Friday, February 26, 2021

(ப்)பிருகன்நாயகி உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருமயிலாடி




மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

எனும் குறள்  மானுடப் பிறவிகளுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கும் பொருந்தும் என உயர்த்தும் ஒரு திருக்கோவில்  திருமயிலாடி. 


சிவபார்வதி கோவிலாக இருந்தாலும், அவர்கள் குமாரன் கந்தவேளாலேயே  பிரசித்தியாக அறியப்படுகிறது. 


சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் விளையாட்டாக வந்த (இருவரில் யார் அழகானவர் என்ற)  போட்டியால் ஒரு தருணத்தில் கோபமடைந்த சிவன் திருக்கயிலாயத்தை  விட்டு மறைந்தார் . துடித்த (திருத் )தேவி மயிலாக மாறி சிவனை நோக்கித்  தவமிருந்தார். மனம் குளிர்ந்த முக்கண்ணர் தேவி முன் தோன்ற, மயில் வடிவானவளான உமையம்மை  தோகை  விரித்து  ஆடியதால் இத்தலத்திற்கு திருமயிலாடி எனப் பெயர். திருத்தேவி மயிலாக ஆடியதால் காரணப்பெயர்! (கேகிநிருத்தபுரம்)

கண்வ மகரிஷியால் பூசிக்கப்பட்டதால்  கண்ணுவாச்சிபுரம் (புராண காலப் பெயர்) 

மற்றபடி மயிலின் ஏகபோக உரிமைபெற்றவரான  முருகப்பெருமானின் தலம் என்பது  ஆதி சரித்திரத்தின் படி உண்மையல்ல ! அது பின்பு ஏற்பட்டது.

அழகின் பொருட்டு கடவுளரின் திருவிளையாடல் அமைந்ததால், இங்கு சிவபெருமான் "சுந்தரேஸ்வரர்" என அழைக்கப்படுகிறார் . இப்பெரிய ஆண்ட சராசரத்தின் பெரிய கடவுள் என்ற வகையில் உமையம்மை "பெரியநாயகி (ப்ருகன்நாயகி) எனப்படுகிறார்.

பெரியநாயகியின் சிற்பம் வடிக்கும்போது  ஒரு பாதவிரலில் பின்னம்(வெட்டு)  ஏற்பட சிற்பி அச்சிற்பத்தை  ஒதுக்கிவிட்டு அதே போன்று இன்னொரு சிற்பம்  செய்து பிரதிஷடை  செய்தார். சிற்பியின் கனவில் தோன்றிய அன்னை லோகமாதா "ஓ , இப்படித்தான்  மூப்பு  காரணமாக   அன்னையின் உடலில் குறை தோன்றினால் உன்னைப் பெற்ற அன்னையை ஒதுக்கி விடுவாயா" எனக்  கேட்க திடுக்கிட்ட சிற்பி   கனவை மன்னரிடம் சொல்லி இரு சிலாரூபங்களையும் பிரதிஷடை செய்தார் 

காலிலிருந்த  பின்னம் இன்று இல்லை, இரு இறைவடிவங்களும்  ஒன்றாகவே  உள்ளன   என்று இந்நாள்  அர்ச்சகர் தகவல் அளிக்கிறார். 



பழமையான கோவில். இன்றிருக்கும்  கோவில்  வளாகம்  சுமார் 600 வருடங்களிருக்கலாம் . ஆனால் லிங்கரூபம் அதற்கு  முன்னானது.


சூரசம்ஹாரம் நிகழும் சற்று முன்பு, ஜுரதேவி துணைகொண்டு  சூரபத்மன்  படை வீரர்களை மயக்கமுறவும், நோய்வாய்ப்படவும்   செய்தான்.  மனம் சஞ்சலம் அடைந்த முருகன்  இத்தலத்தில்  இறைவனை நோக்கித் தவமிருந்தார் . சிவபெருமான் சீதளா  தேவியை அனுப்பி படை வீரர்களை மீளச்  செய்தார்.  பின் சூரசம்ஹாரம் நிகழ்ந்தது. முருகனை இத்தலத்தில்   தவக்கோலத்தில் (கண்கள் மூடியபடி ) காணலாம்.

கிழக்கு நோக்கி இருக்கும் சிவனை  பக்தர்கள் நாமெல்லாம் வடக்கு நோக்கி நின்றபடி வணங்குவது போல், முருகனும்  வடக்கு நோக்கி நின்றபடி  தவமேற்றுவது மற்ற ஆலயங்களின்று  மாறுபட்டது. மற்ற ஆலயக்களில் பிரகாரத்தில் கிழக்கு  நோக்கியே இருப்பார் !



வடக்கு நோக்கி தவமேற்றி நிற்கும் முருகனை அவர் எதிராக (தெற்கு நோக்கி) நின்று வணங்குவது  சிறப்பு 



 மற்ற இடங்களுள் மயில் மேலமர்ந்த முருகன் இங்கு  மயிலைக் காலால் அமுக்கி  அடக்குவதைக் காணலாம். (மயிலான) சூரபத்மன் ஆணவமலம் . ஆணவத்தை அடக்கவேண்டும் (அடைக்கலம் அழிக்க முடியாது ) என்பதே போல் !


இத்தலத்தில் எதிரிகளையும் துன்பங்களையும் அடக்க/ அழிக்க முருகனை பக்தர்கள் வேண்டுவார்கள். எதிரியென்றால் மனித எதிரி மட்டுமல்ல ,  நம்மிடம்  இருக்கும் தீயகுணங்கள், அகம் என்று சொல்லக்கூடிய  ஆணவம். நான், நான் ...நான்   என்று நொடிக்கொருதரம் மார்தட்டும் அகம்பாவம் . இவையெல்லாம் அழிந்து  முருகப்பெருமானே தஞ்சம் என வந்தவர்களுக்கு நல்வழி தந்ததால் இங்குள்ள  முருகன் தந்தையினும் பிரபலம். இவ்வாறாக முதற்கூறிய குறளுக்கு  தந்தையும் தனயனும் அர்த்தம் கற்பித்த்தார்கள் 


கரடுமுரடான முற்களே  தோலான  பலாப்பழத்தை  தேன் சுளைகள்  போல் ,  அணுகுவதற்கு   சற்றே கடினமான கிராமத்தில் உள்ள கோவில்.  அழகு ததும்பும்  கிராமம் ......அற்புதமான கோவில். குடமுழுக்கு செய்யப்பட்டு பல வருடங்கள்  ஆனதுபோன்ற தோற்றம். ஆனால் இறைவன் சாந்நித்தியம்  முழுதும் அமைந்த ஆலயம். 

பெரிய லிங்க ஸ்வரூபத்தில் சுந்தரேஸ்வரர்.... ஒன்றுக்கு இரண்டாக திருத்தேவியின் சிலாரூபங்கள் அருகருகே தனித்தனி சன்னிதிகளில்.

ஒன்றுக்கு இரண்டாக விநாயகர். அவற்றுள் ஒன்று கண்வ மகரிஷியால் அமைக்கப் பெற்றது.

நின்ற, தவக்கோலத்தில் முருகப்பெருமான், இவ்வட்டாரத்தில் பிரசித்தி பெற்றவர்.

சப்தகன்னியர், மற்ற கோஷ்ட மூர்த்திகள். முருகனைப் பார்த்தோ என்னமோ, எப்பொழுதும் ஆசிக்கோலத்தில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தியும் இங்கு பத்மாசனத்தில் தவக்கோலத்தில் !

கோவில் சிறிதானாலும் கீர்த்தியும் சொத்துக்களும் ஏராளம். பஞ்ச லோக சிலைகள், வட்டாரத்து மற்ற கோயில்களின் சிலைகள், ஆபரணங்களை பாதுகாக்க 24  X 7  பாணியில் மூன்று ஆயுதமேந்திய போலீஸ் காவலர்கள் கோவில் உள்ளேயே !  (போலீஸ்) குடியிருந்த கோயில் முதன் முறையாகப் பார்க்கிறோம் !

முருகனின் வேலால் ஏற்பட்ட பெரிய குளம்.... பக்தகோடிகள் குறைவாக வருவதால் குளம் ஆரோக்கியமான நிலையில்.

ஒவ்வொரு மணிக்கும்  மணி அடித்து பஞ்சாக்ஷரம் உச்சரித்து தேவாரம் பாடும்  எலக்ட்ரானிக் உபகரணம் அருமையிலும் அருமை !

கோவிலுக்கு சென்று விட்டு இரண்டு நாட்களாகியும் நெஞ்சை அகல மறுக்கும் அனுபவம்.

சீ(ர்)காழிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில். வாகனவசதியிருந்தால் எளிதில் செல்லலாம். 

திருமயிலாடியின் அருகில் (7 கிமீ) தொலைவில் ஆச்சாள்புரம். திருஞானசம்பந்தருக்கு திருமணம் மற்றும் மோக்ஷம் கொடுத்த பாடல் பெற்ற ஸ்தலம். 

திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்ல, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் உமையம்மை விபூதி வழங்க, சிவபெருமான் மோக்ஷம் தந்த  உயர்வான திருத்தலம். 

திருமயிலாடி,  திருநல்லூர் பெருமணம்  எனப்பட்ட ஆச்சாள்புரம் இரண்டையும் ஒருசேரக் காணலாமே !


(பின்குறிப்பு: கோவில் வெளித்தோற்றம் மாத்திரமே புகைப்படம் எடுக்கலாம். இறை ரூபங்களை நேரிலே காண்பதே சிறந்தது. அடியேன் எடுத்தது வெளித்தோற்றப்  புகைப்படங்கள் மட்டுமே. முருகனின் படங்கள் இண்டர்நெட்டில் இருந்து பெறப்பட்டது) 




From: Govt of Tamil Nadu publication Thirukkovil - August 1973


No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...