இச்சிறியேனின் அபிப்ராயத்தில், 2019ன் மெகாஸ்டார் "அத்திவரதர்".
பக்தர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், நாத்திகமாக வேடம் போடுபவர்கள், குழந்தைகள், வயோதிகர்கள், வெளிநாட்டவர்கள், நடக்க முடிந்தவர்கள், முடியாதவர்கள் என எல்லோரையும் காந்தமாகக் கவர்ந்த வரத"காந்த்".
அத்திவரதர் தரிசனம் கொடுத்த 48 நாட்களில் விடுமுறை காரணமாக இந்தியா வந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த நம்மவர்கள், அத்திவரதரை பார்க்காமல் போனால் சக NRI நண்பர்கள் ஏளனம் பேசலாம், டிரம்ப் குடியுரிமையை அல்லது விசாவை கேன்ஸல் செய்யலாம் என்ற அளவுக்கு பயந்தார்கள்!
ஜாதி மத வேறுபாடின்றி கோவிலுக்கு வெளியே இயங்கி வரும் வியாபாரிகளுக்கு ஒரே வருடத்தில் பல வருடங்களுக்கான வியாபரத்தை அள்ளித் தந்தவர். சினிமாக் கொட்டகைக்கு இணையாக கள்ளடிக்கெட் என்பது ஒரு கொசுறு தகவல்.
ரஜினி காந்தின் "காலா" வைவிட அதிகம் கல்லா கட்டியவர்கள் காஞ்சி வியாபாரிகளும், அர்ச்சகர்களும்.அறநிலையத்துறை சிப்ப்ந்திகள்ய்ம் சேர்த்தி, ஆனால் தனியாகச் சொல்லவில்லை....அதுதான் வியாபாரிகள் என்று சொல்லிவிட்டேனல்லவா! செவிக்கு உணவு இல்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படுமென்பது போல, இவர்களையும் தாண்டி கோவிலுக்கு ஏதேனும் ஓரிரு துளிகள் கிடைத்திருக்கலாம்.
பக்தர்கள் கோவிலுக்கு ஏதாவது காணிக்கலாம் என்று தேடிய போது, உண்டியல் அவர்கள் கண்களில் படாமல் அவையடக்கம் காட்டிய கோவில் நிர்வாகத்திற்கும், துறை அலுவலர்களுக்கும் ஒரு "ஓ"!
ஆயிரம் பொறுமல்களுடனும், கூட்டத்தைக் கண்ட சலிப்புடனும் அழைத்துச் (குடும்பத்தாரால் இழுத்துச்) செல்லப்பட்ட பக்தர்க்ளில் நானும் ஒருவன்.
எப்பொழுதாவது நடக்கும் நிகழ்வுக்கு 'அத்தி பூத்தார் போல்' என்பார்கள். இனி அப்பழமொழி "அத்தி வரதர் வந்தாற்போல" எனப்படலாம்.
2020ல் பேராசை ஏதும் எனக்கில்லை...இன்னும் ஓரிரு முறை அத்திவரதரை தரிசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்க அத்தி வரதர் அருளுவார் என நம்புகிறேன்!