Saturday, January 13, 2018

ச(எ)ங்க காலத்தில் பொங்கல்

ச(எ)ங்க  காலத்தில் பொங்கல்


பழங்கால நினைவுகள் பல இருந்தாலும், காலக்குறைவு காலமாக சில விஷயங்களையே பதிய, பகிர முடிகிறது.

முதலில் மங்களகரமாக நினைவுக்கு வருவது, தெருவை அடைத்து போடப்படும் கலர்க் கோலங்கள். மார்கழிக் குளிரில் பிரம்மமுகூர்த்த நேரத்திலேயே தலையில் மஃப்ளர் போல் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு சில நாழிகைகளை செலவு செய்யும் பெண்கள் கைவண்ணத்தில் மலரும் கலாக்ஷணம் (கலை+லக்ஷணம் எனப் பிரித்து பொருள் கொள்க ! ) . எந்தக் கோலத்தையும் பார்த்தோ அல்லது பாராட்டிவிட்டோ போனால் கௌரவக்குறைச்சல் என விட்டத்தையும் வானத்தையும் பார்த்தே நடக்கும் கலாரசிகர்களான(?) ஆண்கள் ! நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என்ற பாரதியின் வார்த்தைகளை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் (என்னையும் சேர்த்துத்தான்)

இன்று வரை பொங்கல் கால வாழ்நாள் சாதனையாக நினைவுக்கு வருவது, மிக்ஸி, கிரைண்டர் உதவியின்றி சாப்பிட முடிந்த கரும்பு. இன்று நினைத்தாலே பல் வலிக்கிறது.  

அதன் தொடர்ச்சியாக வருடம் முழுதும் அருந்தப்படும் கன்னல் ரசம் ! கரும்பைக் கடித்து சுவைக்க மிரளும் சோம்பேறிகளுக்காகத் தொடங்கப்பட்ட ரசவடிவான கன்னல்,  அருணாசல சீன ஆக்கிரமிப்புபோல், “கடி”கரும்பை ஓரம் கட்டிவிட்டதோ.

மார்கழி பாதியிலே துவங்கி, தெருவெங்கும் கடித்து துப்பப்பட்ட கரும்புச்சக்கைகள், மண்ணுக்கு சேர்க்கப்பட்ட இயற்கை உரம்.  சில வீட்டில் பொங்கலன்று பகலவனுக்குப் படைக்கும் முன் கரும்பு சாப்பிடக்கூடாது  என்ற (சால்ஜாப்பு) காரணத்தால், எனக்கெல்லாம் என்னமோ தை பிறந்தால் தான் வழி பிறக்கும் !


எழுபதுகளில் 2, 3, 5 பைசாக்களுக்கு இரண்டு கணு நீளத்திற்கு தாற்காலிக அம்பானிகளால் விற்கப்படும் கரும்புத்துண்டுகள் ஜனவரி முதல் வாரத்திலிருந்து மதுரை தெருக்களில் கிடைக்கும். அந்த சிறு துண்டுகளை சாப்பிட்டு பல்லையும் வாயையும் பயன்படுத்தி (seasoning) பதப்படுத்தி, பழகி வந்தால் பொங்கல் அன்று கிடைக்கும் முழுக்கரும்பு (ஜோடி) ஒன்றும் செய்யாது. என்னைபோன்ற சிலர்கள் பொங்கல் அன்று நேராக கரும்புக்காட்டுக்குள் யானை போல் நுழைந்தால்..... வாய்  நிறைய புண்கள் இலவச இணைப்பாகக் கிடைக்கும்.  பொங்கல் முடிந்து ஒரு வாரத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கட் வர்ணனை போல ஒரே “ழக்கள்”   நிறைந்த உளறல்கள்.


மற்றோரு இலவச இணைப்பு, கோல்கேட், பினாகா துணையில்லாமலேயே முத்துப் போன்ற பற்கள். ரின் சோப்புக்கு ஈடு கொடுக்கும் வெண்மை !


எங்கள் குடும்ப வழக்கமாக “அருள்மிகு மொச்சைகொட்டைபால்க்கூட்டு உடனுறை சர்க்கரைப்பொங்கல்” , இன்றும் தனித்துவமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். வேறு யாரேனும் இந்த வழித்தோன்றல்களாக இருந்தால் சொல்லவும்.

பல வருடங்களுக்குப் பிறகு கூரைப்பூ இன்று (சென்னையில்) ஒரு கடையில் பார்த்தேன். ஒரு வேளை வடதமிழக்த்தில் அவ்வளவாகப் வழக்கம் இல்லையோ !


கார்த்திகைக்கு என்று தயாராகும் பனை ஓலை மத்தாப்பூ போல், மதுரை, ராமனாதபுர மாவட்டங்களில், சாக்குப்பைகளை சிறு பைகளாகத் தைத்து கயிறுகட்டி உள்ளே மருந்து வைத்து த்யாரிக்கப்படும் ஒரு வினோதமான மத்தாப்பூ போகி இரவில் மட்டும் பார்த்திருக்கிறேன். 75களுக்குப் பிறகு பார்த்ததாக  நினைவில்லை!  முன்னேற்றம், வணிகமயமாக்கல் என்ற போர்வையில் நாம் இழந்த பலவற்றுள் இதுவும் ஒன்று  (அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் பீங்கானால் செய்யப்பட்ட ஒரு சிறு குருவி பொம்மை இருக்கும், அதில் நீர் நிரப்பாமல் ஊதினால் ஒரு சத்தமும் வராது. தண்ணீர் நிரப்பி ஊதினால் விஸில் சத்தம் கேட்கும் ! என் அக்காக்கள் வயதொத்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். நான் ஏன் பழங்கதை பேசுகிறேன் ....எனக்கும் வயதாகிவிட்டதோ !)


பொங்கலுக்கு மற்றோரு க்ரேஸ் (craze)  பொங்கல் வாழ்த்து அனுப்புவது. அடுத்தடுத்த வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட போஸ்ட் ஆபிஸ் போய் ஸ்டாம்ப் ஒட்டி, விலாஸம் எழுதி பொங்கல் வாழ்த்து அனுப்புவது ஒரு சுகானுபவம்.  நம்மால் வாழ்த்தப்பட்டவர்கள்  நமக்கு பதில் வாழ்த்து அனுப்பவில்லையென்றால் அவர்களுக்கு அடுத்த முறை வாழ்த்து “கட்” . பதிலுக்கு வாழ்த்தும் இங்கிதம் தெரியாதவர்களாயிற்றே அவர்கள் !

வாழ்த்து என்ற சமாசாரத்தை விட நம் பெயரைச் சொல்லி ஒரு மத்திய அரசு ஊழியர் யூனிபார்மில்(அதாங்க போஸ்ட் மேன்) ஒரு கவரை கொடுத்துச் செல்வது எப்பேற்பட்ட கௌரவம் ! மேற்குறிய இங்கிதம் தெரியாதவர் அடுத்த வருடமும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பவில்லையென்றால்,   நல்லுள்ளம் படைத்த இங்கிதம் தெரிந்தவர் செய்வது ....   .... ....அடுத்த பொங்கலுக்கு அவருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமல், ஆனால் கவரை ஒட்டி ஒரு வாழ்த்து. அப்பொழுதுதானே இங்கிதம் தெரியாதவருக்கு தண்டமாக போஸ்டேஜ் இருமடங்கு கட்டவேண்டி வரும், என்ற நல்ல மனது.


என் நண்பன் ஒருவனு(ரு)க்கு அவனது பள்ளித்தோழன்(ர்) பொங்கல் வாழ்த்து அனுப்பியிருந்தார். என் நண்பனும் பெருமையாக எல்லோரிடமும் காண்பித்தான். நமக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைக்கவில்லையே என்று எனக்கெல்லாம் பெரிய வருத்தம் !


வாழ்த்து அனுப்பிய நண்பன் பின்குறிப்பியிருந்தான் “கிருஷ்ணா ! நீயும் மறக்காமல் பதிலுக்கு எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பிவிடு”!  


மத, இனத்துக்கு அப்பாற்பட்டு, உழவர்களின் உழைப்புக்கான வெற்றியையும், வெற்றியை ஏ(ர்)ற்படுத்திக்கொடுத்த இம்மண்ணுக்கு நன்றியையும் கூறும் இப்பொங்கல் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மதுரை மீனாக்ஷி அருளாலும், பூதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் ஆண்டாள் அருளாலும் “வைரமும் முத்தும்” உங்கள் கஜானாவில் நிரம்பி வழிய  எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கவும் வேண்டுகிறேன்



2 comments:

Manikandan said...

Excellent one....nostalgic moment sir....we use to have "Sanam with Sembaruthi flower" every day from Margazhi 1 till Margazhi 30th and we use those "Varatti" on Pongal day as catalyst for lighting

ARK said...

Thank you Manikandan. Your observations have been updated in the blog.

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...