Thursday, February 4, 2021

திருபுவன நாயகி உடனுறை மாகறலீஸ்வர் திருக்கோவில் , மாகறல்

திருபுவன நாயகி உடனுறை மாகறலீஸ்வர் திருக்கோவில் 


 காஞ்சிக்கு அருகே மாகறல் என்ற சிறு கிராமத்தில்  இறைவன் மாகறலீஸ்வர் என்ற திருநாமத்தில் லிங்கத் திருமேனியுடன், மற்ற லிங்கவடிவிலிருந்து மாறுபட்டு  சற்றே வித்தியாசமான வடிவில்  அருள் பாலிக்கிறார். 



இவ்வளவு சன்னமான லிங்கம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தலத்தில் உடும்பின் வால்  லிங்கமாக உருப்பெற்றது. ஏன்  என்பது ஸ்தல புராணத்திலிருந்தே தெரிகிறது.  சோழ மன்னருக்கு ஒரு பொன் மயமான  மாய உடும்பை  துரத்திக் கொண்டு வந்தபோது கோவிலினருகில் வந்ததும் உடலை பூமியில் மறைத்து வாலை  மட்டும் வெளி நிறுத்தி மறைந்தது. உடன் வந்த சான்றோர்கள் இது இறைவனின் லீலையே எனக்கூற, இவ்விடத்தில் கோவில் கட்டி இறைவனை உடும்பீசர் என்ற பெயருடன் வணங்கினான். 



 முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்தபோது தப்பி வந்த ஒரு அரக்கன் (மக்கிரன்) இத்தலத்தில் தவமேற்றியதால் மக்கிறல்  என்றும் பின்னர் மாகறல்  என்றும் பெயர் பெற்றது. 


தொண்டை நாட்டு சைவத் திருத்தலங்களில் ஏழாவது தலமாக குறிக்கப்படும் இந்த க்ஷேத்ரம் பாடல் பெற்ற திருத்தலம் (TNT 007). ஞானசம்பந்தப் பெருமானால் பதினோரு பாடல்களால் போற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது. குறிப்பாக எலும்பு சம்பந்தமான நோய்கள் இங்குள்ள அய்யனின் அருளால் குணமடையும் என்று சம்பந்தப் பெருமான் சொல்கிறார்.

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்

    பாடல் விளையாடல் அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி

    நீடுபொழில் மாகறல் உளான்

கொங்கு விரி கொன்றையொடு கங்கைவளர்

    திங்களணி செஞ்சடையினான்

செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் 

    தீவினைகள் தீருமுடனே.

திருச்சிற்றம்பலம்


காஞ்சி-உத்திரமேரூர் சாலையில் இந்த சிற்றூர் கோவில் கோபுரத்தால் மட்டுமே அடையாள தெரிகிறது. ஆம், ஐந்து நிலை கோபுரம் கோவிலின் பெருமையை பறை சாற்றுகிறது. 


ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்றிருப்பதால் குறைந்தது 1300 வருடம் பழமையானது என்று அறியலாம். 


தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே எனும்படி கஜப்ருஷ்ட விமானம் (தூங்கும்+ஆனை), கோவிலுனுள்ளேயே மீன்கள் துள்ளும் அழகிய குளம், ஆறு முகங்களுடன் முருகன், பொய்யா விநாயகர், அருள்முகத்துடன் திருபுவன நாயகித் தாயார், வீணையுடன் தக்ஷிணாமூர்த்தி  என இக்கோவிலில் சிறப்புகள் பல. 






தினமும் ஒரு பலா காய்க்கும் பிரம்மனால் அமைக்கப்பட்ட அதிசய பலா மரம் இத்தலத்தில் இருந்தது. அதைத் தேடி வந்த சோழமன்னனுக்கே உடும்பு  வடிவில் சிவபெருமான் காட்சி தந்தார்.  அந்த அதிசய பலா மரத்தின் வாரிசுகள் இன்றும் கோவிலில் உண்டு.

 


இக்கோவிலையும் ,  10 கி.மீ தொலைவில் அமைந்த மற்றொரு தேவாரத் தலமான குரங்கணில்முட்டம் ( TNT 006 - தொண்டை நாட்டு ஆறாவது தலம் )  ஒரே நாளில்  தரிசிக்க அடியேன் பேறுபெற்றேன்.  (குரங்கணில்முட்டம்  கிராமம் தேடுவது சற்று கடினம்). 


பக்தர்கள் குறைந்த அளவில் வரும் இக்கோவில் கொரோனா காலத்தில்  (காலத்திலும்)  செல்ல ஏற்றது. 


கோவில் பற்றிய அதிக தகவல்களுக்கு: http://www.shivatemples.com/tnaadut/tnt07.php என்ற முகவரி உதவலாம். 


No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...