Monday, April 13, 2020

கொரோனா கொசுக்கடியால் பரவுமா !

"கொரோனா கொசுக்கடியால் பரவுமா"  அல்லது "ஈமெயிலால்  கொரோனா தாக்குமா" என்று இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன்.  மூன்று  மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க எழுதி ஒரு பதிவு போட்டா, எழுதினவனத் தவிர யாரும் படிக்கிறதில்லை. பத்திக்கிற மாதிரி ஒரு தலைப்பு கொடுத்தா, விழுந்தது விழுந்து படிக்கிறாங்க. ஆனால் கமெண்ட்ஸ்ல துப்பிட்டு போயிடுவாங்க (அதுக்குத்தான் யுடியூப்ல பலர் கமெண்ட்ஸை டிசேபிள்  செய்ராங்ககளா ?)  ஐயையோ  துப்புவது என்பதை அரசு தடை செய்திருக்கிறதே... அதைப்  பத்தி பேசலாமா? கூடாதா? ....நாம பேசுவோமே !. 


இந்த சீசன் ஸீக்வல்  சீசன் .... நாட்டுல சினிமாப்  படத்துக்கு ஒரு காலத்திலே  கதை பஞ்சம் . மற்ற மொழிக் கதையை திருடினாங்க ...அப்புறம் பழைய கால திரைப்படப் படப் பெயரைத்  திருடினாங்க/ உபயோகிச்சாங்க. பின்னர் அதுவும் போரடிச்சுப் போய் அவங்க படப்  பெயரையே (ஒளவையார் மாதிரி)  ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி  நம்மையும்  படுத்தினார்கள்.  ஹிந்திப்படமான ஹவுஸ்புல் ஐந்து குட்டி போட்டுவிட்டதாம்  (ஆமாம் பெயர்தான் ஆங்கிலம், திரைப்படம்  ஹிந்தி) .... எதற்கும் நடுவில்  சம்மாந்தாசம்பந்தம்  ஹிந்தி ஒழிக  என்று ஒரு முறை கூவிவைப்போம், இல்லையென்றால் நம்மை மறத்தமிழன் என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 


எல்லாப்படங்களுக்கும் சீக்வல் வந்துவிட்டது நாமும் நம் கொரோனா பதிவிற்கு சீக்வல் ஒன்று  போடலாம். (அப்படியாவது நமது முந்தைய பதிவைப்  படிப்பார்கள் என்ற நப்பாசைதான்). சமூக வலைகளில் வரும் பதிவுகளுக்கு சாகித் அகாதமியில் தனிப் பரிசு ஒன்று நிறுவும் போது உபயோகமாக இருக்கும். 

எப்படியும் கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 (அதுக்கும் சீக்வலா? )  முடியும் போது  முகசவரம்  செய்யாமல் தாடி கால் கிலோ மீட்டர்  வளர்ந்திருக்கும் .... காய்கறி வாங்க எடுத்துச் செல்லும்  ஜோல்னாப்  பை  வேறு  நமக்கு  ஒரு அறிவாளி தோற்றத்தைக் கொடுக்கும்.   பேரையும்   கொரோனாதாசன் அல்லது கிருமிநாசன் என்று  தாறுமாறாக தமிழ்ப்படுத்தி விட்டால் சாகித்ய அகாதமி விருது நமக்குத்தான் ! ஜனாதிபதியிடம் இருந்து விருது பெரும் கண்கொள்ளாக் காட்சி ....ம்  ம்  

சரி கற்பனை உலகை விட்டு பூவுலகுக்கு வருவோம் .....

கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த முதல் பாடம் "துப்பு" . துப்பு என்றால் உமிழ்வது என்பது மாத்திரமே பலருக்குத்   தெரிகிறது. ஆனால் துப்பு என்பதற்கு (ஒன்றல்ல, இரண்டல்ல) 29 பொருட்களை தமிழ் நமக்கு அளிக்கிறது. வள்ளுவரின் ஓர் குறள் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

மழையின்  சிறப்பைப் பற்றி கூறும் போது  வள்ளுவர் "துப்பு" என்ற அருமையான வார்த்தையின்  பல பொருட்களை  ஒன்றாகக் கோர்த்து  சொல்மாலையாக அருளியிருக்கிறார் .  

("துப்பு" என்ற வார்த்தையின் பொருள்: ஒரு சில......  விக்கிப்பீடியாவிலிருந்து.... 

உளவடையாளம், உணவு, நெய், சத்து, வலிவு, சாமர்த்தியம், செம்மை
உதவி, சகாயம், வலிமை, அறிவு,திறமை,ஆராயச்சி, முயற்சி,பெருமை, துணை, ஊக்கம்,பொலிவு,நன்மை,பற்றுக்கோடு,தன்மை, தூய்மை,உளவு, பகை, பவளம், அரக்கு,சிவப்பு,நுகர்ச்சி,நுகர்பொருள். உணவு,துரு,உமிழ்நீர்,நெய், ஆயுதப்பொது)


28 நல்ல பொருட்களையும் விடுத்து நம்மில் பலர் சிரமேற்கொள்ளும் ஒரே பொருள் துப்புவது (உமிழ்வது). நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் "துப்பி துப்பிய நம்ம நாட்டை ஒரு வியாதி நாடாக மாற்றிவிட்டீர்கள்" என்று சொன்னது இன்று உறுத்துகிறது! 

"து" என்ற ஒரே   வார்த்தையை வைத்து அருணகிரிநாதர்  வில்லிபுத்தூர் ஆழ்வாரை வென்றார்  என்று வரலாறு கூறுகிறது. அவரது பாடல் (பொருள் வலைத்  தளத்தில் எளிதில் கிடைக்கிறது) 

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே 


"து" என்ற வார்த்தையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த ஆயிரம் வழிகளிருக்கும்போது நாம் ஏன் அழிவுக்குப் பயன்படுத்த வேண்டும்.  


தமிழ் நாட்டில் ஓரளவு பரவாயில்லை. வட, கிழக்கு   மாநிலங்களில் , உமிழ்வது மிக மிக அதிகம்.  கொரோனா அச்சத்தால், ஓரளவு குறையலாம், அரசு கடுமையான நடவடிக்கையெடுத்தால் !  


கொரோனாவால் இந்தியாவின் சுகாதாரம் மேம்படுமென நம்பலாம். ஸ்வச்பாரத் என்ற முனைப்பாட்டால்,   மேலைநாட்டிற்கொப்பான அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவு தூய்மை ஆகியிருக்கிறது என்று "தமிழ் கூறும் நல்லுலகு தவிர்த்து" மற்ற உலகங்கள் ஒத்துக்  கொள்கின்றன.  கொரோனாவால் ஏற்பட்ட விழிப்புணர்வோ (அல்லது "பீதியோ")  தூய்மையை சிறிது மேம்படுத்தும்.  


நான் வசிக்கும்  கிராமத்தில் இருக்கும்  படிப்பறிவில்லாத குடும்பங்கள் கூட கொரோனா அறிவிப்பு வந்ததும் வாங்கிய முதல் பொருள் "கைகழுவும் டெட்டோல் சோப் ".  அவர்களது குடும்பத்தின் அடுத்த தலைமுறை சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என நம்பலாம்.  


பிரபலமில்லாத ஆலய தரிசனங்களுக்காக நான் பல சிற்றூர்கள், குக்கிராமங்கள் தேடிப்  போன போது, பல கிராமங்களில் கண்ட அறிவிப்புப் பலகை சற்று பெருமைப்பட வைத்தது .... "  திறந்த வெளி மலஜலம் தவிர்த்த   கிராமம்" . ஆங்காங்கே ஓரிரு தவறுகள் நடந்தால் கூட,  இயற்கையின் அழைப்பின் போது என்ன செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது !


மேலை நாடுகளை பார்க்கும்போது இந்தியா பரவாயில்லை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கட்டுக்குள் இருக்கிறதா அல்லது கட்டுக்குள்  வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். 

ஏகப்பட்ட   கெடுபிடிகள் ,கட்டுப்பாடுகள்,  போலீஸ் தரும் "பின்" விளைவுகள் போன்ற எதற்கும் பலர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவசியமான பிரயாணங்கள் தவிர இளைஞர்களின்  மாப்பிள்ளை "ஊர்வலம்" சற்று கவலை அளிக்கிறது .... "மாமியார்" வீட்டில்  வைத்து "மாமா" வால் கவனிக்கப்பட்டால் தான் சரியாகுமோ  !


கொரோனாவால் பல இடையூறுகள், பணநஷ்டம், பணக்கஷ்டம் (குறிப்பாக தினக்கூலி வேலை பார்ப்பவர்கள், புலம்பெயர்ந்து வேலை செய்யும் காண்டிராக்ட் தொழிலாளர்கள், மூன்றால் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்). அதையும் மீறி சில நன்மைகள், நடந்தவை, நடக்க இருப்பவை .....  கீழே வரிசைப்படுத்தப்பட்டவை எவர் மனதையும் புண்படுத்த அல்ல .  எது நன்மை எது நன்மையல்லாதது என்று நான் சொல்ல   மாட்டேன் !


  • மிக மிக அத்தியாவசிய தேவை தவிர யாரும் மருத்துவனை செல்வதில்லை .  இதிலிருந்து தெரிவது நாம் மருத்துவனை செல்லும் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்கக் கூடியவையே 

  • வாரத்தில் இரண்டு மூன்று  நாட்கள்  குடும்பத்துடன் செல்லும்  சங்கீதா, தலப்பாக்கட்டி போன்ற உணவகங்கள் செல்லாமல் இருந்தால் உயிர் போய் விடாது (சரவண பவன் சில வருடங்களாகவே க்வாரன்டைன்)  . 

  • பியூட்டி பார்லர்  போகாத முகங்கள் முன்னிருந்தது போல் தான் இருக்கின்றன. அதாவது...முன்பு இருந்தது போலவே அசிங்கமாக இருக்கின்றன ! (  சட்டியில் இருந்தால் தானே  அகப்பையில் வரும்) . 

    • என் பதிவை பெண்களும் படிக்கலாமென்பதால் அவர்களை மகிழ்ச்சிப் படுத்த இதையும் சொல்லிவிடுகிறேன் .....  ஆண்கள் சவரம், ஹேர்கட் செய்யாததினால் குடும்ப வருமானம்  அதிகரிக்கும், முக்கியமாக பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது...... .     
    •    ஒரு கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் கலெக்ஷன் இன்னும் அமோகப்படும்  !

  • நம்முள் இருக்கும் இறைவனை நாடாமல், கோவிலில் இருக்கும் இறைவனை மட்டுமே துதிப்பதா  என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கடந்த 21 நாட்களாக கோவில் பக்கம்  தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்று இறைவன் நம்மை சபிக்கவோ தண்டிக்கவோ இல்லை. கோவிலுக்குப்  போவதால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பு மாறி "இறைவனை நினை.... அதற்கும் மேலே  அவன் மெச்சும்  படி நல்லவனாக இரு, நல்ல செயல்களைச் செய்" என்ற சிந்தனை உயர்வு   ! (கடந்த 21 நாட்களில் குட்  ஃப்ரைடே, ஈஸ்ட்டர் சண்டே, உகாதி, குடி படுவா போன்ற நிகழ்வுகள்  அவரவர்கள் வீட்டிலிருந்தோ, இண்டர்நெட் மூலமாகவே  இனிது நடந்தேறின )

  • என் மச்சான் முக நூலில் கூறியது போல, கொரோனாவால் மாசு குறைந்திருப்பதால்  சென்னையிலிருந்து மகாபலிபுரம், ஜலந்தர் தெரிவது மட்டுமல்ல,  அவரவர்  பக்கத்து வீட்டுக்காரர்   தெளிவாகத் தெரிகிறார் !  (இது வரை காணாத பக்கத்து வீட்டுக்காரர்)

  • திருமணங்கள் வருங்காலத்தில் (குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்கு) மிகவும் சிறு அளவிலேயே நடத்தப்படும்.  

  • கைகுலுக்குவது, கட்டித்தழுவுவது போன்ற மேலை நாட்டுப் பழக்கங்கள் தவிர்க்கப்படாவிட்டாலும் குறைக்கப்படும். 

  • அசைவ உணவு குறையலாம் . அய்யமாருங்கல்லாம் மீன் சாப்பிடறதுனால மீன், கறி  விலை ஏறிடுச்சு என்ற வசனம் குறையலாம். 

  • காய்கறி விலை ஏ(எகி)றும். 

  • வீட்டுக்கு வருபவர்கள் முக சலிப்புடன் வரவேற்கப்படலாம்.

  • முதலில் சோப் போட்டு காய் கழுவினால்தான்  குடிக்க தண்ணீர் என்பது எழுதப்படாத விதியாகலாம் 

  • இரு குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி  என்ற பழமொழி போய் இரு மனிதர்களுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை என்ற வாசகம் பஸ், கழிப்பிடம் போன்ற இடங்களில் எழுதப்படும் 

  • மாதாந்திர  மளிகை கடை லிஸ்டில் புது மாப்பிள்ளையாக சானிடைசர், டெட்டோல் இடம்பிடடிக்கும் 

  • கை  கழுவ  சானிடைசர் என்றது   போய் "காய்" கழுவ சானிடைசர் வாங்கலாமா என மனம் அலைபாயும் 

  • அலுவலக வீடியோ கான்பரன்ஸ்  முடிந்த பின்புகூட கைகழுவதோன்றும் . 
  • சானிடைசர் நிஜமாகவே சானிடைசர் தான எனவும் சந்தேகம் வரும் 

  • பக்கத்தில் இருப்பவர் இருமினால், இந்த ஆள் இருமல் வந்தால் மனதுக்குள் இருமக்கூடாதா  எதுக்கு சத்தமா இருமுகிறார் என்று நம் மனம் சலித்துக் கொள்ளும் 

  • "அழும்  பிள்ளைக்குத் தான்  பால் கிடைக்கும்" என்ற பழமொழி போய்  "இருமும் ஆளுக்குத்தான் லீவு கிடைக்கும்" என்ற புதுமொழி அரங்கேறும் 

  • கார், பைக்கில் யாருக்கும் லிஃப்ட்  கொடுக்க முன்  தயங்குவோம் 

ஓரிரு திருமணங்கள், முன்பு நிச்சயிக்கப்பட்ட தேதியில் குறைந்த அளவு உறவினர்கள் முன்னிலையில் நடந்தேறி இருக்கிறது.  மகிழ்ச்சி. ஆரவாரம், ஆடம்பரம் என்ற பெயரில் நடக்கும் பல அனாவசிய செலவுகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன ! வட்டம், மாவட்டம் போன்றவர்களின் பிறந்த நாள் விழாக்கள் இல்லாததால் காது  ஜவ்வு சற்று ஓய்வெடுக்கிறது.

அரசியல்வாதிகளின் பிறந்த நாளை  ஒட்டி ஒரு சந்தேகம்......

தமிழ், தமில் , தமிள்  என்று தமிழை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுள்  எவரேனும்  ஒருவர், ஒருவர், ஒரே ஒருவர், தனது பிறந்த நாளை (ஆங்கில கணக்குப்படி ஆகஸ்ட் 12 என்று இல்லாமல்) தமிழ் காலண்டர்படி  ....சித்திரை 3, ஆடி 32அன்று கொண்டாடினார் என்று சரித்திரம், பூகோளம் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும் ! 


கடந்த 21 நாட்கள் (வரக்கூடிய  15 + நாட்கள்) வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்ததால்  சட்டை பித்தான் எப்படிப் போடுவது, சாக்ஸ் எப்படி மாட்டுவது போன்ற ஆயக்கலைகள் மறந்து போயிருக்கின்றன. யூடியூப் உதவியின்றி இவையெல்லாம் நம்மால்  செய்யமுடியுமா என்று   தெரிய வில்லை எப்படியிருந்தாலும்  அலுவலகத்திற்கான வழி  கூகுள் மேப் உதவியுடன்தான்!  


கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 முடிந்து  அலுவலகம்  செல்வதற்கு முன் சக ஊழியர்களின்  புகைப்படத்தை முகநூலில் ஒரு முறை பார்த்துவிட்டுப் போகவேண்டும்.  ஜாடை மாறியிருக்கக் கூடும் ! 

இந்திய  சரித்திரத்தில் நாடு முழுக்க அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை.  இன்று வரை 21 நாட்கள்..... வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கோ என்று  தெரியாது........ இந்தத் தகவலில் இருந்து இந்நோயின் வில்லத்தனம், வீரியம் புரிந்திருக்கும்.  அடக்கி, அடங்கி வாசிப்பது நமக்கும் நல்லது, நம் நாட்டிற்கும் நல்லது  

கொரோனா போன்ற  பல தடைகளைத் தாண்டியே  இவ்வுலகம் வந்துள்ளது.... பரிணாமித்துள்ளது, இன்னும்  இவ்வுலகம் வளரும் என்ற நம்பிக்கையில் நம்மை நாமே காத்துக் கொள்வோம் . மருத்துவ வல்லுநர்கள், அரசாங்கம் சொல்படி   நடப்போம்.  (தேவைப்பட்டால் மட்டும்) வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்வோம் !


நாளை  தமிழ்ப் புத்தாண்டு. அனைவருக்கும் இந்த சார்வரி ஆண்டு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் தரட்டும் என என்னுள், உங்களுள் "24 X 7 X  365" கோவில் கொண்டுள்ள இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் !








3 comments:

Unknown said...

Very nice and timely entertainment..

Srinivasan R said...

வழக்கம்போல் ஒரு சிறந்த நகைச்சுவை நிறைந்த பதிவை அளித்ததற்கு நன்றி... நன்றி... நன்றி.

கொரோனா 3.0வை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ARK said...

Thank You Srinivasan

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...