Monday, April 12, 2021

www.நொண்டிசாக்கு.com

(தமிழ்த் திரைப்படங்களில்  மெய்யெழுத்து சந்தி  இருந்தால் துரதிருஷ்டமாகக்  கருதப்படுவதால் அடியேனும் நொண்டிசாக்கு என்று தமிழை மெல்லச் சாகடித்திருக்கிறேன்; மன்னிக்கவும் )



தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒட்டாளிகளை விட அதிக   கொரோனா சீக்காளிகளை தயார் செய்துவிட்டுப் போயிருக்கிறது.  இரண்டு மூன்று நாட்களில் வாக்குகளை எண்ணி முடிவை அறிவித்திருந்தால் தோற்றவர்கள் அவர்களது வக்கீல்களையும் , ஜெயித்தவர்கள் நேரத்தை வீணடிக்காமல்  கொள்ளையடிக்கவும் போயிருக்கலாம்.  ஹூம்  !

நம்மைப் போன்ற பாமர மக்கள் அது வரை IPL  கிரிக்கெட் போன்றவற்றைப் பார்த்து பொழுதைப்  போக்கவேண்டியதுதான் !

என் கடன் பணி  செய்து கிடப்பதே ! தோற்றுப்  போகும் கட்சி எதுவாக இருந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முட்டுக்  கொடுக்கவேண்டும். தோற்ற மகானுபாவர்கள்  ஏற்கனவே  மனம் நொந்திருக்கக் க்கூடும் ; அவர்களை தோல்விக்கான காரணங்களை   கஷ்டப்பட்டு  தேடச்சொல்வது வெந்த புண்ணில் கோவிட்  பாய்ச்சுவது போல் ! 2 நிமிட மேக்கி போல அவர்களுக்கு உதவி   செய்ய இதோ  நொண்டிச்சாக்குகள் தயார்  !

அருஞ்சொற்பொருளகராதி :

ஜெ.மு.க  : ஜெயித்த முன்னேற்ற கழகம் 

தோமுக   : தோற்ற  முன்னேற்ற கழகம் 


1) ஈ.வி.எம் கள் ( மின்னணு வாக்கு இயந்திரங்கள்)  ஜெ.மு.க வென்ற தொகுதிகளில் ஜெ.மு.கவுக்கு உதவ திட்டமிடப்பட்டன. அவர்கள் தலைவர் ஏதோ  ஒரு திரைப்படத்தில் "நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னது மாதிரி" என்று சொன்னதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டையும் 100 ஓட்டாகக் கணக்கிலெடுப்பது  அராஜகம். 


எங்கள்  வாக்காளர்களுக்கு வாக்குகள் மறுக்கப்பட்ட நிலையில், ஜெ.மு.க வாக்காளர்களுக்கு  மட்டும் பல வாக்குகள் செலுத்த  அனுமதிக்கப்பட்டனர் . ஜெ.மு.க சார்பு தொ(கு)ண்டர்கள் வலது, இடது கால்  மட்டும் கை  விரல்களில் மை  இருந்ததே இதற்கு சாட்சி .


அதே நேரத்தில் நாங்கள் வென்ற தொகுதிகளை அவ்வாறு கூறுவது எதிர்க்கட்சிகளின்  அரசியல் சூழ்ச்சி.  எங்கள் வெற்றிக்கு நாங்கள் பெரிய விலை கொடுத்திருக்கிறோம்  என்பதை ஒவ்வொரு வாக்காளனும் அறிவான் .



ஈ.வி.எம்மில் எந்த பொத்தானை அழுத்தினாலும் , ஜெ.மு.க சின்னத்திற்கே  வாக்களிக்கும் படி செய்திருந்தார்கள் என்று அமெரிக்க   நாசா நிறுவனம் கூறுகிறது . வாக்குப் பதிவு மையத்தில் விளக்குக்கான  ஸ்விட்ச்சை அமுக்கிக்கினால்  கூட  கழுதை  சின்னத்தில் லைட் எரிகிறது....ஜெ.மு.க விற்கு  ஒட்டு விழுகிறது 

வாக்கு எண்ணும்  பணி   ஒரு மாதங்களுக்கும் மேலாக நீட்டிப்பது,ஜெ.மு.க விற்கு தேவையற்ற நன்மைகளை அளித்தது. வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டன. வாக்கு எண்ணும்  போது  மொத்த ஓட்டு  சதவீதம் 124% என்பதிலிருந்து உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும் .

தோமுக   இழந்த தொகுதிகளில்  வெயில் மிகவும் அதிகமாக இருந்தது.  வெயிலில் இருந்த எங்கள்  வாக்காளர்கள்  குடை பயன்படுத்தியதால் வாக்களிக்க மறுக்கப்பட்டனர்.  குடை எங்கள் கட்சி சின்னம் என்பது எங்கள் தவறல்ல 

முஸ்லீம்  வாக்காளர்கள்  அதிகம் வாழும்  தொகுதிகளில்  ஆணையம் வேண்டுமென்றே ரமலான் மாதத்தைத் தேர்ந்தெடுத்தது, இதனால் முஸ்லீம் சகோதரர்கள்  வாக்களிக்கவில்லை . அவர்களை இரவில் வாக்கெடுக்க அனுமதித்திருக்க வேண்டும். அந்த வாக்கு மட்டும் எங்களுக்கு கிடைத்திருந்தால் அறுதிப்  பெரும்பான்மை பெற்றிருப்போம். ஓட்டுக்காக காலையில் கோவிலுக்கும், மதியம் மசூதிக்கும்  மாலை சர்ச்சுக்கும் அலையாய் அலைந்தது எங்களுக்குத் தான் தெரியும்.  


மத்திய பாதுகாப்புப் படைகள் சாவடி கைப்பற்றப்படுவதை தடுத்தன ... இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம். தமிழக காவல் துறையை மட்டுமே நியமித்திருக்க வேண்டும்.  தமிழக காவல் துறை ஊழியர்கள் நியாயஸ்தர்கள்....தேர்தலுக்கு முன் நாங்கள் அவர்களுக்குக் கொடுத்த ஊதியவுயர்வுக்கும் நாங்கள் கூறும் நேர்மை நாணயம், நியாயம் போன்றவற்றை நீங்களாக  இணைத்து கற்பனை செய்யவேண்டாம் !

சட்டசபை அறுதிப்  பெரும்பான்மையை முடிவு செய்ய இந்த கொரோனா காலத்தில் இத்தனை ஆயிரம் கோடி பணத்தை வீணடித்து தேர்தல் நடத்தியிருக்க வேண்டியதில்லை. கருத்துக் கணிப்பை வைத்தே நாங்கள் தான் வெற்றி பெற்ற்றோம்  என்று அறிவித்திருக்கலாமே ! எவ்வளவு பொருட்செலவில் நாங்கள் கருத்துக் கணிப்பு  ஏற்பாடு செய்தோம் !

எங்களுக்கு இன்னும் பல குமுறல்கள்  உள்ளன, ஆனால்  மூச்சுத் திணறுகிறது, தொண்டை அடைக்கிறது, குரல் கம்முகிறது .  நாங்கள் கூறும் ஒவ்வொரு நியாயமான காரணத்தையும் நொண்டிச்சாக்கு என்று கேலி செய்வது எந்த விதத்தில் நியாயம் !  ஒரு மரத்தமிழனின் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது; அதற்கு ஜெ.மு.க பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்கும் . 



எங்களுக்கு வாக்களிக்காத தமிழர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள். அவர்களுக்கு சூடு, சொரணை, வாங்கிய XXX க்கான நன்றி, விசுவாசம் இல்லையென்பது உண்மையாயிருந்தாலும், எவரையும் பழிக்கக்  கூடாது என்று எங்கள் கட்சி முன்னோர்கள் எங்களுக்கு சோற்றோடு கலந்து கண்ணியத்தையும் ஊட்டி வளர்த்ததால் அவையடக்கத்தோடும், கண்ணியத்தோடும்  சொல்கிறேன் ..... 

எங்கள் கட்சிக்கு ஒட்டுப் போடாதவன் உருப்படவேமாட்டான், நாசமாய்ப் போவான், கொரோனா வந்து ஆஸ்பத்திரில பெட் கிடைக்காம திண்டாடுவான்  என்று நான் சொன்னால் ஏதோ  காழ்ப்புணர்ச்சியால்  கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணக்கூடுமென்பதாலும், அது நான் அரசியல் கற்ற பாசறைக்கு இழுக்கு என்பதாலும்  அமைதி காக்கிறேன் .

சென்ற தேர்தலை விட இம்முறை நாங்கள் பதினாறு வாக்குகள் அதிகம் பெற்றோம் என்ற பெருமிதத்தால் சொல்கிறோம், தமிழகம் எங்களை கைவிட்டுவிடவில்லை .   வாழ்க தமிழகம் . ஆனாலும் இந்த ஐந்து வருட வனவாசம் ரொம்ப அநியாயம் ! 

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சினிமாவுக்கு கதை எழுது வசனம் எழுது என்று பலகோடியுடன்  என்னிடம் வந்தவர்கள் இன்று இன்று மருந்து சீட்டு  எழுதக்கூட என்னிடம் வரமாட்டார்களே ! 




No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...