நடுநாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்களுள் 20வது ஸ்தலம், பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில். இத்தலம் பக்தர்கள் எளிதில் கண்டுகொள்ள NNT020 என்று குறியிடப்பட்டுள்ளது . கூகுள் குறியீடு: https://goo.gl/maps/CSkttPBktirgZ1wb8
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்திற்கு பண்டைய காலத்தில் புரவர் பனங்காட்டூர் என்று பெயர்.
சென்னை விழுப்புரம் நெடுஞ்சாலையிலிருந்து முண்டியம்பாக்கம் அருகில் இடது புறம் பிரிந்து ஒரு கி. மீ. பிரயாணித்தால் கோவிலை அடையலாம். அகலமான அக்ரஹார சாலைகள், அமைதி, அழகு, பக்தர்களினமை என்று பழங்கால கோவிலுக்கான அடையாளங்களுடன் ஒரு காலப் பொக்கிஷம். (கலைப் பொக்கிஷங்களை விடுத்து, கான்க்ரீட் சுவர்களுக்குள் புதையுண்டிருக்கும் வியாபார கோவில்களுக்குத்தானே கலி யுகத்தில் மக்கள் படையெடுப்பார்கள் !)
திருஞானசம்பந்தர் வந்து சென்ற கோவிலில் நாமும் என்பது நம்மை பல நூறாண்டுகள் பின்னே எடுத்துச் செல்கிறது... நம்மை பேறு பெற்றவனாக்குகிறது
இக்கோவிலில் ராஜேந்திர சோழன், இரண்டாம் ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. சுமார் 1045ல் புனரமைக்கப் பட்டதாகத் தெரிகிறது. கோவில் சுமார் 1400 வருட பழமையானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவில் 1400 வருடங்கள் பழையது என்றாலும் சுயம்பு மூர்த்தியான சிவலிங்கத்தின் காலத்தை எவரும் அறிகிலார்.
அழகான மதில் சுவர்கள், அற்புதமான, கம்பீரமான ராஜகோபுரம், ஐயன் அம்மை இருவருக்கும் தனித்தனியான சந்நிதிகள். மதுரை தஞ்சையைப் போன்று இருவர் சந்நிதிகளும் இணை இணையாக ! பனை மரத்தை (மரங்களை) ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஐந்து தலங்களில் இதுவும் ஒன்று.
ஸ்தல புராணத்தின் படி தக்ஷ யாகத்தில் பங்கு கொண்ட பாவத்தால் பிரகாசத்தையும் கண் பார்வையையும் இழந்த சூரியன் இத்தலத்த்தில் தவமிருந்து பார்வை மீளப் பெற்றார். அதற்கு நன்றிக்கடனாக சூரியன் தன் கிரணங்களை சித்திரை ஒன்று முதல் ஏழு வரை சிவலிங்கத்தின் மீதும் அம்பாளின் மீதும் விழச்செய்கிறான்.
கண்பார்வையில் கோளாறு உள்ளவர்கள் இறைவனிடம் வேண்டிப் பயன் பெறுகிறார்கள் எனத்தகவல்.
சிபிச்சக்கரவர்த்திக்கு அம்பாள் மோக்ஷம் கொடுத்த தலமும் இதுவே. தன் சதையை சிபி (வள்ளலாக) வெட்டிக் கொடுத்த தலமாகையால் இவ்வூருக்கு புரவர் பனங்காட்டூர் என்று பெயர் .
ஸ்தல விருக்ஷமாகிய பனைக்கு ராஜமரியாதை. மரத்திற்கான தடுப்புச்சுவர் ஒரு தனி சந்நிதி போல நேர்த்தி !
அமைதியான கோவில். பக்தர்கள் நடமாட்டம் அதிகமில்லாத சந்நிதிகள். அற்புதமான கல்வெட்டுக்கள்.
விழுப்புரத்தில் உள்ளவர்கள் கூட அதிகம் செல்லுவதாகத் தெரியவில்லை. அடுத்த முறை சென்னை மதுரை நெடுஞ்சாலையில் செல்லும் பொது நீங்கள் இக்கோவிலுக்கு செல்லத் தவறாதீர்கள்.
இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் அருளிய பாடல் வரிகளில் சில
விண்ண மர்ந்தன மும்ம தில்களை
வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.
நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிறைத் தாத ளஞ்செயப்
பாடல்வண் டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய லாத யல்மின்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ்சங் கரனே அடைந்தார்க் கருளாயே.
மையி னார்மணி போல்மி டற்றனை
மாசில் வெண்பொடிப் பூசு மார்பனைப்
பையதேன் பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள்
ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள்பா டவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
No comments:
Post a Comment