தென்னிந்திய கல்யாண வீடுகளை சமீப காலமாக பீடித்திருக்கும் வியாதி "போட்டோகிராபர்".
ஒரு காலத்தில் புரோகிதர்கள் கல்யாணத்தை வழிநடத்தினார்கள். அவர்கள் ஆட்டம் தாங்காது !
இன்று கேமராமேன் சொல்வதுதான் வேதவாக்கு.
நல்ல முகூர்த்த நேரம் பார்த்து தாலிகட்ட வைத்தால், ரீ-போஸ் என்ற பெயரில், அடுத்து வரும் எமகண்ட வேளை வரை மறுபடி பல தடவை தாலிகட்ட நிர்ப்பந்திக்கிறார்கள். லக்னம் பார்த்து தாலி கட்டினாலே இங்கே நாக்கு தள்ளுது ! எமகண்டம் வரை போனா கல்யாண வாழ்க்கை விளங்கினது மாதிரிதான் !
மேலே சொன்னது ஜெயில் தண்டனை என்றால் அடுத்து வருவது கடுங்காவல் தண்டனை !
அதாம்பா... கேண்டிட் கேமராமேன் (candid cameraman)
நாலு நாள் ஷவரம் செய்யாத முகம், கருவளையம் பாய்ந்த கண்கள், அழுக்கு ஜோல்னாப்பை என்று ஒருவரை வாட்ச்மென் துரத்திக்கொண்டிருந்தால் அவரை தயவு செய்து மீட்டு வரவும். அவர் தான் சாக்ஷாத் கேண்டிட் கேமராமேன் (candid cameraman).
யாருக்கும் தெரியாமல் இயல்பாகப் படம் எடுப்பாராம் ! ஆறு கி.மீ தூரத்தில் இருந்து இரண்டு வயது பாப்பா கூட நொடியில் சொல்லி விடும், அந்தப் பூச்சாண்டி மாமாதான் கேண்டிட் கேமராமேன் என்று.
பின்னே, கல்யாண வீட்டில் மணமக்கள் தொடங்கி, பந்தி பரிமாருபவர் வரை எல்லாரும் பளபளவென ஜொலிக்க, இவர்மட்டும் " ராமு பட ஜெமினி கணேசன்" மாதிரி பட்டாபட்டி டிசைன் ஜிப்பாவோடு வந்தால்......
சாதாரணமாக சிரித்துக் கொண்டிருக்கும் சொந்தபந்தங்களெல்லாம் இவரைப் பார்த்ததும் "அட்டென்ஷன்" தான் !
கல்யாணவீடுகளில் லேட்டஸ்ட் கொடுமை " அந்த கேண்டிட் கேமராவுக்கு ஒரு போஸ் குடு" என்ற வசனம்.
No comments:
Post a Comment