Tuesday, September 7, 2021

சிறுவாபுரி பாலசுப்ரமணியன் கோவில்




முருகன் சூரனை சம்ஹாரம் செய்த இடம் (இன்று ஹம்பன்தோட்டா  என்று அழைக்கப்படும்)  ஹேமகூடம் என்றால் கூட அப்போர் சம்பந்தப்பட்ட ஸ்தலங்கள் சென்னைக்கு அருகே இருப்பது சென்னைவாசிகள்  செய்த புண்ணியம். 


சென்னைக்கு தெற்கே 30 கி .மீட்டர் தொலைவில் இருக்கும் திருப்போரூரில் (திரு+போர்+ ஊர்) முருகப்பெருமான் தாரகாசுரனை சம்ஹாரம் செய்தார். தென் சென்னையில் இருக்கும் முக்கிய கௌமாரத் தலங்களில் திருப்போரூருக்கே முதலிடம்.  


பெங்களூர் சாலையில் இருக்கும் (வெறும்)  போரூருக்கு சரித்திர தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அடியேனைத் திருத்தலாம். 


சென்னைக்கு வடக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் (NH -16 - கல்கத்தா நெடுஞ்சாலையை ஒட்டி) அமைந்துள்ள சிறுவாபுரியும்  போர் தொடர்புள்ளது. ஆனால் சூரசம்ஹார நிகழ்வுகளை ஒட்டியதல்ல !.


சென்னையின் தெற்கே திருப்போரூர் பிரசித்தமென்றால், வடக்கே சிறுவாபுரி பிரசித்தம் (தென் மேற்கே வல்லக்கோட்டை) 


NH -16ல் 35 கி.மீ அலுங்காமல் குலுங்காமல் பயணித்து சின்னம்பேடு / சிறுவாபுரி விலக்கில்  இடம் திரும்பி 5 கி.மீ  ரம்மியமான வயல்வெளிகளை தாண்டி  பயணித்தால் சாலையின் மேலேயே  பாலசுப்பிரமணியன் கோவில்.  


பழைய , சிறிய கோவில் (2021 செப்டம்பரில்) கும்பாபிஷேகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.  முருகன் வரப்பிரசாதி என்று எல்லாக் காலங்களிலும் பக்தர்கள் கூட்டம். பக்தர்களது எல்லாக்கோரிக்கைகளுக்கும் இறைவன் இங்கு செவி சாய்க்கிறார்  என்றாலும் திருமணக்கோரிக்கைகள் விரைந்து பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது. இருக்காதா பின்னே.... அவரே முறைமணம் , கடிமணம்  என்று இருமணம் புரிந்தவராயிற்றே !



நாங்கள் திங்கள் மதியம் 430 மணிக்கு  சென்றிருந்தாலும் கூட நல்ல கூட்டம். செவ்வாய் மற்றும் ஞாயிறு கூட்டம் அதிகம் என்று தகவல். இவ்விரு நாட்களிலும் மதிய இடைவேளையாற்ற தரிசனம் என அறிகிறோம்.  கொரோனா  காலமாகையால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் பக்தர்களை கோவிலுள் தங்க விடுவதில்லை.

திருநீர்  அர்ச்சகர் கைபடாமல் கவரில் கொடுக்கப்படுகிறது. அர்ச்சனை, மாலை காணிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாலை வாங்கினால் கொடிமரத்திற்கே அணிவிக்க வேண்டும்.



நின்ற கோலத்தில் பாலசுப்ரமணியன் அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதர் தரிசித்து திருப்புகழ் செய்திருக்கிறார்.  மூன்று பாடல்கள் பாடியிருந்தாலும் பிரசித்தியான ஒரு பாடல் மட்டும் கீழே .....


அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற

அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே

முன் அனுபவம் இல்லாமல் இருந்தாலோ, அல்லது கையில் கூகுள் மேப் தயவில்லாவிட்டாலோ ஊரை அடைவது கடினம். அந்தக் காலத்தில் அருணகிரிநாதர் கால்நடையாக எப்படி வந்தாரோ என்று நினைக்க மலைப்பாக இருக்கிறது.  அவருக்கென்ன.... ஆண்டவனே (விராலிமலைக்கு வழி  காட்டியது போல) வழி  காட்டியிருப்பார்.


கோவிலின் மற்றொரு விசேஷம் .... சிவலிங்கம்,  விநாயகர், மயில்வாகனம் அனைவரது விக்கிரகமுமே  மரகதகே கல்லாலானது. 

வள்ளியம்மையை திருமணம் செய்த பிறகு தங்கிய இடமாதலால் தெய்வத்தம்பதியர் இருவருமே திருமணம் அருள்வார்கள் என்பது நம்பிக்கை . 



முருகம்மை என்ற முருக பக்தர், கையை  ஒருநாள் கோபத்தில் கணவர்  வெட்ட பின் முருகம்மை முருகனை துதித்ததால், கடவுள்  தோன்றி கரத்தை வெட்டப்பட்ட வடு இல்லாமல், சேர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.


திருமகனுக்கான கோவில் தவிர, மாமன் வரத ராஜப்  பெருமாளுக்கும், தந்தை  அகத்தீஸ்வரருக்கும் தனித்தனி கோவில்கள் அரை கிலோமீட்டர் தொலைவிலேயே.... அவசர உலகத்தில் இருக்கும் பலர் முருகனை மட்டும் எக்ஸ்பிரஸ் தர்சனம் செய்து விட்டுத் திரும்புவது  அவர்கள் செய்த துரதிர்ஷ்டம் (அடியேனும் அதற்கு விலக்கல்ல ) 


இவ்வூர் ராமாயணத்திற்கும் தொடர்பு உடையது. ராமன் தான் தங்களது தந்தை என்று தெரியாத லவ-குசர்கள்  லவலேசம் கூட பயமில்லாமல் ராமனுடன் போர் புரிந்தார்கள். சிறுவர்கள்+போர்+புரிந்தது என்பது இவ்வோரின் பெயர்க்காரணம்.  இதை நான் சொன்னால் யார் நம்புவார்கள்.... இதோ அருணகிரியார் வாக்கில்....


சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்

     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்

செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த

     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.


கருணைத் தெய்வத்தின் அருள் , அமைதியான கிராமம் , பச்சைப்பசேலென வயல் வெளிகள் , சுகமான ஹைவே சவாரி எல்லாம் ஒருங்கே அனுபவிக்க விரைவில் சிறுவாபுரி செல்லவும். 

கூகுள் மேப் உதவிக்கு: https://goo.gl/maps/54JcDwZ7U4LU269y8

சிறுவாபுரி திருப்புகழை அனுபவிக்க சம்பந்தம் குருக்களை  யூடியூபில் நாடவும்.  


Youtube  Link : Youtube Link


 



குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...