Sunday, November 12, 2017

ஊமை ஜோசியரின் அருள்வாக்கு



மீனாக்‌ஷி நிவாஸ் ராவ் மாமாவுக்கும் , இந்திராணி மாமிக்கும் சுப்பிரமணியபுரம், ஜெயிந்திபுரத்தில் எல்லைச்சாமிகள் போல் சொந்தக்க்காரர்கள் ஏகப்பட்டவர்கள் உண்டு. அவர்கள் குடும்பத்தில் சொந்த்ததுக்குள் திருமணங்கள் அதிகமென்பதால், ஒவ்வொரு உறவினரும், குறைந்தபட்சம் மூன்று விதத்தில் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

அவர்களில் இரண்டு டஜன் குடும்பங்கள் பாரதி தெரு துவக்கத்தில் இருக்கும் கரிக்கடை (கறிக்கடை அல்ல) பக்கத்தில் இருந்தார்கள்.

அதில் ஒரு குடும்பம் மாமாவின் அக்கா (என்று அழைக்கப்படும்) ராஜி மாமி. அவருக்கு எதிர்த்த வீட்டில் இருந்த (அவர் சகோதரர்) ராஜா(ராவ்) வீட்டில் என்றும் இல்லாத அளவு  கூட்டம். பாட்டா கம்பெனி ஷோரூமை விட அதிக ஜோடி செருப்புகள் வீட்டு வாசலில்.

 இத்தனைக்கும் வீட்டில் விசேஷம் ஏதும் இல்லை.

அப்படி ஒரே நாளில் உலக வரைபடத்தில் அவர்கள் விலாசம் பொன்னெழுத்துக்களால் வரையப்பட்ட காரணம்…….

ஹேலிஸ் காமெட், மற்றும் எழுபதுகளில் பயமுறுத்திய ஸ்கைலேப் வரிசையில் ஒரு எதிபாராத விஜயம் தான் காரணம்.

மக்களின் துயர்துடைக்க வந்த ஒரு மாமனிதர் அவர் வீட்டுக்கு வந்ததுதான் காரணம்.

ஏனித்தனை பீதி கலந்த  ஏளனம்….

எல்லாம் அந்த மனிதரால் எனது அன்றைய 13 வயது வாழ்க்கையில் வந்த வர்தா புயல்.

அவர்தான் ஊமை சோதிடர். (ஹீரோ இண்ட்ரொடக்‌ஷன்)

ஜோஸ்யர் என்று வடமொழி கலந்து சொன்னால் சாதாரணமாகவும்,  சோதிடர் என்று தூய தமிழில் சொன்னால், சோதிப்பவர் என்று உக்கிரமாகவும் தெரியும். ...........நன்றாக சோதித்தார்.

அவரிடம் ஒரு ஜாதகத்தைக் கொடுத்தால் ஐந்து நிமிடங்களில் அந்த நபரின் வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாக, அருள் வாக்கு போல் சொல்லிவிடுவார். ஆனால் பாவம் பிறவி ஊமை.

என்னப்பா குழப்புறே !........... ஊமைங்கிற …வாக்குங்குற . ஊமை எப்படிப்பா பேசுவாரு என்று நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது.

வாக்கு என்றால், பேச மாட்டார் ஆனால் லாங் சைஸ் கோடு போட்ட  பேப்பரில் தன் கைப்பட எழுதிக் கொடுத்து விடுவார்.

பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு தெலுங்கு மாமா (என் அண்ணனின் கிளாஸ்மேட் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சங்கு அண்ணாவின் உறவினர்) அவர் எழுதியதை கட்டியங்காரன் போல் படித்து சொல்லி விடுவார்.

சொல்லும் (அதாவது எழுதும்) ஒவ்வொரு வரியும் அருள்வாக்கு போல் துல்லியமாக இருக்கும்.

ஏற்கனவே நடந்து போன நிகழ்வுகளை  ஜாதகத்தையோ அல்லது கைரேகை யைப் பார்த்தொ ஜோதிடர்கள்  சரியாகச் சொல்லும் போது  அவர்கள் பாண்டித்தியம் நம்மை மெய் மறந்து பாராட்ட வைக்கும் (Validation). அப்படிச் சொல்பவர்களின்  எதிர்கால கணிப்புகளின் மேல் நம்பிக்கை வைப்பது மனித இயல்பு.

இவர் பலருக்கு ( பலருக்கு என்ன பலருக்கு…..எல்லோருக்குமே !) துல்லியமாகச் சொன்னார் ( சரிப்பா, சொல்லல ,  எழுதினார்…..போதுமா !!)

பல கஷ்டத்தில் இருந்த எங்கள் குடும்பத்தாருக்கும் அவரிடம்ஆலோசனை பெற  ஆவல்.

போகும் போது பேசாமல் என் அப்பா , அம்மா மட்டும் போயிருக்கலாம்…..ஏதோ அவர்களுக்கு சோமாஸ்கந்தர் போல் அம்மை, அப்பன், குமரனுடன் மூவராக போய் வரத் தோன்றியதால், என்னையும் அழைத்துப் போனார்கள்.

மிஞ்சிப்போனால் 10×10 ஹாலில், ஒரு முப்பது பேர் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வரும் அளவுக்கு குழுமியிருந்தனர்.  அதனால்தான் வீட்டு வாசலில் அத்தனை செருப்புகள்.


நடுனாயகமாக ஹீரோ( ஜோதிடர்), அவருக்கு அடுத்து செகண்ட் ஹீரோவாக அவர் எழுதியதை ஊரறிய சத்தமாக படித்துச்  சொல்லி ( அப்பத்தான் ஜோஸ்யர் புகழ் பரவும் இல்ல) பிரபலமாகிக் கொண்டிருக்கும் தெலுங்கு மாமா !

பகலவனைச் சுற்றி  வரும் கோள்களாக, குடும்பத்தலைவர்கள்…தலைவிகள்

உபகோள்களாக , மானபங்கப்படுவதற்காகவே வந்திருக்கும் என்னைப் போன்ற அப்பாவிகள்.

 உபயோகமற்றுப் போன விண்மீன்கள், காலவதியாகிப் போன ஸ்கைலேபுகளாக, அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ளவே வேடிக்கை பார்க்க வந்திருக்கும் சுப்பிரமணியபுரத்து சோம்பேறிகள்.

எங்கள் முறை வந்த பொழுது , அம்மா, அப்பா இருவர் ஜாதகங்களும் படித்து சொல்லப்பட்டது. யார் யாருக்கு என்ன சொன்னாரோ நினைவில்லை, ஆனால் எத்தனை குழந்தைகள், குடும்ப நிலை, போன்றவற்றை பிரமாதமாகச் சொன்னார்.

அம்மாவுக்கு ஆயுள் 70க்கு மேல் என்றார். அன்று அதை நம்பினோம்.

இரண்டு ஆண் குழந்தைகள் அதில் பெரியவன் அருமையாகப் படிப்பான்.

இர்ண்டாவது ஆண் குழந்தையான ( 8 வது படிக்கும்போதே 35 கிலோ இருந்த குழந்தை) என்னைப் பற்றி ஏதோ அரசல் புரசலாகச் சொல்லியிருக்கலாம் !

பூர்வ ஜென்மத்தில் அவர் இயற்கையின் அழைப்பை ஏற்கச் சென்றபோது, நான் அவர் சொம்பைத்தூக்கி கொண்டு ஓடிவிட்ட மாபாதகச் செயலைச். செய்திருக்கவேண்டும், பழிக்குப் பழியாக .....சொல்வழியாக,  பேரிடியை நடுமண்டையில், மாட்டுக் கொட்டத்துக்கிற்கு அடிக்கும் ஆப்பாக என் தலையில் இறுக்கினார்.

உங்களது இரண்டாவது பையன் SSLC  தாண்டமாட்டான் என்று திருக்குறளினும் குறுக்கி, அரைக்குறள் பகர்ந்தார்.

எட்டுபுள்ள பெத்தாக்கூட லாபமாகலாம் அதில் ஏழாவது பிள்ளை(யாகிய நான்) கூட மேதையாகலாம் என்று நம்பிக் கொண்டிருந்த என் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி.

அவர் எழுதியதை  அந்தத் தெலுங்கு மாமா ஏற்ற இறக்கம், pause, comma,  எல்லாம் கொடுத்தும், அவர் படித்த படிப்பு , கற்ற வித்தை எல்லாவற்றையும் பயன்படுத்தி, என் மானத்தை தூக்கித் தொங்கவிட்டார். அதற்கும் மேல், என்னைப்பார்த்து ஒரு பயங்கரமான லுக் வேறு விட்டார்.

வெறுமனே  தொடர்ச்சியாக படித்துவிட்டு அடுத்த டாபிக்குக்கு போயிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. நடுவே நிறுத்தி கமர்ஷியல் ப்ரேக் விட்டது போல் நிறுத்தி என் பெற்றோர்களுக்கு ஏதோ தகவல் சொல்வது போல் நிறுத்தியதும், என் பெற்றோர்கள் கண்களாலேயெ உக்கிரமாக நவரசத்தையும் காட்டினார்கள். “வாடி, வீட்டுல ஒனக்கு "பாத' ரசமே காத்திருக்கு” என்றது போல எனக்குப் பட்டது.

நான் ஏதோ சிவில் இஞ்சினியர் சர்வே பண்ணுவது போல விட்டத்தைப் பார்த்தேன்.

அய்யன் சிவபெருமான் ருத்திரதாண்டவம் ஆட அண்டசராசரங்களும் நிலைகுலைந்ததுபோல் எனக்கு உலகமே ஆடுவது போல் தலை கிறுகிறுத்தது.

நான் என்னடா பண்ணினேன் சிவனேன்னு கிட்டிபுல் ஆடிக்கொண்டிருந்தேன்…..என்னை  சபைக்கு அழைத்துவந்து, மானபங்கப்படுத்தி ……எனக்கு தேவையா !

பெரிய பிள்ளை செல்லப்பிள்ளை, சின்னப்பிள்ளை எடுப்பார்கைப்பிள்ளை என்று (முருகன் வாயிலாக) AP நாகாராஜன் சும்மாவா சொன்னார் !

அன்றிலிருந்து எனக்கு விசேஷ கவனிப்பு !   கடந்த காலத்தைப்பற்றிய எல்லா கணிப்புகளும் துல்லியமாக இருந்து விட்டதால் , இந்த ரவி எஜஜல்ஸி தாண்டமாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்கள்.

சொல்லிவைத்தது போல அப்பொழுத்துதான் எட்டாம் வகுப்பு முதல் மாதத்தேர்வு கணக்கு பேப்பர் திருத்தி வந்தது. 50க்கு இரண்டு மார்க்.

புதுபாடத்திட்டமாம்,  ஏதோ செட் தியரியாம், வென் டயகிராமாம், ஒரு எழவும் புரியல ( இது நான் சொல்லவில்லை, என் வாத்தியார் சங்கர நாராயணன் சொன்னது)

அவருக்கே புரியலைன்னா, நான் என்ன பண்றது (இது என் மைண்ட் வாய்ஸ்தான், வாயத்திறந்து சொல்லமுடியுமா என்ன?)



ஊமை ஜோதிடரின் அருள் வாக்கால் ஒரு வருடத்திற்கு கடுங்காவல் தண்டனை, வீட்டில் இருந்தவர்களால்…

9ம் வகுப்பில் வி.ஸ்ரீ எனும் ஸ்ரீ நிவாஸன் கணக்கு சொல்லிக் கொடுத்தாரோ நான் பிழைத்தேன்.

பின்குறிப்பு : தப்புப் தப்பாக ஜோசியம் சொல்லிய ஜோதிடரை, என் பெற்றோர்கள் அமரலோகத்தில் பந்தாடியதாக சித்திரகுப்தர் என் கனவில் ஒரு நாள் சொன்னார்.

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...