Thursday, February 4, 2021

ஏலவார்குழலி உடனுறை வாசீஸ்வரர் கோவில், வயலக்காவூர், கம்பராஜபுரம்

ஏலவார்குழலி உடனுறை வாசீஸ்வரர் கோவில், வயலக்காவூர், கம்பராஜபுரம் , காஞ்சிபுரம் மாவட்டம் 


சேயாறு எனப்பட்ட, இன்று செய்யாறு என அறியப்படும் நதி தீரத்தில் அமைந்த ஒரு பழமையான கோவில். கம்பராஜபுரம் சிவன் கோவில் என்றால் இந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஏதோ ஓரிரு வயோதிகர்களுக்குத்  தெரியலாம். அதே ஊர் இளைஞர்களிடம் கேட்டால் மொபைல் ஃபோனில் கூகுள் மேப் பார்த்துச் சொல்கிறேன் என்பார்கள். 


அவர்களைச்  சொல்லிக் குற்றமில்லை. பாலாறு, செய்யாறு நதிக்கரையை ஒட்டி, ஏகப்பட்ட கோவில்கள். சில நல்ல நிலையில், பல சிதிலமடைந்து !. பக்திப் பெருவள  காஞ்சியை ஒட்டியிருந்தததால் இப்பகுதியில் பல சைவ, வைணவ, ஜைனக்  கோவில்கள். அவற்றுள் ஜைனக்  கோவில்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தரக்கூடியது. தமிழ் ஜைனர்கள் விடாமுயற்சியால் சில திராவிட பாணி ஜைன கோவில்கள் பராமரிக்கப் படுகின்றன. பல கோவில்கள் சிதிலமடைந்து, பக்தர்களும் இன்றி, சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் !



ஆனால் மேற்சொன்ன வாசீஸ்வரன் கோவில் (அவனருளாலே ) ஓரளவு நல்ல பராமரிப்பில். பராமரிக்கும் கிராமத்து மக்களுக்கும், அர்ச்சகருக்கும்  நன்றி !


மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவிலில் இக்கோயிலில் வாசீஸ்வர சுவாமி, ஏலவார் குழலி சன்னதிகளும், உற்சவர், நவக்கிரகம், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன . 2010ல் குடமுழுக்கு செய்யப்பட்டதால் ஓரளவு புதியதாகவே தெரிகிறது . விக்கிபீடியா 19ம் நூற்றாண்டு கோவில் என்கிறது. ஆனால் கர்ப்பக்கிரகத்துக் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் இக்காலத்து தமிழில் இல்லாததால் விக்கிபீடியா தகவல் தவறென்று புரிந்தது. 


இரண்டாம் ராஜராஜன், சதயவர்மன் கால கல்வெட்டுக்கள் என்று கோவில் நிர்வாகி கூறினார். குறைந்தது 800 வருட பழமையான கோவில் எனலாம். ஆனால் மூர்த்தி அதற்கு முந்தைய காலத்திலேயே இருந்திருக்கலாம்.  கோஷ்ட மூர்த்திகளும் விதிப்படி நிர்மாணிக்கப் பட்டுள்ளன .


சில பாடல் பெற்ற கோவில்களில் கூட இல்லாத அளவு பஞ்சலோக விக்கிரகங்கள் இக்கோவிலில் உண்டு. இதனால் அந்தக் காலத்தில் இக்கோவிலுக்குக்  கொடுக்கப்பட்ட  முக்கியத்துவம் புரிகிறது. 


இன்று இருகால  பூஜை நடைபெறுகிறது.  காலை 7 முதல் 9; மாலை 5 முதல் 7 வரை கோவில் திறந்திருக்கும் என்று இருந்தாலும் கோவில் அர்ச்சகரிடம் தொலைபேசியில் (8778564442) கேட்டு பின் செல்வது நன்று 





No comments:

Important temples of Southern India

  Temples are not merely a physical structure or a monument but a wonderful focal point that have remained focal points for several millenni...