சந்திராஷ்டமம் என்றால் என்ன ! சந்திராஷ்டமம் அன்று இந்தக் காரியமும் செய்யக் கூடாதா ?
(இது ஜோதிட சம்பந்தமான பதிவல்ல! மூடநம்பிக்கையை அகற்ற ஒரு சிறு முயற்சி)
ஜோதிடத்தில் ராசிபலன் பார்க்கும்போது பலரும் கவனிக்கும் அம்சங்களில் ஒன்று சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதனால் பலர் சந்திராஷ்டமம் ஏற்படும் நாட்களில் எந்த வேலையையும் செய்யமாட்டார்கள்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன ! கிரகணத்தன்று கர்ப்பிணிகள் சூரிய/ சந்திர கதிர்கள் கூட படாமல் இருட்டறைக்குள் இருப்பார்களே அப்படித்தான் சந்திராஷ்டமம் அன்று இருக்க வேண்டுமா ! விவரமாகப் பார்ப்போம் !
ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் அந்த ராசி அன்பர்களுக்கு அன்று சந்திராஷ்டமம். ஒரு ராசிக்குள்ளேயே 2 1/4 நட்சத்திரங்கள் இருப்பதால், கூர்ந்து பார்க்கும் போது ஒருவருடைய நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.
சரி ! ஒருவருக்கு நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்று வைத்துக் கொள்வோம். அன்று நான் பால், காப்பி குடிக்கலாமா, டிவி பார்க்கலாமா, ஆபீஸ் போகலாமா என்ற உலகமகா சந்தேகம் ஏற்படுவது இயல்புதானே !
இந்தக் கேள்விக்கு விடை தெரிய சந்திராஷ்டமம் என்ன செய்யும் என்று பார்க்கலாம்!
எட்டாவது வீடு என்பது ஒரு அசுப வீடு. எனவே எட்டாவது வீட்டில் சந்திரன் நுழைந்து விட்டால் பாகிஸ்தான்காரன் அஜ்மல் கஸாப் சகிதம் பாம்பே புகுந்ததுபோலத்தானே..... இப்படி தவறான எண்ணத்தில் தான் நாம் பல நாட்களை வீணடித்திருக்கிறோம் .
உண்மை என்னவென்றால் சந்திரன் என்பவர் மனம் சம்பந்தப்பட்ட கிரகம், அவர் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் போது எண்ணம் , சிந்தனை, கற்பனைத்திறன், ஆராயும் தன்மை ஆகியவற்றை பாதிக்கக் கூடும். எனவே திட்டங்கள் தீட்டுவது, ஆராய்வது போன்ற முயற்சிகள் மாத்திரம் சிறப்பாக வேலை செய்யாது . நூறு சதவீதமாக இல்லாமல் ஆனால் குறைவான சதவிகிதம் வேலை செய்யலாம்.
எனவே அந்த நாட்களில் புதிய திட்டம் , நாள் குறிப்பது, புது முயற்சி இத்யாதி வேண்டுமானால் தவிர்க்கலாம். மற்றபடி எதையுமே செய்யக்கூடாது என்பது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் .
இன்னும் சற்று ஆராய்ந்தால் .....ஒரு காரியம் (பணி ) நடக்க எண்ணம், செயல் என்ற இரண்டு பகுதிகள் பயன்படுத்தப்படும். முதல் நாளோ முதல் வாரமோ ஒரு செயல் செய்ய எண்ணம் கொள்வோம். அடுத்த நாளோ அடுத்த வாரமோ செயல்படுத்துவோம்.
சந்திராஷ்டம நாட்களில் முதல் பகுதியான "எண்ணம் " என்பதை மட்டும் தள்ளி வைக்கலாம். ஏற்கனவே முடிவெடுத்த செயலை தாராளமாகச் செய்யலாம். ஒன்றும் ஆகாது .
புது வேலைவாய்ப்பை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவை சந்திராஷ்டம நாட்களில் செய்யாமல் அடுத்த நாள் செய்யலாம். ஆனால் முடிவெடுத்த பின் சந்திராஷ்டம நாளில் வேலையில் சேர எந்த தடையுமில்லை !
இன்னொரு உதாரணம். திருச்சி பயணம் செய்யும் நாள் சந்திராஷ்டமமாக இருந்தால் தவறில்லை. எந்த நாளில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுக்க காலண்டரைக் கையில் எடுக்கிறீர்களோ அந்த நாள் சந்திராஷ்டமமாக இல்லாமலிருப்பது உசிதம்.
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் 365 நாள்களும் (சந்திராஷ்டம நாட்கள் உட்பட) வேலை செய்தவர்களுக்கு ப்ரோமோஷன் கிடைத்திருக்குமே தவிர வேலை போனதாக சரித்திரம் பூகோளம் எதுவும் இல்லை !
அடியேன் மறுப்பு கொள்கைக்காரன் அல்ல, பரம ஆத்திகன். இப்படிச் சொல்கிறேனே என்று எண்ணவேண்டாம். எத்தனை விமானங்கள், எத்தனை ரயில்கள், எத்தனை பஸ்கள் ராகு, எமகண்ட, குளிகை நேரங்களில் பயணத்தை தொடங்கவில்லையா , பத்திரமாய் போய் சேரவில்லையா !
கடவுளை நம்புங்கள், அவர் நம்மை என்றும் காப்பார். அடியேன் சொல்லவில்லை... அருணகிரிநாதர் சொல்கிறார் !
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
பொருள்: நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய (இ)யமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. (குமரக்கடவுள் என்ற வார்த்தைக்கு பதிலாக உங்களது இஷ்ட தெய்வத்தின் பெயரை நிரப்பியும் பொருள் கொள்ளலாம் )
அதற்கு மேலும் சந்திராஷ்டமம் பற்றி சந்தேகமிருந்தால் "பிரபல ஜோதிடர் நாளிமுத்துவை கீழ்கண்ட ஊர்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் ஹோட்டல் பாரிஜாதத்தில் (முன்பதிவிருந்தால்) தொடர்பு கொள்ளலாம் " போன்ற தவறான விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல் இந்தப் பதிவின் கீழேயே வினவலாம் !
அடியேனுக்கு விடை தெரியும் கேள்விகளை கேட்பவர்களுக்கு மட்டும் பரிசு உண்டு ! 😀😀