Thursday, December 9, 2021

இம்மையிலும் நன்மை தருவார் கோவில் - தெரிந்த கோவில்.... தெரியாத தகவல்

ஒரு  புதிய பதவி கிடைத்ததும்  வயதில்  மூத்த பெற்றோர்களிடமோ அல்லது அறிவில் உயர்ந்த குருவையோ வணங்கி ஆசி வாங்குவது வழக்கம். 
பெற்றோர்களோ, குருவோ இல்லாதவர்கள் தன்னில் சிறந்த, தன்னைப் படைத்த இறைவனை வணங்கி அவன் தாள்தொழுது ஆசி பெறலாம்.

 தன்னைப் படைத்த இறைவன் என்று ஒருவன் இல்லாதபோது என்ன செய்வது. என்னது இறைவன் என்று ஒருவன் இல்லாத போதா ! அப்படி ஒரு நிலைமை எப்படி இருக்கமுடியும்... யாருக்கு வந்தது.

அந்த சிவனுக்குத்தான் அந்த நிலைமை ! 

மதுரைக்கு புதிய அரசியாக மீனாக்ஷி  பட்டம் ஏற்றுக்கொண்டாள். மீனாக்ஷி  அன்னை சுந்தரேஸ்வரரை மணந்தால் அவர் அரசிக்கு கணவராக அரசரானார். பட்டமேற்பதற்கு முன்பு இறைவனை வணங்குவது பாண்டிய குல மரபு. அந்த  மூவர்க்கும் எட்டாத முழுமுதற்கடவுள் யாரை வணங்குவார் ? 

வேறு வழி ..... தன்னைத்தானே பூஜித்தார். அப்படிப்பட்ட விசேஷமான தலம் தான்  'இம்மையிலும் நன்மை தருவார் கோவில்'

அடியேன் மதுரை தொண்டரடிப்பொடியான் என்ற வகையில் 50க்கும் அதிகமான முறை இந்தக் கோவிலுக்கு சென்றிருப்பேன், ஆனால் கோவிலின் பல உண்மைகள் அண்மையிலேயே தெரிந்தது. கோவிலுக்குப் போனோம் ஏனொதானோவென்று கும்பிடு போட்டு அங்கு தரப்படும்  துளசியையோ, விபூதியையோ வாங்கிவிட்டு கடனே என்று ஒரு பிரதக்ஷிணம் செய்து விட்டு வந்ததன் வினை கோவிலைப் பற்றிய அறியாமை.

மற்றைய கோவில்களில் இல்லாதவாறு சிவலிங்கத்தின் பின்பாகமே நமக்கு தரிசனமாகக் கிடைக்கிறது. மேற்கு பார்த்த சன்னிதி... சற்று அபூர்வம்!

சிவலிங்கத்தின் பின்புறம் (அதாவது நமக்கு முதுகைக் காட்டும்  அவருக்கு முன்புறம்) அமர்ந்த கோலத்தில் பூஜை செய்ய்ம் மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் மானுட ரூபத்தில்.


இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு விளஙகுவது என்னவென்றால்.....

மேற்கு நோக்கி அமர்ந்து மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் லிங்கத்தை பூஜிக்கின்றனர். அவர்களிருவருக்கும் லிங்கத்தின் முன்பாகமே தெரியும். 

சன்னிதிக்கு வெளியிலிருக்கும்  நமக்கு தெரிவது சிவலிஙகத்தின் பின்பாகம். உண்மையில்  சிவலிங்கம் என்னவோ கிழக்கு நோக்கியே பிரதிஷ்ட செய்யப்பட்டுளது.

புரிகிறதா !

கடவுள்களாலேயே பூஜிக்கப்படுகிறார் என்றால் அந்த சிவலிங்கத்தின் மகிமை விளஙகியிருக்கும். (சமஸ்த தேவைரபிபூஜிதாய ! ) 






பள்ளி நாட்களில் இந்தக் கோவிலை "நன்மை தருவார் கோவில்" என்று அறிந்திருக்கிறேன். கல்லூரி  நாட்களில் கோவிலின் முழுப்பெயராக தெரிந்து கொண்டது 'இம்மையில் நன்மை தருவார் கோவில்'.  அதாவது மற்ற கோவில்களில் வணங்கினால் வரும் பிறவிக்கு நன்மை (புண்ணியம்) சேரும். அதாவது 'பர சௌபாக்கியம்'. ஆனால் இந்தக் கோவிலில் இம்மை நலம் அதாவது 'இக சௌபாக்கியம்' கிடைக்கும்.

இந்த வாரம் இக்கோவிலுக்கு சென்ற போது தான் கோவிலின் முழுப்பெயரை சரியாகத் தெரிந்து கொண்டேன்....அதாவது இம்மையிலும் நன்மை தருவார்.  மறுமையிலும் நன்மை தருவார். 

அருணகிரியார் பழநி திருப்புகழில் சொல்வதுபோல (" இகபரசெள பாக்ய     மருள்வாயே பசுபதிசி வாக்ய        முணர்வோனே") இத்தலத்தில் இறைவன் இக+பர சௌபாக்கியங்களை தர வல்லவன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்...பக்தர்கள் நாம் இந்த சந்தர்ப்பத்தை விடலாமா!



இந்தக் கோவிலை தேடுவது/ அடைவது கஷ்டமே இல்லை. மதுரை நகரின் மத்தியப் பகுதியில்.  மீனாக்ஷி கோவிலிருந்து மேற்கில் அரை கிலோமீட்டரில், திருப்பல்லாண்டு இயற்றப்பட்ட   திவ்யதேசக்ஷேத்திரமான கூடலழகர் கோவிலுக்கு வடப்பக்கத்தில் கால் கி.மீ. தூரத்தில். 

காரணப்பெயராக இறைவனுக்கு 'நன்மை தருவார் ' என்று பெயர். தனிச்சன்னிதியில் அம்பாள் 'மத்யபுரீஸ்வரி' என்ற பெயரில் வணங்கபடுகிறாள். கல்லாலான ஸ்ரீசக்கரத்தில்  அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

மீனாக்ஷி பதவியேற்கும் முன் சுந்தரேஸ்வரருடன் இங்கு எழுந்தருளி தம்பதி சமேதராக 'நன்மை தருவாரை' பூஜித்து ஆசி பெறும் நிகழ்வு ஒவ்வொரு சித்திரைதிருநாளிலும் உண்டு.

கோவில் அர்ச்சகர் இருவருக்கும் நடுவில் இருந்தே பூஜைகள் செய்வார் .

ராஜகோபுரம் முடிவடையாத நிலையில்; ராஜகோபுர நிலையின் மேல் ஒரு தாற்காலிக சிறு கோபுரம் கட்டி சமாளித்திருக்கிறார்கள்.



கோவிலின் மற்றொரு விசேஷம் ஸ்தல விருக்ஷமான தச -தள  வில்வமரம். மூன்று இதழ்களுக்கு பதிலாக  பத்து  இதழ்கள்  கொண்ட வில்வம்.




ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவம்.  சில விஷயங்களே தெரிந்த நமக்கு பல விஷயங்களை காலம் கற்றுக்கொடுக்கிறது ! 

திருச்சிற்றம்பலம் 🙏🙏



No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...