கொரோனா பதிவுகள் 1, 2 க்குப் பிறகு இது மூன்றாம் பதிவு. முதல் இரண்டு பதிவுகள் பிரதமரின் முதலாம், இரண்டாம் ஊரடங்கு அறிவிக்கப்புகளை சார்ந்தது. இப்போது மூன்றாம் பதிவு என்றதும், ஏதோ மூன்றாவது ஊரடங்கு அறிவிப்போ என்று கற்பனை செய்யவேண்டாம்.
(பதிவு 1: https://scribblingsofark.blogspot.com/2020/04/blog-post_8.html
பதிவு 2: https://scribblingsofark.blogspot.com/2020/04/blog-post_13.html)
வீட்டில் எல்லோரும் சேது சினிமாவில் வரும் விக்ரம் போல காலில் வளையம்-சங்கிலி, இடுப்பில் பச்சைக் கலர் தர்மாஸ்பத்திரி நைட்டி, விட்டத்தைப் பார்க்கும் கண்கள், வாயில் "எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்" ரேஞ்சுக்கு போய் விட்டார்கள்.
அளவுக்குகதிகமான விடுமுறைகளால் நாட்டில் எல்லோரும் திகட்டி திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பவனுக்கு பாசுந்தியில் முக்கிய மைசூர் பாகு கொடுப்பது போல்.
பாதி தூக்கத்தில் எழுப்பினால் ....."என்னை மன்னிச்சுடுங்க, இனிமே நான் லீவு கேக்க மாட்டேன், லீவு கேக்குற யார் கூடயும் சேரமாட்டேன்" என்று பிதற்றுகிறார்கள். அமெரிக்கன் ஷிப்ட்ல வேலைபார்க்கும்போது கூட இவ்வளவு ஜெட் லேக் இருந்தது இல்லை.
நன்றாகத் தூங்கி, காக்கை கரையும் நேரத்தில் எழுந்து, பல் தேய்த்து, காபி குடிக்கலாமென்று ஹாலுக்கு போனால் சுடச்சுட பஜ்ஜியும், குலோப் ஜாமூனையும் பார்த்து மிரண்டு விட்டேன்....காலங்காத்தால இப்படி சாப்பிட நாம என்ன "ஹம் ஆப் கே ஹை கோன்" பேமிலியா என்று சொன்ன என்னைப் பார்த்து வீட்டு நாய் கூட சிரித்தது.
"ஐயா, காலை டிஃபன் , மதியம் ஃபுல் மீல்ஸ் எல்லாம் ஒரு கட்டு கட்டீட்டு தூங்கப் போனது மறந்துடுச்சா" , என்று என் மனைவி சொன்னதும் தான் நினைவு வந்தது. காலை நாலு மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்திலேயே எழுந்து காபி டிஃபன் சாப்பிட்டு, ஒரு கோழி தூக்கம் தூங்கி, பின் குளியல், ஒட்டடை அடிச்சு, வீடு பெருக்கி, குளிச்சு , பின் ஒரு அலிமிடேட் மீல்ஸ் சாப்பிட்டு கும்பகர்ணப் படலத்தை துவங்கி இருந்திருக்கிறேன். தினந்தினம் இரண்டு அல்லது மூன்று தடவை தூக்கம்.... நல்ல காலத்திலேயும் தூங்கி, அகாலத்திலேயும் தூங்கி, நாளும் தெரியல, கிழமையும் தெரியலை !
என்ன சோதனையப்பா! அப்போ நான் பஸ்ல போனது ...... கண்டக்டரோட ஐம்பது பைசா சில்லறை பாக்கிக்கு சண்டை போட்டது,.... லேட்டாப் போய் மேனேஜர் கிட்ட திட்டு வாங்கியது எல்லாம் கனவா !
தேனாய்க் காதில் பாயும் அந்த பஸ்சின் வேய்ங்குழல் ஹாரன், காய்கறிகடைக்காரியின் கஸ்மாலம் என்ற தீந்தமிழ் சொல்லாண்மை, அகில் நறுமணமாக காற்றில் தவழும் டீசல் புகை, எல்லாம் மாயையா ! அந்த பாக்கியத்தைப் பெற இன்னும் பதினெட்டு நாட்கள் காத்திருக்க வேண்டுமா? ஐயையோ இதுக்கு நான் அடிமாடா கசாப்புக்கு கடையிலேயே இருந்திருக்கலாம் !
கோயம்பேடு செல்லும் பல்லவன் பேருந்தில் கூட்டத்தில் நசுங்கி ஒரு அரை மணி பிரயாணம் செய்தால் மாதம் 10,000/- கொடுத்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததைவிட ஜம்மென்ற பயிற்சியல்லவா ! பஸ்ஸில் நசுங்குவதைத் தவிர பஸ்ஸைப் பிடிக்க ஓடுவதும் ஒரு நல்ல பயிற்சியாயிற்றே ! எல்லாம் அம்பேல்.
எண்பதுகளில் மதன் விகடனில் சொன்னது நினைவுக்கு வந்தது " நிழலின் அருமை வெயிலிலே, வெயிலின் அருமை புயலிலே".
வாரம் ஒரு நாள் இரண்டு நாள் லீவென்றால் இனிமை, நாற்பது நாள் விடுமுறை கொடுமை,...... அதுவும் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது சினிமா பார்க்க இலவச பாஸ் கிடைத்து, தியேட்டரினுள்ளே போன பிறகு அந்தப் படம் "உளியின் ஓசை" என்ற காவியமாக அமைவது போல !.
" நிழலின் அருமை வெயிலிலே, வெயிலின் அருமை புயலிலே" என்று வெயிலுக்கு ஏங்கும் நமக்கு அந்த வெயில் எப்படி இருக்கப்போகிறதோ .... அது தான் மே மூன்றாம் தேதிக்குப் பிறகு ......
அது தான் இந்த கொரோனா -3ம் பதிவு.
கொ.மு - கொ.பி - அதாவது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின்! மே மூன்றாம் தேதிக்குப் பிறகு இயல்பு (!?!!?!?) வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி !
கற்பனைதான் ! பார்ப்போமே !
மே இரண்டாம் தேதி.... முதல் வேலைக்குப் போக தயாராகும் போது இருப்பது போன்ற படபடப்பு, எதிர்பார்ப்பு ..... இரவில் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக தூக்கம் எட்டிப் பார்த்தது. பாதித்தூக்கத்தில் உலுக்கிப் போட்டு எழுந்தேன். அடுத்த நாள் காலை ஆபீஸ் போகும் நினைப்பிலேயே தூங்கியதால் ஆபீஸ் போக தயாராவதை பற்றிய கனவு .
40 நாட்கள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கியதால் நாம் இஸ்திரி போட்டு வைத்திருக்கும் பேண்ட் ஷர்ட் நமக்கு சேருமா ? சேராதா ? என்ற நினைப்புதான் தூக்கம் கலைந்ததற்கு காரணம். அவசர அவசரமாக எழுந்து சுஷ்மிதா சென் போல கேட்வாக்க்கி (பூனைக்காலால் நடந்து) ஹால் லைட்டைப் போட்டு உடுப்புகளை போட்டுப் பார்த்து கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது என் அம்மா தூக்கம் கலைந்து என் நிலையைப் பார்த்து அதிர்ந்தாள்......
"என்னடா ஆச்சு உனக்கு ....அர்த்தராத்திரி ஒன்றரை மணிக்கு பேண்ட் சட்டை போட்டு டையெல்லாம் கட்டி .....காத்து கருப்பு அண்டியிடுச்சா ....இரு எதுக்கும் லைட் ஹவுஸ் சாமியார் கொடுத்த விபூதி பூசி விடுறேன்"
"பரவாயில்லம்மா.....விபூதியெல்லாம் வேண்டாம் " என்று அம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் பூனைக்கால் நடையாக என் அறைக்கு வந்து படுத்தேன். நல்ல வேளை என் மனைவி தூங்கி கொண்டிருந்தாள். இல்லையென்றால் அவளிடம் வேறு வேப்பிலை, விபூதி, திருவடி தீக்ஷை, உபசாரம் எல்லாம் வாங்கி கொள்ளவேண்டும்.
நினைத்த, எதிர்பார்த்த அந்த விடியலும் வந்தது. "முருகா ! எல்லாரையும் காப்பாத்துப்பா " என்ற பிரார்த்தனையுடன் கடவுளுக்கு அடுத்து நாம் அதிகமாக மரியாதை செலுத்தும் மொபைல் போனை தட்டி எழுப்பினேன். வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்ப்பில் வந்த முதல் மெசேஜ் இடியாய் கபாலத்தில் நட்ட நடு சென்டரில் இறங்கியது !
மெசேஜ் அலுவலகத்திலிருந்து...... 50% வேலையாட்கள் தான் ஒரு நேரத்தில் வேலை செய்யலாம் என்று அரசு விதித்திருப்பதால் உங்கள் முறை நாளை (4 மே அன்று) ....
இன்றே முறைத்தேன் !
என்னடா இது "ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரம் விடாது"ங்கிறது மாதிரி ....ஆபீஸ் திறந்தாலும் நமக்கு விடியலையே....ஐயோ இன்னொரு நாள் வீட்டிலேயா...அதே பஜ்ஜி சொஜ்ஜியா.... அதே வெண்டைக்காய் கறியா .... அதே மூணு வேளை தூக்கமா....நம்மால முடியாதுடா சாமி !
நான் போறேன் சாமிகிட்ட என்று விரக்தியில் சொன்னேன் ! .... தற்கொலையெல்லாம் இல்லை ....சாமிகிட்டேன்னு சொன்னது கோவில்ல இருக்கிற சாமிகிட்ட !
நம்ம வீட்டுக்குக்கிட்ட இருக்கிற ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்குப் போகலாம் என்று சுத்த பத்தமா கிளம்பினேன்
ரெண்டு கிலோமீட்டர் தூரம், நடந்து போனா இந்த வெயிலிலே கொஞ்சம் சிரமம், பஸ்ல போயிட்டு வந்துடலாம் ....
பஸ் ஸ்டாப்பில் சுமார் கூட்டம். பஸ்ஸும் வந்தது ....வழக்கம் போலவே ஸ்டாப்பை விட்டு 200 மீட்டர் தள்ளி நின்றது. நின்று கொண்டிருந்த 20 பயணிகளும் பஸ்ஸைப் பிடிக்க ஓடினோம். ஓடிய எனக்கு லத்தியால் ஒரு செல்லத் தட்டு கிடைத்தது, போலீசிடமிருந்து ....."ஏனப்பா அடிக்கிறாய்" என்று ஓடிக் கொண்டே கேட்டேன்... "எல்லாம் ஆட்டு மந்தைமாதிரி ஓடக்கூடாது....உன் முன்னால் ஓடும் ஆளிடமிருந்து 3.33 அடி இடைவெளி விட்டு ஓடவேண்டும்....சரியா !"
"மீண்டும் இடைவெளி தொந்தரவா ......" தப்பித்து ஓடி பஸ் அருகில் போன எனக்கு இன்னொரு ஷாக் .... கண்டக்டர் கதவை மூடிக் கொண்டு எங்களுக்கெல்லாம் பிரம்மோபதேசம் ! " இங்க பாருங்கப்பா ! முன்ன மாதிரி இல்லை.... இருக்கிற 20 வரிசைல லெஃப்ட் சைட் ஒருத்தர், ரைட் சைட் ஒருத்தர் ஆக மொத்தம் . வண்டியிலேயே 40 பேர் தான் ஏறலாம். 30 பேர் ஏற்கனவே உள்ளே ! கொஞ்ச சீட் தான் காலியா இருக்கு, பத்தே பேர் தான் உள்ளே வரலாம்" என்று தீபாவளி ஸ்பெஷல் பஸ் மாதிரி கெடுபிடித்தார் !
ஒரு வழியாக பஸ் ஏறினேன். கண்டக்டர் ஆபரேஷன் பண்ணப் போகும் டாக்டர் போல க்ளவுஸ்அணிந்து , முகம் மூடி, விசிலை மாஸ்க் உள்ளே ஒளித்து விசிலடித்தார்....
நாங்கள் கொடுக்கும் பணத்தை தீண்டத்தகாத பொருள் போல் அருவருப்பாகப் பார்த்து வாங்கிக் கொண்டார். அவ்வப்பொழுது சானிடைசர் தடவிக்கொண்டார்.
"ஊரே இத்தினி கெடுபிடியா இருக்கு....சரியான சில்லறை குடுக்கத் தாவலை ! சரி சரி எறங்குறப்ப கேளு பாக்கி தரேன் " என்று மாமூல் டயலாக் விட்டார் ..... ஆனா ஒண்ணு ....கொரோனா வந்தாலும் சரி ஆண்டவனே வந்தாலும் சரி, சென்னை பஸ்ல பாக்கி சில்லறை மட்டும் வாங்கவே முடியாது !
பெருமாள் கோவிலுக்குப் போகிறோமே நெற்றியில் திருமண் இல்லையே என்ற குறை தீர பாக்கி பணத்திற்கு கண்டக்ட்ர் பட்டையாக நாமம் போட்டார்! ("நான் என்னை வச்சுக்கிட்டா இல்லங்குறேன்" ....கேட்டிருந்தால் இந்த பதில் மட்டுமே கிடைத்திருக்கும் ! )
கோவில் வாசல் வந்ததும் எல்லா சிந்தனையும் காற்றில் பறந்தன !. இறைவனுக்குகாக விரதம் தான் ஒரு மண்டலம் இருப்போம்.... இறைவனைப் பார்க்க நோன்பு 48 நாள், அதாவது ஒரு மண்டலம் இருப்போம் ..... இந்த முறை "பாரா நோன்பே" ஒரு மண்டலம் ஆகிவிட்டது !
செருப்பைக் கழற்றி அக்கம் பக்கம் பார்த்து மற்றவர்கள் கழற்றிய ஜோடிக்கு 3.33 அடி இடை வெளி விட்டு தள்ளி வைத்து விட்டேன். யாருக்குத் தெரியும் லத்திக் கம்பு எப்பொழுது சுற்றப்படும் என்று ...... (ஒரு அடி விழுந்தால் ...மாமா ..... என்றும் உன் ஞாபகம்)
கோவிலுக்கு முன் 10 பேர் கொண்ட சிறு வரிசை. திங்கள் கிழமை காலை என்ன கூட்டம் ..... ஒரு வேளை நம்மைப் போல 50% இடஒதுக்கீடு பிரச்சினை கேஸ்களோ என்னவோ....
மெதுவாக நகர்ந்து முன்னால் போனால் இன்னொரு ஷாக்.... சஹஸ்ரநாமம் அணிந்த ஒரு மாமா தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னடா இது, பெருமாள் சந்நிதியிலே தானே தீர்த்தம் கொடுப்பாங்க ....இங்க என்னடான்னா வாசலிலேயே கொடுக்குறாங்க..... ரொம்ப நாள் கழிச்சு கோவில் திறக்கிறதுனால "பை ஒன் டேக் ஒன் ஃப்ரீன்னு " ஏதாவது ஸ்பெஷலா ?
தீர்த்தம் வாங்கியதும் தான் தெரிந்தது அது அருந்தும் தீர்த்தமல்ல....கையில் தடவும் தீர்த்தம் .... ஆயுர்வேத முறைப்படி தயாரானதாம்..... ஈயம் தடவிய பித்தளை பாத்திரத்திலிருந்து கொடுத்தததால் நான் கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்....
அடுத்து இன்னொரு சிறு வரிசை. இரண்டு கொத்து வேப்பிலையை மஞ்சளில் முக்கி எல்லோரிடமும் கொடுத்திட்டார்கள். திடீரென்று சந்தேகம் இது பெருமாள் கோவிலா அல்லது பெருமாளின் சகோதரி மாரியம்மன் கோவிலா? இன்னும் தீச்சட்டி, கூழ் எல்லாம் உண்டா என்று சுற்று முற்றிலும் பார்த்தேன் ....பெருமாள் கோவில்தான் ....
ஓ இதெல்லாம் கொரோனா தடுப்பு நடவடிக்கையா ?
பெருமாளை உளமார வணங்கி இவ்வுலகின் நோய்க் கொடுமை விலகவேண்டும் என வேண்டி தாயார் சந்நிதி நோக்கி நடந்தேன். ஆச்சரியம் ...சந்நிதி மூடியிருந்தது. என்னப்பா என்று விசாரித்தால், ஞாயிறு தாயார் சந்நிதி திறந்திருக்கும், ஆண்டாள் சந்நிதி மூடியிருக்கும், திங்கள் அன்று தாயார் சந்நிதி மூடியிருக்கும் ஆண்டாள் சந்நிதி திறந்திருக்கும்....
அர்ச்சகரைப் பார்த்து கேட்டேன் .."சாமி.... நீங்க முன்னே தில்லில இருந்தீர்களா "
"ஆமாம் எப்படி சரியா கண்டுபிடிச்சிட்டேளே"
"கெஜ்ர்லிவாலோட ஆட் , ஈவன் கார் ரூல் மாதிரி இருக்கேன்னு கேட்டேன் " "ஆனா இது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா ?"
"அரசின் 144 விதி ஒண்ணுதான் நாங்க கட்டுப்படுற ஒரே விதி, ஆகமாவது ஆவக்காயாவது " என்றார் அர்ச்சகர்
வேறு ஏதாவது விதி காரணமாக ஆண்டாள் சந்நிதியை மூடும் முன்னால் நிலமகளை தரிசித்துவிட்டு பிரசாதம் வாங்க வெளியே வந்தேன். பிரசாத கவுண்டரில் கரண்டியும் பொங்கலுமாக ஒருவர் இருப்பார் என்று எதிர்பார்த்த என் கண்களுக்கு லேப் டாப் சகிதமாக அடுத்த தலைமுறை அர்ச்சகர் இருந்தார்.
"அண்ணா ! கொரோனா வந்ததுக்கு அப்புறம் பிரசாதம் கட் ... ஒங்க ஈமெயிலோ, வாட்ஸப் நம்பரோ கொடுத்தா E-பிரசாதம் அனுப்புவோம்! உண்டியல் கூட மூடிட்டோம் . பணம் கொடுக்கறதா இருந்தா "பே-டீ-எம்" அல்லது 'கூகுள் பே ' மூலமா அனுப்பலாம்" என்று நம்மை 22ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்றார் !
எல்லாம் கலி காலம் என்று கடிந்து கொண்டு அடுத்த நாள் ஆபீஸ் போவதற்கான சிந்தனையில் வீடு திரும்பினேன்.
50% ரிசர்வேஷன் ஸ்கீமில் ஆபீஸ் செல்லும் முறை அடுத்த நாள் செவ்வாய் அன்று கிடைத்தது.
அலுவலகத்தில் பழைஐஐஐஐஐய நண்பர்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. கட்டித் தழுவப் போனால் கொரோனா தடுத்தது. கருப்பு வெள்ளை கால "ஞான ஒளி" திரைப்படத்தில் (அருள் என்ற போலி பெயரில் நடமாடும் ஆண்டனி தன் மகள் மேரியை பலவருட காலம் கழித்து சந்திக்கும் போது தன் எதிரில் இன்ஸ்பெக்ட்டர் மேஜர் சுந்தரராஜன் இருப்பதால் தான் யார் என்று காட்டிக் கொள்ளமுடியாத) சிவாஜி காட்டிய நவரசத்தையும் என் முகத்தில் காட்டினேன். கை குலுக்கவும் முடியாது, கட்டித்தழுவவும் முடியாது.
ரமேஷுக்கு கை கொடுக்க முடியாவிட்டால் கூட அவ்வளவு வருத்தம் இருக்காது... பக்கத்து சீட் பாமா, எதிர் சீட் லீமா ..... இதுதான் கரோனா வின் உச்ச கட்ட சோதனையாகத் தோன்றியது.
நேற்று வரை சல்யூட் அடித்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி இன்று நம்மை புழு போல பார்த்தான் . திருமண வரவேற்புக்கு நுழையும் போது சந்தனம் பன்னீர், கல்கண்டு, ரோஜா போன்ற பொருட்களுடன் ட்ரே வைக்கப்பட்டிருக்கும். நம் மேல் பன்னீர் சொம்பால் நீர் தெளித்து வரவேற்பார்கள்.
இங்கு அது போல் தட்டில் முகத்திரக்கான திரை (மாஸ்க்), சானிடைசர், வைக்கப்பட்டிருந்தது... பன்னீருக்குப் பதில் சோடியம் ஹைப்போ க்ளோரைட் தெளிப்பு ! அரசாங்கத்திலும் பன்னீரை ஓரம் காட்டீட்டாங்க.... இங்கேயுமா !
தீபாவளி அன்று புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்க கவுண்டரில் நிற்கும் மக்கள் தோள் மீதெல்லாம் ஏறி திட்டையும் வாங்கி டிக்கெட்டையும் வாங்கி, வேர்க்க விறுவிறுக்க தியேட்டர் உள்ளே நுழையும் போது இருக்கும் பெருமிதம் எனது சீட்டின் பக்கத்தில் போகும் போது இருந்தது.
கன்று தனது அன்னையிடம் பாலருந்த ஆசையுடன் போகும் போது கயிற்றைப் பிடித்து இழுத்து எதிரில் இருக்கும் மரத்தில் காட்டும் கோனார் போல, "எச்.ஆர்" டிபார்ட்மென்ட் பெண்மணி என்னையும் என்னைப் போன்ற மற்ற கன்னுக்குட்டிகளையும், தரதரவென கான்பரன்ஸ் ரூமுக்கு இழுத்துக்கு கொண்டு போனார் !
அடுத்த அரை மணி நேரத்திற்கு உபதேசம் பிரதமர் மோதியின் உபதேசத்தை மிஞ்சியது !
" இங்க பாருங்க, நாம ஒரு முக்கியமான கால கட்டத்திலே இருக்கோம். கரோனாவால உலகமே தலைகீழா மாறிடுச்சு. பல கட்டுப்பாடுகள். பல கெடுபிடிகள்.... ஒரு சிலவற்றைச் சொல்றேன்"
1500 பேர் வேலை செய்யுற நம்ம ஆபீஸ் ஒரு ஷிப்ட்ல 750 பேர்தான் இனிமே !
அதுனால முன்னே செஞ்ச அதே வேலையை பாதி பேர் வச்சு முடிச்சாகணும் . அதுனால இன்னும் சில மாதத்திற்கு நீங்க ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்யணும். பாக்கி எட்டு மணி நேரம் நல்லா ரெஸ்ட் எடுங்க...என்ஜாய் பண்ணுங்க !. அடுத்த நாள் வேலைக்கு வரவேண்டாம்.
அந்த 16 மணி நேரம் வீட்டிலேயே வேலை செஞ்சு ரிலாக்ஸ் பண்ணலாம். ரெண்டு நாளைக்கு ஒரு நாள் தான் ஆபீஸ் என்கிறதுனால சனிக்கிழமை லீவு கிடையாது. ஞாயிறு அவசியம் இருந்தால் மட்டும் வேலை செஞ்சாப் போதும்.
நம்ம கஸ்டமர் உலக அளவுல பெரிய அமெரிக்க கம்பேனி, கரோனா பாதிக்கப் பட்ட எந்த ஊழியரும் அவங்களுக்கு ஈமெயில் கூட அனுப்பக் கூடாதுங்கிற லெவல்ல கண்டிப்பு. அதனால 24 மணி நேரமும் மோஷன் சென்சார் கேமெரா எல்லாரையும் பார்த்துகிட்டு இருக்கும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் கையை முகத்துக்கிட்ட எடுத்துக்கிட்டு போகக்கூடாது ! அப்படியும் முகத்தில அரிப்பா இருந்தால், பாத்ரூம் போய் சொறிஞ்சிட்டு வாங்க.
அடுத்தடுத்து இருந்த உங்க சீட்டெல்லாம் தள்ளித் தள்ளி போட்டிருக்கோம். அதுக்கும் மேல உங்களுக்கு வலது மற்றும் இடது பக்கம் இருக்கும் சீட்கள் காலியா இருக்கும்.
எக்காரணத்தைக் கொண்டும் டிஸ்கஷன்ங்கிற பேர்ல யாரும் பக்கத்து பக்கத்து சீட்ல ஒக்காரக் கூடாது". அதுக்கும் மேலே பேசணும்னா, அமெரிக்கன் எம்பஸி விசா கவுண்டர் மாதிரி கண்ணாடி தடுப்புக்கு இந்தப்புறம் ஒருத்தர் அந்தப்புறம் ஒருத்தர் நின்று பேசலாம்.
"கை குலுக்குவது, ஹை-ஃபை , ஹக் இதெல்லாம் செய்தால் ஒரு வாரம் க்வாரன்டைன் செய்யப்படுவீர்கள் (ஆபீசில்)"
இது போல பலப்பல புதுப்புது உபதேசங்களாக அடுக்கிக் கொண்டே போனார். தலை சுற்றியது. எதுவும் காதிலேயே நுழையவில்லை
இதெல்லாம் சொல்லி முடித்தபிறகு 'மதுரைக் குசும்பன் ஒருவன்' எழுந்து "இதையெல்லாம் கணக்குக் காட்டி காண்டிராக்ட் விலையை ஏற்றியிருப்பீர்களே! எங்களுக்கெல்லாம் என்ன கிடைக்கும் "
"யூ ஸீ .... நம்ம நிறுவனம் உங்களைப் போன்றவர்களின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள். இல்லையென்றால் 'பீ.சீ.எஸ்", 'டைம்பாஸிஸ்' நிறுவனங்களை போல யாரையும் வேலையை விட்டு எடுக்காது. என்ன இந்த வருஷம் யாருக்கும் இன்க்ரிமெண்ட் மட்டும் கிடையாது.
( இதைக் கேட்ட பிறகும் யாரும் வாய் திறப்பார்களா என்ன!)
எல்லாம் நல்ல படியாகப் போனால் இந்த காண்டிராக்ட்டில் வரும் அதிக வருமானத்தால் இலவச ஷேர்கள் வழங்கப்படும் . 2048ம் ஆண்டு வரை வேலையில் இருக்கும் எல்லோரும் அந்த பயனை அடையலாம்" வெறும் 28 வருஷம் வெயிட் பண்ணினா போதும் !
மீட்டிங் முடிந்து அவரவர் சீட் வந்து உட்க்கார்ந்தோம். கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு அது தயாராகும் நேரத்தில் மனதில் தோன்றியது "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
எல்லாத்துக்கும் காரணம் இந்த சைனாக்காரன், அவன் ஏதோ பல்லி , பூரான், பாம்பு, பெருச்சாளின்னு தின்னு ஒழிக்கட்டும். இலவச இணைப்பா இந்த கொரோனாவைக் கொடுத்து எல்லோரையும் உயிரை வாங்குறான் !
அதற்கு மேல் உதித்த வார்த்தைகள் பிரசுரிக்க தகுதியற்றவை !
அக்கம் பக்கம் திரும்பாமல், மண்-கூடு கட்டிய கன்னுக்குட்டி போல் மாஸ்க் கட்டி, யாரிடமும் பேசாமல், உதட்டசைவு தெரியாததால் அவர்கள் பேசுவதும் சரியாகப் புரியாமல், இயந்திரமாக அடுத்த ஒரு மணி நேரம் இயங்கி....ஒரு காஃபி பிரேக் இருந்தால் நல்லது என்று ரமேஷுக்கு ஒரு sms அனுப்பி கஞ்சா கடத்துபவன் போல, யாரும் பக்கத்தில் வராத படி பதுங்கி கேண்டீன் போனால்.....
20 டேபிள் இருக்கும் இடத்தில் 10 டேபிள் தான், ஒவ்வொரு டேபிளுக்கும் 8 நாற்காலிக்குப் பதிலா 4 ....
வெறுத்துப் போய் காண்டீன் மேனஜரிடம் புலம்பினால் அவர் அதற்கு மேல் பொரிந்து தள்ளினார். "அநியாயம் சார், மனுஷனுக்கு சரி, இட்லிக்கு கூடவா "சமூக இடைவெளி" இங்கே பாருங்க ! ஒரு ஈடுல ஏழு இட்லி இருக்க வேண்டிய இடத்தில் நாலு இட்லிதான். ஒரு பள்ளம் விட்டு ஒரு பள்ளம் தான் மாவு ஊத்தியிருக்கேன் ! ஆனாலும் நம்ம ஆபீஸ்ல கெடுபிடி கொஞ்சம் ஓவர் !"
எதையும் சாப்பிட மனசே இல்லை ! ரமேஷ் கேட்டான்
"மாப்பிள்ளை ....ஒரு போண்டா ? "
"வேண்டாம் ! "
"சரி பின்னே ஒரு காஃபி ?"
"வேண்டாம் ! "
"ஹார்லிக்ஸ் ?"
"வேண்டாம் ! "
" பின்ன ஒரு சைனா-டீ ?"
"💥💪💨💪😡😈💥"
4 comments:
Anna... Sooooper... It was just like reading those times Vikadan Diwali malar
உங்க ஆர்டிக்களுக்கு மதன் சார் ஓவியம் வரைந்தால் சூப்பராக இருக்கும்....
Thank you. இந்த கமெண்ட் போட்ட சகோதரனோ, சகோதரியோ உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் உதவியா இருக்கும்.
Thank you. இந்த கமெண்ட் போட்ட சகோதரனோ, சகோதரியோ உங்கள் பெயர் என்ன என்று சொன்னால் உதவியா இருக்கும்.
Post a Comment