Monday, June 15, 2020

ஒரு தேசியவாதியின் கிரிக்கெட் கடமைகள் !



இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அன்று இந்திய கிரிக்கட் வீரர்கள் இங்கிலாந்து நேரம் காலை 10:30 மணிக்கு துவங்கும் நிகழ்வுக்கு 5 மணிக்கே எழுந்து, "வார்ம் அப்" பில் ஆரம்பித்து, ஓட்டம், நடைவழியாக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்து காலை 10:15 வரை கசரத்து வாங்கி விடுவார்கள் என்று செவி வழி செய்தி!


வீரர்கள் மட்டும் என்ன, ரசிகர்களுக்கும் அத்தனை கடினமான பயிற்சி காத்திருக்கிறது. எனது "ப்ரிபரேஷனை"ப் பாருங்கள். என்னைப் போல் பல கோடி ரசிகர்களுக்கும் அவரவர்கள் நிலைமைக்கேற்ப "ப்ரிபரேஷன் " காத்திருக்கிறது.

1. இந்திய நேரப்படி 3 மணிக்கு மேட்ச். நல்ல வேளை வெஸ்ட் இண்டீஸ் /ஆஸ்த்திரேலியாவில் நடக்கவில்லை. இல்லைன்னா பேய்கள் வாக்கிங் போற நேரத்திலே தனியா டிவிக்கு முன்னால உட்கார வேண்டியிருக்கும். இங்கிலாந்தில் போட்டியென்றால் சாவககாசமாக எழுந்து தயாராகலாம்

2. முதல் நாளே சக(அ )தர்மிணியிடம் காய்கறி, மளிகை சாமான் லிஸ்ட் எல்லாம் கேட்டு வாங்கி கடைக்குப் போய் சாமான்கள் எல்லாம் வாங்கிகொடுத்து, அவள் வாயை அடைக்க வேண்டும். இல்லையென்றால் விராட் கோலி டாஸ் போடும் நேரத்தில் நம் கையில் மஞ்சப்பையைக் கொடுத்து அஞ்சே அஞ்சு கிராம் கடுகு வாங்க சோழிங்கநல்லூர் வரை துரத்துவாள். சோழிங்கநல்லூரில் தான் நல்ல நயம் கடுகு கிடைக்குமாம் !

மூன்று மாதத்துக்குண்டான மளிகை சாமான்கள் வாங்கி வீடு நெடுக அடுக்கினாலும், தேவையே இல்லாத, மாமாங்கத்துக்கு ஒரு முறை உபயோகிக்கும் "ஜாதிப்பத்திரி" வாங்கி வர ஆண்களைத் துரத்தும் டெக்னீக்கை, அதுவும் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் போது, பெண்களிடம் தான் கற்க வேண்டும்.

ஒரு அழுகாச்சி சீரியல் "எழவு டிவியில்" நடக்கும் போது பெண்களிடம் "அம்மா, குக்கர் 47வது விசில் அடிக்கிறது" என்று சொல்லிப்பாருங்கள், போன மாசம் தெவச பிண்டம் வாங்கிப் போன உங்கள் கொள்ளுப் பாட்டிக்கெல்லாம் வசவு விழும் ! இந்த லட்சணத்திலே ஆண் பெண் சம உரிமைப் பற்றி பிரசங்கம் வேறு ! சரி சரி நாம கிரிக்கெட்டுக்குப் போவோம் !

3. முதலில் வீட்டு வாசலில் ஒரு பெரிய பேப்பர் ஓட்ட வேண்டும். "இந்த வீட்டிற்கு வரும் குரியர் , அமேஸான் பார்சல், இத்யாதி இத்யாதி களை " இதே காம்ப்ளெக்சில் இருக்கும் 32ம் நம்பர் வீடடில் டெலிவர் செய்யவும்" என்று . இல்லாவிட்டால், ரோஹித் ஷர்மா சிக்ஸ்ர் அடிக்கும் நேரத்தில் காலிங் பெல் அடிப்பான் அந்த கூரியர் பாய். 32ம் நம்பர் வீடு ஏன் என்கிறீர்களா ....அந்த வீட்டில் தான் அமோல் பேனர்ஜின்னு ஒரு கல்கத்தா கிழ போல்ட் ஒண்ணு இருக்கு ....கல்கத்தாவில் மமதை பேனர்ஜியின் ஆட்டம் தாங்க முடியலை. அவங்களை நேரா பழி வாங்க முடியலை...அதுதான்... ! . (திருப்பதி ஏழு மலையானுக்கு வேண்டிக்கொண்டு, போகமுடியாமல், தி.நகர் வெங்கடநாராயணா ரோடு பெருமாள் கோவிலுக்கு போறதில்லையா ? அதுபோலத்தான்.... ஹி ஹி ஹீ )

4. வாசலில் மேலே சொன்ன பெரிய பேப்பருக்கு அடியே ஒரு சின்ன பேப்பர் ஓட்டணும்.... Swiggy / Zomato ஆளுங்களுக்கு. "பார்சலை கதவுக்கு அருகில் வைத்து விடவும்" என்று. இல்லாவிட்டால், நாம் கொலை பட்டினி தான் இருக்கணும். (எப்படியும் Swiggy டெலிவரி ஆனதும் நமக்கு ஒரு sms வரும், அந்த நேரம் ஒரு தடவை கதவு லென்ஸ் வழியாகப் பார்த்துவிட்டு நைஸாக சாப்பாட்டு மூட்டையை எடுத்துக் கொண்டு வரலாம்).

ஆனா இந்த ஸ்விக்கிக்காரன் சாப்பாட்டு மூட்டையை 32ம் நம்பர் வீட்டு கிழத்துக்கு குடுக்காம இருக்கணும் ஆண்டவா !

நான் இந்தியா ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணுவேனா இல்லை இந்த ஸ்விக்கிக்காரன் சாப்பாட்டை 32ல் குடுக்காம இருக்கணும்னு வேண்டிக்குவேனா ! இந்த மனுஷ ஜென்மம் ரொம்ப கொடுமைடா முருகா !

5. மேட்ச் நடக்கும் நேரம் இந்தப் பாழாய்ப் போன இ.பி கரண்ட் கட் பண்ணாம இருக்கணும். அப்படிப் போனா கை கொடுக்க இன்வெர்ட்டர் சரியா வேலை பண்ணுதான்னு பார்க்கணும். பேட்ட்ரீ ல தண்ணி இருக்கான்னு பார்க்கணும்.

6. நமக்கு கரண்ட் இருந்து ஆனா ரிலே வரலேன்னா என்ன பண்றது. லேப் டாப்ல புல் சார்ஜ் போட்டு வச்சுக்கணும் . அதுக்கும் மீறி சார்ஜ் போச்சுன்னா..... பரண் மேல ஏறி அக்பர் காலத்து UPS ஐ எடுத்து தயார் பண்ணி வச்சுக்கணும்

7. டிவி ரிலே வரலேன்னாலும் அந்த பகவான் கருணைல HOTSTAR ல கிரிக்கெட் காண்பிக்கிறான் புண்ணியவான். லேப்டாப் ல HOTSTAR செட்டிங் எல்லாம் போட்டு தயாரா இருக்கணும் !

8. எதுக்கும் கைவசம் எஃப்.எம் ரேடியோ, ஷார்ட் வேவ் ரேடியோ இருக்கட்டும். மாட்ச் பார்க்க முடியலைன்னாக் கூட கமெண்ட்ரி கேட்டுக்கலாம்.

9. மொபைல் போன் ஆஃப் பண்ணி ஏர் பிளேன் மோட்ல போட்டு வச்சுக்கணும். இல்லைன்னா ஜடேஜா பௌல் பண்ண தயாராகும் போது ஒரு ஞானசூன்யம் "வாயு" புயல் குஜராத்தை தாக்குமா தாக்காதா என்று போன் செய்து கேட்ப்பான் ! அது எப்படிடா (செந்தில் கவுண்டமணியைப் பார்த்து கேட்ட) ஸ்வப்பன ஸுந்தரி பற்றிய கேள்விபோல என்னைப் பார்த்து கேட்பே !

10. சொந்தக்காரர்களுக்கெல்லாம் போன் செய்து "இன்று சாயங்காலம் 3ல் இருந்து 9 வரை உங்கள் ஏரியாவுக்கு வரும் வேலை இருக்கிறது, வேலை முடித்து உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வருவேன்" என்று ஒரு பிட் போட்டு விட வேண்டும் ....இல்லையென்றால் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து விடும் அபாயம் இருக்கிறது !

11. நாம் சாப்பிடுவதற்கு மிக்சர் , பக்கோடா, பிஸ்கெட், என ஒரு நாலைந்து கிலோவும், இந்த ஐட்டங்களின் பக்க, பின் விளைவுகளை தாக்குப் பிடிக்க, தீபாவளி மருந்து, இஞ்சி முரப்பா , ஓம வாட்டர், பெருங்காயம் போட்ட மோர் எல்லாம் தயார் செய்ய வேண்டும். ஏழைகள் தீபாவளி மருந்தை தவிர்க்கவும். அதன் விலையும் காஜு கத்திலி விலையும் கிட்டத்தட்ட ஒன்று. காஜு கத்திலி 100 ரூபாய் குறைவு !
மாம்பழம் சீசன்னுக்கு நல்ல தேர்வு !டயபடிஸ் உள்ளவர்கள் தர்பூஸ் தேர்வு செய்யலாம் !

Add caption
12. நாலைந்து தண்ணீர் பாட்டில் அருகில் வைத்துக் கொள்ளவும். நாம் போய் எடுத்து வரும் நேரத்தில் விக்கெட் விழுந்து விடக்கூடாது பாருங்கள் ! ஆனால் டயாப்பரை தவிர்க்கவும். அந்த அளவு சோம்பேறித்தனம் கூடாது !
மேட்ச்சில் டிரிங்க்ஸ் இன்டர்வெல்லின் போது நாம் தண்ணீர் குடித்து, அடுத்த இன்டர்வெல்லின் போது "அந்த"ப்புரம் சென்று நம்மை நாமே டிசிப்பிளின் செய்து கொள்ள வேண்டும். நம் நாட்டிற்காக இந்த ஒரு தியாகம் செய்ய மாட்டோமா என்ன ?

13. இத்தனைக்கும் மேலே இந்த ஸ்லோகத்தை (ஓம் ஜலபிம்பாய வித்மஹே நிலா புருஷாய தீமஹி தந்நோ வருண ப்ரசோதயாத் ) மேற்கு முகமாக அமர்ந்து 108 முறை செபிக்கவும். இங்கிலாந்தில் மழை வராமல் இருக்கத்தான். மேற்கு நோக்கி எதற்கு என்கிறீர்களா ? கிழக்கு நோக்கி என்றால் சென்னையில் மழை வருவது தடுக்கப் பட்டுவிடும். அப்படி ஆனால் திமுக, அதிமுக, பிஜேபி பாரபட்சம் பார்க்காமல் சென்னை வாசிகள் எல்லோரும் நம்மை மராமத்து பண்ணிவிடுவார்கள் ! அவ்வளவு தண்ணீர் கஷ்டம் பாருங்கள் !

யார் சொன்னார்கள் கிரிக்கெட் வீரர்கள் தான் பல மணி நேரம் ப்ரிப்பேர் செய்வார்கள். பாமரர்களாகிய நேயர்களும் தான் ! #IndiaVsPakistan

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...