Monday, March 20, 2023

சரியாகப் புரிந்து கொள்வோம்-4 :::::::::::: :::::: ராசி பலன் களை நம்பலாமா

 

 

இந்தியாவில் முக்காலே மூணு வீசம் பேர்களுக்கு தன்னை பற்றி தெரிந்த மிகப்பெரிய தகவல் தன்னுடைய நட்சத்திரமும் தன்னுடைய ராசியும் தான்.  நட்சத்திரம் என்றால் என்ன என்று நமக்கு தெரியாது. (நாம் நட்சத்திரம் என்று நினைப்பது பொதுவாக ஒரு நட்சத்திரம்  அல்ல.... பல நட்சத்திரங்களின் தொகுப்பு. )  ராசி என்றாலும் நமக்கு தெரியாது. ஆனால் கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது வீட்டில் பூஜை செய்யும் போது அந்த பெயர் கோத்ரம் நட்சத்திரம் ராசி போன்ற விவரங்களை கர்மசிரத்தையாக சொல்லிவிடுவோம்.

 

யாருக்குத்தான் வருங்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இல்லாமல் இருக்கும் !  நாமும் மனிதர்கள் தானே! இந்த பலவீனத்தை புரிந்து கொண்ட தொலைக்காட்சிகளும், தினசரி,  வாராந்திரிகளும் தவறாமல் கொடுக்கும் ஒரு தகவல் ராசி பலன். பத்திரிகைகள் தொந்திரவு போதாதென்று யூடியூப் (Youtube) பிடுங்கல் வேறு 

 




கடக ராசி அன்பர்களே உங்களுக்கு வாகனயோகம் அடிக்கப்போகிறது விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் காட்டில் மழை ……போன்ற குடுகுடுப்பைக்காரன் பாணி  வாசகங்களை கேட்காவிட்டால்  காலைப்  பொழுதில்  கட்டிலில் இருந்து இறங்கவே தைரியம் வருவதில்லை

 

இன்று பல் இடதில் இருந்து வலதாக தேய்க்கலாமா அல்லது வலதிலிருந்து இடமாக பல் தேய்க்கலாமா போன்ற பெருத்த சந்தேகங்களும் வரத்தானே  செய்யும்.

 

காலை ஏழிலிருந்து ஏழரை வரை எல்லா சேனல்களிலும் ஓடும்  விளம்பர வருமானம் தரும் ஒரே நிகழ்ச்சி ராசி பலன் தான் !

 




டாஸ்மாக் குடிகாரர்களுக்கு 6 மணிக்கு மேல் கை  உதறல் எடுப்பது போல் ரிமோட் சேனல் மாற்றாவிட்டால் கை உதறல்  எடுக்கும் பல ஆண்களுக்கு / அன்பர்களுக்கு குறைந்தது 35 ராசி பலன்கள் கிடைக்கும். இதுபோதாதென்று செய்தித்தாள்கள் , குமுதம், விகடன் வாட்ஸ்ஆப்,  ஃபேஸ்புக் என்ன மற்ற  வகைகளில் இன்னும் 10 ராசி பலன்கள் கிடைக்கும்.

மங்கையர் மலர் அவள் விகடன் போன்ற பெண்களுக்கான பத்திரிகைகளில் அவர்களுக்கென்று தனியாக ராசி பலன்கள் கோலங்கள் .. கோகுலம் அம்புலிமாமாவில் குழந்தைகளுக்காக தனியாக ராசி பலன்  வர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி. செல்லப் பிராணிகளுக்கு என்று தனியாக ராசி பலன்கள் ஒன்றுதான் பாக்கி.

இதில் விசேஷம் என்னவென்றால் ஒரே  ராசிக்கான இந்த 40 பலன் களும் 40 வகையாக இருப்பதுதான். எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது.


இன்று உங்களுக்கு விளங்காத திசைகள்

 கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு 


இந்த விஷயத்தில்  ஒரு தெளிவை ஏற்படுத்தத்தான் இந்தப் பதிவு. 

 

உலகத்தின் மொத்த ஜனத்தொகை 778 கோடி. ஜாதக கட்டங்களில் இருக்கும் மொத்த ராசிகளின் எண்ணிக்கை 12. சராசரியாக ஒரு ராசிக்கு 66.5 கோடி அன்பர்கள்.

 

ராசி பலன்கள் சொல்வது என்னவென்றால் ஒரு ராசியில் இருக்கும் எல்லா அன்பர்களுக்கும் அந்த நாளோ அந்த வாரமோ அந்த மாதமோ ஒரேமாதிரியாக இருக்கும் என்பதுதான்  !

 

நீங்கள் படித்த படிப்ப, கற்ற வித்தை எல்லாவற்றையும் பயன்படுத்தி யோசனை செய்து பார்க்கவும் …..66.5 கோடி பேருக்கு ஒரேமாதிரியாக பலன் இருப்பதற்கு வாய்ப்பு உண்டா!


இரட்டையாகப் பிறந்த இரண்டு குழந்தைகளே ஒன்று ஆண் ஆகவும் ஒன்று பெண்ணாகவும்….. ஒன்று கருப்பாகவும், ஒன்று சிவப்பாகவும்…… ஒன்று அம்மாவை போலும் ஒன்றுஅப்பாவை போலவும்  , …., பின் அவர்கள் வேறு வேறு படிப்பை படிப்பதும் வெவ்வேறு நாட்டில் வாழ்வதும்….. வெவ்வேறு தொழில்  செய்வதுமாக இருக்கும்போது,  வேறு வேறு நாட்களில்,  வேறு வேறு நட்சத்திரங்களில் வேறு வேறு நாட்டில் பிறந்த வேறு வேறு வயதை உடைய வேறு வேறு பால் இனங்களாக இருக்கும் 66.5 கோடி பேருக்கு ராசிபலன் எப்படி ஒன்றாக இருக்க முடியும்….இருக்க முடியாது அல்லவா!  அப்படி இருக்கும் போது ராசி பலன்கள் எப்படி ஏற்றுக்கொள்வதாக இருக்க முடியும்

 

அடியேன் முன்பொரு காலத்தில் வெளிநாட்டில் இருந்தபோது ஃப்ரைடே என்ற ஆங்கில வாராந்தரியை தவறாமல் படிப்பது வழக்கம். அதில் வரும் ராசி பலன்கள் படித்து வருவேன். எல்லா வாரங்களும் என்னுடைய ராசிக்கான பலன்கள் 100 க்கு 100 துல்லியமாக இருக்கும். நானும் பலமாக ஏமாந்தேன். நான் ஏமாந்து விஷயம் தற்செயலாக தெரிய வந்தது….. எப்படி என்று கேட்கிறீர்களா?  எந்த வேலையுமே இல்லாத ஒரு நாளில் 12 ராசிகளுக்கான பலன்களையும் ஒரே மூச்சில் படித்தேன்  12 ராசிக்கான பலன் களும் எனக்கு பொருத்தமாக இருந்தது.  திரும்பத் திரும்ப படித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன.

  • உழைத்தால் முன்னேறலாம்…. ஜாக்கிரதையாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் …….ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் பணம் சேர்க்கலாம்……..சாலையை கடக்கும் போது கவனம் தேவை போன்ற பொதுவான உபதேசங்கள் காணப்பட்டன
  • வரும் வாரம் சுமாராக இருக்கும்.... வரும் வாரம் அருமையாக இருக்கும் போன்ற பொதுவான தகவல்கள்
  • கணவன் வீட்டுகாரர்களை நம்பாதே போன்ற தாய்மார்களுக்கு பிடித்த உபதேசங்கள்

 

எல்லாப் பத்திரிகைகளிலும் இப்படி ஜோதிட அடிப்படையற்ற தகவல்கள்கொடுக்கப்படுகின்றன என்று சொல்லவில்லை. சில பத்திரிக்கைகள் பரவாயில்லை ! சிலபத்திரிக்கைகளில் ஜோதிட அடிப்படையில் தான் கொடுப்பதாக மாய தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கிறார்கள்.

 

ஜோதிடம் என்பது 100 பர்சண்ட் அக்மார்க் உண்மை ! ஆனால் ராசி பலன் என்பது ஒரு வியாபார தந்திரம்.

 

ஒருவரது வாழ்க்கை என்பது அவரது தனிப்பட்ட ஜாதகத்தை மட்டும் சார்ந்ததே அல்லாமல் வேறில்லை.  எனவே தனிப்பட்ட ஜாதகத்தை சாராமல் எழுதப்பட்ட எந்த பலன்களும் நம்பத் தகுந்தவை அல்ல.( ஒரு நாட்டிற்கான அல்லது  ஒரு கட்சிக்கான பலன்கள் Mundane Astrology என்ற வகையைச் சாரும் அது ஜோதிடத்தின் வேறு ஒரு பிரிவு. அதை தனிநபர் ஜோதிடத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)

 

அப்படி என்றால் ராசி பலன்கள் எழுதும் எல்லா புத்தகங்களும் பத்திரிக்கைகளும், ஜோதிடர்களும் மோசக்காரர்களா? . இல்லை !  யாரையும் ஏமாற்றும் நோக்கம் அவர்களுக்கு இல்லை ஆனால் அவர்கள் பொதுமக்களது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் தொழில் முனைவர்களே…… அதாவது வியாபார நோக்கம் மட்டுமே.


இது போதாதென்று "பெயர்ச்சி பலன்கள்" வேறு ! 20-30 வருடங்களுக்கு முன்பு குரு  பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி தவிர வேறு எந்தப்  பெயர்ச்சியும் கேள்விப்பட்டதில்லை. இன்று ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என சரமாரியாக வியாபார அணிவகுப்பு. ஏன்  30 வருடங்களுக்கு முன்பு ராகு/ கேது பெயரவில்லையா !  

எத்தனை வயதானவர்களாக,  அனுபவஸ்தர்களாக  இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரு விதத்தில் குழந்தைகளே. ஏதாவது ஒரு நல்ல செய்தி காதில் விழாதா …..  நம்முடைய பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு வராதா …….. நல்லது நடக்காதா…… இந்த ராகுல் காந்தி ஒரு நாளாவது உருப்படியாக பேச மாட்டாரா …. என்ற ஆர்வத்தில் இருக்கும் நம் போன்ற குழந்தைகள் இந்த ராசி பலனை படிப்பதால் மனது சற்று தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்ளும்!

 

அடியேன் மண்டியிட்டு தண்டனிட்டு கேட்டுக் கொள்கிறேன் ராசி பலன்களை படித்து உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் அதேபோல ராசி பலன்களை வைத்து உங்களது நாளை திட்டமிடாதீர்கள் !  உங்களது வாழ்க்கை உங்கள் கைகளில் மட்டும்!  ஆண்டவன் ஒருவனே  துணை.


கீதையில் பகவானே சொல்லியிருக்கிறார் ! கடமையைச் செய் ! ராசிபலனை பாராதே என்று !


இந்தப் பதிவையும் படித்துவிட்டு..... நல்லாத்தான் எழுதியிருக்கே என்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும்  ராசி பலனை விடாமல் படித்தால், அந்த ஆண்டவனே வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. 


Statutory Warning: Rasi Palan is injurious ! Quit !


குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...