Monday, April 5, 2021

அரசியல் (அ)நாகரீகம்

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே  இருக்கும் நேரத்தில் பல மேடைப் பேச்சாளர்கள் அரசியல் நாகரீகம்  என்றால் எதிர்கட்சிக்களையும், வேட்பாளர்களையும் மரியாதையாக, மனம் நோகாமல், சரியான புள்ளி விவரங்களுடன் ஆதாரத்துடன் தாக்க வேண்டும் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கக் கூடும். 

பேச்சு என்ற வார்த்தையை பிரித்துப் படித்த்தால்  பேச்சு என்றவார்த்தையில் ஏச்சு என்பது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் புரியும். 




முதல் முறை மேடைப் பேச்சாளர்களுக்கு  உதவும் வகையில் இந்தக் கையேடு பிரசுரிக்கப் படுகிறது.  அடியேன் தேர்தலில் போட்டியிடாததால் இக்கையேடு இலவசமாக வழங்குவதை தேர்தல் ஆணையம் தடுக்காது.



ஒரு அரசியல் தலைவரை (அதாவது எதிர்க்கட்சிக்காரர்) கேசம், கூந்தல் இவற்றிற்கு இணையான வார்த்தையால் திட்டினாள் அது  ஆபாசம். அதையே அவர் ஒரு உதிர்ந்த ரோமம் என்றால் யாருக்கும் புரியாது. அப்படியும் புரிந்து கேட்டால், ரோமம் முதிர்ந்ததும் அவ்விடத்தில் புத்தம் புதிதாக ஒரு ரோமம் உதித்துவிடும். நான் உதிர்ந்த ரோமம் என்று சொல்வதன் சரியான பொருள், மாண்புமிகு எதிர்க்கட்சிக்காரர்  என் உடன்பிறவா அண்ணன்  கொடுமுடி கட்டத்துரை எத்துறையிலும் புது ரத்தத்தை பாய்ச்சக்கூடியவர் என்று தோசை போல் திருப்பிப்போட  சால்ஜாப்பு  தயாராக வைத்திருக்கவேண்டும்.




ரவாதோசையில் முந்திரி, வெங்காயம், தூவுவது போல்  மாண்புமிகு, உடன்பிறவா அண்ணன், போன்ற தூவல்களை சால்ஜாப்பில் தூவிவிட வேண்டும். மானபங்கப்படுத்தப்பட்ட  கொடுமுடி கட்டத்துரைக்கு சொந்தக் கட்சியிலேயே  யாரும் மாண்புமிகு என்று மதிக்காததால், உங்களது  சால்ஜாப்பு ஆறுதலளிக்கும். 

தமிழ் எத்தனை உப்யோகமான மொழி பாருங்கள்சால்ஜாப்பு என்ற வார்த்தையிலே ஆப்பு எப்படி  ஒளிந்திருக்கிறது என்று .


மக்கள் கவனத்தை கவரும் வண்ணம் பேசும் வகையில் ஆபாசமாகப் பேசுவது பல கட்சிகளின் அடிப்ப்டைக் கொள்கை என்பதால் ஆபாசத்தை தவிர்க்கவேண்டுமென்ற அவசியமில்லை. மீறினால் உட்கட்சி நடவடிக்கை பாயலாம். ஆனால் பழி  உங்கள் மேல் விழாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.


உதாரணத்திற்கு உங்கள் பிரதான எதிர்கட்சிக்காரர் சோமு மீது பாலியல் பலாத்கார குற்றம் சாட்ட வேண்டுமென்றால் இப்படி முயற்சி செய்து பாருங்கள்.


நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் பொதுக்கூட்டத்தில்  எதிர்கட்சிக்காரர் சோமு மீது பாலியல் ரீதியாக  நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் ஒரு குற்றச்சாட்டு வைத்தார். குற்றம் சாட்டிய அந்த நபரின் பெயரைச்  அரசியல் நாகரீகம் கருதி என்னால் வெளியில் சொல்லமுடியாது.  அந்த  இரண்டெழுத்து பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர் (முதலெழுத்து சா, கடைசி எழுத்து மி, நடுவிலிருக்கும் எழுத்துக்கள் சொல்லமுடியாது ) சொன்ன கருத்துக்கள் மாண்புமிகு  எதிர்கட்சி வேட்பாளர் சோமுவை மனம் வருத்தப்படும் என்று எனக்கு கவலையளிக்கும் அதே நேரத்தில், மக்கள் நலன் கருதி சி.பி.ஐ  ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  




இக்கோரிக்கை இரண்டெழுத்து சுயேச்சை வேட்பாளரின் கருத்தாகவே நான் கொள்கிறேன் என்று சொல்லி அவரையும் இழுத்துவிடவேண்டும். (பின்னே.... நாளை விசாரணை,ஜெயில் அது இதுன்னு வந்தா, தனியாகவா போக முடியும் !)


இப்படி கிசுகிசு பாணியில் பேசினால், உங்கள் பேச்சு சோமபானம் குடித்து விட்டு அரைகுறை மயக்கத்திலிருக்கும் தமிழ்குடிமகன்களை தட்டி எழுப்பும். அண்ணன்  யாரைச் சொல்றாரு என்று  சக குடிமகன்களையும் தட்டி எழுப்பக்கூடும்.


தான் புசித்த சோறும் வாய் குடித்த தேனும்  
நுகர்ந்த  (ஊறு )காயும்  வாராது கடைவழிக்கே ....

-------என்ற "ஈரடியார்"  வாக்கின்படி  


என்று இப்படி ஏதாவது ஒரு சங்ககாலப் புலவரின் (வாழ்ந்த அல்லது  வாழாத) பெயரைச் சொல்லி  சொந்த சரக்கை அவிழ்த்துவிட்டால் உங்களுக்கு தமிழ்ப் புலவர் என்று அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சில வருடங்களில் உங்கள் இயற்பெயர் மறைந்து உங்களை புலவர் ஐயா என்று கட்சிக்காரர் அழைக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும். அந்த ஐயா என்ற வார்த்தை இன்னும் மரியாதையாக ஐயர்  என்று மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  அந்த ஒரே வார்த்தையாலேயே  சொந்த ஊர், சொந்தக் கட்சியிலேயே சூனியம் வைக்கப்படுவீ ர்கள்.


25 வயதான நீங்கள் கவனக் குறைவால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு பெரிய பலசாலியை சாடியிருந்தால், சமயத்தில் உங்கள் கட்சியே உங்களுக்கு உதவிக்கு வாராது. ஏனென்றால் உங்கள் கட்சி தலையும், எதிர்க்கட்சி தலையும் கொள்கை ரீதியாக வேறுபட்டாலும், தென்-அமெரிக்காவில்  தொழில் முறைப் பங்காளிகளாக இருக்கக்கூடும்.

அப்படியிருந்தால்  அடுத்த சுபமுகூர்த்தத்திலேயே கேமரா சகிதமாக அந்தப் பெரிசின் வீட்டிற்கு சென்று அவரது 12 நாய்க்குட்டிகளில் ஒரு குட்டிக்கு பிறந்த நாள்  வாழ்த்து தெரிவிக்கும் சாக்கில்  அப்பெரியவருக்கு  திராவிட மரியாதை செய்து( மறைவாக காலில் விழுந்து, பொதுவில் கட்டி அணைத்து ஒரு புகைப்படம் எடுத்து  )   இது அரசியல் மரியாதை  நிமித்தமான சந்திப்பு என்று சுற்றறிக்கை விடவேண்டும் . இது தான் அரசியல் நாகரீகம் ! 




எதிர்க்கட்சி தொண்டர், தலைவர் எவரேனும் இயற்கை எய்தியிருந்தால் முன்பு அவரை 17 தலைமுறைக்கு கேடுகெட்ட முறையில் திட்டியிருந்தாலும், ஒரு மலர் வளையத்துடன்  மறைந்தவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும். இதனால், எதிர்க்கட்சியில் சரியாக தினப்படி + பிரியாணி + சுராபானம்  சரியாகக்  கிடைக்காத ஒரு தொண்டன் உங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பிருக்கிறது !

ஒழிந்தான்  துரோகி என்ற உங்களது மைண்ட் வாய்ஸை அடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பின்குறிப்பு: இந்தக் கட்டுரை எவரையும் புண்படுத்த வேண்டுமென்றோ , ஒரு கட்சியை  பழிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல ! மனம் புண்பட்டிருந்தால் என்க்கு படிப்பு கற்பித்த பள்ளியும், கூகுளும் , இன்டர்நெட்டுமே காரணம் என்று பொறுப்பு துறக்கிறேன் (Disclaimer )


அதையும் தாண்டி  உங்கள்  மனது  ஆறுதல் அடையவில்லையென்றால் உங்களது நாய்க்குட்டிக்கு என்று பிறந்த நாள் என்பதை மட்டும் ஓர்ர்ர்ர்ர்ரு வார்த்தை சொல்லுங்கள்.  மலர் வளையத்துடன் மாலையுடன் உங்களை சந்திக்கிறேன்.  அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டது எங்கள்  பாரம்பரியம் !


ஆனாலும் உங்களது கட்டுப்பங்களாவுக்கு அழைக்கவேண்டாம். இந்த பாழும் உடம்பு உபசரிப்பைத் தாங்காது !









No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...