Saturday, April 18, 2020

கொ.மு - கொ.பி - கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின்!


கொரோனா  பதிவுகள் 1, 2 க்குப் பிறகு இது மூன்றாம் பதிவு. முதல் இரண்டு பதிவுகள் பிரதமரின் முதலாம், இரண்டாம் ஊரடங்கு அறிவிக்கப்புகளை  சார்ந்தது. இப்போது மூன்றாம் பதிவு என்றதும், ஏதோ  மூன்றாவது  ஊரடங்கு அறிவிப்போ என்று கற்பனை செய்யவேண்டாம். 

(பதிவு 1: https://scribblingsofark.blogspot.com/2020/04/blog-post_8.html
பதிவு 2: https://scribblingsofark.blogspot.com/2020/04/blog-post_13.html)


வீட்டில் எல்லோரும் சேது சினிமாவில் வரும் விக்ரம் போல காலில் வளையம்-சங்கிலி, இடுப்பில் பச்சைக் கலர் தர்மாஸ்பத்திரி  நைட்டி, விட்டத்தைப் பார்க்கும் கண்கள், வாயில் "எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்" ரேஞ்சுக்கு  போய் விட்டார்கள்.


அளவுக்குகதிகமான   விடுமுறைகளால் நாட்டில் எல்லோரும் திகட்டி  திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள்.  சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பவனுக்கு  பாசுந்தியில்  முக்கிய மைசூர் பாகு கொடுப்பது  போல்.

பாதி தூக்கத்தில் எழுப்பினால் ....."என்னை மன்னிச்சுடுங்க, இனிமே நான் லீவு கேக்க மாட்டேன், லீவு கேக்குற யார் கூடயும்  சேரமாட்டேன்"  என்று பிதற்றுகிறார்கள்.  அமெரிக்கன் ஷிப்ட்ல  வேலைபார்க்கும்போது கூட இவ்வளவு ஜெட் லேக்  இருந்தது இல்லை. 

நன்றாகத்  தூங்கி,  காக்கை கரையும் நேரத்தில் எழுந்து, பல் தேய்த்து, காபி குடிக்கலாமென்று ஹாலுக்கு போனால் சுடச்சுட பஜ்ஜியும்,  குலோப் ஜாமூனையும்   பார்த்து மிரண்டு விட்டேன்....காலங்காத்தால இப்படி சாப்பிட நாம என்ன "ஹம்  ஆப் கே  ஹை கோன்" பேமிலியா என்று சொன்ன என்னைப்  பார்த்து வீட்டு நாய் கூட சிரித்தது.

 "ஐயா, காலை டிஃபன் , மதியம்  ஃபுல் மீல்ஸ் எல்லாம் ஒரு கட்டு கட்டீட்டு தூங்கப் போனது மறந்துடுச்சா" , என்று என் மனைவி சொன்னதும் தான் நினைவு வந்தது. காலை  நாலு மணிக்கு  பிரம்ம முஹூர்த்தத்திலேயே எழுந்து காபி டிஃபன்  சாப்பிட்டு, ஒரு கோழி தூக்கம் தூங்கி, பின் குளியல், ஒட்டடை அடிச்சு, வீடு பெருக்கி, குளிச்சு , பின் ஒரு அலிமிடேட்  மீல்ஸ் சாப்பிட்டு கும்பகர்ணப்  படலத்தை துவங்கி இருந்திருக்கிறேன்.  தினந்தினம் இரண்டு அல்லது மூன்று தடவை தூக்கம்....  நல்ல காலத்திலேயும்  தூங்கி, அகாலத்திலேயும்   தூங்கி, நாளும் தெரியல, கிழமையும் தெரியலை ! 

என்ன சோதனையப்பா!  அப்போ நான்  பஸ்ல போனது ...... கண்டக்டரோட ஐம்பது பைசா சில்லறை பாக்கிக்கு சண்டை போட்டது,....  லேட்டாப்  போய் மேனேஜர் கிட்ட திட்டு வாங்கியது எல்லாம் கனவா !


தேனாய்க் காதில் பாயும்  அந்த பஸ்சின்  வேய்ங்குழல்  ஹாரன், காய்கறிகடைக்காரியின்  கஸ்மாலம் என்ற தீந்தமிழ் சொல்லாண்மை, அகில் நறுமணமாக காற்றில் தவழும் டீசல் புகை, எல்லாம் மாயையா ! அந்த பாக்கியத்தைப் பெற இன்னும் பதினெட்டு நாட்கள் காத்திருக்க வேண்டுமா?  ஐயையோ  இதுக்கு நான் அடிமாடா கசாப்புக்கு கடையிலேயே இருந்திருக்கலாம் !

 கோயம்பேடு செல்லும் பல்லவன் பேருந்தில் கூட்டத்தில் நசுங்கி ஒரு அரை மணி பிரயாணம் செய்தால் மாதம் 10,000/- கொடுத்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததைவிட ஜம்மென்ற  பயிற்சியல்லவா !  பஸ்ஸில் நசுங்குவதைத் தவிர பஸ்ஸைப்  பிடிக்க ஓடுவதும் ஒரு நல்ல பயிற்சியாயிற்றே ! எல்லாம் அம்பேல். 

எண்பதுகளில் மதன் விகடனில் சொன்னது நினைவுக்கு வந்தது " நிழலின் அருமை வெயிலிலே, வெயிலின் அருமை புயலிலே". 

வாரம் ஒரு நாள் இரண்டு நாள் லீவென்றால் இனிமை, நாற்பது நாள் விடுமுறை கொடுமை,...... அதுவும் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது சினிமா பார்க்க இலவச பாஸ் கிடைத்து, தியேட்டரினுள்ளே போன பிறகு  அந்தப் படம் "உளியின் ஓசை"  என்ற காவியமாக அமைவது போல !.

" நிழலின் அருமை வெயிலிலே, வெயிலின் அருமை புயலிலே" என்று வெயிலுக்கு ஏங்கும்  நமக்கு அந்த வெயில் எப்படி இருக்கப்போகிறதோ .... அது தான் மே மூன்றாம் தேதிக்குப் பிறகு ...... 

அது தான்  இந்த கொரோனா  -3ம் பதிவு.

கொ.மு  - கொ.பி - அதாவது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின்!  மே மூன்றாம் தேதிக்குப் பிறகு இயல்பு (!?!!?!?) வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி !

கற்பனைதான் ! பார்ப்போமே !

மே இரண்டாம்  தேதி....  முதல் வேலைக்குப்  போக தயாராகும்  போது  இருப்பது போன்ற   படபடப்பு, எதிர்பார்ப்பு ..... இரவில் தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக  தூக்கம் எட்டிப் பார்த்தது. பாதித்தூக்கத்தில் உலுக்கிப்  போட்டு எழுந்தேன். அடுத்த நாள் காலை ஆபீஸ்  போகும் நினைப்பிலேயே தூங்கியதால் ஆபீஸ் போக தயாராவதை பற்றிய கனவு . 

40 நாட்கள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கியதால் நாம் இஸ்திரி போட்டு வைத்திருக்கும் பேண்ட் ஷர்ட்  நமக்கு சேருமா ? சேராதா ? என்ற நினைப்புதான் தூக்கம் கலைந்ததற்கு காரணம். அவசர அவசரமாக எழுந்து சுஷ்மிதா சென் போல கேட்வாக்க்கி (பூனைக்காலால்  நடந்து) ஹால் லைட்டைப் போட்டு உடுப்புகளை போட்டுப் பார்த்து கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது  என் அம்மா தூக்கம் கலைந்து என் நிலையைப் பார்த்து அதிர்ந்தாள்......

"என்னடா ஆச்சு உனக்கு ....அர்த்தராத்திரி ஒன்றரை மணிக்கு பேண்ட் சட்டை போட்டு டையெல்லாம் கட்டி .....காத்து கருப்பு அண்டியிடுச்சா ....இரு எதுக்கும் லைட் ஹவுஸ் சாமியார் கொடுத்த விபூதி பூசி விடுறேன்"

"பரவாயில்லம்மா.....விபூதியெல்லாம் வேண்டாம் " என்று அம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் பூனைக்கால் நடையாக என் அறைக்கு வந்து படுத்தேன். நல்ல வேளை  என் மனைவி தூங்கி கொண்டிருந்தாள். இல்லையென்றால் அவளிடம் வேறு வேப்பிலை, விபூதி, திருவடி தீக்ஷை, உபசாரம்  எல்லாம் வாங்கி கொள்ளவேண்டும்.

நினைத்த, எதிர்பார்த்த அந்த விடியலும் வந்தது. "முருகா ! எல்லாரையும் காப்பாத்துப்பா " என்ற பிரார்த்தனையுடன் கடவுளுக்கு அடுத்து நாம் அதிகமாக மரியாதை செலுத்தும் மொபைல் போனை தட்டி எழுப்பினேன். வைஃபை  ஆன் செய்ததும் வாட்ஸ்ப்பில் வந்த முதல் மெசேஜ் இடியாய் கபாலத்தில் நட்ட நடு சென்டரில்  இறங்கியது !

மெசேஜ் அலுவலகத்திலிருந்து...... 50% வேலையாட்கள் தான் ஒரு நேரத்தில் வேலை செய்யலாம் என்று அரசு விதித்திருப்பதால் உங்கள் முறை நாளை (4 மே  அன்று) ....

இன்றே முறைத்தேன் !


என்னடா இது  "ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரம்  விடாது"ங்கிறது மாதிரி ....ஆபீஸ் திறந்தாலும்  நமக்கு விடியலையே....ஐயோ இன்னொரு நாள் வீட்டிலேயா...அதே பஜ்ஜி சொஜ்ஜியா.... அதே வெண்டைக்காய் கறியா  .... அதே மூணு வேளை  தூக்கமா....நம்மால முடியாதுடா சாமி !


நான் போறேன் சாமிகிட்ட என்று விரக்தியில் சொன்னேன் ! .... தற்கொலையெல்லாம் இல்லை ....சாமிகிட்டேன்னு சொன்னது கோவில்ல இருக்கிற சாமிகிட்ட !


நம்ம வீட்டுக்குக்கிட்ட இருக்கிற ஸ்ரீநிவாசப்  பெருமாள் கோவிலுக்குப் போகலாம் என்று சுத்த பத்தமா கிளம்பினேன்

ரெண்டு கிலோமீட்டர் தூரம், நடந்து போனா இந்த வெயிலிலே  கொஞ்சம் சிரமம், பஸ்ல போயிட்டு வந்துடலாம் ....

பஸ்  ஸ்டாப்பில் சுமார் கூட்டம். பஸ்ஸும் வந்தது ....வழக்கம் போலவே ஸ்டாப்பை விட்டு 200 மீட்டர் தள்ளி நின்றது.  நின்று கொண்டிருந்த 20 பயணிகளும் பஸ்ஸைப் பிடிக்க ஓடினோம்.   ஓடிய எனக்கு லத்தியால் ஒரு செல்லத்  தட்டு கிடைத்தது, போலீசிடமிருந்து ....."ஏனப்பா அடிக்கிறாய்" என்று ஓடிக் கொண்டே கேட்டேன்... "எல்லாம் ஆட்டு மந்தைமாதிரி ஓடக்கூடாது....உன் முன்னால் ஓடும் ஆளிடமிருந்து 3.33 அடி  இடைவெளி விட்டு ஓடவேண்டும்....சரியா !"

"மீண்டும் இடைவெளி தொந்தரவா ......" தப்பித்து ஓடி பஸ்  அருகில் போன எனக்கு இன்னொரு ஷாக் ....  கண்டக்டர் கதவை மூடிக் கொண்டு எங்களுக்கெல்லாம் பிரம்மோபதேசம் ! " இங்க  பாருங்கப்பா ! முன்ன மாதிரி இல்லை.... இருக்கிற 20 வரிசைல  லெஃப்ட் சைட் ஒருத்தர், ரைட் சைட் ஒருத்தர் ஆக மொத்தம்  . வண்டியிலேயே 40 பேர் தான் ஏறலாம். 30 பேர் ஏற்கனவே உள்ளே !  கொஞ்ச சீட்  தான் காலியா இருக்கு, பத்தே பேர் தான் உள்ளே வரலாம்" என்று தீபாவளி ஸ்பெஷல் பஸ்  மாதிரி கெடுபிடித்தார் !

ஒரு வழியாக  பஸ்  ஏறினேன். கண்டக்டர்  ஆபரேஷன் பண்ணப் போகும் டாக்டர் போல க்ளவுஸ்அணிந்து , முகம் மூடி, விசிலை மாஸ்க்  உள்ளே ஒளித்து  விசிலடித்தார்....

நாங்கள் கொடுக்கும் பணத்தை தீண்டத்தகாத பொருள் போல் அருவருப்பாகப்  பார்த்து வாங்கிக் கொண்டார். அவ்வப்பொழுது சானிடைசர் தடவிக்கொண்டார்.

"ஊரே இத்தினி கெடுபிடியா இருக்கு....சரியான சில்லறை குடுக்கத்  தாவலை !  சரி சரி எறங்குறப்ப கேளு பாக்கி தரேன் " என்று மாமூல் டயலாக் விட்டார் ..... ஆனா ஒண்ணு ....கொரோனா வந்தாலும் சரி ஆண்டவனே  வந்தாலும் சரி, சென்னை பஸ்ல பாக்கி சில்லறை மட்டும் வாங்கவே முடியாது !

 பெருமாள் கோவிலுக்குப் போகிறோமே நெற்றியில் திருமண்  இல்லையே என்ற குறை தீர பாக்கி பணத்திற்கு கண்டக்ட்ர்  பட்டையாக நாமம் போட்டார்!  ("நான் என்னை வச்சுக்கிட்டா இல்லங்குறேன்" ....கேட்டிருந்தால் இந்த பதில் மட்டுமே கிடைத்திருக்கும் ! )


கோவில் வாசல் வந்ததும் எல்லா சிந்தனையும் காற்றில் பறந்தன !. இறைவனுக்குகாக விரதம் தான் ஒரு மண்டலம் இருப்போம்....  இறைவனைப்  பார்க்க  நோன்பு 48 நாள், அதாவது ஒரு மண்டலம் இருப்போம் ..... இந்த முறை "பாரா நோன்பே" ஒரு மண்டலம் ஆகிவிட்டது !


செருப்பைக் கழற்றி அக்கம் பக்கம் பார்த்து மற்றவர்கள் கழற்றிய ஜோடிக்கு 3.33 அடி  இடை வெளி விட்டு தள்ளி வைத்து விட்டேன். யாருக்குத் தெரியும் லத்திக் கம்பு எப்பொழுது சுற்றப்படும் என்று ...... (ஒரு அடி   விழுந்தால் ...மாமா ..... என்றும் உன் ஞாபகம்)


கோவிலுக்கு முன் 10 பேர் கொண்ட சிறு வரிசை.  திங்கள் கிழமை காலை என்ன கூட்டம் ..... ஒரு வேளை  நம்மைப் போல 50%  இடஒதுக்கீடு பிரச்சினை  கேஸ்களோ என்னவோ....


மெதுவாக நகர்ந்து முன்னால் போனால் இன்னொரு ஷாக்.... சஹஸ்ரநாமம் அணிந்த ஒரு மாமா தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  என்னடா இது, பெருமாள் சந்நிதியிலே  தானே தீர்த்தம் கொடுப்பாங்க ....இங்க என்னடான்னா  வாசலிலேயே கொடுக்குறாங்க..... ரொம்ப நாள் கழிச்சு கோவில் திறக்கிறதுனால "பை   ஒன் டேக் ஒன்  ஃப்ரீன்னு  " ஏதாவது ஸ்பெஷலா ? 

தீர்த்தம் வாங்கியதும் தான் தெரிந்தது அது அருந்தும் தீர்த்தமல்ல....கையில் தடவும் தீர்த்தம் .... ஆயுர்வேத முறைப்படி தயாரானதாம்..... ஈயம் தடவிய பித்தளை பாத்திரத்திலிருந்து கொடுத்தததால் நான் கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்....


அடுத்து இன்னொரு சிறு வரிசை. இரண்டு கொத்து வேப்பிலையை மஞ்சளில் முக்கி எல்லோரிடமும் கொடுத்திட்டார்கள். திடீரென்று சந்தேகம் இது பெருமாள் கோவிலா அல்லது பெருமாளின் சகோதரி மாரியம்மன் கோவிலா? இன்னும் தீச்சட்டி, கூழ்  எல்லாம் உண்டா என்று சுற்று  முற்றிலும் பார்த்தேன் ....பெருமாள் கோவில்தான் ....

ஓ  இதெல்லாம் கொரோனா தடுப்பு நடவடிக்கையா ? 


பெருமாளை உளமார வணங்கி இவ்வுலகின் நோய்க்  கொடுமை விலகவேண்டும்  என வேண்டி தாயார் சந்நிதி நோக்கி நடந்தேன். ஆச்சரியம் ...சந்நிதி மூடியிருந்தது. என்னப்பா  என்று விசாரித்தால், ஞாயிறு தாயார் சந்நிதி திறந்திருக்கும், ஆண்டாள் சந்நிதி மூடியிருக்கும், திங்கள் அன்று தாயார் சந்நிதி மூடியிருக்கும் ஆண்டாள் சந்நிதி திறந்திருக்கும்....

அர்ச்சகரைப்  பார்த்து கேட்டேன் .."சாமி.... நீங்க முன்னே தில்லில இருந்தீர்களா "

"ஆமாம் எப்படி சரியா கண்டுபிடிச்சிட்டேளே"

"கெஜ்ர்லிவாலோட  ஆட் , ஈவன் கார் ரூல் மாதிரி இருக்கேன்னு கேட்டேன் "  "ஆனா இது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா ?"

"அரசின் 144  விதி ஒண்ணுதான்   நாங்க கட்டுப்படுற ஒரே விதி, ஆகமாவது ஆவக்காயாவது   " என்றார் அர்ச்சகர்

 வேறு ஏதாவது விதி காரணமாக  ஆண்டாள் சந்நிதியை மூடும் முன்னால் நிலமகளை   தரிசித்துவிட்டு பிரசாதம் வாங்க வெளியே வந்தேன். பிரசாத கவுண்டரில் கரண்டியும் பொங்கலுமாக  ஒருவர் இருப்பார் என்று எதிர்பார்த்த என் கண்களுக்கு லேப் டாப் சகிதமாக அடுத்த தலைமுறை அர்ச்சகர் இருந்தார்.

"அண்ணா ! கொரோனா வந்ததுக்கு அப்புறம் பிரசாதம்  கட் ... ஒங்க ஈமெயிலோ, வாட்ஸப்  நம்பரோ கொடுத்தா E-பிரசாதம் அனுப்புவோம்! உண்டியல் கூட மூடிட்டோம் . பணம் கொடுக்கறதா இருந்தா "பே-டீ-எம்" அல்லது 'கூகுள் பே ' மூலமா அனுப்பலாம்" என்று  நம்மை 22ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்றார் !

எல்லாம் கலி  காலம் என்று கடிந்து கொண்டு அடுத்த நாள் ஆபீஸ் போவதற்கான சிந்தனையில் வீடு திரும்பினேன்.


50% ரிசர்வேஷன் ஸ்கீமில்  ஆபீஸ்  செல்லும் முறை அடுத்த நாள் செவ்வாய் அன்று கிடைத்தது.


அலுவலகத்தில் பழைஐஐஐஐஐய நண்பர்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. கட்டித்  தழுவப் போனால் கொரோனா தடுத்தது.  கருப்பு வெள்ளை கால "ஞான ஒளி"   திரைப்படத்தில்  (அருள்  என்ற போலி பெயரில் நடமாடும் ஆண்டனி தன்  மகள்  மேரியை பலவருட காலம் கழித்து சந்திக்கும் போது  தன் எதிரில் இன்ஸ்பெக்ட்டர் மேஜர் சுந்தரராஜன் இருப்பதால் தான் யார் என்று காட்டிக் கொள்ளமுடியாத)  சிவாஜி காட்டிய நவரசத்தையும் என் முகத்தில் காட்டினேன்.  கை  குலுக்கவும் முடியாது, கட்டித்தழுவவும் முடியாது. 

ரமேஷுக்கு கை  கொடுக்க முடியாவிட்டால் கூட அவ்வளவு வருத்தம் இருக்காது... பக்கத்து சீட் பாமா, எதிர்  சீட் லீமா .....  இதுதான் கரோனா வின் உச்ச கட்ட சோதனையாகத் தோன்றியது.

நேற்று வரை சல்யூட் அடித்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி  இன்று நம்மை புழு போல பார்த்தான் .  திருமண வரவேற்புக்கு நுழையும்  போது  சந்தனம்  பன்னீர், கல்கண்டு, ரோஜா போன்ற பொருட்களுடன் ட்ரே  வைக்கப்பட்டிருக்கும். நம் மேல்  பன்னீர் சொம்பால் நீர் தெளித்து வரவேற்பார்கள். 

இங்கு அது போல் தட்டில் முகத்திரக்கான திரை (மாஸ்க்), சானிடைசர், வைக்கப்பட்டிருந்தது...  பன்னீருக்குப் பதில் சோடியம் ஹைப்போ க்ளோரைட் தெளிப்பு !  அரசாங்கத்திலும்    பன்னீரை  ஓரம் காட்டீட்டாங்க.... இங்கேயுமா   !


தீபாவளி அன்று புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்க கவுண்டரில் நிற்கும் மக்கள் தோள்  மீதெல்லாம் ஏறி திட்டையும் வாங்கி டிக்கெட்டையும்  வாங்கி, வேர்க்க விறுவிறுக்க தியேட்டர்  உள்ளே  நுழையும் போது  இருக்கும் பெருமிதம் எனது சீட்டின் பக்கத்தில் போகும் போது  இருந்தது.


கன்று தனது அன்னையிடம் பாலருந்த ஆசையுடன் போகும் போது  கயிற்றைப் பிடித்து இழுத்து எதிரில் இருக்கும் மரத்தில் காட்டும் கோனார் போல, "எச்.ஆர்"  டிபார்ட்மென்ட் பெண்மணி என்னையும் என்னைப் போன்ற மற்ற கன்னுக்குட்டிகளையும், தரதரவென கான்பரன்ஸ்  ரூமுக்கு  இழுத்துக்கு கொண்டு போனார் !

அடுத்த அரை மணி நேரத்திற்கு உபதேசம் பிரதமர் மோதியின் உபதேசத்தை மிஞ்சியது !

" இங்க பாருங்க,  நாம ஒரு முக்கியமான கால கட்டத்திலே இருக்கோம். கரோனாவால  உலகமே தலைகீழா மாறிடுச்சு.  பல கட்டுப்பாடுகள். பல கெடுபிடிகள்.... ஒரு  சிலவற்றைச் சொல்றேன்"

1500 பேர் வேலை செய்யுற நம்ம ஆபீஸ் ஒரு ஷிப்ட்ல  750  பேர்தான் இனிமே !

அதுனால முன்னே செஞ்ச அதே வேலையை பாதி பேர் வச்சு முடிச்சாகணும் . அதுனால இன்னும் சில மாதத்திற்கு நீங்க  ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்யணும்.  பாக்கி எட்டு மணி நேரம் நல்லா  ரெஸ்ட் எடுங்க...என்ஜாய் பண்ணுங்க !.  அடுத்த நாள் வேலைக்கு வரவேண்டாம். 

அந்த 16 மணி நேரம் வீட்டிலேயே வேலை செஞ்சு ரிலாக்ஸ் பண்ணலாம்.  ரெண்டு நாளைக்கு ஒரு நாள் தான் ஆபீஸ் என்கிறதுனால சனிக்கிழமை லீவு கிடையாது. ஞாயிறு அவசியம் இருந்தால் மட்டும் வேலை செஞ்சாப் போதும். 

நம்ம கஸ்டமர் உலக அளவுல பெரிய அமெரிக்க கம்பேனி, கரோனா பாதிக்கப் பட்ட எந்த ஊழியரும் அவங்களுக்கு ஈமெயில் கூட அனுப்பக்  கூடாதுங்கிற லெவல்ல  கண்டிப்பு. அதனால 24 மணி  நேரமும் மோஷன் சென்சார்  கேமெரா எல்லாரையும் பார்த்துகிட்டு இருக்கும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கையை முகத்துக்கிட்ட எடுத்துக்கிட்டு போகக்கூடாது !  அப்படியும் முகத்தில அரிப்பா இருந்தால், பாத்ரூம் போய்  சொறிஞ்சிட்டு வாங்க.

அடுத்தடுத்து இருந்த உங்க சீட்டெல்லாம் தள்ளித் தள்ளி போட்டிருக்கோம். அதுக்கும் மேல உங்களுக்கு வலது  மற்றும் இடது பக்கம் இருக்கும்  சீட்கள் காலியா இருக்கும்.


எக்காரணத்தைக் கொண்டும் டிஸ்கஷன்ங்கிற பேர்ல யாரும் பக்கத்து பக்கத்து சீட்ல ஒக்காரக்  கூடாது".  அதுக்கும் மேலே பேசணும்னா, அமெரிக்கன் எம்பஸி விசா கவுண்டர் மாதிரி கண்ணாடி தடுப்புக்கு இந்தப்புறம் ஒருத்தர் அந்தப்புறம் ஒருத்தர் நின்று பேசலாம்.


"கை  குலுக்குவது, ஹை-ஃபை , ஹக்  இதெல்லாம் செய்தால் ஒரு வாரம் க்வாரன்டைன்  செய்யப்படுவீர்கள் (ஆபீசில்)"


இது போல  பலப்பல புதுப்புது உபதேசங்களாக அடுக்கிக் கொண்டே போனார். தலை சுற்றியது. எதுவும் காதிலேயே நுழையவில்லை


இதெல்லாம் சொல்லி முடித்தபிறகு 'மதுரைக் குசும்பன் ஒருவன்' எழுந்து "இதையெல்லாம் கணக்குக்  காட்டி காண்டிராக்ட்  விலையை ஏற்றியிருப்பீர்களே! எங்களுக்கெல்லாம் என்ன கிடைக்கும் "

"யூ  ஸீ .... நம்ம நிறுவனம் உங்களைப்  போன்றவர்களின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள். இல்லையென்றால் 'பீ.சீ.எஸ்",  'டைம்பாஸிஸ்' நிறுவனங்களை போல யாரையும் வேலையை விட்டு எடுக்காது.  என்ன இந்த வருஷம் யாருக்கும் இன்க்ரிமெண்ட் மட்டும்  கிடையாது.

( இதைக் கேட்ட  பிறகும்  யாரும் வாய் திறப்பார்களா என்ன!)

எல்லாம் நல்ல படியாகப் போனால் இந்த காண்டிராக்ட்டில் வரும் அதிக வருமானத்தால் இலவச ஷேர்கள்  வழங்கப்படும் . 2048ம் ஆண்டு வரை வேலையில் இருக்கும் எல்லோரும் அந்த பயனை அடையலாம்" வெறும் 28 வருஷம் வெயிட் பண்ணினா போதும் !


மீட்டிங் முடிந்து அவரவர் சீட் வந்து உட்க்கார்ந்தோம்.  கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு அது தயாராகும் நேரத்தில் மனதில் தோன்றியது "இதற்குத்தானே  ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


எல்லாத்துக்கும் காரணம் இந்த சைனாக்காரன், அவன் ஏதோ பல்லி , பூரான், பாம்பு, பெருச்சாளின்னு தின்னு ஒழிக்கட்டும். இலவச இணைப்பா  இந்த கொரோனாவைக் கொடுத்து எல்லோரையும் உயிரை வாங்குறான் !  

அதற்கு மேல் உதித்த வார்த்தைகள் பிரசுரிக்க தகுதியற்றவை !


அக்கம் பக்கம் திரும்பாமல், மண்-கூடு கட்டிய கன்னுக்குட்டி போல் மாஸ்க் கட்டி, யாரிடமும் பேசாமல், உதட்டசைவு தெரியாததால் அவர்கள் பேசுவதும் சரியாகப் புரியாமல், இயந்திரமாக அடுத்த ஒரு  மணி நேரம்  இயங்கி....ஒரு காஃபி பிரேக் இருந்தால் நல்லது என்று ரமேஷுக்கு ஒரு sms  அனுப்பி கஞ்சா கடத்துபவன் போல, யாரும் பக்கத்தில் வராத படி பதுங்கி கேண்டீன் போனால்.....

 20 டேபிள் இருக்கும் இடத்தில் 10 டேபிள் தான், ஒவ்வொரு டேபிளுக்கும் 8 நாற்காலிக்குப் பதிலா 4 ....


வெறுத்துப் போய் காண்டீன் மேனஜரிடம் புலம்பினால் அவர் அதற்கு மேல் பொரிந்து தள்ளினார். "அநியாயம் சார், மனுஷனுக்கு சரி, இட்லிக்கு கூடவா "சமூக இடைவெளி" இங்கே பாருங்க ! ஒரு ஈடுல ஏழு  இட்லி இருக்க வேண்டிய இடத்தில் நாலு இட்லிதான். ஒரு பள்ளம் விட்டு ஒரு பள்ளம் தான் மாவு ஊத்தியிருக்கேன் ! ஆனாலும் நம்ம ஆபீஸ்ல கெடுபிடி கொஞ்சம் ஓவர்  !"


எதையும் சாப்பிட மனசே இல்லை ! ரமேஷ் கேட்டான் 
"மாப்பிள்ளை ....ஒரு போண்டா ? "

"வேண்டாம் ! "

"சரி பின்னே ஒரு  காஃபி ?"

"வேண்டாம் ! "

"ஹார்லிக்ஸ் ?"


"வேண்டாம் ! "


" பின்ன ஒரு சைனா-டீ ?"


"💥💪💨💪😡😈💥"
























Monday, April 13, 2020

கொரோனா கொசுக்கடியால் பரவுமா !

"கொரோனா கொசுக்கடியால் பரவுமா"  அல்லது "ஈமெயிலால்  கொரோனா தாக்குமா" என்று இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன்.  மூன்று  மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க எழுதி ஒரு பதிவு போட்டா, எழுதினவனத் தவிர யாரும் படிக்கிறதில்லை. பத்திக்கிற மாதிரி ஒரு தலைப்பு கொடுத்தா, விழுந்தது விழுந்து படிக்கிறாங்க. ஆனால் கமெண்ட்ஸ்ல துப்பிட்டு போயிடுவாங்க (அதுக்குத்தான் யுடியூப்ல பலர் கமெண்ட்ஸை டிசேபிள்  செய்ராங்ககளா ?)  ஐயையோ  துப்புவது என்பதை அரசு தடை செய்திருக்கிறதே... அதைப்  பத்தி பேசலாமா? கூடாதா? ....நாம பேசுவோமே !. 


இந்த சீசன் ஸீக்வல்  சீசன் .... நாட்டுல சினிமாப்  படத்துக்கு ஒரு காலத்திலே  கதை பஞ்சம் . மற்ற மொழிக் கதையை திருடினாங்க ...அப்புறம் பழைய கால திரைப்படப் படப் பெயரைத்  திருடினாங்க/ உபயோகிச்சாங்க. பின்னர் அதுவும் போரடிச்சுப் போய் அவங்க படப்  பெயரையே (ஒளவையார் மாதிரி)  ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி  நம்மையும்  படுத்தினார்கள்.  ஹிந்திப்படமான ஹவுஸ்புல் ஐந்து குட்டி போட்டுவிட்டதாம்  (ஆமாம் பெயர்தான் ஆங்கிலம், திரைப்படம்  ஹிந்தி) .... எதற்கும் நடுவில்  சம்மாந்தாசம்பந்தம்  ஹிந்தி ஒழிக  என்று ஒரு முறை கூவிவைப்போம், இல்லையென்றால் நம்மை மறத்தமிழன் என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 


எல்லாப்படங்களுக்கும் சீக்வல் வந்துவிட்டது நாமும் நம் கொரோனா பதிவிற்கு சீக்வல் ஒன்று  போடலாம். (அப்படியாவது நமது முந்தைய பதிவைப்  படிப்பார்கள் என்ற நப்பாசைதான்). சமூக வலைகளில் வரும் பதிவுகளுக்கு சாகித் அகாதமியில் தனிப் பரிசு ஒன்று நிறுவும் போது உபயோகமாக இருக்கும். 

எப்படியும் கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 (அதுக்கும் சீக்வலா? )  முடியும் போது  முகசவரம்  செய்யாமல் தாடி கால் கிலோ மீட்டர்  வளர்ந்திருக்கும் .... காய்கறி வாங்க எடுத்துச் செல்லும்  ஜோல்னாப்  பை  வேறு  நமக்கு  ஒரு அறிவாளி தோற்றத்தைக் கொடுக்கும்.   பேரையும்   கொரோனாதாசன் அல்லது கிருமிநாசன் என்று  தாறுமாறாக தமிழ்ப்படுத்தி விட்டால் சாகித்ய அகாதமி விருது நமக்குத்தான் ! ஜனாதிபதியிடம் இருந்து விருது பெரும் கண்கொள்ளாக் காட்சி ....ம்  ம்  

சரி கற்பனை உலகை விட்டு பூவுலகுக்கு வருவோம் .....

கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த முதல் பாடம் "துப்பு" . துப்பு என்றால் உமிழ்வது என்பது மாத்திரமே பலருக்குத்   தெரிகிறது. ஆனால் துப்பு என்பதற்கு (ஒன்றல்ல, இரண்டல்ல) 29 பொருட்களை தமிழ் நமக்கு அளிக்கிறது. வள்ளுவரின் ஓர் குறள் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

மழையின்  சிறப்பைப் பற்றி கூறும் போது  வள்ளுவர் "துப்பு" என்ற அருமையான வார்த்தையின்  பல பொருட்களை  ஒன்றாகக் கோர்த்து  சொல்மாலையாக அருளியிருக்கிறார் .  

("துப்பு" என்ற வார்த்தையின் பொருள்: ஒரு சில......  விக்கிப்பீடியாவிலிருந்து.... 

உளவடையாளம், உணவு, நெய், சத்து, வலிவு, சாமர்த்தியம், செம்மை
உதவி, சகாயம், வலிமை, அறிவு,திறமை,ஆராயச்சி, முயற்சி,பெருமை, துணை, ஊக்கம்,பொலிவு,நன்மை,பற்றுக்கோடு,தன்மை, தூய்மை,உளவு, பகை, பவளம், அரக்கு,சிவப்பு,நுகர்ச்சி,நுகர்பொருள். உணவு,துரு,உமிழ்நீர்,நெய், ஆயுதப்பொது)


28 நல்ல பொருட்களையும் விடுத்து நம்மில் பலர் சிரமேற்கொள்ளும் ஒரே பொருள் துப்புவது (உமிழ்வது). நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் "துப்பி துப்பிய நம்ம நாட்டை ஒரு வியாதி நாடாக மாற்றிவிட்டீர்கள்" என்று சொன்னது இன்று உறுத்துகிறது! 

"து" என்ற ஒரே   வார்த்தையை வைத்து அருணகிரிநாதர்  வில்லிபுத்தூர் ஆழ்வாரை வென்றார்  என்று வரலாறு கூறுகிறது. அவரது பாடல் (பொருள் வலைத்  தளத்தில் எளிதில் கிடைக்கிறது) 

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே 


"து" என்ற வார்த்தையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த ஆயிரம் வழிகளிருக்கும்போது நாம் ஏன் அழிவுக்குப் பயன்படுத்த வேண்டும்.  


தமிழ் நாட்டில் ஓரளவு பரவாயில்லை. வட, கிழக்கு   மாநிலங்களில் , உமிழ்வது மிக மிக அதிகம்.  கொரோனா அச்சத்தால், ஓரளவு குறையலாம், அரசு கடுமையான நடவடிக்கையெடுத்தால் !  


கொரோனாவால் இந்தியாவின் சுகாதாரம் மேம்படுமென நம்பலாம். ஸ்வச்பாரத் என்ற முனைப்பாட்டால்,   மேலைநாட்டிற்கொப்பான அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவு தூய்மை ஆகியிருக்கிறது என்று "தமிழ் கூறும் நல்லுலகு தவிர்த்து" மற்ற உலகங்கள் ஒத்துக்  கொள்கின்றன.  கொரோனாவால் ஏற்பட்ட விழிப்புணர்வோ (அல்லது "பீதியோ")  தூய்மையை சிறிது மேம்படுத்தும்.  


நான் வசிக்கும்  கிராமத்தில் இருக்கும்  படிப்பறிவில்லாத குடும்பங்கள் கூட கொரோனா அறிவிப்பு வந்ததும் வாங்கிய முதல் பொருள் "கைகழுவும் டெட்டோல் சோப் ".  அவர்களது குடும்பத்தின் அடுத்த தலைமுறை சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என நம்பலாம்.  


பிரபலமில்லாத ஆலய தரிசனங்களுக்காக நான் பல சிற்றூர்கள், குக்கிராமங்கள் தேடிப்  போன போது, பல கிராமங்களில் கண்ட அறிவிப்புப் பலகை சற்று பெருமைப்பட வைத்தது .... "  திறந்த வெளி மலஜலம் தவிர்த்த   கிராமம்" . ஆங்காங்கே ஓரிரு தவறுகள் நடந்தால் கூட,  இயற்கையின் அழைப்பின் போது என்ன செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது !


மேலை நாடுகளை பார்க்கும்போது இந்தியா பரவாயில்லை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கட்டுக்குள் இருக்கிறதா அல்லது கட்டுக்குள்  வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். 

ஏகப்பட்ட   கெடுபிடிகள் ,கட்டுப்பாடுகள்,  போலீஸ் தரும் "பின்" விளைவுகள் போன்ற எதற்கும் பலர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவசியமான பிரயாணங்கள் தவிர இளைஞர்களின்  மாப்பிள்ளை "ஊர்வலம்" சற்று கவலை அளிக்கிறது .... "மாமியார்" வீட்டில்  வைத்து "மாமா" வால் கவனிக்கப்பட்டால் தான் சரியாகுமோ  !


கொரோனாவால் பல இடையூறுகள், பணநஷ்டம், பணக்கஷ்டம் (குறிப்பாக தினக்கூலி வேலை பார்ப்பவர்கள், புலம்பெயர்ந்து வேலை செய்யும் காண்டிராக்ட் தொழிலாளர்கள், மூன்றால் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்). அதையும் மீறி சில நன்மைகள், நடந்தவை, நடக்க இருப்பவை .....  கீழே வரிசைப்படுத்தப்பட்டவை எவர் மனதையும் புண்படுத்த அல்ல .  எது நன்மை எது நன்மையல்லாதது என்று நான் சொல்ல   மாட்டேன் !


  • மிக மிக அத்தியாவசிய தேவை தவிர யாரும் மருத்துவனை செல்வதில்லை .  இதிலிருந்து தெரிவது நாம் மருத்துவனை செல்லும் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்கக் கூடியவையே 

  • வாரத்தில் இரண்டு மூன்று  நாட்கள்  குடும்பத்துடன் செல்லும்  சங்கீதா, தலப்பாக்கட்டி போன்ற உணவகங்கள் செல்லாமல் இருந்தால் உயிர் போய் விடாது (சரவண பவன் சில வருடங்களாகவே க்வாரன்டைன்)  . 

  • பியூட்டி பார்லர்  போகாத முகங்கள் முன்னிருந்தது போல் தான் இருக்கின்றன. அதாவது...முன்பு இருந்தது போலவே அசிங்கமாக இருக்கின்றன ! (  சட்டியில் இருந்தால் தானே  அகப்பையில் வரும்) . 

    • என் பதிவை பெண்களும் படிக்கலாமென்பதால் அவர்களை மகிழ்ச்சிப் படுத்த இதையும் சொல்லிவிடுகிறேன் .....  ஆண்கள் சவரம், ஹேர்கட் செய்யாததினால் குடும்ப வருமானம்  அதிகரிக்கும், முக்கியமாக பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது...... .     
    •    ஒரு கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் கலெக்ஷன் இன்னும் அமோகப்படும்  !

  • நம்முள் இருக்கும் இறைவனை நாடாமல், கோவிலில் இருக்கும் இறைவனை மட்டுமே துதிப்பதா  என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கடந்த 21 நாட்களாக கோவில் பக்கம்  தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்று இறைவன் நம்மை சபிக்கவோ தண்டிக்கவோ இல்லை. கோவிலுக்குப்  போவதால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பு மாறி "இறைவனை நினை.... அதற்கும் மேலே  அவன் மெச்சும்  படி நல்லவனாக இரு, நல்ல செயல்களைச் செய்" என்ற சிந்தனை உயர்வு   ! (கடந்த 21 நாட்களில் குட்  ஃப்ரைடே, ஈஸ்ட்டர் சண்டே, உகாதி, குடி படுவா போன்ற நிகழ்வுகள்  அவரவர்கள் வீட்டிலிருந்தோ, இண்டர்நெட் மூலமாகவே  இனிது நடந்தேறின )

  • என் மச்சான் முக நூலில் கூறியது போல, கொரோனாவால் மாசு குறைந்திருப்பதால்  சென்னையிலிருந்து மகாபலிபுரம், ஜலந்தர் தெரிவது மட்டுமல்ல,  அவரவர்  பக்கத்து வீட்டுக்காரர்   தெளிவாகத் தெரிகிறார் !  (இது வரை காணாத பக்கத்து வீட்டுக்காரர்)

  • திருமணங்கள் வருங்காலத்தில் (குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்கு) மிகவும் சிறு அளவிலேயே நடத்தப்படும்.  

  • கைகுலுக்குவது, கட்டித்தழுவுவது போன்ற மேலை நாட்டுப் பழக்கங்கள் தவிர்க்கப்படாவிட்டாலும் குறைக்கப்படும். 

  • அசைவ உணவு குறையலாம் . அய்யமாருங்கல்லாம் மீன் சாப்பிடறதுனால மீன், கறி  விலை ஏறிடுச்சு என்ற வசனம் குறையலாம். 

  • காய்கறி விலை ஏ(எகி)றும். 

  • வீட்டுக்கு வருபவர்கள் முக சலிப்புடன் வரவேற்கப்படலாம்.

  • முதலில் சோப் போட்டு காய் கழுவினால்தான்  குடிக்க தண்ணீர் என்பது எழுதப்படாத விதியாகலாம் 

  • இரு குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி  என்ற பழமொழி போய் இரு மனிதர்களுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை என்ற வாசகம் பஸ், கழிப்பிடம் போன்ற இடங்களில் எழுதப்படும் 

  • மாதாந்திர  மளிகை கடை லிஸ்டில் புது மாப்பிள்ளையாக சானிடைசர், டெட்டோல் இடம்பிடடிக்கும் 

  • கை  கழுவ  சானிடைசர் என்றது   போய் "காய்" கழுவ சானிடைசர் வாங்கலாமா என மனம் அலைபாயும் 

  • அலுவலக வீடியோ கான்பரன்ஸ்  முடிந்த பின்புகூட கைகழுவதோன்றும் . 
  • சானிடைசர் நிஜமாகவே சானிடைசர் தான எனவும் சந்தேகம் வரும் 

  • பக்கத்தில் இருப்பவர் இருமினால், இந்த ஆள் இருமல் வந்தால் மனதுக்குள் இருமக்கூடாதா  எதுக்கு சத்தமா இருமுகிறார் என்று நம் மனம் சலித்துக் கொள்ளும் 

  • "அழும்  பிள்ளைக்குத் தான்  பால் கிடைக்கும்" என்ற பழமொழி போய்  "இருமும் ஆளுக்குத்தான் லீவு கிடைக்கும்" என்ற புதுமொழி அரங்கேறும் 

  • கார், பைக்கில் யாருக்கும் லிஃப்ட்  கொடுக்க முன்  தயங்குவோம் 

ஓரிரு திருமணங்கள், முன்பு நிச்சயிக்கப்பட்ட தேதியில் குறைந்த அளவு உறவினர்கள் முன்னிலையில் நடந்தேறி இருக்கிறது.  மகிழ்ச்சி. ஆரவாரம், ஆடம்பரம் என்ற பெயரில் நடக்கும் பல அனாவசிய செலவுகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன ! வட்டம், மாவட்டம் போன்றவர்களின் பிறந்த நாள் விழாக்கள் இல்லாததால் காது  ஜவ்வு சற்று ஓய்வெடுக்கிறது.

அரசியல்வாதிகளின் பிறந்த நாளை  ஒட்டி ஒரு சந்தேகம்......

தமிழ், தமில் , தமிள்  என்று தமிழை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுள்  எவரேனும்  ஒருவர், ஒருவர், ஒரே ஒருவர், தனது பிறந்த நாளை (ஆங்கில கணக்குப்படி ஆகஸ்ட் 12 என்று இல்லாமல்) தமிழ் காலண்டர்படி  ....சித்திரை 3, ஆடி 32அன்று கொண்டாடினார் என்று சரித்திரம், பூகோளம் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும் ! 


கடந்த 21 நாட்கள் (வரக்கூடிய  15 + நாட்கள்) வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்ததால்  சட்டை பித்தான் எப்படிப் போடுவது, சாக்ஸ் எப்படி மாட்டுவது போன்ற ஆயக்கலைகள் மறந்து போயிருக்கின்றன. யூடியூப் உதவியின்றி இவையெல்லாம் நம்மால்  செய்யமுடியுமா என்று   தெரிய வில்லை எப்படியிருந்தாலும்  அலுவலகத்திற்கான வழி  கூகுள் மேப் உதவியுடன்தான்!  


கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 முடிந்து  அலுவலகம்  செல்வதற்கு முன் சக ஊழியர்களின்  புகைப்படத்தை முகநூலில் ஒரு முறை பார்த்துவிட்டுப் போகவேண்டும்.  ஜாடை மாறியிருக்கக் கூடும் ! 

இந்திய  சரித்திரத்தில் நாடு முழுக்க அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை.  இன்று வரை 21 நாட்கள்..... வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கோ என்று  தெரியாது........ இந்தத் தகவலில் இருந்து இந்நோயின் வில்லத்தனம், வீரியம் புரிந்திருக்கும்.  அடக்கி, அடங்கி வாசிப்பது நமக்கும் நல்லது, நம் நாட்டிற்கும் நல்லது  

கொரோனா போன்ற  பல தடைகளைத் தாண்டியே  இவ்வுலகம் வந்துள்ளது.... பரிணாமித்துள்ளது, இன்னும்  இவ்வுலகம் வளரும் என்ற நம்பிக்கையில் நம்மை நாமே காத்துக் கொள்வோம் . மருத்துவ வல்லுநர்கள், அரசாங்கம் சொல்படி   நடப்போம்.  (தேவைப்பட்டால் மட்டும்) வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்வோம் !


நாளை  தமிழ்ப் புத்தாண்டு. அனைவருக்கும் இந்த சார்வரி ஆண்டு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் தரட்டும் என என்னுள், உங்களுள் "24 X 7 X  365" கோவில் கொண்டுள்ள இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் !








Wednesday, April 8, 2020

கொரோனா மாமா




எல்லா சமூகத்தினரும்  இயல்பாக வாழக்கூடிய சுந்தரப்பட்டியில் எல்லோரும் நடுங்கி அவரவர் வீட்டு திண்ணையைக் காலி செய்து உள்ளே ஓடினர் .

"வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு போயி பாஞ்சு (பதினைந்து) நாளாச்சு,   வாசல்ல வந்து காத்து வாங்கலாம்னா, இந்த பாழாப்  போன பக்கத்து வீட்டுக்கு சனியனா அவுக மாமா வாராராமே ! வார அந்தாளு சீக்காளின்னு சொல்றாக !  அதுவும் ஏதோ கொரோனாவாம்ல"  - இது பரமேஸ்வரியின் புலம்பல்

"அக்கா, நான் டிவில பார்த்தேன் .... கொரோனா வந்தவுகள  அத்தனை சுளுவா வெளியில விடமாட்டாக ! வ்லாங்கு  மீன பிடிக்கிறது மாதிரி சீனால வல போட்டு மனுசனப்  பிடிக்கிறாங்கன்னு எங்க வீட்டுக் காரவுக போன்ல ஒரு வீடியோ பாத்தேன்"  - சற்று அதிகம் படித்த புஸ்பா

"அப்படியில்லடி வ்லாங்கு  மீன பிடிக்கிறது மாதிரி வல  போட்டா அம்மூர்க்காரன் கெளுத்தி மீன் மாதிரி நளுவீடுவான்ல"

அங்கு வந்த புஸ்பா புருசன்  ( பரோட்டா சூரி இல்ல )  "அப்படியெல்லாம் ஒண்ணும் கொரோனாவும்  இல்லை  கரகாட்டமும் இல்ல. பக்கத்து வீட்டுக்கு வர போறது  அவுக மாமா கருணாகரன். அவுகள  வீட்ல சுருக்கி கருணா மாமாம்பாஹ  ! வீதில வெளயாடுற  பொடியங்க  அதையே கொரோனா மாமான்னு பத்த வச்சுட்டாஹ" !

" பெருங்காயம் போட்டு  கொழம்பு  செஞ்சாலும்  கருவாட்டு நாத்தம் கரஞ்சா போகும் "  என்று சம்பந்தமே இல்லாம பழமொழி  உதிர்த்தான் புஸ்பா புருசன்

என்னடா கவுச்ச வாடை அதிகமா இருக்கேன்னு பாக்குறீங்களா ! கொரோனா வந்தாலும்  வந்தது காயும் கிடைக்காம, கறியும்  கிடைக்காம மக்கள் படும் அவதி, இப்படிப் புலம்ப வச்சுடுச்சு.

காய்கறிக்கடைக்குப் போனா சமூக இடைவெளி, கசாப்புக்கு கடைக்குப் போனா சமூக இடைவெளி, கக்கூசுக்குப் கடைக்குப் போனா சமூக இடைவெளின்னு ஒரே கெடுபிடி.

அண்ணாச்சி  கடைக்கு போன் போட்டு மளிகை சாமான் வாங்கிக்கலாம்னா...

சப்பாத்திக்கு கோதுமை மாவு இருக்கான்னா, இல்லை  கோலமாவுதான் ஸ்டாக் இருக்கு வாங்கிக்கிறீகளா என்கிறார் . 

பால் இருக்கான்னா ஸ்டாக் இல்லை பினாயில்  இருக்கு தரவா அவசரத்துக்கு ங்கிறார்.  இந்த லாக்  டவுண்  வந்தாலும் வந்தது பசும் பால், எருமைப் பால், பால் பவுடர் எல்லாத்துலயும் காப்பி  குடிச்சுட்டேன் . பினாயில் காப்பி ஒண்ணு  தான் பாக்கி ! 

அவரைச்  சொல்லி குத்தமில்லை, கடைல இருக்கிற சாமானா பாத்து  நான் கேட்டிருக்கணும்.

சிவகங்கை ஜில்லால கோவக்காயை  சிலேட்டு, ஸ்கூல் கரும்பலகை அழிக்கத்தான்  உபயோகப்படுத்துவோம் . அந்தக் காயை முந்திரிக்காய் மாதிரி கொள்ளை  விலைலல சென்னைல வியாபாரம் பண்ணுறாங்க ! கேவலமான அந்த காய் கிடைச்சாலே போதும்னு  ஆயிடுச்சு  கொரோனா வந்தப்புறம் .

டிகிரி காப்பியையே  ஆயிரம் நொட்டச்சொல்  சொன்னவங்க சுக்குக் காப்பிக்கே சொத்தை எழுதிக் கொடுக்கத் தயாராயிட்டோம்.

யாரை ஒரு நாளில்  நாலு மணி நேரம் பார்த்து விட்டு, எம்பொஞ்சாதி கொடுமைக்காரின்னு புலம்பிகிட்டு இருந்தானோ அதே முகத்தை இருபத்து நாலு மணி நேரமும்  பார்க்க வச்சுடுச்சு ! இது  போதாதுன்னு  இலவச இணைப்பா என் மாமியார் முகத்தையும் பாக்க வேண்டியிருக்கு !

வொர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லி கைல ஒரு லேப்டாப்ப கொடுத்து கம்பெனில வீட்டுக்கு துரத்தி விட்டுட்டான்.  வீட்ல வேலை செய்யலாம்னு கம்ப்யூட்டர திறந்தா... "என்னங்க சும்மா வெறும் ஸ்க்ரீன வெறிக்க வெறிக்கதானெ பாத்துகிட்டு இருக்கீங்க, வந்து கீரை ஆய்ஞ்சு  கொடுங்கன்னு தொந்தரவு! 

24 மணி நேரம் ஸ்டீம் இஞ்சின் ட்ரைவர் மாதிரி எப்பப்பார்த்தாலும் கரி அள்ளி கம்ப்யூட்டர்லயா  கொட்டமுடியும் ! என் வேலை மூளை சம்பந்தப்பட்டதுடி ! அப்பப்ப யோசிக்கணும் ...அந்த நேரம்தான் ஸ்க்ரீன் சேவர் கம்ப்யூட்டர மூடிடும்.  ...என்ற என் பதிலை என் மனைவி கேட்பதாக இல்லை.

க்ளையண்ட்  பிரச்சினைகளுக்கு ஆராய்ஞ்சு தீர்வு சொன்ன இந்த மனுஷன அரைக்கீரை ஆய வச்சுட்டாங்க ! எல்லாம் என் கிரகம் !

சாப்பிடுமுன் சோப் போட்டு கை  கழுவவேண்டும்...... சாப்பிட்டபின்,,...... காலை எழுந்ததும்...... டூத்பிரஷை  தொடுமுன் சோப் போட்டு கழுவவேண்டும், வீட்டுக்கு வெளியே போகுமுன்....... லிப்டை தொடுமுன்  .... தொட்டபின் .... ஸ்கூட்டர், கார் தொடுமுன், தொட்டபின், வீடு திரும்பிய பின்  .... கதவைத்திறந்தால், படுத்தால், கனவு  கண்டால் என  ஏகப்பட்ட கைகழுவல்கள்.  அதைவிட கொடுமை, சோப் வைக்கும் பாட்டிலை கழுவச் சொன்னதுதான் !   ஏண்டி ... நீ சொல்றது எல்லாம் சரிதான், நம்ம அபார்ட்மெண்ட் தண்ணி டேங்க் திறந்து  விடுறவனுக்கு கொரோனா  இருந்தால் என்ன பண்ணுவே என்ற பின் தான் அடங்கினாள்  என் மனைவி!



நானூறு சதுர அடி வீட்டை  எத்தனை தடவை  தான் கூட்டிப் பெருக்குறது .  எட்டுக்கால் பூச்சியெல்லாம் சபிக்கிற அளவு ஒட்டடை  அடிச்சாச்சசு. "ஏங்க  ஒட்டடை அடிச்சு 28 மணி நேரம் ஆச்சுன்னு அலாரம் வச்சு வெறுப்பேத்துறாங்க".  சிலந்திக்கு பேதியே ஆனாக்கூட 28 மணி நேரத்துல ஒட்டடை சேராது ! ஆனாலும் வீட்ல ஓவரா வேலை கொடுக்குறாங்க !


மாமனார் வாங்கிக் கொடுத்த ஸ்கூட்டரை  மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப் போனா (அத்தியாவசிய சாமான் வாங்கத்தாங்க)  போலீஸ் லத்தி அடி  ஸ்கூட்டர்ல  தான் விழும்ங்கிறதுனால, ஸ்கூட்டர் சாவியை  அரிசிப் பானைக்குள்ள போட்டுட்டா பத்தினித் தெய்வம் (அரிசிப் பானைன்னு உளவுத்தகவல் சொன்னது என் பெரிய மகள் ) . பச்சரிசிப் பானையா  புழுங்கலரிசிப் பானையான்னு  தேடுறதுக்குள்ள விராட்   கோலி தாடிமாதிரி இருந்தது இப்போ தாகூர் தாடி மாதிரி வளர்ந்திடுச்சு !  கடைசியில பாத்தா அது ஜவ்வரிசி பாட்டிலாம் ! நம்ம உளவுத் துறை இன்னும் முன்னேறணும் !


கஷ்டப்பட்டு, போலீசு க்கு பயந்து சாக்குத் துணியை  'மாஸ்க்' மாதிரிக்கு கட்டி (எம் பொஞ்சாதி ஐடியா .....கர்சீப்பினா  கொரோனா ஈஸியா புகுந்துடுமாம்), மூஞ்சியெல்லாம் அரிப்பெடுத்து (ஆனால் கையால முகத்தை சொறியக்கூடாதாம் ....அடேய் காலால சொரிய நான் என்ன நாயாடா !)  .............. சமூக இடைவெளி விட்டு ( சாக்குத்துணி  'மாஸ்க்' காட்டினா வேர்க்குற  வேர்வைக்கும்  நாத்தத்துக்கும் இடைவெளி தானா வருது . யாரும் பக்கத்துல வரமாட்டான் )...  

 1 அடி  விட்டம்,   அரையடி ஆரம் 2πR   சுற்றளவு கொண்ட வட்டத்துக்குள் நின்று,  என் வட்டத்துக்கும் பின்னால் இருக்கும்  வட்டத்துக்கு ஒரு மீட்டர் இடைவெளி இருக்கிறதா என்று பார்க்கும் முன்பே  முன்னே ஒரு ஜந்து ஒரு சென்டிமீட்டர் இடைவெளி கூட விடாமல் என் முன்னே புகுந்து .......கொரோனாவின் கற்புக்கு லவலேசம்  பங்கம் விளைவித்த அந்த ஜந்துவை திட்டினால் என் குரல் எனக்கே  ஈனஸ்வராமாக கேட்டது ( சாக்குத் துணி திரையைத் தாண்டி ஆக்சிஜன் கூட போகமுடியாது, என் குரலா போகப்போகிறது ! . பிக் பாஸ்  கதையைப் போல  "தட்டவும் முடியாது !  தள்ளவும்   முடியாது... அந்த  ஜந்துவுக்கு என்ன  வியாதியோ ! தொட்டுத் தள்ளவா  முடியும் ?


இவ்வளவு தடையையும் மீறி (காய்கறிக்கு) என் முறை வந்த போது  மீதமிருந்த காய்கறிகள் தான் கிடைத்தது .  "என்னம்மா வெண்டைக்காய் கேட்டால் ஒரு கிலோ முருங்கக்காய் குடுக்குற ! நான் என்ன பாக்யராஜா ! என்று கடித்த என்னை பார்த்து  "அய்யே  ! எல்லாம் பிஞ்சு வெண்டிக்காப்பா ! சரியாப்  பாரு...காய்கறி வாங்குற மூஞ்சிய பாரு  " என்றாள் . 

பேடீயம்ல பணம் தரலாமா என்ற என்னை அவள் மனமார வாழ்த்தினாள் . இந்தக் கட்டுரையை குடும்பப் பசங்க படிக்க வாய்ப்பு இருப்பதனால் அவளது வாழ்த்த்து மடலை பிரசுரிக்க இயலவில்லை !


கொடுத்த பணத்தை பக்கத்தில் இருக்கும் தண்ணீர் குவளையில் போட்டாள். என்னமா பண்றேன்னு கேட்டதுக்கு.... "தோ  ப்பா ... ஒன்ன மாதிரி படிச்சவங்க, பிளேன்ல ஊர் சுத்துறவங்ககிட்டிருந்துதான்  ஏதோ  தொத்து  வியாதி வருதாம்ல ! அதான் மஞ்சத்  தண்ணீல வேப்பங்குலைய  போட்டு அதுல பணத்தைப் போடுறேன்  (பரவாயில்லை.... அரசாங்கம் தகவலை பரப்புறேன்ன்னு நல்லாப்  பரப்புறாங்கப்பா ! நம்ம விதி  , காய்கறிக் கிழவி  கிட்டயெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு .... டேய்  .... ஜிங்பின்  ...சீனாவுல எந்த மூலையில  இருந்தாலும் ஒனக்கு ஒரு நாள் நல்லா  இருக்கு )


தேர்தலெண்ணிக்கை நாளன்று சுயேச்சை வேட்பாளரின் ஏஜெண்ட்  போல நாதியத்து காய்கறிகளை கொண்டு வந்து வீட்டில் போட்டால், கிடைப்பதென்னவோ வசவு தான். "என்னாங்க  !  முத்தல்  காய்கறி இங்கு வாங்கப்படும்னு ஏதாவது போர்டு கீர்டு  கழுத்துல கட்டிக்கிட்டு போனீங்களா!  கூழாங்கல்லக் கூட  வேகவாசிச்சுடலாம், நீங்க வாங்கின காய்கறிகளை என்ன பண்றதுன்னே தெரியல" என்று  நமக்கு இடிப்பு வேற !


ஒனக்கு புருஷனா இருக்கிறதை விட தவுலுக்கு தோலாப்  போயிடலாம்னு தைரியமா சொன்னேன்.  என் பூர்வ ஜென்ம புண்ணியம், இன்னும் என் சாக்குத் துணி மாஸ்க்கை கழட்டாததால்  என் வாய்ஸ் மைண்ட் வாய்ஸாக  என்னுள் ஐக்கியமாகி அமரனானது !   தப்பித்தேன் !


சில பல சாதனைகள் செய்து காய்கறி வாங்கி வந்த என்னை, ஒரு புழுப்போல் என் மனைவி ஒரு  ஒட்டடைக்  குச்சியால் பாத்ரூமில் தள்ளி தலையில் பாத்ரூம் கழுவும் ப்ளீச்சிங்  பவுடர் தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்வித்தாள் .

அதட்டலாக நான்  " ஏண்டி ! நான் வாங்கிட்டு வந்த காய்கறி மணக்குது நான் மட்டும் தீட்டா" என்று "மனசுக்குள்"  சொன்னது  அவள் பாம்புக்கு காதுக்குக்  கேட்க அவள் சொன்ன பதில் (மூன்று முடிச்சு மனசாட்சி  போல) ஜிங்பின்  மேல் இரண்டாவது முடிச்சு போடவைத்தது.  

மனைவி சொன்னது "காய்கறியை குக்கர்ல வச்சு வேகவச்சுடுவேன்ல ". 

ஆமாமாம்...நீ காய்கறியை குக்கர்ல வேகவைக்கிற....புருஷனை ஊரவச்சு உப்புக்கு கண்டம் வைக்கிற! அலறிய எனக்கு ஆபத்பாந்தவனாக  பாத்ரூம் ஷவரும், குக்கர் விசிலும் காப்பாற்றின !

என்ன சமையல் என்று கேட்டதற்கு  "கொரோனா கூட்டு" என்றாள்  சிறியவள்.  என்னடி திகிலை கிளப்புற என்றதற்கு  அவள் சொன்னது " நான் சொன்னது கரேலா " . கரேலா என்றால் ஹிந்தியில் பாகற்காயாம் !  ஹிந்தி ஒழிக  என்று ஹிந்தி திணிப்புக்கு என் கண்டனத்தை தெரிவித்து விட்டு சாப்பிட தயாரானேன் !  (ஒரு விதத்தில் மகள்  சொன்னது சரிதான்.... பாகற்காய் நறுக்கியதும் கொரோனா  உருவத்தைப் போல் தான் இருக்கிறது. அம்புக்குறி இட்ட படத்தைப் பார்க்கவும் )



குளித்து சாப்பிட உட்க்கார்ந்தால், சாம்பாரில் காரம், புளி , தண்ணீர்  இத்யாதிகள் மாத்திரம் குறைச்சல். மற்றபடி சமையல் சூப்பர்! (உப்பு அதிகமென்பதை வேறு எப்படிச் சொல்வது !)

இந்த பொடி உப்பே  இப்படித்தாங்க ! நிதானம் தவறிடுது . கல்லு உப்பு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாக்  கேட்டாத்தானே ( உப்பு அதிகமானதற்கும் பழி நம் மீதுதான்)


எப்போடா கொரோனா லீவு முடியும், எப்போடா கேண்டீன் சாப்பாடு சாப்பிடுவோம்னு ஆயிடுது.  நாயர் கடை பாமாயில் பஜ்ஜி .....திவ்யம் !

21 நாள் லீவுன்னா அப்படி இப்படி என்று கற்பனை செய்திருந்தேன் ! பல மனக்கோட்டைகள்.....

30 நாட்களில்  கொரிய  பாஷை கத்துக்கலாமாம் ! நாம் 21 நாட்களில் ஒரிய பாஷையாவது கத்துப்போம் ! 


எந்தெந்த நாடுகள்ல லீவு இல்லையோ அந்த நாட்ல இருக்கிற நண்பர்களையெல்லாம் வாட்சப்பில் அழைத்து வெறுப்பேத்தணும் ! கடைசில வெறுப்பானதென்னமோ  நாமதான். அண்டார்டிகா தவிர எல்லா நாடுகளும் க்ளோஸ் !  அண்டார்டிகா பென்க்வினுக்குத்தான் ஃபோன்  பண்ணி  பேசணும்  !


சாவித்திரி  கனவு கண்டவனுக்கு CK  சரஸ்வதி மனைவியாய் வாய்த்தது போல ஆயிடுச்சே !  ( இந்தக் கால இளைஞர்களுக்கான  மொழிபெயர்ப்பு:  கீர்த்தி சுரேஷ் கனவு கண்டவனுக்கு சொர்ணாக்கா வாய்ச்சது மாதிரி)


சண்டை போட்டுட்டு கோபப்பட்டு  எப்போவும் போல ஸ்கூட்டர் எடுத்துக்கிட்டு வெளியில போயிடலாம்னா  "காவல் துறை உங்கள் நண்பன்னு" சொல்லிக்கிட்டு லத்திக்  கம்போட போலீஸ் நினைவுக்கு வந்தது .  "பின்விளைவுகள்" சற்று அதிகமென்பதால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது .


நமது ஒரே நண்பன் செல்போன்தான். ஒரு மாதத்துக்கு 1.5 GB ஒரு நாளைக்கு 1.5 GB  என்று  மாறிய போது ஏதோ  பறப்பது போல
ஒரு உணர்வு. அடேடே ஒரு நாளைக்கு ரெண்டு படம் பாக்கலாமேன்னு தோணிச்சு . ஆனால்  இன்றைக்கு வாட்ஸப்  மாத்திரம் தினம் 5 GB  கேட்குது.   தவிர, எல்லோரும் பூஜை அறையிலிருந்து  பாத்ரூம் வரைக்கும்  யூடியூப்  நம்பித்தான். பாட்டு கேட்க யூடியூப், பாடம் சொல்லிக்கொடுக்க யூடியூப் , தொப்பி செய்ய யூடியூப் , சமையல் செய்ய யூடியூப்  என அலைந்தால்  டெலிகாம் டவர் எரியாம  என்ன செய்யும்.


எல்லாம் முடிந்து படுக்கப் போகுமுன் பிரதமர் ஏதோ  முக்கியமா சொல்லப்போறாரேன்னு செல்போன் ஆன் பண்ணினா டேட்டா  இல்லைன்னு சோககீதம் பாடுகிறது .


இந்தப் 12 நாளும் மொபைல் நோண்டி  நோண்டி  ஆள்காட்டி விரல்  சுண்டு விரலை விட குள்ளமாக  ஆகிவிட்டது. ஆபீஸ்ல 10 மணி நேர ஷிப்ட்ல வேலை பார்த்தப்ப கூட கண்ணுக்கு கீழே  இப்போ வந்தது மாதிரி சனிக்கிரக  சைஸ்  வளையம் வந்ததில்லே.

ஆனா ஒண்ணுங்க. இந்த நேரத்தில மொபைல் மாத்திரம் ரிப்பேர் ஆச்சு.... இருக்கு அந்த ஜிங்பின்க்கு பொங்கல் ! ( ஐயோ இந்த ஃ  போன் வேறே   சீனா ஃபோன் ! )


புயல், வெள்ளம், கொரோனா  இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் வரும்போது தான் நம்முள் இருக்கும் ஜீவாத்மா அடங்கி பரமாத்மா வெளிப்படுவார். ஒரு நாளைக்கு 50 கரப்பான் பூச்சியை நசுக்கிக் கொன்னவன் கூட  ஏதாவது தியாகச்செயல் செயல் செய்யணும்னு தலைகீழா நிற்பான் !

லாட்டரி சீட்டுல லட்ச ரூபாய் பரிசு கிடைத்த கவுண்டமணி மாதிரி "நான் ஏதாவது செஞ்சாககணுமேன்னு " குதிப்பான்.


அரசாங்கம் வீட்டை விட்டு வெளியே வந்தா நறுக்கிடுவேன்னு சொன்னாலும் ஒரு 40 பேருக்கு சாம்பார் சாதம் பண்ணி விநியோகிக்கலாம்னு  முஸ்தீப்  பண்ணி புறப்பட்டால்  நம்ம கையால கொண்டு போன பொருளை எந்தப் பிச்சைக் காரனும் வாங்க மாட்டேன்குறான்.  கேட்டா ... கொரோனா பயம்ங்கறான் !  40 பொட்டலத்தை விநியோகம் பண்றதுக்குள்ள அவன் படுற பாடு.... 35 பொட்டலம் விநியோகம் பண்ணீட்டு, பாக்கி இருக்கிற 5 பொட்டலத்தை நாய்க்கு போடலாம்னா நாயும் சந்தேகமா பார்க்குது ( அதன் மைண்ட் வாய்ஸ்: எந்த நாயும் வெளில 15 நாளா வராதப்போ இந்த நாய் மாத்திரம் நமக்கு ஏதோ  கொடுக்கவர்றான் ....இதுல ஏதாவது சூது  இருக்குமோ! இவன் காக்கி கலர் ஷார்ட்ஸ் போட்டிருக்கான் ....ஒரு வேலை கார்ப்பரேஷன் நாய் பிடிக்கிறவனோ ?) . அது சரி!  நம்ம வீட்ல நம்மள  மதிச்சாத்தானே ஊர்ல மதிப்பாங்க !


சாதாரணமான சாகபட்சியான நமக்கே இந்தப் பாடுன்னா, அக்நிஹோத்திரம் பண்ற (அதாங்க புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்),  மற்றும் தினமும் தீர்த்தவாரி செய்பவர்கள்  பாடு ரொம்ப கஷ்டம்.

சிகரெட்டையாவது 4-5 பாக்கெட் வாங்கி ஸ்கூட்டர்ல ஒளிச்சு வைக்கலாம்... ஆனா குடிமகன்களுக்கு அதிக சிரமம். வாங்கவும் முடியாது ! ஒளிக்கவும்  முடியாது.

எப்போ தான் நம்ம நாடு வல்லரசு ஆகுமோ ! எப்பொழுதுதான் பாக்கெட் பால் மாதிரி என்று விஸ்கி பாக்கெட்டில் கிடைக்குமோ ! 

பஞ்சாப்ல ஒரு நல்லஉள்ளம் படைத்த குடிமகன் காரில்  4 பாட்டிலுடன் ஊரை சுற்றி வந்து, பிளாடபாரத்தில் இருக்கும் குடிமகன்களுக்கு ஜாதி மத பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் 20-30 மில்லி  விநியோகித்ததை தினமலரில்  பார்த்தோம்.வாங்குபவர்களும் பயபக்தியுடன் பெருமாள் கோவில் தீர்த்தம் போல தலை வணங்கி மண்டியிட்டு தண்டலிட்டு பெற்றுக்கொண்டார்கள் !


ஆனால் அந்த தர்ம துரை, குடிமகன்களை 3 அடி  இடைவெளி விட்டு அமரச்சொன்னது அரசு சொன்ன சமூக இடைவெளியின் உச்சக்கட்டம் !

70களில்  இரண்டு குழந்தைகளுக்கு நடுவில் போதிய இடைவெளி விடச்சொன்னார்கள். 

இன்று சமூக இடைவெளி... நாளை என்ன என்ன இடைவெளியோ  ! ஒரு வீட்டில் ஒருவர் மாத்திரம் தன குடி இருக்கலாம் என்ற நிலை வரலாம் ( அதுவும் நல்லதுதான்....புருஷன் பொண்டாட்டி சண்டை வராது) .

அந்த சீனாக்காரனுக்குத்தான் வெளிச்சம் !


இரண்டு ப்ளாட்டுகளுக்கு இடையில் 5 அடி  வலப்புறம்  5 அடி  இடப்புறம்  என்றாலே விதி மீறும் தமிழ் கூறும் நல்லுலகில்  சமூக இடைவெளி விடவைப்பது ஒரு கடினமான காரியம்தான்.


கொரோனாவால் சில  சௌகரியங்கள் (விடுமுறை அமலில் இருக்கும் போது மட்டும்): 


  • சாலையில் தனியாக நடக்கும் போது  தெரு  நாய்கள் தொடர பயப்படுகிறன. யாரும் இல்லாத ஊரில் இவன் யாருக்கு டீ  ஆற்றுகிறான், இவன் வில்லங்கமானவனோ என்று சந்தேகத்துடன் !
  • தீண்டாமை ஒழிக்கப்பட்டிரு க்கிறது . ஒரு குலத்தோரை தீண்ட மறுத்தால் அது தீண்டாமை . யாரையும் யாரும் தீண்டக்கூடாது என்ற நிலையில், தீண்டுவதில் / தீண்டாமல் இருப்பதில் பாகுபாடே இல்லை 
  • நேற்று வரை காவல்துறை, மருத்துவ, துப்புரவுத்துறை ஊழியர்களை சாடிக்  கொண்டிருந்த நிலை மாறி அவர்கள்   நமக்கு தெய்வமாகத் தெரிகிறார்கள் 
  • ஆபீசுக்கு ஏன் லேட் என்று யாருக்கு கேட்பதில்லை 
  • மனைவிமார்கள் எப்போதும் கேட்கும் "எங்கே இருக்கீங்க " "எப்போ வந்து தொலைப்பீங்க " என்ற கேள்விகளுக்கு வாய்ப்பு இல்லை 
  • சொந்தக் காரங்க தொல்லை இல்லை ! குறிப்பா  பொண்டாட்டி வீட்டுக்காரங்க தொல்லை இல்லை ! SV  சேகர் சொல்றது மாதிரி அவங்களுக்கே மாசாமாசம் தனியா ரெண்டு மூட்டை அரிசி வாங்க வேண்டியிருக்கிறது !
  • 50,000 மாத செலவுக்கு போதாது என்று சொன்ன குடும்பங்கள் 20,000 செலவு செய்கிறார்கள் . எது தேவையற்ற செலவு என்பது புரிந்திருக்கிறது ! புரிய வைக்கப்பட்டிருக்கிறது !
  • வரிசையில் நிற்கும் போது  ஓரிரு முறை இருமினால் க்யூ வரிசை வழி விடும்  .... வழியென்ன வழி....வைகுண்டத்தின் கதவுகளே  திறக்கும் .  

       அதே நேரத்தில் இருமல் கட்டுபடுத்த முடியாமல் இருந்தால் மருத்துவரை           அணுகவும், இல்லையென்றால் வைகுண்டம் நிஜமாகவே போகவேண்டி             வரலாம்.  கொரொனா பரிசோதனை தேவை!
  • பொருளாதார, அதிகார  ஏற்றத்தாழ்வுகளால் கொரோனா பாதிப்பில் பேதமில்லை என்ற விதத்தில் பணக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு வயிற்றில் புளி  கரைத்துக் கொண்டிருக்கிறது. பணத்தால் / அதிகாரத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்பது கனவாகிவிட்டது.  
  • குடும்பத்தாருடன்(சோதனைகள் சில பல இருந்தால் கூட) நேரம் செலவளிக்கும் வாய்ப்பு.

பல அசவுகர்யங்களும்  பயங்களும் உண்டு:

  •  பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டிருப்பதால்  காய்கறிக்கடையில் பக்கத்து வீட்டு  அம்மணி கூட அடையாளம் தெரியவில்லை...... நம் வீட்டுக்காரர்களைப் பற்றி நாமே சொல்வது மரியாதையாக இருக்காது.

  • சில (முது) நடிகர்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க, அவர்கள் அப்பா முகம்  தெரிந்தது ஒரு பெரும் சோதனை 

  • பல நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்கள் முகங்களை பார்த்து  மாரடைப்பு ஏற்படும் அவநிலை  (வெள்ளையடிக்கிறவர்கள் வேலைக்குவரமாட்டார்களல்லவா)

  • பணி  ஓய்வு பெற்ற நாட்களில்   என் தந்தையார் சொல்வார் " ரிடையர் ஆனப்புறம் என்று என்ன கிழமைன்னே  தெரியலை. எல்லா நாளும் ஞாயிறா  இருக்கு என்பார் " . அது நமக்கு ரிடையர் ஆகும் முன்பே ஆகிவிட்டது 

  • பக்கத்திலிருப்பவர் சாப்பிடும் போது புரை ஏறி இருமி / செருமி னால்  கூட பயப்பட வைக்கிறது 

  • கரண்டுக் கம்பி மூலமாகக் கூட கொரோனா  வரலாம் என்ற அப்பட்டமான புரளியைக் கூட ஆராய வைத்திருக்கிறது 

  • 5ஜி  மூலமாக கொரோனா பரப்பப் பட்டிருக்கிறது (5ஜி  தயாரிப்பில் பெரும்பான்மை சீனர்களுடையது) என்ற புரளியால் இங்கிலாந்தில் மொபைல் டவர்கள் எரிக்கப்பட்டுக்கொண்டிருன்றன. எங்கும் பயம் எதிலும் சந்தேகம். 


கொரோனாவில் இருந்து நம்மையும் சுற்றியிருப்பவர்களையும், உலக மக்களையும் காக்கும் பொறுப்பு நமக்கிருக்கிறது. பிரதமர் சொன்னபடி கைதட்டவோ, விளக்கேற்றவோ விருப்பமில்லாதவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி செய்யலாம், அதனால் உலகுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. 

மற்றபடி, அரசு சொல்கிற அத்தனை அறிவுரைகளையும் 100% ஏற்று நடப்போம். நமக்கோ அல்லது நம்  முன்னால்  எவருக்கோ கொரோனா அறிகுறி இருந்தால் அரசுக்கு தெரிவிக்கவேண்டியது நம் கடமை.

தனித்திருப்போம் அரசின் அறிவுரையினால்  !

விழித்திருப்போம் ! நமது முயற்சியினால்

வாழ்ந்திருப்போம் இறைவனருளால் !















Sunday, April 5, 2020

லாக் டவுண் லீவு கசக்குதய்யா - ஷண்முகப்ரியா ராகம் - ஆதி தாளம்



லீவு  கசக்குதையா வர வர லீவு கசக்குதையா
மனம்தான் லீவு லீவுனு துடிக்கும் லீவை நெனச்சு  குதிக்கும்
லீவு வந்தா  கடிக்கும் பைத்தியம் புடிக்கும்
(லீவு கசக்குதையா...)

சீனா தந்த கரோனாவால   உருப்படலை, நாடே  சரிப்படல
உலகமெலாம்    மக்கள்  சுகப்படல
நல்ல நாளில் லீவு விட்டா ஜனங்க  ஓடுமுங்க
தியேட்டரிலே கூட்டம்  கூடுமுங்க
அமெரிக்கா  முன்னே   இட்டலி இந்தியா இஸ்பெயினுதான் 
கதைய கேளு முடிவ பாரு
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க... எனக்கிந்த
(லீவு  கசக்குதையா...)

எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை சீரியல்  எத்தனை டியூன கேட்டாச்சு
இத்தனை பாத்து இத்தனை கேட்டு என்னாச்சு
வீட்டிலே அடைஞ்சு  சோம்பேறி ஆகி  நின்னாச்சு

எங்கப்பா  அந்த காலத்து லீவில்  ஊரை சுத்தி
தாத்தா  அந்த  காலத்து  லீவில் காதல்  கனிரசமே
நாடகக்  கொட்டகை  எம்.கே.டீ . காலத்துல
நடையா இது நடையா... நம்ம நடிகர் திலகம் ஸீஸனிலே
ஹலோ ஹலோ சுகமா, அட ஆமாம் நீங்க நலமா
எங்கேயும்தான் போனாங்க , நாட்டில் சுதந்திரமா
இந்தக்கால கரோனா லீவில்

வீட்டில் முடங்கிப்  படும் பாடிருக்கே ...
வீட்டில அடங்கிப் படுங்க ... பாத்திரம் நல்லா தேயுங்க
நம்ம முதல்வர்  பேச்ச பிரதமர்  பேச்ச மதிக்கணும்
நாமாக  ஊர் சுத்தக்  கூடாது ...ஆனாலும்
(லீவு  கசக்குதையா....)

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...