Monday, August 23, 2021

எறும்பு தின்றால் கண் கிடைக்கும்

எறும்பு தின்றால் கண் கிடைக்கும்  என்பது அனைவரும் அறிந்த பழமொழி.  எறும்பு  ஃ பார்மிஸிடே (Formicidae)என்ற உயிரியல் குடும்பத்தைச் சார்ந்தது. எறும்பின் உடலில் பரவலாகக்  காணப்படும் ஃ பார்மிக் அமிலத்தின்   (HCOOH ) பெயர்க்காரணம்  எறும்பின் குடும்பப் பெயரான ஃ பார்மிஸிடேயிலிருந்து வந்தது என்பது எடப்பாடி தயவில் கொரோனா ஆதரவில் 10ம் வகுப்பு தேர்ச்சி  பெற்ற  மாணவர்கள்  கூட கண்டுபிடித்து விடுவார்கள்.   







ஃ பார்மிக் அமிலம் (formic  acid )  உணவு மற்றும் பொருட்களை கெடாமல் பாதுகாக்கவும்  & பாக்டீரியா எதிர்ப்பு ( preservative and antibacterial)  சக்தி போன்ற குணாதிசயங்களைக்  கொண்டது. 


இது போன்று சில அறிவியல் தகவல்களை / சூத்திரங்களை ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டி (விக்கிப்பீடியாவிலிருந்து திருடி) அதனால் எறும்பு தின்றால் கண் கிடைக்கும்  என்று சொன்னால்  ஆஹா... இவன் விஷயம் தெரிந்தவன் என்று கட்டுரையாளரின் கட்டுக்கதைகள் அனைத்தையும் இந்த உலகம் நம்பி விடும். 


எறும்பு தின்பதற்கும் அடியேன் சொல்லவிருக்கும் தகவலுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. இப்படித்தான் நாம் பழமொழிகளை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் !

எறும்பை நாம் தின்பது என்பது பொருளல்ல ! எறும்புக்கு தின்ன பொருள் கொடுக்க அதன் புண்ணியம் நமக்குக்  கண்பார்வை கிடைக்கும் என்பதே சரியான பொருள் ! அதாவது தர்மத்தின் மகத்துவம் பற்றி விளக்கும் பழமொழி! அறம் செய்ய விரும்பு !


இயன்றவரை தான தருமம்  செய்யுங்கள் ! தானம் செய்ய கர்ணனாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. குசேலர்களும் கூட தானம் செய்யலாம், அவருக்கு இயன்ற வழியில் !


பழைய துணிமணியைப் போட்டு பிளாஸ்டிக் வாளி வாங்குவதற்குப் பதில் உடுப்பு இல்லாத ஏழைகளுக்கு தானமாகக்  கொடுக்கலாம் !


எறும்பு வளையில்  சிறிதே நொய்  போடலாம் (அரிசிக்கு குருணை ) .  இரண்டு ஸ்பூன் அரிசி மாவு / குருணை 500 எறும்புகளுக்கு ஓரு  நாள் உணவு !   கண்ணில்லா எறும்புக்கு உணவு கொடுக்க நமக்கு கண் பார்வை விருத்தியாகும் (தகவல்: பல எறும்புகளுக்கு கண் என்று இரண்டு இருந்தாலும் அவை கண்ணால் பார்க்காமல், புலன்களால் உணரும் தன்மை கொண்டது, எனவே எறும்புக்கு கண் இல்லை என்பார்கள்

இதிலிருந்தே எறும்பு தின்ன கண் கிடைக்கும் என்ற பழமொழி உண்டாயிற்று .

 நமக்கு எங்கே புரியப்போகிறது .... நாம் தான் அரிசி மாவுக் கோலத்தை நிறுத்தி பாறாங்கல் பொடியால் கோலம் போடும் தலைமுறையாயிற்றே ! 


மிகக்குறைந்த காலத்தில் எப்படி பெரும் செல்வம் சேர்த்தீர் என்று கேட்டதற்கு செம்மணம்  வரதாச்சாரியார் மேற்கோளாகச்  சொன்ன பாடல் (பாடல் அவருடையதல்ல )


கட்டத்துணியற்று காந்த பசிக்கு அன்னமற்று
எட்டி மரம் ஒத்திருந்த யான்
எறும்புக்கு நொய்யரிசி இட்டேன் - அதனால்
சிறுது பொருள் ஈந்தான் சிவன்.

அப்பொருள்க்கொண்டு அடியவர்க்கு அன்னமிட்டேன்
ஒப்புவமை இல்லான் உள முவந்தே இப்பார்
அளகேசன் என்றே அதிக செல்வம்
அளவிலாது ஈந்தான் அவன் 


பசிக்கு உணவில்லாமல், உடுத்த உடையில்லாமல் இருந்த எனக்கு இறைவன் சிறிது அன்னம் ஈன்றான். அதில் சிறிது நொய்யரிசியை  எறும்புப் புற்றுக்கு இட்டேன், மேலும் சிறிது பொருள் கொடுத்தான் இறைவன். அந்தப் பொருளில் இறைவனடியார்களுக்கு அன்னம் கொடுத்தேன் . உண்மையான அடியவர்களுக்கு தானம் கொடுத்ததால் எண்ணற்ற செல்வத்தை எனக்கு கொடுத்தான் கடவுள் என்பது பொருள்.

நம்மிடம் செல்வம்  இருந்தால் தான் தானம் என்பதில்லை, இருப்பதில் ஒரு சிறு பகுதியை மற்றவர்களுக்கு (மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ ) கொடுக்கலாம். 

தானம் என்பது மனம் சார்ந்தது, பணம் சார்ந்ததல்ல  என்பதை விளக்குவதே "எறும்பு தின்றால் கண் கிடைக்கும்  " என்ற மொழியின் பொருள் !









No comments:

சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா

  முருகேசன் : மாப்பிள்ளை... பல பேரு பல விதமா சொல்ராங்ய ... இந்த வருஷம்  சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா ?....நம்பலாமா நம்பக்கூடாதா ? அதுக்கு ஏ...