Tuesday, May 25, 2021

திருமணம் கை கூட இந்தப் பாடல் கை கொடுக்கும்

திருக்கோட்டியூர் திருத்தலத்தில்  ராமானுஜருக்கு  திருக்கோட்டியூர் நம்பி அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்த போது  இம்மந்திரத்தை ரகசியமாகக் காக்கவேண்டும்...... பிரமாணத்தை மீறி  பொதுவாக அனைவருக்கும் உபதேசித்தால் உனக்கு நரகம்தான் என்றிருந்தார்.  


உலகம் உய்ய, பலர் பயன் பெற நான் நரகம் சென்றால் பரவாயில்லை என்று உலக மஹாகுரு ராமானுஜர் கோவில் விமானத்தில் ஏறி  போவோர் வருவோர் எல்லாம் கேட்கும்படி ஓம் நமோ நாராயணாய உரக்க சொன்னார். 


இப்படி சாபங்கள் பல இணைந்திருந்தாலும் உலகம் பயன் பெற பரப்புவதே பக்தனின் கடமை என்பதால், சாபம் ஏதும் இணையப்பெறாத ஒரு தகவலை இன்று பகிர்கிறேன் !




குடும்பத்தில் எவருக்கேனும்  திருமணத்தடை இருந்தால் கவலை வேண்டாம். கோவிலுக்கும் போகவேண்டாம் ...குளத்திலேயும்  முங்க  வேண்டாம்.  அஞ்சேல்  என்கிறது திருப்புகழ்.  அருணகிரிநாதர் அருளிய  இந்த திருப்புகழை பக்தி சிரத்தையுடன் ஓதினால் திருமணத்  தடைகள் நீங்கும்.  கோவிலுக்குப் போயும் ஓதலாம் (லாக் டவுன் முடிந்தபிறகு )


எட்டே வரிகள் .... மூன்றே நிமிடம், தொ(ல்)லைக் காட்சிக்கும், கைபேசிக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு பக்தியுடன் சம்பந்தப்பட்ட நபரைப் படிக்கச் சொல்லவும்.  பசி எடுக்கும் வயிற்றுக்குத்தானே அன்னமிடுவோம். என் குழந்தை ஊட்டினாலும்  சாப்பிடமாட்டேன் எனவே நான் சாப்பிடுகிறேன் என்ற தாயாரை நாம் இதுவரை பார்த்ததில்லை !


மீறி பெற்றோர்கள் சொன்னால் தவறில்லை ... என்ன ...அவர்களுக்கு  அறுபதாம் கல்யாணம் நடைபெறும். பரவாயில்லையா !

மகனுக்கு திருமணமா அல்லது பெற்றோர்களுக்கு 60ம் கல்யாணமா.... முடிவு உங்கள் கையில் !

மணிவாசகர் சொல்வது போல் "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கள்" 


வைகாசி விசாகத்தன்று அடியேன் சொல்கிறேன். முருகப் பெருமான் கைவிடமாட்டார் !


நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,

நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,

நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்
தட்டிக் கொள்ளும் பெருமாளே.


(வாரியார் சுவாமி புன்னாகவராளியில் பாடுவார். புன்னாகவராளியில் பாடினால் பாம்பு வராது பயப்பட வேண்டாம். பாம்பை அடக்கும் மயில் மீதேறி மாலோன் மருமகன்  உங்களுக்கு கருணை செய்ய மருமகனோடோ அல்லது  மருமகளோடோ வருவான்  )

தமிழ் படிக்கத்  தெரியாதவர்கள் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும்  படித்துப் பயன் பெறலாம் 

నీలన్గ్ కొళ్ మేగత్తిన్ ...... మయిల్మీదే
   నీ వన్ద వాzహ్వైక్ ...... కణ్డదనాలే
      మాల్ కొణ్డ పేదైక్కున్ ...... మణనాఱుమ్
         మార్ తన్గు తారైత్తన్ద్ ...... అరుళ్వాయే

వేల్ కొణ్డు వేలైప్ పణ్డ్ ...... ఎఱివోనే
   వీరన్గ్ కొళ్ సూరర్క్కున్గ్ ...... కులకాలా
      నాల్ అన్ద వేదత్తిన్ ...... పొరుళోనే
         నాన్ ఎన్డ్రు మార్ తట్టుమ్ ...... పెరుమాళే.

neelang koL mEgaththin ...... mayilmeedhE
   nee vandha vAzhvaik ...... kaNdadhanAlE
      mAl koNda pEdhaikkun ...... maNanARum
         mAr thangu thAraiththandh ...... aruLvAyE

vEl koNdu vElaip paNd ...... eRivOnE
   veerang koL sUrarkkung ...... kulakAlA
      nAl andha vEdhaththin ...... poruLOnE
         nAn endru mAr thattum ...... perumALE.





Thursday, May 20, 2021

ஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த "இடர் களையும் பதிகம்"

எப்பேர்ப்பட்ட கஷ்டங்களையும், இடர்களையும் தீர்த்து வைக்கும் ஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த இடர் களையும் பதிகம். இப்பதிகம் திருநெடுங்களம் என்னும் தலத்தில் பாடப்பெற்றது. நெடுங்களம்  திருச்சிக்கு கிழக்கே , திருவெறும்பூர் என்னும் மற்றொரு பாடல் பெற்ற  தலத்தின்  அருகில் அமைந்துள்ளது.  



பேராசிரியர் சோ. சோ. மீனாக்ஷி  சுந்தரம் அவர்கள் இந்த பதிகத்தினால் 
அவர் அனுபத்தில்  சமகாலத்தில் இருவருக்கு நோய் தீர்ந்தது பற்றி ஆச்சரியத்துடன் பகிர்ந்திருக்கிறார் . 


சொல்லற்கு அரியானை எளிதில் சொல்வதற்கு இதோ அந்த பதிகம் ..........


திருநெடுங்களம் - இடர் களையும் பதிகம்


மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களமேயவனே

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவோடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நீங்கிநில்லார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே


கூறுகொண்டாய், மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர் வெங்கணையால்,
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே, கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


 வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களமேயவனே


வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்றறியார்
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

நூற்பயன் 

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே



மெய்யின்ப நிலை: நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு மெய்யின்பம்  கிட்ட ஓர் உபாயம். இதை அடியேனைப் போன்ற பலர் அனுபவித்திருக்கலாம்.


காலை சுமார் 6 முதல் 7க்குள்ளும், மாலை 5:30 முதல் 7 வரையிலும் பெரிய கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் அமர்ந்திருக்கும்போது  நம் உடலில் படும் காற்றும்  காதில் விழும் மெல்லிசையான தேவாரமும், கோசாலை பசுக்களும் சப்தமும் நம்மை வேறு ஒரு உலகிற்கு  அழைத்த்துச் செல்லும். அந்த அனுபவம் பெற மேற்சொன்ன பாடலை சம்பந்தம் குருக்கள் குரலில் கேட்டு இன்புறலாம் 


YouTube Audio




குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...