தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
என்று சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் தனது முதல் தேவாரப் பாடலை தொடங்குகிறார். முதல் பாடலை ஆண்டவனைப் பற்றி பாடாமல் அடியார்களைப் பற்றி ஏன் பாடவேண்டும் ! சைவக்குரவலர்கள் நால்வரில் சுந்தரர் மேல் இறைவனுக்கு அதிக அன்பு. ….காரணம்…. மற்றவர்கள் ஆண்டவனைப் பற்றி பாடியபோது சுந்தரர் அடியார்களின் சிறப்பு பற்றி பாடியதால் ! இதனால் அடியார்களின் முக்கியத்துவம் நமக்கு நன்கு புரிகிறது.
அடியார் என்றால் ஆண்டவனை இவர்கள் அடி பணிபவர்கள் என்று பொருள் அல்ல ! ஆண்டவனை தொழுபவர்கள்/ பணிபவர்கள் வெறும் பக்தர்கள் ! ஆண்டவனுக்கு கொண்டு செய்பவர்களே உண்மையில் அடியார்கள்
இந்து மத நம்பிக்கையின்படி, ஆண்டவனுக்கு பொன்னால் அணிகலன்கள் செய்து அழகு பார்ப்பதை விட அடியார்களுக்கு அன்னமிடுவது மேலானது ! திருக்கோவிலுக்கு பொருளுதவி செய்ததைவிட மேலானது உடலால் உழைப்பதென்பது.!
அடியாரது கடமையான தொண்டை தான் மட்டும் அல்லாது பிற அடியார்களையும் ஒருங்கிணைத்து இறைவனுக்கு தொண்டு செய்வது சாலச்சிறந்தது. இந்த சேவையை ஒருநாள் செய்யலாம் ஒரு மாதம் செய்யலாம் ஆனால் 15 ஆண்டுகளாக தொடர்ந்து செய்வதென்பது சாதாரண காரியமும் அல்ல சாமான்யமான காரியமும் அல்ல
அந்த அசாதாரணமான கைங்கரியத்தை எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பாராமல் தொடர்ந்து செய்துவரும் சென்னையைச் சேர்ந்த “அண்ணாமலையார் அறப்பணிக்குழு” வின் சேவை பாராட்டுதற்குரியது
Rupee saved is Rupee earned என்ற ஆங்கில பழமொழிக்கேற்ப கோவில் கட்டுவதை விட சிதிலமடைந்த கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோவில்களை செப்பனிட்டு, நின்று போன இறை பணி தொடரச் செய்வது உயர்ந்த பக்தி என்ற வகையில் அண்ணாமலை அறப்பணிக் குழு சிதிலமடைந்த பல கோவில்களை இவ்வுலகுக்கு மீட்டுத் தந்துள்ளது.
2020 பிப்ரவரி ஒன்பதாம் தேதி என்று திருவாலங்காட்டை அடுத்துள்ள பாகசாலை என்ற சிறுகிராமத்தில் சிதிலமடைந்த ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் இக்குழு உழவாரப் பணி மேற்கொண்டது.
பச்சைப்பசேல் என்ற கிராமம், அகலம் குறைவாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியான சாலை, அக்கம் பக்கத்தில் கோவில்கள் என்று கண்ணிற்கும் மனதிற்கும் பிரம்மிப்பை தரக்கூடிய அழகான சூழல் ! அன்று அவ்வூர் வந்தவர்கள் பாக்கியவான்கள் .
ஜனசந்தடி அற்ற சிறு ஊராக இருந்தாலும் ஊராட்சி அலுவலகம், கொசஸ்தலை ஆறு, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற முருகனின் திருத்தலம், திருமூலநாதர் என்ற பெயரில் இங்கு குடி கொண்டுள்ள சிவபெருமானுக்கு அருமையான ஒரு திருக்கோவில் மற்றும் ஆதிகேசவபெருமாள் இருக்கும் ஒரு கோவில் என்று பல “அருமை”கள் . மற்றைய கோவில்கள் சமீபகாலத்தில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் ஆனதாக தெரிகிறது. ஆனால் பெருமாள் தனது கோவிலை புதுப்பிக்க நேற்று வரை உத்தரவு கொடுத்ததாக தெரியவில்லை. இன்று அவர் ஆணையின்படி (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற மாணிக்கவாசகரின் வார்த்தைக்கு இணங்க) பணிகள் தொடங்கினர்.
திரு ராமச்சந்திரன் மற்றும் நண்பர்களின் 15 வருட உழைப்பின் அடையாளமான அண்ணாமலையார் அறப்பணிக்குழு வாயிலாக பெருமாள் கோவில் உழவாரப்பணி தொடங்கியது. சுமார் 120 தொண்டர்களைக் கொண்ட குழுவில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 60 பேர் அடக்கம்.
காலை ஏழு மணிக்கு பூந்தமல்லியில் தொடங்கிய பயணம் ஒன்பது மணிக்கு தொண்டர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றது. 10 நிமிட காலை சிற்றுண்டிக்கு பிறகு தொடங்கிய பணி சுமார் நான்கு மணிவரை நடைபெற்றது. பாகசாலை ஊரை சேர்ந்த சுமார் 20 பேர்களும் தங்களை உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர் கடப்பாறை, மண்வெட்டி, இயந்திர மரவெட்டி போன்ற தங்களது உபகரணங்களை தவிர நாள் வாடகையில் டிராக்டர் மற்றும் பொக்லைனை பணியில் ஈடுபடுத்தினர்.
உள்ளூர் தமிழ்க் “குடி” மகன்களின் பொருள் உதவியாக கோவிலைச் சுற்றியுள்ள புதர்களினுள்ளே குறைந்தது 200-300 சோமபானக் குடுவைகள்!
கோவிலுக்கு பொன்னாக கொடுக்க முடியாதவர்கள் பொருளாகக் கொடுக்கலாம் என்பதை தவறாகப் புரிந்துகொண்ட. “பிராந்திய”வாசிகள்!
இதுபோன்ற பல கோவில்களை செப்பனிட்ட அனுபவத்தின் வாயிலாக சுமார் ஒரு மணி நேர திட்டமிடலுக்கு பின் அனுபவம் வாய்ந்த அடியார்கள் கோவிலின் மேல் ஏறி ஆக்கிரமித்திருந்த மரங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தினர்.
பெரிய துண்டுகளாக செய்வது விரைவாக பணியை முடிக்க உதவுமென்றால் கூட அப்பெரிய துண்டுகளால் கோவிலின் கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மரங்களை சிறிது சிறிதாக வெட்ட வேண்டியிருந்தது.
ஒரு குழு பொக்லைன் உதவியால் கோவிலைச் சுற்றியிருந்த கல் மண் போன்றவற்றை அப்புறப்படுத்திய அல்லது சமன்படுத்தி கொண்டிருந்தது…. மற்ற குழுக்கள் சிறு சிறு மரங்களை, செடிகளை, புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர். சுமார் 5 அல்லது 6 மணி நேர உழைப்பிற்கு பின் கோவிலின் முழு விஸ்தீரணம் புலப்பட்டது.
அடியார்கள் பலரின் கல்வி, தொழில் பின்னணி ஆச்சரியப்படுத்த வகையில் இருந்தது. அவர்களுக்கு தங்களை சாதாரண மனிதர்களாக நினைக்கத் தோன்றுவதால் தங்களது பெயர்களையோ வாங்கிய பட்டங்களையோ அல்லது உயர்பதவியையோ எவருக்கும் பெருமையாக சொல்லிக் கொள்வதில்லை நான் இறைவனுக்காக மண், குப்பைகளை அள்ளும் சாமானியன் என்பதிலேயே அவர்களுக்கு பெருமை என்பதால் அவர்களின் பெயர் விவரங்களை நான் இங்கு சொல்லப்போவதில்லை.
இறைவனை உணர நான் மறையவேண்டும் !அதாவது நான் என்ற ஆணவம் விலக வேண்டும் என்பார்கள் சான்றோர்கள். அதன் பொருள் இன்று புரிந்தது !
ஐந்து வயது சிறுவர்கள் தொடங்கி 80 வயது முதியஇளைஞ்ர்கள் வரை தங்களை மறந்து சேவையில் ஈடுபட்டனர். அவர்களின் “நான் “ மறைந்தது ! 80 வயது இளைஞனின் மூப்பு மறைந்தது ! 20 வயது வாலிபனின் இளமை எனும் கர்வமும் தலை காட்டவில்லை . பதவியோ பட்டங்களோ தலை காட்டவில்லை ! எல்லோரும் சமம் என்ற சமன்பாடு !
கலியுகத்தில் இறைவன் நேராக தோன்றுவதை விட சூட்சுமமாகவே தனது ஆசியை வழங்குகின்றான் . அவ்வாறு அன்று இரண்டு வித ஆசிகள் கிடைத்ததாக தோன்றுகிறது. ஒன்று எந்தவிதமான மேகக்கூட்டங்கள் இல்லாமல் கொளுத்தும் வெயில் திடீரென சில நிமிடங்கள் தூரல் விழுந்தது. இரண்டு குறைந்தது இருநூறு இருநூற்றைம்பது வருடங்கள் மனித நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய இக்கோவிலில் ஒரு பாம்பையோ அல்லது தேளையோ அல்லது அசச்சுறுத்தும் விலங்குகளையோ யாரும் பார்க்கவில்லை.
இதை ஒரு மூத்த அடியார்க்கு நான் சொல்லிய போது அவர் சொன்னது இன்று மட்டுமல்ல ஒவ்வொரு முறை நாங்கள் சேவை செய்யும் போது ஒரு நிமிடமாவது மழை எங்களை ஆசீர்வதிக்கும்.
இறைவனை நேரில் தான் காண வேண்டும் என்று அவசியம் இல்லை. அவனை எல்லோரும் உணரலாம் இப்பேர்ப்பட்ட சேவைகளில் ஈடுபடும் போது ! அண்ணாமலை அறப்பணி குழு செய்து வரும் சேவைகளில் தாங்கள் ஈடுபட பண வசதியோ உடல் தெம்போ வயதோ ஒரு பொருட்டல்ல! தங்களால் இயன்ற சிறு உடலுதவி கூட சாதாரண பக்தரான உங்களை அடியாராக மாற்றும் ! முயற்சி செய்து பாருங்கள்
தொடர்பு
தொலைபேசி : திரு ராமச்சந்திரன் -9884080543
2 comments:
மிக்க நன்றி...இது போன்ற...பதிவுகள்...எங்களை..இன்னும்...உழவாரப்பணிகளில்...உற்சாகத்துடன் ...ஈடுபட ஊக்குவிக்கிறது!
உலகம் உய்ய உழவாரப்பணி அவசியம்...
மேலும் இப்பணியை தொடர்ந்து செய்ய ஈசன் அருளட்டும்...🙏🙏🙏
Post a Comment