Friday, August 9, 2024

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சோதனை என்றதும் ஏதோ அடியேன் பாலஸ்டைன்-இஸ்ரேல் போருக்கு நடுவில் காஸாவில் சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். அப்படியில்லை. அதைவிட மிகப்பெரிய சோதனையில் சிக்கிக்கொண்டிருக்கிறேன். அடியேன் மட்டுமல்ல, பலரும் இது போன்ற அதர்ம சங்கடத்தில் இருந்திருக்கலாம். லாம் எல்லாம் இல்லை.... கண்டிப்பாக இருந்திப்பீர்கள் !  உங்களுக்கெல்லாம் வெளியில் சொல்ல தைரியம் இல்லை ஆனால் அடியேன் தைரியமாகச் சொல்லுவேன் . அடியேன் அடியேன் என்று சொல்வது வெறும் தன்னடக்கம் மட்டுமல்ல. புரிந்திருக்கும்  !


அந்த சோதனை என்னவென்றால் மங்கையர் மலர், சிநேகிதி போன்ற பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்களை குடும்பத்தலைவர் மேல் ஏவி விடுவது (அதாவது ருசி பார்க்கச்சொல்லுவது). 


இந்தப் பத்திரிகைகள் போதாதென்று புதிதாகக் கிளம்பு இருக்கும் சமூக ஊடகக் கொடுமைகள். வாட்ஸப் , ட்விட்டர், ஃபேஸ்புக் என பல டிசைன்களில்  "எனை  நோக்கிப்ப்பாயும் தோட்டாக்கள்"

இப்பொழுதுதான் ட்விட்டர் என்றால்   என்னவென்று புரிய ஆரம்பித்திருக்கிறது, அதுக்குள்ளே படுபாவி பேரை மாத்திட்டான்.  இளைஞர்களிடம் நானும் யூத்துதான் என்று பறை சாற்றிக்கொள்ள 'நான் நேற்று ஒரு ட்வீட் போட்டேன்' என்றால் ....என்ன பெருசு- ! ட்விட்டர்க்கு பேர் மாத்தி நேற்றோடு ஒரு வருஷம் ஆச்சு  இன்னமுமா பழைய போஸ்டரை தூக்கிட்டு அலையுற  என்ற நக்கல் !

நாம துணை சோதனைகளை விட்டுவிட்டு தலையாய  சோதனைக்கு வருவோம் !


ஆண்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு பத்திரிகை ஒரு கூட கிடையாது. பெண்களுக்கு என்று அரை டஜன் ! (அதிகம் பாதிக்கப்பட்ட என் நண்பன் ஒருவன் ஹிந்தி , ஆங்கிலம் சேர்த்து பல டஜன்கள் என்று மூக்கை சீந்துகிறான் ...ஹூம்...அவன் கஷ்டம் அவனுக்கு ). அப்படியே இருந்தாலும் கூட ஷூ பாலிஷ் போடுவது எப்படி, அயர்ன் பண்ணுவது எப்படி, கையை வெட்டிக்கொள்ளாமல் காய்கறியை மட்டும் வெட்டுவது எப்படி என்று விசிட்டிங் கார்ட் சைஸில்  இலவச இணைப்புகள் வெளியிடுவதில்லை.  ஒரு புத்தகத்தைப் பிரித்தால், பொலபொலவென்று , இ.இணைப்புகளாகக் கொட்டும். அகாரஅடிசலில் இருந்து ஆட்டுக்கால்  சூப் வரை, ....காளான்  சூப்பில் இருந்து ஓணான் சூப் வரை .... இந்திய மக்கள் ஜனத்தொகையை விட அதிகமான பண்டங்களின் செய்முறைகள்.  

வீட்டில் இருக்கும் மூ.பூச்சி, கொசு, பல்லி  போல ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போய்  விடும் என்று முதலில் அஜாக்கிரதையாக இருந்து விட்டேன்.  டைனாசராக மாறி நம்மை படுத்தும் என்று பின்னர் புரிந்தது !


பல வாரங்கள் இந்த இணைப்புகள் காஷ்மீர் பண்டிட்டுகள் போல சீந்துவார் இல்லாமல் பரணுக்கு நாடு கடத்தப்பட்டியிருந்தன.  ஒரு எதிரி (மனைவிக்கு நண்பி என்றால் நமக்கு எதிரிதானே ! ) என் மனைவிக்கு போன் செய்து சினேகிதியில்  ரூசெஃமேபாக்டிகொல என்ற டிஷ் செய்முறை வந்ததாகவும் அதை செய்து தன்  ஆபீஸ்  பாஸுக்கு  கொடுக்க அவரும் சாப்பிட்டு விட்டு ஒரு இன்க்ரிமெண்ட் (சம்பள உயர்வு) கொடுத்ததாகவும் பீத்திக்கொண்டாள் (அந்த அம்மாவுக்கு உண்மை தெரியல .... பாஸ் ரெண்டு இன்க்ரிமெண்ட் கொடுக்க இருந்தார், இந்த டிஷ் செய்து சோதித்ததால் ஒன்றாகக் குறைத்துக் கொண்டார் !). 

இந்த சம்பவம் நடந்த உடனேயே பரணில் இருந்த இ.இணைப்புகள்  கீழ் இறக்கப்பட்டன !  அன்று தான் எனக்கு சனி அஷ்டமத்துல மாறுறார்ன்னு யாரும் சொல்லாமலேயே புரிந்து கொண்டேன் !



அன்றிலிருந்து ஒவ்வொரு சோதனையாகத் துவங்கியது. எந்த முயற்சியுமே மங்களகளரமாக தொடங்கவேண்டும் என்பதால் முதல் பதார்த்தம் 'பாயசம்'.

நாங்கெல்லாம் பாய்சன் கொடுத்தாலே பாயாசம் மாதிரி குடிப்போம் ! பாயாசமே  கொடுத்தால் ...... என்ற இக்கால வசனத்தை அசை  போட்டவாறு பாயாசத்துக்கு தயாரானேன் ! (நம்புங்கள் நானும் யூத்துதான் !)

குழந்தைகள் திருமணமாகி வேறு ஊரில் இருப்பதால் வீட்டில் எல்லா சோதனை முயற்சிகளும் என்னிடமே தொடங்கி  என்னிடமே முடியும். 

குலுக்கல் முறையில் அன்றைய  டிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டது !  எந்தப் பாயாசமா இருந்தாலும் சரி ! 'கவுண்டனுக்கு ஒத்துக்காத கறவைப்பால்னு ஒண்ணு  இருக்கா' என்ற கவுண்டமணி டயலாக்கோடு தயாரானேன் !


பாயசமும் வந்தது.  ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல கப்பிலிருந்து ஸ்பூனுக்கும், ஸ்பூனிலிருந்து வாய்க்கும் பாயசம் வர மறுத்தது.  என்ன பாயசத்தில் பாலுக்கு பதிலா பெவிக்கால்  ஏதும் ஊத்திட்டியா  என்றேன். அதுதாம்பா  அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் பேசிய ஒரே வார்த்தை ! தமிழில் 246 எழுத்துக்கள் என் நாக்கிலிருந்து வர மறுத்தன ..... என்ன பேசினாலும் ழ ழ ழ ழ என்ற ஒரு ஒலி  மாத்திரம் தான் வந்தது ! ளெழ்ழ    ழழ்னிளெ (என்ன பண்ணினே ! என்பது என் கேள்வியின் தமிழாக்கம் ) 

 சேப்பங்கிழங்கு அரைச்சுவிட்ட பாயசம் ! இது கூட தெரியாத என்ன ஜென்மமோ ....  கொஞ்சம் சேர்ந்தது  மாதிரிதான் இருக்கும், சாப்பிடு என்றாள்  சக-அதர்மிணி !  நியாயஸ்தி ! ....அந்தப் பாயசத்தை குடிக்க முடியாது, சாப்பிடத்தான் முடியும் என்பதை தெரிந்து கொண்டாள் ! 


வாய் குளறுவது நின்றதும் வாஞ்சையுடன்  கேட்டேன் ! நீயும் ஒரு வாய் சாப்பிட்டேன் !

நான் இண்ணைக்கு  விரதம் பச்சைத் தண்ணி பல்லுல படாது என்று சேப்பங்கிழங்கு வேகவைத்த தண்ணீர் போல் நழுவினாள்.


இல்லம்மா பண்ணின பாயசம் வீணாப்போகுமேன்னு கேட்டேன் ! (மௌனமே பதிலாகக் கிடைத்தது. ஒரு இம்மி கூட கமிட் பண்ண மாட்டேங்குறாளே ) 

ஏலக்காய், ஜாதிக்காயெல்லாம் போட்ட பாயசம் வீணெல்லாம் அடிக்காதே .  ஸ்தோத்திர புத்தகம் கிழிஞ்சு அதிரசமா உதுறுது. அதெல்லாம் ஓட்ட வச்சுக்கோ . கோந்துக்கு  கோந்துமாச்சு , புத்தகம் படிக்கும்போது வாசனைக்கு வாசனையுமாச்சு ! என்று என் வயித்தெரிச்சல் எல்லாம் சேர்த்து ஒரு ஐடியா கொடுத்தேன். 

யார் என் கேள்விக்கு பதில் சொல்கிறார்கள் ! 16 வயதினிலே கோவால கிருஷ்ணன் என்ற சப்பாணி நினைவுக்கு வந்தான் . 

சனிப் பிணம் தனியாப்போகாது என்று சொல்வார்கள்.  சனிப்பாயாசமும் அப்படித்தான் போல, அடுத்த சனிக்கு அடுத்த சோதனை !


'போன வாரம் அந்தக் கடைக்காரன் புது சேம்பா  கொடுத்து கழுத்தறுத்துட்டான் இந்த வாரம் ஒரு நல்ல டிஷ்ஷா பண்ணி பரிகாரம் தேடிக்கிறேன்'. 


எப்படியோ பரிகாரம்னு சொல்றதுனால போன வாரம் பண்ணினது பாவம்னு ஒத்துக்கிற போல இருக்கே !  ஹி  ஹி ....


'பெரிய சுப்ரீம் கோர்ட் லாயர் ...கபில் சிபல் ! பாயிண்ட  பிடிச்சது மாதிரி என்ன ஒரு தற்பெருமை' .............என்று இடிக்கப்பட்டேன் 


போன வாரம்   விகாஸா ஸ்கூல் பசங்ல்லாம் ரொம்ப ரசிச்சு கேண்டீன்ல ஒரு டிஷ் சாப்பிட்டுட்டு இருந்தாங்களாம் , அதோட சீக்ரட் ரெசிபி இந்த வார இலவச இணைப்புல வந்திருக்கு (சமைத்துப் பாருங்கள் சாமியாராகலாம் என்று தலைப்பு வேறே ..... தலைப்பு தப்பா வச்சிருக்காங்க  சமைத்துப் பாருங்கள் சமாதியாகலாம் ...ன்னு இருந்திருக்கணும்) ... என் தங்கை  சொன்னாள் ...ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.  


ஒன்  தங்கை சொன்னா சரியாகத்தான் இருக்கும் .... இது நான் வெளியில் சொன்னது.   


சொல்லாமல்  விழுங்கியது .... அவ புருஷன் தீர்க்க சுமங்கலன்..... ஏன்  டூர் டூர்ன்னு வாரத்துக்கு எட்டு டிரிப் அடிக்கிறான்னு இப்ப புரியுது ! நானும் தான் இருக்கேனே !


இந்த வாரம் அப்படியென்ன ஸ்பெஷல்ன்னு  நானே என் தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றி, மாலையையும் போட்டுக்கொண்டு, அரிவாளை மனைவியிடம் நீட்டினேன் . 



பாலச்சந்தரின் எதிர் நீச்சல் படத்தில் ஹீரோ அநாதை நாகேஷுக்கு  சித்த சுவாதீனமெல்லாத (மரியாதையாகச் சொன்னால்...Alumni of the Mental asylum) ஜெயந்தியை தலையில் கட்ட முடிவாக, அதை தெரிந்து கொண்ட நாகேஷ் ஜெயந்தியையே காதலிக்கத் துணிவது போல , நானும் பிரியாணியாக வாலண்டியர் செய்தென் .


அப்படியென்ன ஸ்பெஷாலாம் !  என்றேன் தைரியமாக பயந்த நான் !


                    மணத்தக்காளி மஞ்சூரியன் சூப் !  வித் வறுத்த கருடன்  !


ஐயய்யோ  ! இந்த பதார்த்தம் பண்ண நான் கழுகு  கருடனெல்லாம் பிடிச்சுட்டு  வரணுமா ! அரசாங்கத்துக்கு தெரிஞ்சா வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திலே  உள்ளே தள்ளிடுவாங்களே... சவுக்கு சங்கர் கூட ஆட்சி மாறினால் வெளில வந்துடுவான், நான் காலம் காலமா உள்ளதான்  இருக்கணும் 


சரியான அவசரக்குடுக்கை ! ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். வறுத்த கருவடாம் (கறி-வடகம்). அப்படியே இவர் பறந்து பறந்து கருடன கையால  பிடிச்சுட்டாலும் ! கரப்பான் பூச்சிய  விரட்டவே வீரத்தக்  காணோம் ! 


பெண்கள் நம் நாட்டின் கண்கள் . எப்படிப் பாத்திங்களா . அவங்களே தப்பு செஞ்சுட்டாலும் புருஷன  இடிச்சுக்காட்டி  கட்டுரையை முடிச்சுடுவாங்க !


மணத்தக்காளி மஞ்சூரியன் சூப் என்ற திரவம் வெண்டைக்காய் வேகவைத்த தண்ணிரை பாசுந்தியுடன் கலந்து போல்  திவ்யமான  கொடுமையா இருந்தது  ! என் ஜாதகத்தில் எட்டுல சனி இருக்கிறதுனால ஆயுசு கெட்டி ...தப்பிச்சேன்  !


என் தாலி பாக்கியம்னு சொல்லுங்க என்று என் மைண்ட் வாய்ஸை ஒட்டுக்கேட்ட என் மனைவி தற்பெருமை அடித்துக் கொண்டாள்  ! 


சாம்பார் அருமையாக   இருந்தால் தற்பெருமையும், சொதப்பலாக இருந்தால் என்ன எழவு பருப்பு வாங்கினீங்களோ  ! என்று நம்மை இடிப்பதும் நமக்கு புதுசா என்ன !


அடுத்த வாரமும் விடிந்தது. புது டிஷ் புது சோ(வே)தனை. இந்த வார ஸ்பெஷல் வீட் ப்ரேன்  நான் - Wheat  Bran  Naan ). கஷ்டப்பட்டு கடை கடையா ஏறி வீட் ப்ரென் வாங்கி வந்தேன். கோதுமை மாவு கிடைக்குது , முழு கோதுமை கிடைக்குது, கோதுமைரவை கிடைக்குது  ஆனால் இந்த பாழாய்ப் போன வீட் ப்ரென் எங்கேயும் கிடைக்கலை . நாலு மடங்கு விலை ! 


அப்பேற்பட்ட வீட் ப்ரேன்  நான் ஒரு துண்டு சாப்பிட்டதும் மூளையின் மூலையில் பொறி  தட்டியது ...  நினைவலைகளை பின்னோக்கி செலுத்தி 1973ல் சிவகங்கை நாட்களுக்கு போய் சேர்ந்தேன் . வீட்டு வேலை செய்யும் பெண்மணி (லக்ஷ்மி  என்று நினைவு) என் அம்மாவிடம் சொன்னது நினைவு வந்தது .  


நீங்கள் மாவு சலித்துவிட்டு மீந்திருக்கும்  கப்பியை கொடுங்கள் அதை வைத்து நாங்கள் தவுட்டு ரொட்டி பண்ணி சாப்பிடுவோம் 


நாங்களே மாதாந்திர காய்ச்சிகள்  எங்களிடம் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு வறுமை ! 


அந்த தவுட்டு  ரொட்டிதான் இன்று கிராஜுவேஷன் ஆகி, வீட் ப்ரேன்  நான் ஆக உருமாறியிருக்கிறது ! ஆயிரம் மடங்கு விலை, ஸ்தல வரிகள் தனி ! 

 

இது போலத்தான் இன்னொரு கண்டுபிடிப்பு. ப்ரோபயோடிக்      ஃபெர்க்மெண்டட் ரைஸ் கேக் (Probiotic Fermented rice  pudding  ). இது இன்றும் தி.நகர் ரெசிடெண்சி  ஹோட்டலில் காலை உணவு Buffetல் கிடைக்கிறது .  அதன் அசல்  பெயர் "பழைய சோறு"



இது போல நம்மை கிறுக்கனாக்கும் மற்ற சில பெயர்கள் அருஞ்சொல்பொருளகராதியுடன் கீழே ....


Mulligatawny - மிளகுத்தண்ணீர் - அதாவது மிளகு ரசம் 

Porridge  : கஞ்சி 

Probiotic Fermented rice  pudding: "பழைய சோறு"




இது போல சாதுவான பதார்த்தங்களை உருமாற்றி பின் லாடனாக மாற்ற பெரு முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு இந்த பெண்கள் பத்திரிகைகளும் அவற்றின் இலவச இணைப்புகளும் துணை போகின்றன !


சாதுவான இட்லி என்ற பதார்த்தம் , ஃ ப்ரையிட்  இட்லி, மஞ்சூரியன் இட்லி, ஷெய்சுவான் இட்லி, பார்பக்யூ இட்லி, கைமா இட்லி, க்ரில்டு இட்லி    என்ற பெயர்களில் மானபங்கப்படுத்தப்படுகின்றன.


பாமரர்கள் இட்லிக்கு தரும் தொல்லை போதாதென்று   இட்லிக்குள் ஆமைக்கறி  வைத்து சுதாகரன் கொடுத்ததாக ஒரு அரசியல் தலைவரின்   புருடா வேறு ! 





சாதாதோசை மடிப்புக்கு  மத்தியில் உருளைக்கிழங்கு மசால் ஒளித்து  வைக்கப்பட்டு, மசால் தோசைஎன பெயர் சூட்டப்பட்டதை அங்கீகரிக்க நமக்கு 100 வருடம் தேவைப்பட்டது. இப்பொழுதுதான் நம் மனம் அமைதியடைந்திருக்கிறது . அதற்குள் நமது பஞ்சாப் சகோதரர்கள் மாமிச மசாலா சேர்த்து  கீமா தோசை என்று பிரபலப்படுத்தி விட்டார்கள். சாகபக்ஷிணியாக இருந்த தோசையை சொல்லாமல் கொள்ளாமல் மாமிச பக்ஷிணியாக மாற்றி விட்டார்கள். பாழும்  தோசையின் மனம் என்ன பாடுபடும் !  பெங்களூர் தோசையில் தண்ணீரின் அளவை விட நெய்யின் அளவு அதிகம், அது கூட பரவாயில்லை !


யூடியூப் நிகழ்ச்சிகளுக்காக பலர் தோசை செய்கிறார்கள்  அதில் செய்யப்படும் தோசைகள்  யாரும் சாப்பிடுவார்களா அல்லது படம் எடுத்து விட்டு குப்பையில் கொட்டுவார்களா  தெரியாது. 


உதாரணம் மட்கா  தோசை . இந்தப் படத்தில் உங்களால் தோசை எங்கே என்று கண்டுபிடிக்க முடிகிறதா 



மொசரெல்லா  தோசை, அவகாடோ தோசை என்று தோசைக்கு சமாதி காட்டுகிறார்கள்,



இதற்கெல்லாம் மூல காரணம் சிநேகிதி, மங்கையர் மலர், போன்ற பெண்கள் பத்திரிகைகளில் வரும் சமையல் குறிப்புகளும், இலவச இணைப்புகளும் .


என் வயிற்றெரிச்சலை கொட்டியதாலோ என்னவோ, மங்கையர் மலர் இழுத்து மூடிட்டாங்க . ஆண் சாபம் பொல்லாதது !  சிநேகிதிக்கும் அந்த கதி வராமலா போயிடும் !


இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க நான் ஒரு உத்தியை கையாளுகிறேன், அந்தக் கர்மம் பிடிச்ச இலவச இணைப்பு வந்த உடனேயே அந்தப் புத்தகத்தை குறுக்கால கிழிச்சு கோவிலுக்கு போகும் போது  விபூதி மடிக்க பக்தர்களுக்கு கொடுத்துவிடுகிறேன். இதை என்  மனைவி தடுக்க மாட்டாள் . ஏன்  தெரியுமா  தடுத்தால் தெய்வ குத்தமாகிடும் பாருங்க !  😀😀


தெரியாமலா  சொன்னாங்க அந்தக் காலத்திலே .... கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !



No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...