1985 ஜூலை 17….. சுபயோகம் சுபதினம் கூடிய தினத்தன்று, அன்று பிறந்த குழந்தைக்கு அன்றே கல்யாணம்.
இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா ?
இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா ?
இருந்தோமே ...(கை) தட்டிக் கேட்க
அந்தக் குழந்தையே ரகுபதிதான் . பிறந்த நாள் அன்றே திருமண நாளும் அமையப் பெற்ற
அதிருஷ்டசாலி.
எத்தனை நெருங்கிய தோழன் கல்யாணமே இருந்தாலும், மதுரையிலிருந்து அவ்வளவு தூரம்
காசு செலவழித்து மெட்ராஸுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு
அனுப்ப மாட்டார்கள்! காலேஜ் முடித்திருந்த
நேரம், வேலையில்லா பட்டதாரி (அதுவும் இல்லை, பட்டம் தயாரிப்பில்).
ஏதோ நான் செய்த அதிருஷ்டம் மெட்ராஸில் ஒரு வேலைக்கு நேர்முகத்தேர்வு அதே வாரத்தில்.
எனவே மதராஸில் இருக்கும் வாய்ப்பு.
தாம்பரத்தில் இருக்கும் அக்கா வீட்டில் வாசம். கல்யாணம் ராயப்பேட்டை ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில்.
ஹேமமாலினியில் கல்யாணம் என்பதை ஒரு வாரமாக எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லிக்கொண்டேன்.
அப்படியாவது நம்மை நாலு பேர் மதிக்கட்டும் என்று.
பாருங்கள் அந்த தகவலை சொன்னேன், ஆனால் தபால்காரர் என்னை ஏன் ஒரு மாதிரியாக
முறைத்தார்?
தெரியவில்லை....பொறாமையாக இருக்குமோ !
தெரியவில்லை....பொறாமையாக இருக்குமோ !
கல்யாணம்னா வெறும் கையோட போக முடியுமா !
பணம் கையிருப்பு மதுரை கல்லூரியில்
reagent shortage போல பரிதாபமாக இருந்தது
அக்காவிடம் தான் கேட்க வேண்டும் . நான் என் வீட்டுக்கு கடைசி பையன், அக்கா
முதல் குழந்தை, எங்கள் இருவருக்கும் 17 வயசு வித்தியாசம். கிட்டத்தட்ட அம்மா போல.
அக்கா போல மிரட்டல் அம்மா போல மறுப்பு என்று இரண்டும் சேர்ந்து ஒரு ஹைபிரிட்.
மொத்தத்தில் நம்ம பாடு திண்டாட்டம்.
கிப்ட் வாங்க என்று கேட்டால், பேசாமல் நான் ஒரு வாழ்த்து தந்தி அனுப்பி விடுகிறேன் என்று மடக்குவார் (போஸ்ட் ஆபீஸ் ஆச்சே ). ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்
அட்டெண்ட் பண்ணுன்னு பெரியவங்க தெரியாமலா சொல்லியிருக்காங்க என்று, காரணம் புனையத்தொடங்கினேன்.
அக்கா, நான் இன்னும் ஒரு 30-40 நாள் இங்கே தான் இருக்கப்போறேன், மின்ரயிலில்
மாத பாஸ் வாங்கிக் கொள்கிறேன்,. ஆனால் கொஞ்சம் பணம் குறைகிறது என்றேன்.
எவ்வளவு குறைகிறது ?
30 ரூபாய் !
ஏண்டா தாம்பரம் பீச் பாஸ் விலையே
28 ரூபாய் தானே ! சரி சரி 30 ரூபாய் தருகிறேன், பாக்கி பணத்தை (ஹூம் 2 ரூபாய் என்பது பணமாம்
!) ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்.
என அக்கா, தான் தாராளம் என தனக்குத்
தானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பினாள்.
பெரிய பிள்ளை செல்லப் பிள்ளை சின்னப்பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று முருகன்
சொன்னது நினைவுக்கு வந்தது. வண்டு முருகன் அல்ல, வாண்டு முருகன், அப்பன் பழனி முருகன்,
திருவிளையாடலில் சொன்னது.
என்னிடம் இருந்த +அக்காவிடம் இருந்து தேற்றிய, எல்லாவற்றையும் சேர்த்ததில்
கணிசமான தொகை தேறியது. அந்தக் கணிசமான தொகை ரூ 50/-.
இளம் வயதுக்குரிய சாமுத்ரிகா லக்ஷணம்
என்னவென்றால்,எல்லா வேலையையும் கடைசி நேரத்தில் செய்வது.
திங்கள் காலை 9 மணி சுமாருக்கு கல்யாணம் என்று நினைக்கிறேன்.
காலை தாம்பரத்தில் இருந்து கல்யாணத்துக்கு கிளம்பும் போது தான் நினைவுக்கு
வந்தது, கிப்ட் வாங்காதது. பரவாயில்லை, மண்டபம் பக்கத்தில் ஏதாவது கடை இல்லாமலா போகும்
என்று ஒரு அசட்டு தைரியம் !
அக்கா வீட்டில் இருந்து ரயிலடிக்கு ஒரு 1.5 கிமீ நடை, நடைமேடையில் ஒரு
0.5 கிமீ நடை, தாம்பரத்தில் இருந்து ரயில் மாம்பலத்துக்கு. அங்கிருந்து காரடி (அதாங்க
பஸ் ஸ்டாண்ட் ) 0.5 கிமீ. அங்கிருந்து மவுண்ட் ரோடு சபைர் பஸ், அங்கிருந்து 1.0 கிமீ
நடை. தாம்பரத்தில் இருந்து நடந்து வந்திருந்தாலே
சீக்கிரம் வந்திருக்கலாம் போல் .
நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம் மண்டபத்துக்கு 0.5 கிமீ யிலேயே ஒரு காதி
பவன். நம்ம பட்ஜெட்டுக்கு அந்த இடம் தான் சரி. இது ஆண்டவன் போட்ட வரம் என்று பரிசுப்
பொருள் வாங்க தயாரானேன். ஆண்கள் கடைக்குப் போனால் அரை நொடியில் சாமான் வாங்கி விடுவார்களல்லவா.
பியர் வாங்குமுன்பே எந்த கம்பெனி சரக்கு, என்ன பிராண்ட் என திடடமிடல் ஆண்களின் கை வந்த
கலை !
பேப்பர் மேஷில் செய்யப்பட்ட கீதோபதேசம் பொம்மை (ரகுபதிக்கும் அவன் பழைய நண்பி
கீதாவை நினைவு படுத்தும் என்ற நல்ல எண்ணத்தில் ) முடிவு செய்யப்பட்டது
விலை எவ்வளவு என்றேன். 45 ரூபாய் என்றார் கடைக்காரர் உணர்ச்சியற்றவராய்.
நாஆஆஆஆற்பத்து ஆயின்ந்தஆஆஆ ?
........... நீட்டினேன். பார்த்துச் விலை சொல்லுங்க என பதுங்கினேன் .
ஏம்பா இது என்ன டவுன் ஹால் ரோடு வியாபாரமா ? கூட்டி குறைச்சு சொல்ல என கடுகடுத்தார் காதி கிராப்ட் கடைக்காரர்.
நீட்டினேன் இம்முறை பணத்தை.
கிப்ட் ராப் இலவசமென்றதும் தாம்பரம் வரைபோன உயிர் திரும்பிவந்தது. உடலோடு உயிரை இணைத்து, கிப்ட் அடடையில் நீநீநீநீண்ட எண்ட பெயரையும் இணைத்து மண்டபம் திரும்ப எத்தனித்தேன்.
கிப்ட் ராப் இலவசமென்றதும் தாம்பரம் வரைபோன உயிர் திரும்பிவந்தது. உடலோடு உயிரை இணைத்து, கிப்ட் அடடையில் நீநீநீநீண்ட எண்ட பெயரையும் இணைத்து மண்டபம் திரும்ப எத்தனித்தேன்.
கீதோபதேசம் பாண்டவரான பார்த்திபனுக்கு , அது என் MBA நண்பன் பார்த்திபனுக்கு மூக்கில் வியர்த்திருக்கும்
போல.
ஆர்க்(இந்த அ.ரா.கி.தான்), பரிசு வாங்க மறந்து விடடேன், ரகுபதி தாலிக்கயிறோட
தயாராயிட்டேன், அவனை தாளிக்க அவன் மனைவியும் தயாராயிட்டா. நீ தான் பரிசு வாங்கிட்டயே அதுல 50% நான் தரேன்,
நாம சேர்ந்து கொடுக்கலாம் என வலை விரித்தான் .
பரிசுபொருளில் ஆர்க் அண்ட் பார்த்திபன் பதிவாயிற்று . பார்த்திபன் ரொம்ப நல்லவன்
அப்பாவி பாதி பணம் கரெக்ட்டா கொடுத்திடுவான்என தருமி போல மனதுக்குள் புலம்பி தேற்றிக்கொண்டேன். ஆனா அவன் அப்பாவி இல்லை அப் பாவி என்று "பிரித்துப் " பார்க்க இப்போது தான் முதிர்ச்சி வந்திருக்கிறது.
பார்த்திபனிடம் சேர்ந்து இருவரானோம்
கீதோபதேசம் பார்த்திபனை இழுத்தது போல் கிருஷ்ணனின் முன்ஜென்மமான ராமனையும்
தட்டி எழுப்பியது. எங்கிருந்தோ வந்தான் இன்னொரு MBA நண்பன் ராம் குமார் . 10 மணி வகுப்புக்கு 11 மணிக்கு
தலைசீவ தொடங்கும் ராம்குமார் கல்யாண வீட்டிற்கு
லேட் ஆக வந்திருப்பான் என்று நான் சொல்ல தேவையில்லை . தலையை சொரிந்தான்.
50% தருகிறேன் என் பெயரை சேர்த்துக் கொள் என்றான்.
பரவாயில்லை என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் . இவன் 50% ….அவன் 50%, நமக்குச் செலவில்லை என புளகாங்கிதம் அடைந்தேன் .
ராம நாமம்.... ராம நாமம்.... என அடிக்கடி சொல்வார்கள் அதன் அர்த்தம் அப்போ
புரியவில்லை !
ராம் குமாருடன் சேர்ந்து மூவரானோம் .
பணம் ....அது வரும் (நம்பினேன் )
அரை கிமீ நடப்பதற்குள் சென்னையில் 50 ஆட்டோ காலை சுற்றும் என்பார்கள். அது
போல் மண்டபத்திற்குள் வழியில் உள்ள அரை கிமீ க்குள் என் எல்லா நண்பர்களையும் பார்த்தேன்.
அதெப்படி சொல்லி வைத்தாற்போல் எல்லாருக்கும் ஒரே ஐடியா . என் பெயரை சேர் ! என் பெயரை
சேர் ! என ஒரே மாதிரியான விண்ணப்பம். அவர்களை
சொல்லி குற்றம் இல்லாய். அசைன்மென்ட் எழுதி வந்தவர்களாயிற்றே !
ஒரு 3 CM X 4 CM அட்டையில்
10 பெயர், 9 AND .
ARK and Parthiban and Ramkumar Singh and Kishore Kumar and ABC and XYZ
and etc and etc
ஆனால் ஒருவரும் பணம் தருவதாகத் தெரியவில்லை . வார்த்தைக்கு வார்த்தை என்னை
மாப்பிள்ளை என்று பரிவோடு அழைத்தார்கள் (ஆட்டுக்கு மாலை + மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது
போல்)
ஒன்றரை அணா பரிசுக்கு ஒன்பது பேர் ஏதோ சவப்பெட்டி தூக்குவது போல தூக்கி ரகுபதி
கையில் கொடுத்தோம். அவன் சொந்தக் காரர்கள் பார்த்திருப்பார்கள். இத்தனை பேர் சேர்ந்து
கொடுத்தனால் ஏதாவது லம்ப்பா இருக்கும் என்று . பாவம் அவர்கள்
பெரிய வீட்டுக் கல்யாணம் MP , MLA, அமைச்சர்கள், திரைப் படக் கலைஞர்கள் யாராவது
வந்திருப்பார்கள் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு, வந்த விருந்தினர்கள் யாரோ நடிகை
என்று பேசியது கேட்டது. விடுவோமா !
ரகுவை மறந்தோம் ! டைனிங் அறைக்கு விரைந்தோம். மற்றவர்களுக்கு எந்த ஒரு நடிகையும்
தட்டுப் படவில்லை . ஆனால் எனக்கு பொறி தட்டியது. வருபவர்களை பார்க்க ஒரு வாகான இடத்தை தேடினோம்.
கடைசி வரிசை, சுவரை ஒட்டி இடம் பிடித்தோம். நடிகை என் கண்களுக்கு தெரிந்தாள். மற்றவர்கள்
எவருக்கும் தென்படவில்லை.
ஏமாற்றத்துடன் நண்பர்கள் கைகழுவி வெளியில் வந்தனர்.
அவர்களிடம் கேட்டேன் ...என்னப்பா ACTRESS மீனாவை பார்த்தீர்களா ? (அன்றைய
காலத்தில் பிரபல நடிகை மீனா வந்திருக்கவில்லை
)
குழம்பிய நண்பர்கள், மீண்டும் உள்ளே நுழைந்தனர். தட்டுப்படவில்லையே என்றனர்.
நான் மீண்டும் உள்ளே நுழைந்து அவர்களுக்கு ரகுபதியின் உறவினரான நடிகை மீனா(ட்சி) வை
அவர்களுக்கு காட்டினேன் .
எல்லோரும் என்னை மொத்த கை ஓங்கினார்.
அந்த நடிகை படம்
அவர் மாயாபஜார் திரைப்படத்தில் எம் எல் வசந்தகுமாரி பாடிய ( தேஷ் ராக பாடல்)
"வர்தில்லு மா தல்லி வர்த்தில்லவம்மா
! சின்னாரி சசிரேக வர்த்தில்லவம்மா"/ “வாழ்க நீ வளமுடன் வாழ்க நீ அம்மா, வத்சலா நீடூடி
வாழ்க நீ அம்மா “என்ற பாட்டில் வரும் 67 கௌரவிகளுள் ஒரு கௌரவியாய் தோன்றியவர்
! மணல் கயிறு படத்தில் கூட நடித்திருந்தார்.
நடிகையை பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் ஒவ்வொருவராக பிய்த்துக் கொண்டனர்.
அப்போ எனக்கு வரவேண்டிய பணம் ? பணமா !?!?!? என் நெற்றியின் அகலம் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே
!
சரி. ஒருத்தனும் பணம் தர தயாராக இல்லை, ஆபத்பாந்தவனாக மாப்பிள்ளை ரகுபதியிடமே
முறையிடலாம் என தோன்றியது.
பிறகுதான் நினைவு வந்தது, அவனே 999 ரூபாய் கடன்காரன் என்று !
பாக்கி பணத்தை இன்று கேட்கலாம் என்றால்…………
ஒருவன் இந்த உலகத்திலேயே இல்லை.
ஒருவன் IAS , customs ல் கலெக்டர்,
ஏதாவது கஞ்சா கேஸ்ல உள்ள போட்ருவான்,
இன்னொருவன் IPS , ஆந்திரா டிஜிபி
ஆக இருக்கிறான், எப்போ பார்த்தாலும் அரை ஞாண் கயிற்றில் ரிவால்வரை கட்டிக்கொண்டு, எனகொண்டெர்
என்ற வார்த்தை ஏதோ "வந்தே மாதரம்" என்ற தாரக மந்திரம் போல சொல்லிக் கொண்டு அலைகிறான்.
இவர்களிடம் இருந்து நான் வசூலித்து !!! ஹூஹூஹூம்ம் ம்
ம்!!!!
1 comment:
Very good!!
Post a Comment