Wednesday, December 22, 2021

ஞானசம்பந்தர் இடர் களையும் பதிகம் பாடிய திருநெடுங்களநாதர் கோவில், நெடுங்களம்



மகான்கள் ஸ்தல யாத்திரை செல்வது அவர்களுக்காக அல்ல, நம்மைப் போன்ற சாமான்ய பக்தர்களுக்காக என்பார் வாரியார் சுவாமி .  ஸ்தல யாத்திரை செல்வதனால், அங்கு கூடும் பக்தர்களுக்கு நல்ல செய்திகளை பகிர்ந்து அவர்கள் உய்ய உதவமுடியும் என்ற காரணம்தான் !

அது போல மகான்களுக்கு உடல் உபாதைகளும், அதன் நிவாரணத்தின்  பொருட்டு அவர்கள் பதிகம் இயற்றுவதும் அவர்களுக்காக அல்ல, பின் வரும் சந்ததியர்களுக்காக !


ஆதி சங்கரர் போன்ற மகான்களால் தங்களுக்கு ஏற்பட்ட வயிற்று வலி, தீய சக்திகளால் ஏற்படும் மாயையான நோய் போன்றவற்றை தாங்களே நிவர்த்தி செய்யமுடியாதா என பாழும்  மனது கேட்கலாம். அவர்களால் நிச்சயமாக முடியும்.  அப்படி செய்திருந்தால் வருங்கால  சந்ததியர்களுக்கு  அவர்கள் விட்டுச்செல்வது ஒன்றும் இருந்திருக்காது.   ஆனால் அதற்குப்பதில் அதற்கான சரியான தலத்தில் சென்று, முறையாக தொழுது, பதிகம் இயற்றினால், பின் வரும் தலைமுறைகளுக்கு நோயினின்று விடுபட ஒரு மார்க்கம் கிடைக்கும் என்பதால் அவர்கள் குறுக்குவழியில் ஏதும் செல்லாமல் இறைவனை நாடுவார்கள்.


ஆதி சங்கரருக்கு  ஏற்பட்ட நோயால்,  நோயிலிருந்து நம்மை காக்க திருச்செந்தூர் முருகன் உதவுவான் என்ற  உண்மையும், அவரால் அங்கு புனையப்பட்ட சுப்ரமணிய புஜங்கம்  என்ற அருமருந்தும்,    நமக்கு கிடைத்தது !


அதே போல திருநாவுக்கரசருக்கு சூலை வலி வந்ததால் திருவதிகை  வீரட்டானத்துறை அம்மானின்  மகிமையும்,  அவர் இயற்றிய பாடல்களும் நமக்கு கிடைத்துள்ளன .

திருமாலைத்தவிர  எவரையும் வணங்கமாட்டேன் என்ற 15ம் நூற்றாண்டு வைணவரான பகழிக்கூத்தர் தீராத வயிற்று வலி தீர தன்  கொள்கையை சற்று தளர்த்தி திருச்செந்தூர் ஆண்டவனை போற்றி திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடினார். 


வைஷ்ணவ சம்பிரதாயத்த்தில், நமக்கு நேரும் ஒவ்வொரு கஷ்டத்ததையும்  துடைக்க, தசாபுக்திகேற்ப ராமாயண பாராயணம்  சர்க்கங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன  ( தசாபுக்தி ராமாயணம் - லிப்கோ பதிப்பகம் ). ஆண்டவனின் திருவவதாரமான ராமனுக்கும், தாயாரின் திருவவதாரமான சீதைக்கும் ஏன்  துன்பங்கள் வரவேண்டும். காரணம்.... அவர்கள் பொருட்டு நமக்கு வழங்கப்படும் துயரம்தீர் ஒளடதங்கள். 


அந்த வரிசையில் உலக நன்மைக்காக ஞானசம்பந்தப் பெருமான் நமக்காக அருளிய பதிகம் "இடர் களையும் பதிகம்". இடர் என்றால் தடங்கல்.... இப்பதிகத்தை பாட எல்லா தடங்கல்களும் நீங்கும்.   எக்காரணத்தால் அவர் பதிகம் பாடினார் என்ன தடைகள் அவருக்கு இருந்தது என்ற தகவல் கிடைக்கவில்லை. விரைவில் அறிந்தவர்களிடம் தெரிந்து பகிர்கிறேன் ! 


இப்பதிகத்தின்  மேன்மையைப்பற்றி முன்பொரு பதிவில் பகிரும் வாய்ப்பு கிடைத்தது.  பேராசிரியர் சோ. சோ. மீனாக்ஷி  சுந்தரம் அவர்கள் இந்த பதிகத்தினால்  அவர் அனுபத்தில்  சமகாலத்தில் இருவருக்கு நோய் தீர்ந்தது பற்றி ஆச்சரியத்துடன் பகிர்ந்திருக்கிறார். 


சோ. சோ. மீ. வாயிலாக பதிகத்தின் பெருமை அறிந்தேன். பகிரும் நாளில் அடியேனுக்கு பல சோதனைகள்.  ஆனாலும் நமக்குத் தெரிந்த ஒரு தகவலை மற்றவர்களுக்கும் பகிரவேண்டும் என்ற ஆவலில் எனது கவலைகளை ஒரு புறம் வைத்து அவசர அவசரமாக பகிர்ந்தேன்.  பதிகத்தை அரை குறையாக வாசித்து கம்ப்யூட்டரில் காப்பி +பேஸ்ட் செய்து பத்தே நிமிடங்களில் .....

அரை குறையாக வாசித்தாலும் பரவாயில்லை, நல்ல தகவலை பலருக்கு சேர்த்தாயே  என்று நினைத்த எம் பெருமான், அடுத்த நான்கு மணி நேரத்தில்  மனத்துயரையும், தடங்கல்களையம்  தீர்த்தான்.  அடியேன் சொல்வது 200% உண்மை !

பகிர்ந்த தகவல் நல்ல தகவல் எனப் பலரும் ஏற்றதாலோ  என்னவோ , இதுவரை அடியேன் இட்ட பதிவுகளில் அதிகம் வாசிக்கப் பட்ட பதிவு அதுவே.   

பழைய பதிவைவாசிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்:   Link

அத்தலத்தை நேரில் தரிசிக்கும் பாக்கியம் (பதிகத்தை முழுதும் மனனம் செய்தபிறகே என்று இறைவன் நினைத்தாலோ  என்னவோ) சமீபத்திலேயே  கிடைத்தது .....6 மாதத்திற்கு பிறகு.



நெடுங்களம்  என்ற ஐம்பது வாசிகள்  மிகாத குக்கிராமத்தில்,  ஸ்தலம், தீர்த்தம்,விருட்சத்துடன்   சுயம்பு மூர்த்தியாக   இறைவன் கோவில் கொண்டிருக்கிறார். நித்தியசுந்தரேஸ்வரர் என்ற திருநாமம் இருந்தாலும், நெடுங்களநாதர் என்றே இவர் பிரசித்தம்.  தாயார் ஒப்பி(ல்)லா நாயகி / மங்கள நாயகி என அறிகிறோம்.  தலவிருட்சம் வில்வம் மற்றும் கஸ்தூரி அரளி. கஸ்தூரி அரளி என்ற பேரே  புதிதாக இருக்கிறது.


திருச்சி-தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் தாண்டியபிறகு பிரதான சாலையை விட்டு விலகி சுமார் 10-12 கி.மீ குறுகலான கரடு முரடான சாலையில் பயணித்தால்  நெடுங்களம்  கிராமத்தை அடையலாம்.  ராஜராஜன் காலத்து கல்வெட்டுக்களிலேயே இக்கோவில் பெருமை பேசப்படுவதால் கோவிலின் பழமை அறியலாம். (பழைய பெயர்:  “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்)


 கூகுள் மேப் லிங்க்:  https://goo.gl/maps/mcXAKeHhFpUFpkrYA


சற்றே வித்தியாசமாக கர்ப்பக்கிரகத்தின் மேல் இரு விமானங்களைக் காணலாம். ஆனால் ஒன்று சிவனுக்கு.... அப்படியானால் மற்றொன்று.  மற்றொன்று அரூபமாக சிவனுக்கு அருகில் இருக்கும் அன்னைக்கு . அன்னைக்கு கர்ப்பக்கிருகத்தில் பாதி இடம் கொடுக்கும் விதமாக சிவலிங்கம் மத்தியினின்று விலகி அமைந்துள்ளார்.



வரதராஜப்பெருமாளுக்கு தனி சந்நிதி உண்டு. 


பெரிய கோவில்,  விசாலமான பிரகாரங்கள், அமைதியின் மறுபெயராக எல்லா சந்நிதிகளும்..... விழாக்காலங்களைத்தவிர  ஏனைய நாட்களில் நீயும் நானும் மட்டுமே என்று இறைவனுடன் இருக்கலாம்.  



கோவிலைப்பற்றி பல தகவல்கள் கூகுள் கூறும் நல்லுலகில் கிடைக்கிறது.  நேரில் செல்லும் முன் அவற்றையெல்லாம் படித்து விட்டுச்சென்றால் நமது விஜயம் பயனுள்ளதாகும். 

அகத்தியர் இத்தலத்தில் வணங்கியதால் கோவில் நீர்நிலைக்கு அகத்திய தீர்த்தம் என்று பெயர். 


அருணகிரிநாதர் இத்தலத்தின் இறைவன் நெடுங்களநாதரைப்பற்றியும், நெடுங்களநாதர் அவர் புதல்வர் முருகனைப் பற்றியும், அங்கு வணங்கி ,  திருப்புகழ் பாடியிருக்கிறார்.


ஞானப்பால் உண்ட குழந்தை ஞானசம்பந்தர் அருளிய "இடர் களையும் பதிகம்"  இத்தலத்தின் சிறப்பம்சம்  என்பதால் அதை உணர்த்தும் வகையில் அவருக்கு சந்நிதி.  


பெரியபுராணம் பற்றிக்கூறும் போது  "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்று சொல்லி பிள்ளை பெருமான் ஞானசம்பந்தரை  புகழ்வார்கள்.  அதே போல் இத்தலத்தில்  பதிகம்  பாதி பெருமான் (சிவன்)பாதி என்று சொல்லும்படி ஞானசம்பந்தரின் இடர் களையும்  பதிகம் பிரசித்தம். 


நெடுங்களம்  சென்று வாருங்கள். பதிகத்தால்  இறைவனது துதியுங்கள். ( மாணிக்கவாசகர் வாக்கின்படி.....சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால் இன்னும் சிறப்பு ! ) தடைகள் அகலும். 


இடர் களையும் பதிகம் : 

பாடல் எண் : 01

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தியவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.



பாடல் எண் : 02

கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை

மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்

நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.



பாடல் எண் : 03

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத

என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த

பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்ல வந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, "என் அடியவன் உயிரைக் கவராதே" என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.



பாடல் எண் : 04

மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா

தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்

நிலை புரிந்த இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.



பாடல் எண் : 05

பாங்கின் நல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலி சேர்

தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி

தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ நின் தாள் நிழல் கீழ்

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 06

விருத்தனாகிப் பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய் ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 07

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 08

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை

அன்றி நின்ற அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்

என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்

நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின் மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 09

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும்

சூழ எங்கும் நேட ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்

கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடு இலாப் பொன் அடியின்

நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயா பீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ் பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடு மாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 10

வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்

தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்

துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.


பொருள் விளக்கம் :

கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.



பாடல் எண் : 11

நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்

சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன் நலத்தால்

நாட வல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன

பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.


பொருள் விளக்கம் :

மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடை முடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.



















2 comments:

Srikanth said...

Insightful and very well explained! ��

ARK said...

Thank you Srikanth.

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...