையும் சேர்த்துஇரண்டு அல்ல.... மூன்றே மூன்று பாவக்கிரகங்கள் ஆஜர், , என்று உங்கள் நன்மைக்காக நினைவு கூர்கிறேன்.
சப்ஜெக்ட்டுக்கு வருவோம்.....
1974ல் முதல் முறையாக மீனாக்ஷி அம்மன் சன்னிதியில் ஒரு பலகை பார்த்தேன். "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என.
அது வரை கோவிலில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களையே கேட்டுப் பழகிய நமக்குப் அது புதிதாக இருந்தது. எந்த மொழியில் இருந்தால் என்ன, நமக்கு கோவில் பிரசாதக் கடையில் கிடைக்க வேண்டிய லட்டும், தேங்குழலும் கிடைத்ததால் போதும் என்ற பிள்ளைப் பிராயம். பத்து பன்னிரண்டு வயதிலேயே சீர் தூக்க்கிப் பார்க்க நாமென்ன திருஞானசம்பந்தரா ??
அரசியல் காரணங்களுக்காக தமிழில் அர்ச்சனை அறிமுகப்படுத்தப் பட்டாலும், கரைவேட்டிகளும், வட்டங்களும், மாவட்டங்களும் தங்களுக்கு எனும்போது ஸமஸ்க்ரிதத்திலேயே அர்ச்சனை இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். தெய்வ குத்தமாயிடுச்சுன்னா கஷ்டமில்லையா ! பொது மக்களும் தமிழில் அர்ச்சனை என்பதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் மறந்தும் விட்டோம்.
எப்படியும் கோவில் அர்ச்சகர்களும் 108 பகவன் நாமாக்களை சொல்லப்போவதில்லை... அவர் பொதுவாக "மாவும்" "மாவும்" (முதல் வரியின் அந்தம் நமஹ மற்றும் இரண்டாவது வரியின்ஆதி ஓம் இரண்டும் சேர்த்தால் வரவேண்டியது நமஹ.... ஓம் ஆனால் வருவது மாவும்) என்று சொல்வதுதான் நமக்குக் கேட்கும். நாலு தடவை மாவும் மாவும் மாவும் என்று சத்தமிட்டு தேங்காயை "ணங்" என்று உடைத்து விட்டால் அவர் கடமை முடிந்தது. நமக்கு திருப்தி அவர் திரும்பி வரும் வரை இறைவன் சன்னதி முன் நிற்கும் அந்த தெய்வீக உணர்வு.
தமிழ் அர்ச்சனை வேண்டுமா வேண்டாமா என்பதல்ல இன்று நாம் அசை போடவிருக்கும் தலைப்பு. தாய் மொழியில் அர்ச்சனை இருந்தால் 200% சரிதான். தாய் மொழிதான் முதலில் ! மொழிபெயர்ப்பு மட்டும் போதுமா என்பதுதான் கேள்வி !
என்னதான் அமெரிக்காவில் இருந்தாலும், அந்த ஊர் ஆங்கிலத்தில்+ஆக்ஸெண்டில் பேசினாலும் கீழே விழும் பொது அம்மா என்று தான் தமிழில் (தாய் மொழியில்) அலறுவார்கள். முதலில் வருவது, தன்னிச்சை செயலாக தாய் மொழிதான்.
வாரியார் சுவாமி பாணியில் சொல்லவேண்டுமென்றால் லண்டனில் இருக்கும் பசுமாடு கூட அம்மான்னு தான் கத்தும். மதர்ர்ர்ர்னு கத்தாது !
கோவிலில் மற்றும் வீட்டு பூஜை அறையில் கடவுளிடம் வேண்டும் போது தாய் மொழியில் தானே (மனதிற்குள்) பேசுகிறோம். கடவுள் எல்லா மதத்தினருக்கும் பொது, எல்லா மொழி பக்தர்களின் குறையையும் தீர்க்கிறார் எனவே எல்லா பாஷையும் அறிந்தவர் என்று அவரிடம் கையில் ஹிந்தி டிக்ஷனரியோ அல்லது Google Translate app ஓ வைத்துக் கொண்டு நாமறியாத ஹிந்தியில் பிரார்த்திக்க மாட்டோமல்லவா !.
எனவே தமிழ் வழிபாடு முற்றிலும் சரி.
பிரச்னை பாஷையில் அல்ல! மற்ற மொழி தோத்திரங்களை, அர்ச்சனை நாமாக்களை அந்த பாஷையில் மொழிபெயர்க்க முயல்வது தீர்வல்ல !
உதாரணத்திற்கு திவ்விய பிரபந்தத்தில் ஒரு பாசுரம்
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று-
எங்கள் மால்! செங்கண் மால்! சீறல்நீ, தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை.
இந்தப் பாடலை மொழிபெயர்க்கப்போனால் அதே பொருள் கிடைக்கும், ஆனால் அதே பாவம் (Bhavam ), அதே பக்தி, அதே எதுகை மோனை, அந்தாதி வடிவம் கிடைக்குமா ? ! (இதற்கு அடுத்த பாசுரம் இவை என்று தொடங்கும்)
பல இடங்களில் மொழி பெயர்ப்பு என்பது சரியான பொருளைக் / அர்த்தத்தைக் குறிக்காது . உதாரணத்திற்கு திருமாலை கேசவா என்போம், பூவராஹா என்போம். அவற்றை நேராக மொழிபெயர்த்தால் வருவது நாராசமாக இருக்கும் . கேசவா என்றால் மயிரை உடையவனே என்றும் பூவராஹா என்றால் நிலப்பன்றி என்றா சொல்ல முடியும் ( நன்றி: MC ஹை ஸ்கூல் தமிழ்+ சமஸ்கிருத வாத்தியார் பி.எல். ராகவன் அவர்கள்...... அவர் கேசவன் என்ற வார்த்தைக்கு சொன்ன மொழிபெயர்ப்பை அச்சிடமுடியாது. PLR அவர்கள் தமிழ் பற்றாளர்+ ஆசிரியர் ஆனாலும் மொழிமாற்றை கடிந்தவர் )
பூவராகன் என்ற சொல்லுக்கு உண்மையான (புதைந்துள்ள) பொருள்: கடலிலுள் மூழ்கிய பூமியை வராஹ அவதாரம் எடுத்து மீட்டு இந்த பூலோகத்தை ரட்சித்த மஹாவிஷ்ணுவே உனக்கு நன்றி !
மந்திரம் என்பது சூட்சமம், ஸ்தூலம் என்று இரண்டு பகுதியைக் கொண்டது. (இந்த இடத்தில் சூட்சமம், ஸ்தூலம் என்ற வார்த்தைகளை உட்கருத்து , வெளிக்கருத்து என்று தோராயமாகக் கொள்ளலாம்).
மொழி பெயர்த்தல் வெறும் ஸ்தூலத்தையே வெளிப்படுத்தும். சூட்சமக் கருத்தை வெளிப்படுத்தாது .
ஸமஸ்க்ரிதத்தை தமிழில் மொழிபெயர்த்த்தாலும், தமிழை ஸமஸ்க்ரிதத்தில் மொழிபெயர்த்த்தாலும் அதே கதி ...அதோ கதிதான்.
சென்னா படூரா நன்றாக இருக்கும் அதே போல அடை அவியல் அபாரம். படூராவை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்களேன். ஹி ஹிஹி.. அது அப்படியப்படி இருந்தால்தான் விசேஷம்.
இன்னொரு வகையில் பார்த்தால் நமது பிரார்த்தனை இரண்டு வகைப்பட்டது. (1) FORMAT based - வடிவு-வரையறுக்குட்படுவது & (2) Free form - வரையறையற்றது
முதலாவது ஸ்லோகம் ( திவ்விய பிரபந்தம், லிங்காஷடகம் போன்றது )....இரண்டாவது உரை வடிவம் (பேசும் தமிழ்) ....
உரைநடை வடிவ சம்பாஷணை கடவுளிடம் எப்படி வேண்டுமானால் இருக்கலாம்.... கடவுளை நீ, வா போ என்று ஒருமையில் அழைக்கலாம்.... என்னைக் கைவிட்டிட்டால் நான் உன் கோவிலுக்கு வரவே மாட்டேன் என்று உதார் காட்டலாம், என் பிரார்த்தனையை நிறைவேற்றினால் பக்கத்து வீட்டு சீனுவுக்கு மொட்டை போடுகிறேன் என்று டீல் பேசலாம்.... உங்கள் இஷ்டம்.
ஆனால் முதலாவதான ஸ்லோகம் என்பது மிலிட்டரி ஆர்டர் போன்றது...அதது அப்படித்தான் இருக்க வேண்டும். மாற்றக்கூடாது, மாற்றமுடியாதது. ஸ்லோகம் சொல்வது கத்திமுனையில் நடப்பது போன்றது. சிறு தவறும் எதிர் மாறான விளைவுகளை ஏற்படுத்தலாம்
நான்கு வேதங்களையும் கரை கண்ட பிரம்ம தேவன் செய்த யாகத்திலேயே ஒரு வார்த்தையின் ஒரு எழுத்தின் உச்சரிப்பு தவறானதால் "அஜம்" என்ற ஆடு தோன்றி கண்ணுக்கெட்டியதயையெல்லாம் அழித்தது தெரிந்திருக்கலாம் ! அந்த ஆட்டின் ஆட்டத்தை அடக்க பல காலம் ஆயிற்று.
கம்ப்யூட்டர் காலத்தில் புரியும் படி ஒரு உதாரணம் சொல்கிறேன். உங்களது இ-மெயில் அக்கவுண்டில் பாஸ்வேர்டில் ஒரு சிறு தவறிருந்தாலும் உள்ளே விடாது இல்லையா ! நான் என் தாய் மொழியில் தான் போடுவேன் என்று வீம்புக்கு மூன்று தடவை உங்கள் மொழியில் தட்டினால், அது அக்கவுண்டையே லாக் செய்து விடும்.
கேவலம்.... இலவசமாகக் கிடைக்கும் ஒரு ஈமெயில் அக்கவுண்ட் கதவு திறக்கவே இந்த வரைமுறை என்றால் பாற்கடல் வாசனின் ஏழு கதவுகளும் திறக்க எவ்வளவு நெறிமுறை இருக்கவேண்டும்.
Netflix நெட்ப்ளிக்ஸ் அமேசான் ப்ரைம், யு-டுயூப் கூறும் நல்லுலகிற்கு அவர்களுக்கு புரியும் படி ஒரு உதாரணம்....
அரண்மனை-3 என்ற (தமிழில் மூலமான) திரைப்படத்தை தமிழில் பார்க்க ரூபாய் 100. அதே திரைப்படம் "ராஜ் மஹால்-3 " என்ற பெயரில் ஹிந்தியில், ஒரியாவில், கொரியாவில் பார்க்க வேண்டுமென்றால் இலவசம். மொழிபெயர்ப்பு (டப்பிங்) லக்ஷணம் அவ்வளவுதான்.
அரைத்த மாவையே திரும்பத் திரும்ப பலமுறை பேய்களை வைத்து அரைத்த அரைகுறை திரைப்படத்திற்கே இந்த மரியாதை என்றால், வடதிசை தாழ்ந்து தென் திசை உயர, அதை சமன் செய்த அகத்தியருக்கு பொதிகை மலையில் பார்வதி திருமணம் லைவ் டெலிகேஸ்ட் செய்த சிவபெருமானுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும்....எந்த அளவு பக்தி காட்டவேண்டும்.
சினிமாப்பாட்டுக்கு வேண்டுமென்றால் வைரமுத்துவை அழைத்து ட்யூன் கொடுத்து வார்த்தைகளை கோடிட்ட இடத்தில் நிரப்பவிடலாம். அவரும் "அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்கு மேலே தண்ணி ஊத்து " என்று எழுதி கலைமாமணி ஆகிவிடுவார். ஆனால் பக்தி என்பது அப்படிப்பட்டதல்லவே !
நால்வரில் ஒருவரான சுந்தரரின் பாடல் இனிமைக்காகவே திருக்கச்சூரில் வீடுவீடாக இரந்து சோறு சமைத்த சிவபெருமானை சுந்தரர் பாடலால் பக்தி செய்தால் கவர்வது எளிதல்லவா!
மந்திரங்கள் மிகவும் ஆராய்ந்து புனையப்பட்டவை. நமக்கு கண்ணுக்குத் தெரிவது வார்த்தைகளாக இருக்கலாம் ....ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் (Frequency ) அதிர்வலைகள் கண்ணுக்குப் புலப்படா.
தமிழில் சம்ஸ்கிருத மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் இருக்கலாம். தமிழில் புரந்தர தாசர் பாடல் இருக்கலாம். ஆனால் அது வெறும் மொழி மாற்றத்தால் மட்டும் ஆகக்கூடியதல்ல. அதற்கு ஒரு பெரியாழ்வாரையோ, ஒரு தாயமானவரையோ அல்லது அருணகிரியாரையோ அழைத்து வாருங்கள்.
30 நாட்களில் TNPSC வேலை என்ற புத்தகத்தை தேர்வுக்கு முதல் நாள் படித்து மறு நாள் கக்கி என்னைபோன்ற முட்டாள்களில் முதல் ஆளாகத் தேர்ந்த ஒரு பாடநூல் கழக சிப்பந்தியால் முடியாத காரியம்..... விஷப் பரீட்சை. (எனது சகோதரி பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்ன போது அவர் சொன்ன வசனம் தான் : இதென்ன பெரிய சமாச்சாரம்! பரமக்குடியில் இருக்கும் முட்டாள்களில் முதல் ஆள்தானே )
பிரார்த்தனை என்பது வாட்சப் செய்தி மாதிரி.... சொற்குற்றம், பொருட்குற்றம், அச்சுப்பிழை, என்ற எல்லாம் இருக்கலாம் கவலையில்லை.
ஆனால் அர்ச்சனை, பாராயணம், ஸ்லோகம் போன்றவை பாஸ்வேர்ட் மாதிரி. ஒரு தவறு இருந்தாலும் வேலைக்கு உதவாது !
அர்ச்சனை போன்றவை அவற்றின் மூல பாஷையிலே இருக்கட்டும். இல்லை வீம்புக்கு நான் மொழி பெயர்ப்பேன் என்று சொல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Translate உதவியுடன் செய்யப்பட்ட இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து புரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகலாம்.
மனதிடம் உள்ளவர்களுக்காக இதோ கட்டுரையின் மொழிபெயர்ப்பு (ஒரு பகுதி):
After reading this article, I will not stop those who conclude that Adiyan is a Tamil traitor, chunky, mistletoe, and swear by the words they know (Subashithani) in the comment section below. But let me just say one piece of information and leave.
If there is a Sun and two more sinful planets in the sixth place for Lakkinam in one's horoscope, the opponent is lost. (Source: Saravana written by Kalyana Varma in 10th century). I remind you for your benefit that Adien has six sin planets in the sixth house, including Azar and the sun.
Let us come to the subject .....
I first saw a board in 1974 at the Meenakshi Amman Sannidhi. As "Tamil is also worshiped here".
😆😆😆😆
No comments:
Post a Comment