Sunday, January 15, 2023

சரியாகப் புரிந்து கொள்வோம் -1 - உஞ்சவிருத்தி

சிறுவயதிலிருந்தே சில விஷயங்களை  தவறாகப் புரிந்து கொண்டிருப்போம். ஆனால்  சரியாகப் பட்டதால் அந்தத் தவறையே  தொடர்வது  மட்டுமல்லாமல் பலருக்கும் அந்தத் தவறையே  பரப்பவும் செய்வோம்.


அப்படிப்பட்ட சில தவறான புரிதல்களை பற்றிய சரியான தகவல் தர முயற்சிக்கிறேன். அடியேன் ஏதோ  எல்லாம் அறிந்தவன் என்ற வகையில் பேசுகிறேன் என்று எண்ண  வேண்டாம்.  மன்னிக்க ! நேற்று வரை அடியேனும் தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன், இன்று அந்தத் தவறை உணர்ந்ததால் மற்றவர்களுக்கு பகிர்கிறேன். 


வாருங்கள் ...சரியாகப் புரிந்து கொள்வோம்  !


சிறுவயதில் கல்லைக்கண்டால் நாயைக்  காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்றால், ஏதோ  அடிக்க வாகாகக் கையில் கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்றும், அதே நேரத்தில் நாய் நம்மைத் துரத்தும் போது கை  கிடைப்பதில்லை என்றே பலரும்  அறிந்திருப்போம்.  பின்னர் வகுப்பாசிரியர் கையில் பிரம்பை உருட்டி சரியான விளக்கம் சொல்லும்போதே அது சிற்பத்தை பற்றி விளக்குவதாகும் என்று புரிந்தது.


அந்த வரிசையில் இன்று உஞ்சவிருத்தி பற்றிய புரிதலை பெறுவோம்.  மார்கழி என்பது உஞ்சவிருத்தி சம்பந்தப் பட்டதனாலோ என்னமோ, இந்த தலைப்பைப் பற்றி பேசுகிறோம் !




மார்கழி மாத சமஷ்டி பஜனையும், ஊர்வலமும், உஞ்சவிருத்தியும் அதன் முடிவில் கோவிலில் சென்று பிரசாதத்துடன் முடிப்பதும் எல்லோரும் அறிந்ததே ....என்று சொல்வதே தவறு !


சுமார் 200-300 வருட பக்தி மார்க்கத்தில் (நாமறிந்த) உஞ்சவிருத்தி எப்படியோ சேர்ந்து கொண்டு விட்டது.


உஞ்சவிருத்தி என்பது பக்தி சம்பந்தப் பட்டதே இல்லை. இது ஒரு சாமானியன் பற்றற்ற வாழ்க்கை வாழ சொல்லப் பட்ட வழிகளில் ஒன்றே உஞ்சவிருத்தி.


அப்படியென்றால் உஞ்சவிருத்தி என்பது இறைவனைப் பற்றிய பஜனை பாடிக்  கொண்டு, நம் பக்தியைப் பாராட்டிய ஏனைய பக்தர்கள் கொடுக்கும் தான்ய தானங்கள் பற்றியது இல்லையா ???  


நிச்சயமாக இல்லை ! 


அப்படியானால் தியாகராஜ  சுவாமி போன்ற மகான்கள் உஞ்சவிருத்தி செய்ததாகச் சொல்லப்பட்டது பொய்யா !?!



பொய்  இல்லை ! உண்மை தான் . ஆனால் அவருடைய முறையென்பது பக்திப் பாடல்கள் பாடி தெருவில் செல்லும் போது கிடைக்கும் தானியங்களை வீட்டிற்குக்  கொணர்ந்து அதை சமைத்து ஆண்டவர்க்குப் படைத்து, பின் வீட்டிற்கு வரும் பக்த வழிப்போக்கர்களுக்கு கொடுத்து, ஏதும் விஞ்சி இருந்தால் தான்   சாப்பிடுவது  என்பது. அது அவரது வழி ஆனால் அது உஞ்சவிருத்தி அல்ல ! அந்த மகான் அந்த வழியை உஞ்சவிருத்தி என்று சொன்னது கிடையாது. அவர் தவறல்ல நம் தவறு !


அசால்ட்டாக அந்தக் கணக்கை  அவன் செய்தான் என்ற வழியில்  (தாக்குதல் என்ற பொருளுடைய ) Assault  என்கிற வார்த்தையை  அனாயசமாக என்ற பொருளில் தவறாகப் நாம் பயன்படுத்துவது போல் தான் . 


உண்மையில் உஞ்சவிருத்தி என்றால் என்ன !


Uñjha (उञ्झ) என்றால் விட்டுப்போன,

விரு(த்)தி  (वृत्ति   என்றால் சேர்ப்பது, 


பறிக்காமல், தானாக விட்டுப்போன (உதிர்ந்த) பொருட்களை சேர்ப்பது என்று பொருள். 


அதாவது எவரிடம் பிச்சையோ, தானமோ, உதவியோ கேட்காமல் நெல் வயல்களுக்குச் சென்று அங்கு தரையில் உதிர்ந்திருக்கும் மணிகளை ( பறவைகள் சாப்பிட்டது போக) பொறுக்கி  அதனை உணவாக உட்க்கொள்வது உஞ்சவிருத்தி 


உதாரணம்: துவாரகா அரசன் கிருஷ்ணனைக் காண அவருக்குப் பிடித்த அவல்  கொண்டு போக குசேலர் முடிவு செய்தார். முடிவு மட்டும் செய்தால் போதுமா, அவல்  செய்ய நெல் வேண்டாமா ! அன்று அவர் உஞ்சவிருத்தி முறையில் கொண்டு வந்த நெல்லில் / அரிசியில் செய்ததுதான் கிருஷ்ணன்  சாப்பிட்ட அவல் . (குசேலரை  ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவைக்கு ஒரு கைத்தடியாகவுமே நம் திரைப்படங்கள்  நமக்குத் தந்திருக்கின்றன. அவரை குசேல ரிஷியென்றே அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் ).



உஞ்சவிருத்தி என்ற வார்த்தையின் பொருள் பின் எப்படி மாறியது என்பது பற்றி பேசி நேரத்தை வீணாக்காமல், வேறு சில அருமையான தகவல்களை தெரிந்து கொள்வோம் !


ஹிந்து தர்மம் பற்றற்ற வகையில் (சந்யாசிகள் மட்டுமல்ல, சாமான்யர்களும்)  நிம்மதியாக  வாழ ஒரு சில விருத்தி வகைகளை தந்தளித்தந்து . அவற்றில் சில: 


  • உஞ்சவிருத்தி
  • மதுகர  விருத்தி 
  • கபோத விருத்தி
  • அஜகரவிருத்தி
  • நிவ்ருத்தி (निवृत्ति )
இவற்றில் மிகவும் சுலபமானதே முதலில் பார்த்த உஞ்சவிருத்தி. அதுவே பண்டாரகர் (Ph.D Level)  என்று நமக்குத் தோன்றுகிறது.  பின்பு மற்றவையெல்லாம் எவ்வளவு கடினமோ  ?!?!?  பார்ப்போம் !


  • கபோத விருத்தி:   கபோதம் என்றால் பறவை அதுவும் புறா . புறா என்பது அடுத்த வேளை  சாப்பாட்டுக்காக கூட பொருள் (தானியம்/ உணவு) வைத்துக் கொள்ளாது. பசியெடுக்கும்  பொது பறந்து உணவைத் தேடி , சாப்பிட்டு பறந்து விடும். அது என்ன அடுத்த வேளை  உணவுக்கு டிபன் பாக் ஃஸா  வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் தான் மதிய  உணவின் போதே, ராத்திரி மெனு என்ன என்று அம்மாவைக் கேட்கிறோம் !




  • மதுகர  விருத்தி : மதுகரம்  என்பது தேனீ . அது பல மலர்களிருந்து தான் வாழ தேனை சேமிக்கிறது. ஆனால் அதை தேனீ முழுமையாக அனுபவிக்கும் முன் மற்றவர்கள் திருடிக்கொள்கிறார்கள்.  தேனீயின் இந்த முறையே மதுகர  விருத்தி. இதன் மூலம் நமக்கு தரப்படும் நீதி என்னவென்றால் உன் தேவைக்கு அதிகமானது உன்னிடமே என்றும் இருக்கும் என்று எதிர்பாராதே என்பதே !


  • அஜகரவிருத்தி : அஜகரம்  என்றால் மலைப்பாம்பு.   சாதாரணப் பாம்பு கூடு உணவைத்தேடி எலி வளைக்குப்  போகும்.  ஆனால் மலைப்பாம்பு ஒரே இடத்தில் இருக்கும். அதன் இருப்பிடத்திற்கு மானோ, ஆடோ, டார்ஜானோ வந்தால் விழுங்கி விட்டு அங்கேயே இரண்டு நாட்கள் கூட அசையாமல் இருக்கும்.  10ம் நூற்றாண்டில் வாழ்ந்த, குபேரரின் அவதாரமாக அறியும் பட்டினத்தார் அஜகரவிருத்தியை பற்றினார்.


  • நிவ்ருத்தி:  நிவ்ருத்தி என்பது பொருள் தானாக வந்தால் நிராகரித்து வேறு பக்கம் ஓடுவது. பல மேல் தட்டு மக்கள் தேர்தல் நேரத்தில் ஜனநாயகக் கடமையை மறந்து தொலைக்காட்சியில் "மாமியாரின் ஏச்சு " மஹாதொடர் பார்ப்பது போல் !
            உதாரணத்திற்கு ......ஜைனத்   துறவிகள், கடைசி நிலையாக நிவ்ருத்தியை அனுசரித்து புல், பூண்டு, தண்ணீர் கூட இல்லாத மனித, மிருக , பூச்சிகள் அரவமற்ற மலைகளுக்கு செல்வார்கள். அது அக்மார்க் நிவ்ருத்தி




ஸ்ரீமத் பாகவதம் (பொருளுணர்ந்து )படித்தவர்கள் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள் . (அடியேன் படித்ததில்லை. நம் தலைமுறை ஆன்மீக encyclopeida  கிருபானந்த வாரியார்  சொல்லக் கேட்டது  )

பணவிருத்தி மாத்திரமல்லாமல் இப்பேற்பட்ட விருத்திகளையும் தெரிந்து கொள்வோம். சரியாகப் புரிந்து கொள்வோம்


வாசக தோஷ: க்ஷந்தவ்ய: (அப்படியென்றால் இந்தக் கட்டுரையை படித்தால் வாசகர்களுக்கு இருக்கும் தோஷங்கள் எல்லாம் விலகும் என்று பொருளல்ல ... எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும் என்று அர்த்தம்..... இப்பொழுது தானே சொன்னேன் சரியாகப் புரிந்து கொள்வோம் என்று 😄😄😄 )





குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...