திருச்சிற்றம்பம்பலம்
திருநெடுங்களம் பற்றிய முந்தைய பதிவுகளில் இடர் களையும் பதிகத்தின் சிறப்பு பற்றி பார்த்தோம் ! முந்தைய பதிவுகளின் திருவுகோல் இதோ !
பதிவு 1 - https://scribblingsofark.blogspot.com/2021/12/blog-post_22.html
பதிவு 2 - https://scribblingsofark.blogspot.com/2021/05/blog-post.html
முந்தைய பதிவில் உலக நன்மைக்காக ஞானசம்பந்தப் பெருமான் நமக்காக அருளிய பதிகம் "இடர் களையும் பதிகம்". இடர் என்றால் தடங்கல்.... இப்பதிகத்தை பாட எல்லா தடங்கல்களும் நீங்கும். எக்காரணத்தால் அவர் பதிகம் பாடினார் என்ன தடைகள் அவருக்கு இருந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை. விரைவில் அறிந்தவர்களிடம் தெரிந்து பகிர்கிறேன் ! என்றிருந்தேன்.
தெரிந்து பகிர்கிறேன் என்று சொன்னேனே தவிர எந்த வித முயற்சியையும் எடுக்க வில்லை. பள்ளியில் நன்றாகப் படி ! கவனமாகப் படி ! என்று பலமுறை சொல்லியும் தேறாத மாணவனைப் பார்த்து வெறுத்துப் போன ஆசிரியர் ' இந்தா ....இது முக்கியக் கேள்வி தொகுப்பு ....இதிலிருந்துதான் பரீட்சைக்கான கேள்விகள் வரும் என்று சொல்லி கிட்டத்தட்ட தேர்வுக்கான வினாத்தாளை கொடுத்து விடுவது போல, தேறாத அடியேனைப்பார்த்து ஞானசம்பத்தாரே வினா-விடைத்தாளை கொடுத்தது போல இந்த வார சக்தி விகடனில் முந்தைய பத்திக்கான விடையை பதிப்பித்து அருளியிருக்கிறார். நன்றி "சக்தி விகடன்"! அவர்களது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இதோ !
இடர் களையும் பதிகம், ஏன் இந்த திருநெடுங்களம் தலத்தில் பாடப்பட வேண்டும்? இதற்கான காரணத்தை அறிய விளைந்தபோது, `இடியாப்பசித்தர்' என்ற மாபெரும் ஞானி அருளிச்செய்த விளக்கம், அவரது சீடரான திருவண்ணாமலை வெங்கட்ராம ஸ்வாமிகள் வழியாக வழங்கப்பட்டது.
இந்த நெடுங்களம் என்ற பெருங்களம், முன்னர் யுத்த களமாக இருந்ததாம். பலப்பல யுத்தங்கள் இந்த நெடுங் களத்தில்தான் நடந்ததாம். அதனால், பகை உணர்வும் பழி உணர்வும் கலந்த - கர்மவினை நிறைந்த இந்த இடத்தைச் சீர் செய்ய எண்ணினார் எம்பெருமான்; அழைத்தார் முசுகுந்தச் சக்கரவர்த்தியை!
`முப்பத்து முக்கோடி தேவர்களையும் அனைத்து அசுரர் களையும் அழைத்து வந்து ஒற்றுமையாய் அமரவைத்து, வழிபாடு நடத்த ஏற்பாடு செய்க. பரம எதிரிகளான அவர்கள் ஒற்றுமையாய் இருந்து வழிபாடு செய்தால் மட்டுமே இந்தப் பரந்த பூமி சாந்த களமாக மாறும்' என்று ஆணையிட்டார்.
தொழுது எழுந்த முசுகுந்தர், நெடுங்களத்துக்குப் பக்கத்தில் இருக்கும் திருவானைக்கோவிலில் உறையும் அகிலாண்ட ஈஸ்வரியிடம் ஓடினார். உதவி வேண்டிப் பாடினார். அன்னை இரங்கினாள். வராஹி அம்சமான அகிலாண்டேஸ்வரி இப்போது வராஹியாகவே வந்தாள்.
முசுகுந்தரின் மீது நிறைந்த மரியாதை கொண்ட தேவர் கூட்டம், அவர் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டது. ஏற்கெனவே படாத பாடு பட்டிருந்த அசுரர்கள், வராஹியின் பார்வைக்குக் கட்டுப்பட்டார்கள்; வந்து சேர்ந்தார்கள். தேவர்கள், அசுரர்களை வரிசையாக அமரவைத்து வழிபாடுகள் நடத்தி வைக்கப்பட்டன. அனைவரும் ஒற்றுமையாய் தவம் செய்தார்கள்; ஒரே விதமாய் தவம் செய்தார்கள். சிவ வழிபாடு வெகுஜோராக நடந்தது. பகை மறந்து, பழி அகன்று, ஒற்றுமையாய் பூஜைகள் நடந்து முடிந்ததும், அப்போதே அது சாந்த களம் ஆகிவிட்டதாம்!
ஆனாலும், பல காலம் கடந்தபோது, யாரோ சிலருக்குச் சிறிய அளவில் அசுர குணம் தலைதூக்க வைத்தார் பெருமான். நெடுங்களப் பகுதி மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டுப் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். கோயிலில் இருந்த கலைமணிகளான நடன மாந்தர்கள், பண்ணிசைக் கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள், அந்தணர் பெருமக்கள், பொதுமக்கள் என அனைவரும் துன்பமுற்றார்கள். என்ன காரணம்?
இடர்கள் எல்லோருக்கும் வரும். அது களையப்பட மந்திரம் வேண்டும். வருங்கால உலகுக்கு அது அளிக்கப்பட வேண்டும். அதற்குச் சரியான இடம் இந்தத் தலமாகத்தானே இருக்கவேண்டும். ஆகவே தோன்றியது இடர்!
தல யாத்திரை சென்றுகொண்டிருந்த சம்மந்தப் பெருமான் வழியில் நெடுங்களம் வந்தார். ஊரில் அனைவரும் திரண்டு வந்து பெருமானை விழுந்து வணங்கி, இடர்களைக் களைந்து இன்பம் சூழ வழிகாட்டும் படி மனம் உருகி வேண்டினார்கள். சம்பந்தப் பெருமான் மனம் கனிந்தார். நேரே நெடுங்கள நாதரின் சந்நிதிக்குச் சென்றார். பொற்றாளத்தை இசைத்து, உருகிப் பாடினார். இடர்களை இருந்த இடம் தெரியாமல் ஓட பண்ணி... மக்கள் மனங்களிலும், முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கச் செய்தார். அதுமட்டுமா? வருங்காலங்களில் மனித குலத்திற்கு என்ன இடர் ஏற்படினும், அந்தப் பதிகத்தைப் பாடி உய்யவும் வழியேற்படுத்தி, தன்மேல் ஆணையிட்டு மந்திரமாய் அருளிச் செய்தார்.
மீண்டுமொரு நன்றி "சக்தி விகடன்"!