அது ஒரு மாம்பழக்காலம்
(முன்குறிப்பு: டயாபடீஸ்
(நீரிழிவு) உள்ளவர்கள் இந்தக் கதையைப்படிக்கவேண்டாம்)
ஞாயிறு
காலை, டிவியில் ஏசியானெட்டில் சித்ரா சேச்சி
உச்சஸ்தாயியில் “ஒண்ணான்கிளி, பொன்னாம்கிளி வண்ணான்கிளி மாவின்மேல்” என்று கிளிச்சுண்டன் மாம்பழம் சலனசித்திரத்தின் வித்யாசாகர் கானத்தை பாடிக்கொண்டிருந்தார்.
பாட்டு
கேட்டதெல்லாம் போதும், வந்து அடுப்படில
உதவி செஞ்சாத்தான் வரப்போற உங்க ப்ரெண்டுக்கு இண்ணைக்கி சோறு, என்று என் சக(அ)தர்மிணியின் குரல், சித்ராசேச்சியின் “பிட்ச்” ஐயும் மிஞ்சியது.
வரவிருக்கும்
என் நண்பன் ராகவன் என்னைவிட குசும்பன். நான் மதுரைக் குசும்பு என்று பெருமை
பேசினால்,
நீ வைகை தெற்குக் கரை, நான் வடகரை, குசும்பின் வீர்யம் அதிகம் என்று
பீற்றிக்கொள்வான்.
வேண்டாண்டா........ வடகலை தென்கலை
சண்டையெல்லாம் காஞ்சிபுரத்தோடு நிறுத்திக் கொள்வொம், மதுரை தாங்காது என்று கூக்ளி போட்டதும் அமைதியாவான் (அவன் வடகலைக்
காரனாம் ! ) ஏதாவது ஒரு சிறு குறையிருந்தாலும் அதை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில்
போட்டு பெரிதாக்கி என் வட்டத்திலிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் போட்டுக்
கொடுத்துவிடுவான். எழவெடுத்த இந்த வாட்ஸாப் வந்தாலும் வந்தது அவன் இப்போ டபுள்
ஷிஃப்ட் கலகம் செய்கிறான் !
ஒரு
வழியாக வந்தான். வந்தவுடன் “அப்பப்பா
ஒரே சூடு, ஏஸிக்கார்னாலும் உஷ்ணம் அதிகம்டா !
என்றான்.
“மாப்ளே, ஏ.சி கார் வாங்கினா மாத்திரம் போதாது, ஏசி ஆன் பண்ணினாத்தாண்டா உஷ்ணம் குறையும்” என்ற
என்னை முறைத்தான்.
ஜில்லுன்னு
தீர்த்தம் கொடுடா என்றவனை மடக்கி “ இண்ணைக்கு மகாவீரர் ஜெயந்தி, டாஸ்மாக் அடைப்பு, நாளை வாங்கித்தரட்டுமா” என்றேன்
“வெயில்
கொடுமையைவிட உன் கொடுமை அதிகம்டா, நான் கேட்டது “வெறும் ஜலம், H2O, பானி,
தண்ணீர்” என்று உஷாரானான்.
H2O இருக்கு ஆனா ஒரு H குறைச்சலா இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறயா என்ற என்னை பார்த்து “
சாப்பிடக் கூப்பிட்டுட்டு இப்படி சாவடிக்கிறியே, நான் PETAவுக்கு கம்ப்ளெண்ட்
பண்றேன் என்றவனை கடைசியாக ஒரு முறை ” ஆமாண்டா, உன்னைப் பத்தின சமாசாரம்
PETAவுக்கு கம்ப்ளெண்ட் பண்ணினாத்தான் சரி”
என்று கடித்துவிட்டு, அவன் பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகிப் பிராண்டுமுன் தண்ணீர் எடுத்துவர உள்ளே போனேன்.
சமையல்கட்டிலிருந்து
வரும்போது ஜிலு ஜிலுவென மஞ்சமஞ்சேலென்று ஒரு க்ளாஸ் மாம்பழ ஜுஸுடன் வந்தேன். இப்பொழுது
அவன் முறை என்னை கடித்தான் “ஏண்டா ரவி,
படூர்ல தண்ணிக்கஷ்டம், தண்ணி சுமாராத்தான் இருக்கும்னு கேள்விப்பட்டேன், அதுக்கோசரம் இத்தனை சுமாராடா, மஞ்சளா “
“ஒன்
நேரம், பேசுடா ! எங்க சம்பந்தி மாமி அவங்க
தோட்டத்துல காய்ச்ச மாம்பழம் கொஞ்சம் நிறைய குடுத்தாங்க. அதுதான் ஜுஸ்” என்றேன்.
கொஞ்சமா, நிறையவா என்றான்
“அவங்க
கணக்குக்கு கொஞ்சம், எங்களுக்கு நிறைய, என்று திருத்திச் சொன்னேன்.
போகப்போக
பார்க்கத்தான் போறயே என்று சூசகமாகச் சொன்னேன். அந்த சூசகத்தின் உக்ரத்தை அவன்
அப்பொழுது புரிந்து கொள்ளவில்லை.
லீவு
நாள் தானே என்று இரண்டு நாள் தாடியுடன் இருந்த என்னைப்பார்த்து, சற்று திகைப்புடன், வாஞ்சையுடன் சீரியஸாகக் கேட்டான் “ ரவி, வந்ததுலேயிருந்து பார்க்கிறேன் ரொம்ப டல்லா இருக்கியே, கண்ணெல்லாம் மஞ்சளாயிருக்கே, என்ன உடம்பு கிடம்பு சரியில்லையா !”
“அப்படியெல்லாம்
ஒண்ணும் இல்லடா, ஒங்கிட்ட சொல்ல
எனக்கு என்ன தயக்கம், ஆனால் கொஞ்சம்
கூச்சமா இருக்குடா” இது நான்
“ஃப்ரெண்டுகிட்ட
என்னடா கூச்சம், என்ன உடம்புக்குன்னு
தயங்காமச் சொல்லு, நீ வேறே அடிக்கடி
தாய்லாந்த் போய் வர்றே “ என்றான் அந்த அனுகூல சத்ரு, கண்சிமிட்டியபடியே
“டேய்
வாயை மாம்பழ ஜூஸால கழுவுடா ! உண்மையை சொல்றேன் !எங்க சம்பந்தி மாமியும் அவங்க
அம்மாவுமாச் சேர்ந்து டன் டன்னா மாம்பழம் அனுப்பிக்கிட்டே இருக்காங்க. நானும்
டயாபடீஸ் வரதுக்கு முன்னால சாப்பிடணும்னு அவசர அவசரமா உள்ளே தள்ளிகிட்டே
இருக்கேன். ஓவரா மாம்பழம் சாப்பிட்டு என்
கண் மஞ்சளா மாறிட்டே இருக்குடா . என் பொண்டாட்டி கூட அவ பெயரை மஞ்ச(சு)ளான்னு
மாத்திடலாம்னு இருக்காடா”
சிரித்தான்
ராகவன் !
நீ
உண்மை தெரியாம சிரிக்காதேடா !. அந்த ஆழ்வார்பேட்டை மாமியை எதிர்த்து கோயம்பேடு
வணிக சங்கத்திலே தர்ணால்லாம் பண்றாங்க. அவங்க அந்த அளவு ஸ்டாக் ஆழ்வார்பேட்டை
வீட்ல வச்சுருக்காங்களாம். தர்ணா பண்ணமாட்டாங்களா பின்னே ! கோயம்பேட்டைய விட
ஆழ்வார்பேட்டைல ஸ்டாக் அதிகம் இருந்தா அது
அநியாயம்தானே !
கேட்ட
அவன் விழுந்து விழுந்து சிரித்தான் !
சிரிக்கும்
சப்தம் அடங்குமுன்னே, நைஸாக அவனருகில் ஒரு
ப்ளேட் மாம்பழ பஜ்ஜியைத் தள்ளினேன். சிரிப்பு சுவாரஸ்யத்தில் இரண்டு பஜ்ஜியை
விழுங்கினவன், இது என்னடா புதுசா
இருக்கு, ஆனால் கைக்குழந்தை வாந்தி மாதிரி ஒருமாதிரியா
இருக்கே” என்று குசும்பினான்.
ஆமாண்டா, இது ஒரு காண்டினெண்டல் ஹைப்ரிட் ப்ரிபரேஷன். இந்த
ரெஸிபி பெர்லின் “ ஃபேஷன் டுமாரோ” புஸ்தகத்திலே வந்தது, "மாங்கோ ஃப்ரிட்டர்ஸ் " என்று பீீீலாவிட்டேன் .
“அது
சரி வெள்ளைக்காரன் சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்று மூன்றாவது பஜ்ஜிக்கு
தயாரானான் அந்த தியாகி
சரி
சரி வா சாப்பிடலாம். உனக்கோசரம் திகைப்பூட்டும் மெனு காத்திருக்கிறது என்று
உபசரித்தேன்.
பாத்ரூம்
வரை போனவன் “டேய் உன்னிடம் குடிக்க ஜலம் கேட்டேன், நீ மாத்தி மாத்தி மேன்கோ ஜுஸ் குடுக்குறே......கைகழுவவாது ஜலம் குடுப்பியாடா” என்று டேப்பில் கை கழுவினான்.
டைனிங்க்
டேபிளில் உட்கார்ந்தவனுக்கு முதலில் வந்தது ...உலகத்தின் தலைசிறந்த அப்பிடைஸர்
“ஆம் பன்னா”.
இது
என்னடா ஏதோ பச்சைக்கலர்ல, மாவிலையைப் போட்டு
ஏதாவது ஜூஸா என்று மிரண்டான்.
“சீச்சீ நான் என்ன அப்படிப்பட்ட கொடுமைக்காரனா என்ன, இது வட இந்திய ஸ்பெஷாலிட்டி. பச்ச மாங்காயை
அரைச்சுப் பண்ணியது.”
“இதுவும்
ஆழ்வார்பேட்டை மாமி தயவா” என்று சலித்துக்
கொண்டே ஒரு லிட்டர் ஆம் பன்னாவை உள்ளே தள்ளினான்.
சாப்பாட்டுக்கு
தயாரானோம்.
என்
மனைவியிடம் “ வராத என் ஃப்ரெண்ட் வந்துருக்கான், அவனுக்கு இந்த தட்டு எல்லாம் வேண்டாம், நல்ல பெரிய மாவிலையாப் போடு.....சாரி, வாழை இலையாப் போடு” என்றேன்.
நீ
செஞ்சாலும் செய்வடா. சம்பந்தி வீட்டு மாமர இலையெல்லாம் தெச்சு ஒரு இலையாப்
போட்டாலும் போடுவடா, என்று கடித்தான்
ராகவன்.
என்னடா
மெனு என்ற ராகவனுக்கு நாக்கில் மட்டுமல்ல,8ம்
இடம், 7ம் இடம் என 12 இடங்களிலுமே சனி !
மெனு
சொல்ல ஆரம்பித்தேன்.
மாம்பழ
பச்சடி, மேங்கோ கீர், சித்ரான்னத்துக்கு புளிசாதம் அஸிடிக்கா இருக்கும்னு அதுக்கு பதிலா, மேங்கோ ரைஸ், மாம்பழ சாம்பார், மாம்பூ பச்சடி
(ஏன் வேப்பம்பூ பச்சடி பண்ணும் போது மாம்பூ பச்சடி பண்ணக்கூடாதா), மாங்காய் மிளகுகார மசியல், ரசம் (எல்லோரும் பழரசம் தானோன்னு நினைப்பீங்க , பயப்பட வேண்டாம், சாதா மிளகு ரசம்
தான்.....அங்க தான் நான் வச்சேன் ஒரு ட்விஸ்ட்), பழுத்தும்பழுக்காத பாதி மாம்பழ வடை, கறிவேப்பிலை, உப்பு, மாங்காய் கரைத்த மோர், கடைசியில் ஜில்லென்று மேங்கோ மில்க் ஷேக்.
மிரண்டான்
ராகவன் “ஏண்டா, திகைப்பூட்டும்
மெனுன்னு சொன்னேன், இது திகட்டூட்டும்
மெனுவா இருக்கே ! நான் வீட்டு உள்ளே நுழைஞ்சதும் வாசல் க்ரில் கேட்டை சாத்தி தாழ்
போடும் போதே நான் சந்தேகப்ப்பட்டேன்.
நீ
வடகொரிய கிம்-ஜோங்க்-உன் ஐ விடக் கொடுங்கோலனா இருக்கியேடா. பால்கனி வழியாக்
குதிக்கலாம்னா, 28வது மாடி வேறே.
சந்தேகமே இல்லடா, நீ
கிம்-ஜோங்க்-உன் ஐ விட மோசம்டா”
ஆனால்
விதி வலியது அல்லவா, ஒரு வழியாக முக்கால் சாப்பிட்டு விட்டு முடி(ழி)த்தான். மோர் சாதத்தில் ஒரு ப்ரேக் போட்டான். ஒரு
ஊறுகாய் வேண்டுமென்றான். மூன்று சாய்ஸ் கொடுத்தேன்...ஆவக்காய், மாவடு,
மாங்காதொக்கு.
அதற்குப்பதில்
கட்டைவிரலைக் கடித்துக் கொண்டே மோர் சாதத்தை முடிக்கிறேன் என்று சலித்துக்
கொண்டான் அந்த ரசனை கெட்ட ஜென்மம்!
சாப்பிட்டதும், பீடா வேண்டுமா என்றேன், அதிலும் வெற்றிலைக்குபதில் மாவிலை வைத்துக் கட்டியிருப்பேனோ என்ற
பயத்தில் மறுத்தான். பாகிஸ்தான்
எம்பஸியில் சாப்பிட மறுக்கும் இந்திய தூதர்போல....மரணபயம் !
இதுக்குப்
போய் ஏண்டா இப்படி பயப்படுறே...வாழ்க்கைன்னா இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்
என்று சமாதானப்படுத்தினேன்.
“ஆனா
எனக்கு மட்டும் துன்பமே மாறி மாறி வருதே...” என்று என்னைப் படுத்தினான்.
தாம்பூலத்துடன்
கிப்டுக்கு பதிலாக ஒரு மாமரச்செடி கொடுத்தேன். ஏண்டா இதுவும் அந்த ஆழ்வார்பேட்டை
மாமி கைங்கர்யமாடா என்றான்.
“அப்படியெல்லாம்
இல்லை, இது என் சொந்த சாமர்த்தியத்தில்
வாங்கியது” இது அடியேன்
ஒரு
செடி வாங்கியதுல என்னடா சாமர்த்தியம்....கேட்டது ராகவன் (நான் தான் சொன்னேனே அன்று
கிழமை தான் ஞாயிறு மற்றபடி அவனுக்கு 12 இடத்திலும் அன்று சனி என்று)
ஃப்ளாஷ்
பேக்கினேன்
செடி
விற்றுக் கொண்டிருந்த மினியம்மா கைகளிரண்டும் பின்னால் கட்டிக் கொண்டிருந்த என்னை
வினோதமாகவும் சந்தேகமாகவும் பார்த்தாள்,
ஒரு வேளை திருடிவிட்டு மறைக்கிறேனோ என்று.
அவளிடம்
ஒரு மாங்கன்று வேண்டுமென்றேன். நுப்பது ரூபாய் என்றாள்.
அங்குதான்
பிரயோகித்தேன் என் சாமர்த்தியத்தை .....
ஏம்மா
ஒனக்கு மாஞ்செடி பிடிக்குமா, மாம்பழம்
பிடிக்குமா என்று விடுகதை போட்டேன்.
என்
கேள்வியைக்கேட்ட மினியம்மா என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, இல்லை சாமி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று பம்மினாள்.
காரைக்கால்
அம்மையார் போல இளவயதிலேயே எனக்கு முதுமைத்தோற்றம் வந்துவிட்டாலும், நான் பேசுவதையும் பார்த்தும் ஒரு பெண் தவறாகப் புரிந்து
கொள்கிறாளே என்று மனதுக்குள் மகிழ்ச்சி !
ஐயய்யோ
நீ தப்பா புரிஞ்சுகிட்டே. நான் எதேச்சையாகக் கேட்டேன்
அப்படியா
சாமி, எனக்கு மாம்பழம் தான் பிடிக்கும். செடி
வச்சு, மண்ணு போட்டு, தண்ணி ஊத்தி, மரமாகி, பூச்சி எதுவும் வராம பாதுகாத்து எண்ணைக்கு பூ
வந்து, காய் காய்ச்சு அது பழமாகி ......என
கே.பி.சுந்தராம்பாள் போல அடுக்கிக் கொண்டே போனாள்!
பார்த்தியா
எவ்வளவு கஷ்டம்...அந்தக் கஷ்டத்தையெல்லாம் தீர்க்கத்தான் ஒரு மாம்பழத்தைக்
உனக்குக் குடுத்துட்டு, அந்த மாஞ்செடியை
நான் எடுத்துக்கிறேன் என்று அவளுக்கு புரியும் முன் செடியை (பண்டமாற்று முறையில்) எடுத்துக் கொண்டு
கிளம்பினேன். அவளும் அந்த மாம்பழத்தை திரும்பத் திரும்ப வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
நான் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு வாங்க வேண்டிய ஒரிரு மளிகை சாமான்களை வாங்கிக்
கொண்டு திரும்ப வரும்போதும் மினியம்மா அந்த மாம்பழத்தை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
இந்த
ப்ளாஷ்பேக்கைக் கேட்டு ராகவன் அடுக்கு மொழிகளால் திட்டினான். இந்தக் கதையை
குடும்பப் பெண்களும், குடும்பப்
பசங்களும் படிக்க நேருமென்பதால், நேர் முக வர்ணனை தவிர்க்கப்படுகிறது.
அர்ச்சனை
முடிந்ததும் கரிசனத்தோடு கேட்டான், மாஞ்செடி விற்றுக்
கொண்டிருந்த மினியம்ம்மா “இன்னா”
ஆனாளென்று.
நான்
சொன்னேன் “சென்னை-33” என்ற பின்கோடுக்கு ஆம்புலென்ஸில் எடுத்துக் கொண்டு
போயிருக்கிறார்களென்று
“ஏண்டா, நானென்ன போஸ்ட்மேனா.....பின்கோடு சொன்னதும்
விலாசத்தைச் சொல்ல. எந்த கருமாந்திரமடா அந்த இடம்” இது ராகவன்
இல்லைடா, ஒனக்கு திகட்டிடுச்சே என்று சொல்லவில்லை என்று தயங்கித்
தயங்கி சொன்னேன் அந்த இடத்தின் பெயர் “மாம்பலம்” என்று....
மீண்டும்
மாம்பழமா என்று தட்டுத்தடுமாறி ஓடினான்,
பேயறைந்தது போல !
சிரித்துக்
கொண்டே என் மனைவி சொன்னாள்.....பாவம் ஒரு வழியா “ மனுஷன் போறான்”
நீ
ஆங்கிலத்தில் திருத்திச்சொல் என்றேன் திருவிளையாடல் சிவபெருமான் போல்
ஆங்கில
மொழிபெயர்ப்பைக் கேட்டு அவளும் ஓடினாள்.
நீங்களே
சொல்லுங்க “மனுஷன் போறான்” என்றால் ManGoes தானே ! ஹி ஹி ஹி