என்நோற்றான் கொல்எனும் சொல்
எனும் குறள் மானுடப் பிறவிகளுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் பொருந்தும் என உயர்த்தும் ஒரு திருக்கோவில் திருமயிலாடி.
எனும் குறள் மானுடப் பிறவிகளுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் பொருந்தும் என உயர்த்தும் ஒரு திருக்கோவில் திருமயிலாடி.
ஏலவார்குழலி உடனுறை வாசீஸ்வரர் கோவில், வயலக்காவூர், கம்பராஜபுரம் , காஞ்சிபுரம் மாவட்டம்
சேயாறு எனப்பட்ட, இன்று செய்யாறு என அறியப்படும் நதி தீரத்தில் அமைந்த ஒரு பழமையான கோவில். கம்பராஜபுரம் சிவன் கோவில் என்றால் இந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஏதோ ஓரிரு வயோதிகர்களுக்குத் தெரியலாம். அதே ஊர் இளைஞர்களிடம் கேட்டால் மொபைல் ஃபோனில் கூகுள் மேப் பார்த்துச் சொல்கிறேன் என்பார்கள்.
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பாலாறு, செய்யாறு நதிக்கரையை ஒட்டி, ஏகப்பட்ட கோவில்கள். சில நல்ல நிலையில், பல சிதிலமடைந்து !. பக்திப் பெருவள காஞ்சியை ஒட்டியிருந்தததால் இப்பகுதியில் பல சைவ, வைணவ, ஜைனக் கோவில்கள். அவற்றுள் ஜைனக் கோவில்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தரக்கூடியது. தமிழ் ஜைனர்கள் விடாமுயற்சியால் சில திராவிட பாணி ஜைன கோவில்கள் பராமரிக்கப் படுகின்றன. பல கோவில்கள் சிதிலமடைந்து, பக்தர்களும் இன்றி, சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் !
ஆனால் மேற்சொன்ன வாசீஸ்வரன் கோவில் (அவனருளாலே ) ஓரளவு நல்ல பராமரிப்பில். பராமரிக்கும் கிராமத்து மக்களுக்கும், அர்ச்சகருக்கும் நன்றி !
மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவிலில் இக்கோயிலில் வாசீஸ்வர சுவாமி, ஏலவார் குழலி சன்னதிகளும், உற்சவர், நவக்கிரகம், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன . 2010ல் குடமுழுக்கு செய்யப்பட்டதால் ஓரளவு புதியதாகவே தெரிகிறது . விக்கிபீடியா 19ம் நூற்றாண்டு கோவில் என்கிறது. ஆனால் கர்ப்பக்கிரகத்துக் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் இக்காலத்து தமிழில் இல்லாததால் விக்கிபீடியா தகவல் தவறென்று புரிந்தது.
இரண்டாம் ராஜராஜன், சதயவர்மன் கால கல்வெட்டுக்கள் என்று கோவில் நிர்வாகி கூறினார். குறைந்தது 800 வருட பழமையான கோவில் எனலாம். ஆனால் மூர்த்தி அதற்கு முந்தைய காலத்திலேயே இருந்திருக்கலாம். கோஷ்ட மூர்த்திகளும் விதிப்படி நிர்மாணிக்கப் பட்டுள்ளன .
சில பாடல் பெற்ற கோவில்களில் கூட இல்லாத அளவு பஞ்சலோக விக்கிரகங்கள் இக்கோவிலில் உண்டு. இதனால் அந்தக் காலத்தில் இக்கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது.
இன்று இருகால பூஜை நடைபெறுகிறது. காலை 7 முதல் 9; மாலை 5 முதல் 7 வரை கோவில் திறந்திருக்கும் என்று இருந்தாலும் கோவில் அர்ச்சகரிடம் தொலைபேசியில் (8778564442) கேட்டு பின் செல்வது நன்று
திருபுவன நாயகி உடனுறை மாகறலீஸ்வர் திருக்கோவில்
காஞ்சிக்கு அருகே மாகறல் என்ற சிறு கிராமத்தில் இறைவன் மாகறலீஸ்வர் என்ற திருநாமத்தில் லிங்கத் திருமேனியுடன், மற்ற லிங்கவடிவிலிருந்து மாறுபட்டு சற்றே வித்தியாசமான வடிவில் அருள் பாலிக்கிறார்.
இவ்வளவு சன்னமான லிங்கம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தலத்தில் உடும்பின் வால் லிங்கமாக உருப்பெற்றது. ஏன் என்பது ஸ்தல புராணத்திலிருந்தே தெரிகிறது. சோழ மன்னருக்கு ஒரு பொன் மயமான மாய உடும்பை துரத்திக் கொண்டு வந்தபோது கோவிலினருகில் வந்ததும் உடலை பூமியில் மறைத்து வாலை மட்டும் வெளி நிறுத்தி மறைந்தது. உடன் வந்த சான்றோர்கள் இது இறைவனின் லீலையே எனக்கூற, இவ்விடத்தில் கோவில் கட்டி இறைவனை உடும்பீசர் என்ற பெயருடன் வணங்கினான்.
முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்தபோது தப்பி வந்த ஒரு அரக்கன் (மக்கிரன்) இத்தலத்தில் தவமேற்றியதால் மக்கிறல் என்றும் பின்னர் மாகறல் என்றும் பெயர் பெற்றது.
தொண்டை நாட்டு சைவத் திருத்தலங்களில் ஏழாவது தலமாக குறிக்கப்படும் இந்த க்ஷேத்ரம் பாடல் பெற்ற திருத்தலம் (TNT 007). ஞானசம்பந்தப் பெருமானால் பதினோரு பாடல்களால் போற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது. குறிப்பாக எலும்பு சம்பந்தமான நோய்கள் இங்குள்ள அய்யனின் அருளால் குணமடையும் என்று சம்பந்தப் பெருமான் சொல்கிறார்.
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல் விளையாடல் அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறல் உளான்
கொங்கு விரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே.
திருச்சிற்றம்பலம்
காஞ்சி-உத்திரமேரூர் சாலையில் இந்த சிற்றூர் கோவில் கோபுரத்தால் மட்டுமே அடையாள தெரிகிறது. ஆம், ஐந்து நிலை கோபுரம் கோவிலின் பெருமையை பறை சாற்றுகிறது.
ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்றிருப்பதால் குறைந்தது 1300 வருடம் பழமையானது என்று அறியலாம்.
தினமும் ஒரு பலா காய்க்கும் பிரம்மனால் அமைக்கப்பட்ட அதிசய பலா மரம் இத்தலத்தில் இருந்தது. அதைத் தேடி வந்த சோழமன்னனுக்கே உடும்பு வடிவில் சிவபெருமான் காட்சி தந்தார். அந்த அதிசய பலா மரத்தின் வாரிசுகள் இன்றும் கோவிலில் உண்டு.
இக்கோவிலையும் , 10 கி.மீ தொலைவில் அமைந்த மற்றொரு தேவாரத் தலமான குரங்கணில்முட்டம் ( TNT 006 - தொண்டை நாட்டு ஆறாவது தலம் ) ஒரே நாளில் தரிசிக்க அடியேன் பேறுபெற்றேன். (குரங்கணில்முட்டம் கிராமம் தேடுவது சற்று கடினம்).
பக்தர்கள் குறைந்த அளவில் வரும் இக்கோவில் கொரோனா காலத்தில் (காலத்திலும்) செல்ல ஏற்றது.
கோவில் பற்றிய அதிக தகவல்களுக்கு: http://www.shivatemples.com/tnaadut/tnt07.php என்ற முகவரி உதவலாம்.
தொண்டைநாட்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...