தொண்டைநாட்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி கிராமங்களுக்கு அருகில் உள்ளது. கூகுள் வரைபடம் உதவி கொண்டும் தேடுவதற்கு சற்று சிரமமான கிராமம். விடுமுறை நாட்களிலேயே ஓரிரு பக்தர்கள் தான் வருவதாகத் தகவல்.
பணபலம், ஆள்பலத்திற்கு அப்பாற்பட்டதல்லவா இறையருள் ! கிராமமக்கள், ஆத்மார்த்தமான பக்தர்கள், உழவார்ப் பணி குழுக்கள் கைங்கர்யத்தில், கோவில் நன்கு பராமரிக்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த அண்ணாமலை அறப்பணிக்குழு (https://www.facebook.com/Annamalaiyar-Arappani-Kuzhu-1402548489984127/ ; http://pollavinayen.blogspot.in/ )இத்தலத்தில் உழவார பணி செய்யும் பாக்கியம் பெற்றது. வடதமிழகத்தில் சைவ வைணவ பாகுபாடின்றி சிதிலமடைந்த கோவில்களை மீட்டெடுத்து வரும் அண்ணாமலை அறப்பணிக்குழு இன்றல்ல நேற்றல்ல, 15 வருடங்களுக்கு முன்பேயே இத்தலத்தில் உழவார்ப் பணி மேற்கொண்டது (அவர்களது முதல் உழவார்ப் பணி) என அறிகிறோம். குழு மேற்கொண்ட 2006 பணியின் போது எடுக்கப்பட்ட ஓரிரு புகைப்படங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாக வாலீஸ்வரர் மற்றும் கொய்யாமலர் நாதர் என்ற நாமங்களில் மேற்கு பார்த்த நிலையில் அருள் பாலிக்கிறார். அன்னை இறையவளை என்ற நாமத்தில் சேவை சாதிக்கிறார்.
சிறிய கோவில், தாமரை மலர்களுடன் அழகிய குளம் (வாலி தீர்த்தம்).
வாலி, இந்திரன், எமன் மூவரும் முறையே குரங்கு, அணில், காக்கை என்ற உருவில் இறைவனை பூஜித்ததால் இத்தலப் பெயர் காரணவாகுபெயர் ! எமன் பூஜித்த தலமாதலால் இங்கு வணங்கும் அடியவர்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் வழங்குவார் என்பது நம்பிக்கை.
திருஞானசம்பந்தர் இறைவனை பாமாலையால் வணங்கிய திருத்தலம். அவருடைய ஒரு பாமாலையில் ஒரு மலர் இங்கே
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்
தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
ஏழாம் நூற்றாண்டுக்கோவில் என்பது கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது. மகேந்திர வர்மன் இக்கோவிலைக் கட்டியதாக தகவல். அன்னார் அமைத்த குடவரைக் கோவில் ஒன்று அருகிலேயே உள்ளது (தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில்).
No comments:
Post a Comment