மதுரையை மீட்ட
சுதாகர பாண்டியன் தலைநகர் கண்ட படலம்
(சுதாகர்-1 - படலம் -2)
அதிருஷ்டம்
சில நேரம் சுரைக்கப்பரைக்கே சிங்கி அடிக்கவைக்கும். சில நேரத்தில் ஒரே நேரத்தில் நாலைந்து
குறுநில மன்னர்கள் பெண் கொடுக்கிறேன் என்று வரும் அளவுக்கு கூரையை பிய்த்துக் கொண்டு
கொட்டும்.
சுதாகர் வேலைதேடிய
படலத்தில் சற்று சோர்ந்திருந்தான், 1986 ஜனவரி
அல்லது பிப்ரவரி என்று நினைக்கிறேன். நான் டெல்லிக்கு மாற்றலாகி ஐந்து ஆறு மாதம்
ஆகியிருந்தது. தில்லி குளிரும், சாலைகளும்
பழகியிருந்தது. யாரவது காசு கொடுத்தாலோ, அல்லது பூரியை சாப்பிடவோ, இடது கையை உபயோகிக்கும்
அளவு முன்னேறியிருந்தேன் (அது என்னமோ நம்மூரில் தான் யாரவது காசை இடது கையால் வாங்கினால்
கோபம் வருகிறது )
மற்றபடி அடக்கம்
கருதி என்னுடைய பிரதாபங்களை எடுக்கவில்லை. வேறு யாராவது என்னைப் பற்றி கதைக்கும் போது,
பிழிந்து காயப்போடலாம், ஆடசேபனை இல்லை .
அந்தக் காலத்தில்
போனும் கிடையாது, ஒரு பேங்கனும்(அதான்பா கத்திரிக் காய்) கிடையாது . மிஞ்சிப் போனால் ஒரு இங்கிலாண்ட் லெட்டர்
(எங்க பாட்டி இன்லேண்ட் க்கு அப்படித்தான் சொல்வார்கள் ). தந்தி அடித்தால் மாரடைப்பு
வரும் அபாயம் இருப்பதால் முக்கால்வாசி இங்கிலாண்ட் தான்.
நீ பெயில் ஆயிட்டே
என்பது போன்ற மானபங்க காட்சிகளுக்கு, சில நல்ல மனம் கொண்டவர்கள் போஸ்ட் கார்ட் அனுப்பி சந்தி சிரிக்க வைப்பார்கள்.
சுதாகர் நல்லவன்,
மாரடைப்பும் கொடுக்கவில்லை, மானபங்கப் படுத்தவுமில்லை.
எனக்கு தில்லி
டிபென்ஸ் மினிஸ்ட்ரி இல் வேலை கிடைத்திருக்கிறது. இத்தானாம் தேதி TN எக்ஸ்பிரஸ்ல் வருகிறேன். நீ வந்து என்னை ரயில்வே ஸ்டேஷன் வந்து அழைத்துப் போ. எனக்கு
தங்க ஒரு ஜாகையும் ஏற்பாடு செய்து வைத்திரு ( sharing basis) என்று இன்லாண்டியிருந்தான்.
(நமது சொந்த
ஊரிலிருந்து) தூரதேசத்தில் இருப்பவர்களுக்கு இது போல் யாராவது வருவதாக இருந்தால் ஒரு
அருமையான உணர்வு.
கடிமணம் புரியவிருக்கும்
காதலி மட்டும் இல்லை .......கடியான நன்பனாயிருந்தாலும் சந்தோஷம் தான்.
வந்தது சனி.....
நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.😜 ஆம் வெள்ளி போய் சனிக்கிழமை வந்தது.
சுதாகரும் வந்தான்.
ஏற்கனவே மாருதி
சுசூகி யில் வேலை பார்க்கும் என் நண்பர் வில்வநாதன் மற்றும் இரு /ஒரு நண்பர்களுடன்
கூட்டுகுடும்பவாசியாக ஏற்பாடு. லோதி கலோனியில் ( நாம் தான் காலனி என்போம்)
என்னுடைய பைக்கில்
தான் அழைத்துவந்தேன் என்று நினைவு. இல்லை ஆட்டோவிலா? 🤔
மொத்தத்தில்
டில்லி குளிரில் உரித்த கோழியை ஐஸ் வாட்டரில் முக்கி எடுத்ததுமாதிரி ஒரு
expression உடன் சுதாகர் புதுமனை புகுந்தான்.
நண்பர்கள் அறிமுகம், குளியல் முடிந்தபிறகு, லோதி கலோனியில் ஒரு மதராஸி ஹோட்டலில் 1030 மணி
brunch .
சாப்பிட்டு விட்டு அவனுக்குத் தேவையான Folding cot, ரஜாய், இத்யாதி வாங்கிக் கொடுத்து
விட்டு நான் நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டேன் 25 கிமீ யில் இருக்கும் எனது வீட்டிற்கு.
அதற்கு முன்பு
தில்லி அலுவலகத்தில் செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமை பற்றி பேசினோம் . தில்லி மினிஸ்ட்ரியில்
வேலைக்கு சேரும் எல்லோரும் joining ரிப்போர்ட்
முடித்த பிறகு எழுதும் முதல் கடிதம், சென்னைக்கு ட்ரான்ஸபெர் விண்ணப்பம் . சொல்லி வைத்தாற்போல் எல்லோருக்கும் குடும்பத்தில் யாருக்காவது வியாதி,
தாய்க்கு ஒரே மகன் என்ற பல ஆகி வந்த காரணங்களுள் ஒன்றை புனைந்து விண்ணப்பிப்பார்கள்.
சுதாகரும் செய்வதாக முடிவாயிற்று .
அடுத்த நாள்
என் பிரம்மச்சாரி கடமைகளுள் மும்மரமானேன் ( வார துணிமணிகளை துவைப்பது, வீட்டுக்கு கடிதம்
எழுதுவது etc . etc என்பதை உங்கள் கற்பனைக்கேற்ப
நிரப்பிக் கொள்ளவும் )
திங்கள் காலை
அலுவலக வேலைகளில் மூழ்கினேன். officeல் இருந்து லோதி காலனி வழியாகவும் வீட்டுக்கு செல்லலாம்
என்பதால் சுதாகரை பார்த்துச் செல்லலாம் என்று, வண்டியை மாலை லோதி காலனிக்கு விட்டேன்.
வீடு பூட்டி
இருந்தது.
மணி ஏழு இருக்கும்.
நல்ல நாளிலேயே அரசுப்பணியில் வேலை இருக்காது. நம்மவர் நிச்சயம் overtime பார்க்க மாட்டார். ஒரு வேலை வழி கிழி தெரியாம
DB ரோடு தவறி போய்ட்டானோ என்று சற்று கவலையானேன். (DB ரோடு பற்றி தெரியாதவர்கள் கூகிளலாம்.😍😛👯💃)
ஆதங்கத்தில்,
அருகில் இருக்கும் ஒரு முதியவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் சற்று கவலை அளித்தது.
அவர் சொன்னது " அந்த புது மதராஸி பையன் வந்த நாளோ அடுத்த நாளோ திடீர் என்று மதராஸ்
திரும்பி விட்டான் ".
“ஒண்ட வந்த பேயை ஊர் பேய்கள் ராக்கிங்
செய்திருக்குமோ” அச்ச வினா !
என் நண்பர்களையும்
கேட்க முடியவில்லை. யார் வீட்டிலும் போன் கிடையாது. மொபைல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.
மாருதி வில்வநாதன் ஷிப்ட் வேலை செய்பவர், வர அதிகாலை ஆகிவிடும். கவலையோடு வீட்டுக்கு போனேன்.
அடுத்த நாள்
வில்வநாதனை பாக்டரி தொலைபேசியில் கடும் முயற்சிக்கு பின் பிடித்தேன். சுதாகருக்கு வேறு
வேலை மதுரையிலேயே கிடைத்ததாகவும் , டிபன்ஸ் அலுவலக வேலையில் சேராமலேயே திரும்பி விட்டதாகவும்
சொன்னார்.
நான்கு நாட்களுக்கு
பிறகு சுதாகரின் இங்கிலாந்து கடிதம். ஓரியண்டல் இன்சூரன்ஸ் வேலை கிடைத்ததினால் திரும்பி
விட்டதாக சொன்னதாக நினைவு
ஆங்கிலத்தில்
" reward for good work is more work " என்பதுபோல அவனுக்கு வாங்கிய புதுக்
கட்டில், ரஜாய் போன்ற சமாச்சாரங்களை விற்று விட்டு பணம் அனுப்ப (அன்புடன்) சொன்னான்.
சொன்ன படி அவற்றையெல்லாம்
விற்றேன் ஆனால் பணம் அனுப்பினேனா என்று சுதாகர் ஐயா தான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில்
12+36+36+12 = 96 +4 மணி வெயிட்டிங் என்று
100 மணி நேரம் பயணித்து 10 மணி நேரம் தில்லியில்
வசித்தது சுதாகராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பழங் கதை முழுதும்
நினைவில்லை. சுதாகர், கதையை இட்டு நிரப்பவும்.
(பின்குறிப்பு:
பழிதீர்த்தபடலம் என்ற பெயரில் சுதாகர் ஏதாவது கதை சொல்லுவானோ என்று பயமாக இருக்கிறது)
No comments:
Post a Comment