Friday, October 22, 2021

வடைகளிலே பல வகை உண்டு

புரட்டாசி மாதம், மகாளய பக்ஷம்(காலம்)  என ஒரே பக்தி சிரத்தையாக காலத்தை  கடத்தி, ஒரே கோவில் குளம்னு சுத்தி ஆன்மீகமாகவே போஸ்ட் போட்டு அலுத்துட்டதுனால வரப்போற தீபாவளிக்கு முன்னோட்டமா ஒரு "தீனி பக்ஷம்" .

இந்தப்  பதிவுல சதுர அடைப்புக்குறிக்கு [  ] உள்ளே இருக்கும் கமெண்ட் அடியேனின் மனசாட்சி. ஏதோ  ஒரு ஃ ப்ளோவில் ஓவரா புருடா விட்டா மனசாட்சி காட்டிக் கொடுத்துவிடும்.

எண்  சாண்  உடம்பிற்கு வயிறே பிரதானம்  என்பதால்  சாப்பாடு சம்பந்தமான ஒரு பதிவு [ அண்ணே, எண்  சாண்  உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பதுதானே பழமொழி

சரி ! சரி ! மனசாட்சி டூட்டி  சரியாய்ப் பார்க்கிறதா என்று சோதித்துப் பார்ததேன் .  ஒழுங்காகத்தான் வேலை பார்க்கிறது !


 வடைகளிலே பல வகை உண்டு

அதில் நான் கண்ட வகையும் சில உண்டு

வெண்மை  நிறம் அது உளுந்த வடை 

பவள நிறம் அது ஆமை வடை 

பச்சை நிறம் அது கீரை வடை 

மஞ்சள் நிறம் அது தவல வடை 

வான வில்லின் நிறம் அது மசால் வடை !

எத்தனை நிறமாய் அவற்றின் உடை 

கொலஸ்ட்ரால் இருந்தால்  எல்லாம் தடை !  


மலர்களில் பல நிறம் கண்டேன் என  பெரியாழ்வார்  வேடத்தில் சிவாஜி பாடியது நினைவுக்கு வந்தால் அது என் தவறல்ல.  அந்தப் பாடலின் காப்பி அல்ல .... ஒரு உத்வேகம் ...இன்ஸ்பிரஷன் தான் .  [ ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்தால் திருட்டு.... பல புத்தகங்களில் இருந்து எடுத்தால்  திரட்டு என்பார்களே அது போலவா அண்ணே  !] 



வடை என்பது உளுந்த வடை, ஆமை வடை என்று  மட்டும் நம் வட்டத்தை சுருக்கிக் கொள்ளாமல் பரந்த நோக்குடன் பார்த்தால்  வடை என்பது  ஒரு  கை  விரல்களால் எண்ணக்கூடியதல்ல !


உலகெங்கும் பறந்து வடையின் வட்ட, விட்ட, ஆரத்தை ஆராய்வோம் !


முதலில் வடை என்பதன் இலக்கணம்.   பருப்பு, அரிசி போன்ற தானியங்களின் கலவைகளை எண்ணையில் இட்டு பொரிப்பது . கையளவு மனசு இருக்கலாம் ஆனால் கையளவே வடை என்று இலக்கணத்தை சுருக்கினால் நஷ்டம் நமக்கே.   பல வகை வடைகள் விட்டுப்போய் விடும். 


முதலில் நம்மூரில் இருந்தே வருவோம் .  அதிகப் பிரசித்தமானது உளுந்த வடை....  நல்லது  கெட்டது  என எல்லா வீட்டு விசேஷங்களிலும் ஆஜராவது.   நீரில்லா நெற்றி பாழ் , வடையில்லா  உண்டி பாழ்  என்பது ஒளவையார் வாக்கு !  [ ரைமிங்கா வரணும்னா வரைமுறை இல்லாமல் ஒளவையை இழுப்பது அராஜகம் அண்ணே !


மெது வடை alias  உளுந்த வடை 


அன்றரைத்த  மாவின் சுவை செந்தாமரையை வென்றதம்மா என்பார்  ராமாயணத்தில்  [ ஓ .... கம்பர் வரைக்கும் போயிட்டீங்களோ .... நல்ல வேளை  கம்பர் எழுதியது பாரதம்னு சொல்லலியே.... அந்த மட்டுக்கும்  கம்பர் தப்பிச்சார் ! 


அப்போது அரைத்த உளுந்த மாவில் கிரமப்படி பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை , உப்பு போட்டு மந்த்ரா கடலெண்ணெயில்  பொரித்தெடுத்தால்  கிடைப்பது சொர்க்கத்தின் முதல் படி.  [ டிங்...டிங். டிங் ... இந்த வரியை உங்களுக்கு வழங்குபவர்கள் இதயம் எண்ணெய்  நிறுவனத்தார்]

 

அடேய் மனசாட்சி.... கம்பேனி  சீக்ரெட்ட வெளில சொல்லாதேடா !


பொரித்த உடன் சாப்பிட்டால் மெல்லும்  போதே வாயில் ஒலி  எழுப்பும். கரக்கு முருக்கென்று   [ அண்ணே ! பொரித்த  உடனே சாப்பிட்டால் நாக்கும் பொரிந்து  போகும் ஜாக்கிரதை !. பொறுத்தார்தான்  பூமியாள்வார் ]. 


ஆறிய பிறகு சாப்பிட்டால்   ஒலி  கிடையாது ! ருசி மட்டும்.


நாலு பேர் இருக்கும் வீட்டில் டஜன் கணக்கில் செய்து விட்டு திண்டாடுபவர்களும் உண்டு. பலர் வீட்டில் ஹோட்டலில் செய்வது போல் சரியான பக்குவம் வராது.  சிலர் செய்யும் வடை தட்டை மாதிரி ஆகி விடும்... சிலர் செய்வது இட்லி போல் நடுவில் மாவு வெந்தும் வேகாமலும்... . கணவன்மார்களுக்கு வேறு வழியில்லை விட்டத்தை பார்த்துக்  கொண்டே ஒரு வழியாக முழுங்கி விடுவார்கள்.  ஆனால்  குழந்தைகள் அப்படிக் கிடையாது பிடிக்கவில்லை என்றால் எழுந்து ஓடி விடுவார்கள். 


மூன்று வேளை  கட்டாயப்படுத்தி சாப்பிட்டும் தீராமல் இருக்கும் வடைகளை சாம்பார், ரசம், தயிர் என்று எல்லாவற்றிலும் ஊறப்போட்டு வித விதமாய், வடையில் நூல் வரும்வரை சாப்பிடலாம் எனக் கண்டுபிடித்தது தமிழர்கள்தான்!  


அதே உளுந்தவடையில், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் சப்பையாகத் தட்டி ஸ்பெஷல் வடை, செட்டிநாடு வடை என இஷ்டத்துக்கு பேர் வைத்து  அதிக விலையில் சங்கீதா, சரவணபவனில் போணி  செய்வார்கள் !  காலை அரைத்த பழைய மாவுதான் இப்படி தசாவதாரம் எடுக்கிறது என்பது தெரியாமல் சொத்தைக் கரைக்கும் அப்பாவித்  தமிழனை  என்ன சொல்ல  !


உளுந்த வடைக்கு மெது வடை என ஒரு செல்லப்பெயரும் உண்டு.  இந்தாப்பா மெது வடை, உன் சுரைக்கப்பரையை  காண்பி என்று பிச்சைக்காரனுக்குப் போட்டு கப்பரையில்  ஓட்டை விழும் அளவுக்கு மெதுவான வடை பற்றி 70களில்  குமுதத்தில் ஜோக் படித்திருக்கிறேன்.  


அதே உளுந்தமாவில் பாசிப்பருப்பு சேர்த்தோ சேர்க்காமலோ  தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து மிகவும் சன்னமாகத் தட்டும் வடை வட தமிழ்நாட்டு ஆஞ்சநேயர் கோவில்களில்  வடைமாலையாக உருவெடுக்கும். ஒரு வேளை  வடதமிழ்நாடு, வடதமிழ்நாடு என் பெருமையாகச் சொல்வதற்கு இதுதான் காரணமோ !

 

தென் தமிழகத்து வடை மாலை அன்றே  காலி செய்து விடவேண்டும்.  வட தமிழகத்து வடை மாலையை விபூதி குங்குமம் போல பல மாதங்கள் வைத்துக் கொள்ளலாம்.  இந்த வடைக்கு ஆஞ்சநேயர் வடை என்பது காரணவாகுபெயர்.


ஆஞ்சநேயர் வடை 

ஆஞ்சநேயர் வடை கடைகளில் கிடைக்காது... கோவிலில் மட்டுமே .  வருடம் ஒரு முறை மினரல் வாட்டர் பாட்டிலுடன் தமிழகம் வரும் NRIக்கள்   , ஒரே மாதத்தில் எல்லா உணவுகளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்ற ஆர்வத்தை உபயோகப்படுத்தி அடையார் கிராண்ட் சுவீட்ஸ் அறிமுகப்படுத்தியது மிளகு வடை . ஆஞ்சநேயர் வடை+ மிளகு - பச்சைமிளகாய் = மிளகு வடை என்பது அதன் சீக்ரெட் ஃபார்முலா. அடையார் கிராண்ட் சுவீட்ஸ் ரெட்டியார்  வேட்டி  துண்டு தவிர ஆசைப்படாத தொழில் பக்தியாளர். அவர் ஆட்டோவில் சென்று கூட யாரும் பார்த்ததில்லை. ஆனால்  அவரது சந்ததியினர் அவர் விட்டுச் சென்ற நற்பெயரை  உபயோகப்படுத்தி மெர்சிடிஸ் / அவ்டி காரில் வலம்  வருகின்றனர். அவர்கள் கோட்டை விட்டது 'பொருட்களின் தரம்" . 


மிஞ்சிய வடையை தயிர், ரசம்,  சாம்பாரில் போட்டு மேலே கொத்தமல்லி, காராபூந்தி தூவி தயிர் வடை , ரசம்வடை ,  சாம்பார் வடை என விதவிதமாக நாடு முழுதும் ஏமாற்றப்படுகிறோம்.  இதில் இன்னொரு தொழில் ரகசியம் சொல்லட்டுமா. ஹோட்டல்களில் வடைகளை வெந்நீரில் தான் ஊறப்போட்டு மொத்தமாக வைத்திருப்பார்கள். நீங் கள்  தயிர் வடை கேட்டால், நீர்வடையை ஒரு கிண்ணத்தில் போட்டு  தயிர், காராபூந்தி, கொத்துமல்லி போட்டு மேக்கப் போட்டு   மணப்பெண் போல எடுத்து வருவார்கள். அதிக விலைக்கு மேல் ஸ்தல வரிகள் தனி !


சாம்பார் வடை கேட்டால்  நீர்வடையை சாம்பார், வெங்காயம், கொத்துமல்லி போட்டு GST யுடன்  பரிமாறுவார்கள். மோர்க்குழம்பு வடையும் ,ரச வடையும் அப்படித்த்தான் !   வராதது பாயச வடை மட்டும்தான் . அதுவும் சத்தமாகச் சொல்லக்கூடாது, எவனாவது  ஹோட்டல்காரன்  கேட்டு விடுவான் 


நாடு கடத்தப்பட்ட தயிர் வடையின் பஞ்சாபி அவதாரம்தான் தஹி-பல்லா (Dahi -Bhalla ). அந்த ஊரில் மேக்கப் சாதனங்கள் மாத்திரம் சற்று மாறும்.  கொஞ்சம் உப்பு தூக்கலாக, எருமைத்தயிர், சாட்-மசாலா எல்லாம் தூவி ஹோலி அன்று வெளியில் வரும் பாமரேனியன் நாய் போல...... வடை ஊசிப்போய்  நூல் வராமல் இருக்க ஜிலுஜிலுப்பாக வைத்திருப்பார்கள் ! 


தஹி பல்லா 

சாதா உளுந்த வடை மொறு மொறுப்பாக இருக்க  அரைத்த உளுந்த மாவில் ப்ரெட்-பொடி  தூவி நம் கண்ணில் மண் தூவுவார்கள். 

உளுந்த வடை தட்டுவதும் ஒரு கலை . வாழை இலையில் சிறிது எண்ணெய்  தடவி வடை தட்டி அதை  உருமாறாமல்  வாணலியில் இட  வேண்டும். கொஞ்சம் தப்பினால் எண்ணெய்  மேலே தெறிக்கும்.  பல இல்லத்தரசிகள் வடை தட்டத் தெரியாமல் கரண்டியால் மாவை அள்ளி  வாணலியில் ஊற்றுவார்கள்.  முதலில் பலகாரம் செய்யலாம் அதற்குப்பிறகு அதற்கு வடை, போண்டா, குணுக்கு என்று  நிலைமைக்குத்  தகுந்தாற்போல் ஏதாவது ஒரு பெயர்  வைத்துக் கொள்ளலாம் என்பது அவர்கள் கணக்கு .  [குழந்தைக்கு பெயர் குழந்தை பிறந்தபிறகுதானே வைக்கிறோம். வடைக்கு மாத்திரம் ஏன்  முதலிலேயே பேர் வைக்கவேண்டும் ]


நான் கூட மனசாட்சி உறங்கி விட்டதோ என்று நினைத்தேன்... இல்லை 😅😅😅


ஓரு உணவகத்தில் வாழை இலைக்குப் பதில் பால்  கவரில் வடை தட்டினார்கள்.  பஜ்ஜியில் நடுவில் வாழைக்காய்க்குப் பதிலாக பிளாஸ்டிக் பேப்பர் வரும் நாள் தொலைவில் இல்லை ! 


மெது வடையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மலையாளி, என்ன பார்க்கிறாய் என்று கேட்டதற்கு, வடை  செய்த  பிறகு எப்படி இவ்வளவு அழகாக துளை போடுகிறீர்கள் என்ற ஜோக் 1960லேயே பிரசித்தம் !  சந்தர்ப்பம் நழுவிவிட்டதே என்பதைச் சொல்ல இந்த நாளில் "வட  போச்சே " என்று சொல்வது முதல் வடை நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து விட்டது !


அதே வடை மாவு, ஒரு சில பல் தேங்காய் போட்டு வட்டத்துக்கு பதிலா உருண்டையாகத் தட்டி, பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செயதால் அதன் பெயர்   மைசூர் போண்டா !  பெங்களூர் MTR ல் அந்த போண்டாவை சாம்பாரும் இல்லாமல் ரசமும் இல்லாத ஒரு நடுவாந்திர திரவத்தில் முக்கித் தருகிறார்கள். அதன் பெயர் போண்டா- சூப்.  முதன்முதலாக செட்-தியரி எட்டாம் வகுப்பில் அறிமுகப்படுத்திய போது  புரிந்தது போலும்  இருக்கும் ஆனால் புரியாது. அப்படி ஒரு இனம்புரியாத சுவை போண்டா சூப் ! 

மைசூர் போண்டா 

கர்நாடகத்தின் நாட்டுக்கான அர்பணிப்பு "மத்தூர் வடை (Maddur Vade)". மாண்ட்யா மாவட்டத்தின் மத்தூர் கிராமத்தில் தோன்றியதால் அந்தப் பெயர். அரிசி மாவில், சேமியா, மைதா சேர்க்கப்பட்டு உருவாவது.


 கர்நாடகத்தின்       அண்டைய மாநிலமான மஹாராஷடிராவின் கண்டுபிடிப்பு சாபுதான வடை. நீ சேமியாவில் வடை செஞ்சா நான் ஜவ்வரிசியில் செய்யமாட்டேனா என்று வந்தது சாபுதான வடை. செல்லப்பெயர் சாபு வடை. 




வடை உலகின் ராஜா  உளுந்த வடை அதனால்தான் அதைப்பற்றியும் அதன் சின்னவீடு போண்டா,  ஆசாரமான பெரிய வீடு ஆஞ்சநேயர் வடை, பரிவாரங்கள் சாம்பார், ரச, தயிர்  வடைகளைப்  பற்றி ஒரு பேருரை தேவைப்பட்டது. 


சோழ  மன்னன் உளுந்த வடை என்றால் பாண்டிய மன்னன் ஆமை வடை என்கிற பருப்பு வடை . புகழுக்கும், கீர்த்திக்கு குறைவில்லை.  உளுந்த வடை ஆசார சீலர் என்றால் ஆமைவடை யதார்த்தவாதி. உளுந்தவடைக்கு உளுந்து மாத்திரமே தேவை. ஆமை வடைக்கு மூன்று பருப்புகள் உபயோகப்படுத்தப்படும்   அந்த  பருப்புகளின் விகிதாசாரங்கள்  தெரிந்தோ தெரியாமலோ மாற்றப்படும் போது பல வகைகள் தோன்றும். 


கடலை, துவர , பாசிபருப்புகள் கலந்து , சற்று கரடு முரடாக அரைக்கப்பட்டு, காரம், உப்பு, பெருங்காயம் சேர்த்தால் வருவது ஆமை வடை. இந்த வடையின் வெளித்தோற்றம் ஆமையின் வெளிப்புறம் போல இருப்பதால் பருப்புவடைக்கு  ஆமை வடை என பட்டப்பெயர். எம்ஜியாருக்கு ராமச்சந்திரன் என்ற இயற்பெயரை விட வாத்தியார் என்ற பட்டப்பெயர் அதிகப் பிரசித்தம் ஆனது போல பருப்பு வடைக்கு ஆமை வடை என்ற பெயர் நிலைத்துவிட்டது .  [ உளுந்த வடைல உளுந்து இருக்கும் .....ஆமை வடைல  ஆமை இருக்குமாங்கிற 1950ன் கடி ஜோக் சொல்ல மறந்துட்டீங்க ]  


டிவியில் உண்மைச் சம்பவம்ன்னு சொல்லிட்டு எல்லாம் கட்டுக்கதையா இருக்குமில்லையா...அது போல ஆமைவடை  என்பது ஓர் தவறான சொல்வழக்கு (misnomer ). அது சுத்த சைவ உணவு !

ஆமை வடை 

சாதாரண பருப்பு வடையில்  வெங்காயம்,  கொத்தமல்லி தழை , புதினா, இத்யாதி இத்யாதி மசாலாக்கள் சேர்த்தால் வருவது மசால் வடை. ஈரோட்டில மசால் வடை செஞ்சா கரூர் வரை வாசனை வரும்.  முக்கியமான ஒரு தகவல். பூனைக்கு அடுத்தபடி அதிகமாக எலியைப்  பிடிக்க உதவியது இந்த மசால் வடை தான் என்கிறது நாசா வெளியிட்ட அதிரடி தகவல்  [அறிஞர் அண்ணணே  ! நீங்க சொல்றதை  அப்பாவிகள் நம்பனும்னு எதுக்கு நாஸாவை  இழுக்குறீங்க .  திருநள்ளாறுக்கு  மேலே சாட்டிலைட் ஸ்தம்பித்தது,  மீனாட்சி கோவிலின் அமைப்பைப் பார்த்து நாஸா  ராக்கெட் தடுமாறியது என்று யூடூப்பில்    யு-டியூபில் கட்டுக்கதை விடுறாங்ககளே .... அந்த பொழப்பு உங்களுக்கு தேவையா ! ]


எலிப்பொறிக்கு உற்ற தோழன் மசால் வடை. வெளிநாட்டு எலிக்கு வேணும்னா சீஸ் -cheese , pancake  சரிப்படும். ஆனால் நம்மூர் எலிக்கு  இல்லத்தரசிகள் நம்புவது மசால் வடைதான். அதுவும் வீட்டிலே பூர்ணா-கடலையெண்ணையில் செய்யும் வடையைவிட  கடையில் பாமாயிலில் செய்யும் மசால் வடைதான் எலிகளின் முதல் சாய்ஸ்  டிங்...டிங். டிங் ... இந்த வரியை உங்களுக்கு வழங்குபவர்கள் பூர்ணா  எண்ணெய்  நிறுவனத்தார் ]

மசால் வடை 

மசால் வடையின் ஒன்று விட்ட ஆசாரமான சகோதரன் தவலவடை. மசால்வடையில் வெங்காயம் வகையாறாக்களை நீக்கி தேங்காய்ப்பல்  கலந்து உருண்டையும் இல்லாமல், தட்டையும் இல்லாமல் நடுவாந்திரமாக செய்தால் அதுதான் தவலவடை ஆமை வடை போல தவலவடையும்  செய்யாத குற்றத்திற்கு  பழியை சுமந்து கொண்டிருக்கிறது. இதுவும் சுத்த சைவம்தான். தவளையெல்லாம் மாவில் கலக்கமாட்டார்கள்.  ஆமை, தவளை என்பதெல்லாம் எலியை ஏமாற்ற போட்ட சதித்திட்டமாக இருக்கும் !

தவல வடை 

பஞ்சாபில் அந்தக் காலத்திலேயே தோசையிலே  வன்முறையைப் புகுத்தி கீமா டோசா , மட்டன் டோசா  என ஏலம்  விட்டுக்  கொண்டிருந்தார்கள். நிச்சயம் வடையிலும்  கோழியையும், ஆட்டையும் புகுத்தி புரட்சி செய்திருப்பார்கள்.

வடைமாவுக்கான     பொருட்களை  ஒரு மாற்றத்திற்கு அரிசியும் சேர்த்து நிறம் மாற்றி சற்று காரம் சேர்த்து கரடு முரடாக உருட்டிப் பொரித்தால்  காரவடை  தயார். காராவடை  என்பதும் அதுவே. 


காராவடை 


ராஜஸ்தானில் கல்மி வடா  என்று ஒன்று உண்டு.




மெதுவடையின்  பரிணாம வளர்ச்சி மைசூர் போண்டா ... அந்த போண்டாவுக்குள் உருளைக்கிழங்கு மசால் திணித்து வந்த மற்றொரு பரிணாமம்  உ.கி. போண்டா. தமிழகத்தில் பிரபலம்.

அதே போண்டாவுக்குள் இனிப்பாக பருப்பு பூரணம்  நிரப்பினால்  அது சுகையல் / சுகையம் / சீயம். பருப்பு பூரணத்திற்கு பதிலாக தேங்காய் பூரணம் இட்டு பொரித்ததால் சோம்பேறிகளின்  கொழுக்கட்டை ரெடி.  அன்றன்றைய பூஜைக்கு / ஹோமத்திற்கு அன்றன்றைக்கு கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள்  பொரித்த கொழுக்கட்டையை சால்ஜாப்பாக செய்வார்கள்.

சுகையல் / சுகையம் / சீயம்

இதுவரை பார்த்தது இந்திய வடை வகைகள்தான்.  உலகெங்கிலும்  வடை வகைகள் உண்டு.  ஆனால் அதிகம் பிரசித்தி இல்லை. நாம்தான் ஓஸோன்  மண்டலத்தில் ஓட்டை விழும் அளவு வடை  சாப்பிடுகிறோம். 


கிரீஸில் மத்திய கிழக்கு நாடுகளில் பலாபெல்  (Falafel )  என்ற பெயரில் பச்சை  கொண்டைக்கடலையை  எள்ளுடன் அரைத்து வடை மாதிரி செய்வார்கள். 


பலாபெல்  (Falafel )

மத்தியகிழக்கு நாடிகளில் இருந்த யூதர்கள் அறிமுகப்படுத்த 19ம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவில் பலாபெல்  (Falafel ) உண்டு. பார்த்தீர்களா அதுவும் வட-அமேரிக்கா 

மெக்சிகன் பலாபெல்

தமிழர்கள், இந்தியர்கள்  தான் வீரமானவர்கள். வடையை தைரியமாக சாப்பிடுவோம். அரபு நாடுகளிலும், மெக்ஸிக்கோவிலும் வடையை சப்பாத்தியில் ஒளித்துவைத்து சாப்பிடுவார்கள்.... கோழைகள்  !

சப்பாத்தி தோல் போர்த்திய பலாபெல் 

வடையில் இத்தனை நிறங்கள்களா , வகைகளா என ஆச்சரியப்படும் விதத்தில் வெரைட்டி  !

நம்மூரில் வடைமாவில் உளுந்துக்கு பதிலாக அரிசி போட்டு, வெல்லமும்  ஏலக்காயும் போட்டு வடையில் அடுத்த பரிமாணத்தை கொணர்ந்தால் அது அதிரசம் மற்றும்  அப்பம்.

அதிரசம் 

வெள்ளைக்காரன் நமக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் அல்ல. நம் அதிரச பாணத்திற்கு அவன் விட்ட எதிர் பாணம்தான்  டோனட்  (DONUT ).   வடை மாதிரி எண்ணையில் பொரித்து பாதுஷா மாதிரி சர்க்கரைப் பாகில் நனைத்து எடுப்பார்கள்.  நாம் பாட்டி வடை சுட்ட கதையில் காகத்தை அறிமுகப்படுத்தியது போல வெள்ளைநாடுகளில் காகத்திற்கு டோனட்டை கொடுத்தார்கள் ~  அமெரிக்க காகம் டோனட் சாப்பிடுவதை டாம் & ஜெரியில்  பார்த்திருக்கலாம். 



சினிமாவில் கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரியை காப்பாற்றிய அந்தணர் சொல்லும் உபதேசம் " ஆயிரம் காகங்கள் வரினும்  ஒரு கல்லை எதிர்நிற்குமோ ! எத்தனை துன்பங்கள் வரினும் முருகனின் கருணை என்ற ஒன்று இருந்தால் போதும், எல்லாத்  துன்பமும் பறந்து போகும் "


மேற்சொன்ன  எல்லாப்பண்டங்களில்  இருக்கும் எண்ணெய் , மாவு, புரதம், உருளைக் கிழங்கு ஆயிரம் காகங்ககளைப் போல ஒரு சேர உங்களுக்கு கொடுக்க வல்லது 'வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரணம்".  அந்த துன்பங்களில் இருந்து முருகப்பெருமானின் கருணையைப் போல உங்களைக் காக்கவல்லது இஞ்சி  என்ற ஒரு அருமருந்து.  இத்தனை  வகை வடைகளையும்  தின்று விட்டு இஞ்சியை மறந்து விட்டால் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். 


பிறவிப்  பெருங்கடல் என்ற துன்பத்திலிருந்து விடுபட பக்தர்களைக் காப்பாற்ற ஒரு ஓடம் தேவை. அந்த ஓடக்காரன்தான் சீர்காழியில் இருக்கும் தோணியப்பன்  (சிவபெருமான்).  அந்தப் பெயரை வேறு ஒரு மதத்தினர் காப்பியடித்து அந்தோணி என்று வைத்துள்ளார்களோ என்று அடியென்னுக்கு சந்தேகம்.  


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்


என்று வள்ளுவர் நாலடியாரில் சொன்னது போல  [ அண்ணே  நான் முழிச்சுகிட்டு தான் இருக்கேன்.  தொல்காப்பியர் எழுதிய கம்பராமாயணம் என்று ஏதோ  முன்னாள் முதலமைச்சரை கேலி செய்வது போல இருக்கிறதே


தெரியும் தெரியும்... பதிவின் கடைசியில இருக்கோமுன்னு உன்னை எழுப்பினேன். மனசாட்சி தூங்கிடுச்சுன்னு வருங்கால சரித்திரம் என்னை பழிக்கக் கூடாது பாரு !

அப்பேர்ப்பட்ட  இஞ்சியை நாடினால் மட்டுமே வாயுத்தொல்லை என்ற பெருங்கக்கடலிலிருந்து மீளமுடியும் ! 

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். பாதம் அல்வா விலைக்கு தீபாவளி லேகியம் (கிராண்ட் சுவீட்ஸ்லில்  (போன வருடம் கிலோ 1200 ரூபாய் ...இந்த வருடம் எகிறியிருக்கும் ) விற்கும்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும், எது அதிகம் தேவை என்று. தீபாவளியை அளவாகக் கொண்டாடி வளமாக வாழ  மாதவத்தால் மட்டுமே அடையமுடியக்கூடிய மாதவனின் தாழ் வணங்கி வாழ்த்துகிறேன் !

இத்தனைக்கும் மேலே பிறவிப்பயன் என்று ஒன்று இருந்தால் அது அழகர்கோவில் தோசை தான்.  பேர்தான் தோசை... ஆனால் அது சற்று பெரிய வடை. கிடடத்தட்ட பருப்பு வடைக்கு போடும் பொருட்களை அரிசியுடன் அரைத்து தோசை போல் பெரிதாக ஊற்றி வடை போல் நெய்  (ஆமாங்க நெய்தான்)  வாணலியில் பொரித்து எடுப்பார்கள்.  அழகர்கோவில் பிரசாத ஸ்டாலில்  மற்ற எல்லா பக்ஷணங்களும் கவுண்டரிலேலேயே கிடைக்கும், இந்த தோசை மாத்திரம் டோக்கன் வாங்கி மடப்பள்ளியில் ஆர்டரின் பேரில் பொரிப்பார்கள்.   மேலும் தகவலுக்கு: https://www.vikatan.com/food/food/madurai-alagar-kovil-temple-special-samba-dosa

அழகர் கோவில் தோசை 

திருமாலிருன்சாலை என்ற அழகர்கோவிலைச் சுற்றி சோலைகள், வயல்வெளிகள். நூபுர கங்கையின் ஊற்று நீர், அறுவடை செய்ததும் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்கும் தானியங்களின் சிறப்பு, கடவுள் தயை என எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தாலோ என்னமோ ஒரு தனி சுவை !  


 பின்குறிப்பு/ பொறுப்பு துறப்பு : இங்கே இருக்கும் தகவல்கள் தகவல்களே... பரிந்துரை அல்ல ! . எல்லாவற்றையும் செய்து, விழுங்கி உடம்புக்கு வந்தால் அடியேனோ கூகுள் நிறுவனமோ பொறுப்பல்ல.  வடை செய்து பார் என்று மட்டுமே சொல்லுவோம் . சாப்பிட்டுப் பார்ப்பது உங்கள் ரிஸ்க். 

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...