Friday, September 22, 2017

நவராத்திரியில் மதுரை


நவராத்திரியில் மதுரை
(70, 80களின் மதுரை பற்றிய  மலரும் நினைவுகள்)


உலகத்திலேயே தொடர்ச்சியாக  வாழ்ந்து வரும் நாகரீகம் மதுரை என்பது உலக உண்மை. பதியப்பட்ட வரலாற்றின்படி, கி.மு 3ம் நூற்றாண்டில் இருந்து எந்தத் தடையும் இன்றி தொடர்ந்து வரும் நகரம் மதுரை. அது அன்னை மீனாக்ஷியின் அருட்கருணை என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. மதுரை என்றதும் மீனாக்ஷி கோவில் நினைவுக்கு வரவில்லையென்றால், அந்நபர் கோமாவில் இருக்கிறார் எனக் கொள்க !



ஸ்வப்னசுந்தரியின் இம்பாலா காரைப்போல, பல மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தாலும், மதுரை என்ற நகரத்தை அசைக்கவோ,  அழிக்கவோ யாராலும் முடியவில்லை. அழிக்க ஒரு சில மன்னர்கள் முயன்றாலும், முக்காலே மூணு வீசம் மூணு மாகாணி மன்னர்கள் கோவிலுக்கும் நகரத்திற்கும் நல்லதையே செய்திருக்கிறார்கள். கோவிலின் பற்பல கோபுரங்களைப் பார்க்கும் போது அவை வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டது தெரியும்.

தினமுமே திருநாள் இக்கோவிலில் ! நவராத்திரியில்...... கேட்க வேண்டுமா ! என் பள்ளி தமிழாசிரியர் (சமஸ்கிருத ஆசிரியர் கூட)  திரு பி.எல் ராகவன் “ விரல் உரல் போல வீங்கினால், உரல் எவ்வளவு பெரிதாக வீங்கும்” என்பார்.

சாதாரண நாளிலேயே திருவிழாக்கோலமாக இருக்கும் கோவிலில்  நவராத்திரியில் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா !  சாதாரண நாட்களில் கோவிலில் இருக்கும் கோலாகலம், தெய்வீகம், ஒவ்வொரு தெருவிலும் பார்க்கலாம்

நவராத்திரியில் மீனாக்ஷி கோவிலில் மட்டுமல்ல எல்லாக்கோவிலும் கோலாகலங்கள் அமர்க்களப்படும். நித்திய அலங்காரம், நித்திய அவதாரம் என களைகட்டும்.

நான் இருந்த சுப்பிரமணியபுரம் ஏரியாவிலிருந்து (அதாங்க, இன்னாளில் திரைப்படமாக வந்து நமக்கு 80களின் மதுரையை அருமையாக நினைவுக்கு கொண்டுவந்த திரைப்படத்தின் கதாநாயகனாகிய குறுநிலம் ) கோவிலுக்கு 2.3 கி.மீ, போகவர 4.6 கி.மீ.(கூகுள் பெரியண்ணாவிடம் கேட்டுவிட்டே இந்தத் தகவலை சொல்கிறேன்)....இது 4.5 கி.மீ என்றால், கோவிலுக்குள் நடப்பது குறைந்தது 2.5 கி.மீட்டருக்கு சமம். சன்னிதி சன்னிதியாக நடக்க வேண்டும். ஒரு கோவிலுக்குப் போனாலே 7 கி.மீ. நடை. இன்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

முதலில்., அம்மா அப்பா, பாட்டி தொந்திரவால் கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்டேன் .....இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன். முனிசிப்பாலிடி ஊழியர்கள் நாயைப் பிடித்துச் செல்லும் போது இருக்கும் நாயின் ரீயாக்‌ஷன் போலவே இருக்கும் என் போன்ற சிறுவர்களின் கதறல்.

சித்திரைத் திருநாளுக்குப் போனாலாவது, கலர்க் கலராக ஜவ்வு மிட்டாய் கிடைக்கும், பச்சை, நீலம், ஆரஞ்சு  நிறத்தில் ஜவ்வு மிட்டாய் நாக்கில் விட்டுச்செல்லும்  தடத்தை பக்கத்து வீட்டுப் பையனிடம் காண்பித்து, அவன் வயிற்றெரிச்சலைக்  கொட்டிக் கொள்ளலாம், ஆனால் நவராத்திரி சீஸனில் கோவிலுக்குப் போனால், நீதி கேட்டு நெடிய பயணம் மட்டுமே மிஞ்சும், கால்கள் கெஞ்சும்.  “சோத்துக் கீரையை வழிச்சுக் கொட்டுடி சொரணை கெட்டவளே” என்ற பழமொழிக்கேற்ப, கோவிலில் கிடைக்கும் விபூதியை தின்று பசி ஆறவேண்டும். உண்மையை சொல்லவேண்டும் என்றால் விபூதி ருசியாகவே இருக்கும் !  இது தெரிந்து தான் ஞானசம்பந்தப் பெருமான் ஆலவாயாகிய மதுரையின் பெருமையைப்பற்றி....

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

பசியாற்றுவது நீறு என்பது நான் புரிந்து கொண்ட புதுமொழி !

மருந்து போல் முதலில் கோவிலுக்குச் சென்று வந்தாலும் அக்கோவிலின் தொகையறா ஈர்ப்பு என்னைப்போல் பலரையும் கவர்ந்து இழுத்தது.  கோடை விடுமுறை நாட்களில், காலை சுமார் 10 மணிக்கு தினமும் போவது ஒரு அருமையான அனுபவம். (அன்னாளில்) மீனாக்‌ஷி சன்னிதியில் அம்மன், அர்ச்சகர் தவிர மொத்தம் 5 பேர் இருப்போம். மற்ற சன்னிதிகளையும் பிரகாரங்களையும் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று இது நம்பும்படியாக இருக்காது.

விழாக்காலங்களிலோ, மற்ற சாயங்காலங்களிலோ நேராக தரிசனம் செய்து விட்டு கூட்டத்துக்கு பயந்து ஓடுவோம், கோடை விடுமுறை நாட்களில் அது வரை காணாத பல அரிய சன்னதிகளையும், தகவல்களையும் காணலாம். உதாரணத்திற்கு, மதுரையில் பலா மரஙகளைக் காண்பது அரிது.  மீனாக்ஷி கோவிலில் பலா மரம் இருப்பது 
ஆச்சரியமான தகவல்.

அத்தோடு பல தோடுகளையும் (மதுரை பாஷையில் “தோடு” என்றால் கட்டுக்கதை என்பது அருஞ்சொற்பொருள்) சேர்த்தே கேட்கவேண்டி வரும். உதாரணம்...
  • 1.       சுந்தரேஸ்வரர் சன்னிதி (படியேறிய பிறகு) நுழைவாயில் வலப்புறம் ஒரு சிறு அறை இருக்கும். இந்த அறையில் தான் விலையுயர்ந்த நகைகள் இருப்பதாகவும், அதை நாகங்கள் காவல் காப்பதாகவும் கட்டுக்கதை
  • 2.       அந்த நகையை திருடச்சென்ற ஊழியர் ஒருவரை நாகம் தீண்டி, மரணம். அந்த உடலை மற்றோரு ஐந்து தலை நாகம் இழுத்துச் சென்று, சுரங்க வழியாக திருமலை நாயக்கர் மஹாலில் போட்டு விட்டது.

இந்த கட்டுக்கதைகள் சுந்தரேஸ்வரர் சன்னிதி பற்றி இருப்பதாலோ என்னவோ சிவனுக்கு “தோடுடைய செவியன எனப்பெயரோ” ? இது ஐயவினா அல்ல, கேலி வினா !

தினமும் இப்படி கோயிலுக்கு போகும் எங்களை இம்சைப்படுத்த சில நல்லுள்ளங்கள், எங்களது பெற்றோரிடம் “உஙக பையன் தினமும் கோயிலுக்கு போறானா இல்லை மீனாக்‌ஷி தியேட்டரில் அவளோட ராவுகள் காலைக்காட்சி பார்த்துவிட்டு, தெருக்கோடி கோவிலிலிர்ந்து குங்குமம் எடுத்து நெற்றியில் பூசி வருகிறானா என்று பாருங்கள்” என்று  வத்தி வைப்பார்கள்.

மீனாக்‌ஷி தியேட்டரில் அவளோட ராவுகள் ஓடுதுன்னு அவனுக்கு எப்படித் தெரியும்னு கேளு, என்று நாங்கள் மடக்கியதும், அந்த நல்லுள்ளம், பகலவன் கண்ட பனித்துளி போல குதித்தோடும்! 

மதுரைக்கு முதலில் 1974ல் ஊர் மாறி வந்தபோது,  என் வயது நண்பர்கள் கோவிலுக்கு தனியாகப் போய் எந்த வித குழப்பமும் இல்லாமல் வெளியே வந்ததாகச் சொல்லும்போது மனம் நம்ப மறுத்தது. அவ்வளவு பெரிய கோவில்…. இந்தப் பொடியன் எப்படி நுழைந்து வெளியே வரமுடியும் என்று ஆச்சரியம்.


Louis Malle என்பவர் தமிழகம் பற்றி பல காணொளிப்படங்கள் செய்திருக்கிறார். சில மேல் நாட்டவரைப்போல எனக்குத் தெரியாத பிரஞ்சு மொழியில் நமது கலாச்சாரத்தைப் பற்றி இகழ்ந்து பேசியிருந்தாலும், அந்தக் காணொளிகளை நமக்குத் தந்த அரிய சேவைக்காக என் மனம் நன்றி கலந்த பாராட்டைத் தெரிவிக்கிறது. இல்லாவிட்டால், 1945ன் மதுரையைப் பார்த்திருக்க முடியுமா?. ஒரு திரைப்படத்தில் அவர் மீனாக்ஷி கோவில் இரட்டைப்பிள்ளையார் அருகில் கேமராவை நிறுத்தி, 45 நிமிடம் வருவோர் போவோரை எல்லாம் படமாக்கியிருப்பார். யாருக்குத்தெரியும், என்னுடைய அல்லது உங்களுடைய தாத்தாவோ, பாட்டியோ அன்று கோவிலுக்கு வந்திருக்கலாம், அவர்களது வீடியோ பதிவாயிருக்கலாம். பல கோடி கொடுத்தாலும், அந்தப் படத்தை நம்மால் எடுக்க முடுயுமா.  (நான் என் தாய் தந்தை, பாட்டி தாத்தாவை அந்தப் படத்தில் தேடினேன்.....நீங்களும் தேடவும், நீங்கள் ஒரு வேளை அதிருஷ்டசாலியாக இருக்கலாம்). எல்லாம் யூடியூபில் உள்ளது.

சில வெளிநாட்டவர்கள் தெற்கு கோபுரத்தை அருகில் நின்று ஒரே புகைப்படத்தில் எடுக்க திண்டாடும்போது, மதுரைக்காரன் என்ற கர்வம் மனத்தில் படமெடுக்கும்.

ஆடி வீதியில் கோசாலை அருகில் இருக்கும் மரத்தடியில் அமைதியான மாலையில் உட்கார்ந்து கேட்கும் மெல்லியதான தேவாரப் பாடல், இறைவனைக் கண்முன் நிறுத்தும். இம்மை, மறுமை பற்றி நினைக்கத் தூண்டும். ஒரு அசாதாரணமான அனுபவம்.

அந்தக் காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு சான்றிதழ் certificate கிடைக்குமென்றால் சிரசாசனம் செய்து மூக்கால் தண்ணீர் குடிக்கவும் தயாரக இருப்போம். அந்த ஒரு இச்சையின் வெளிப்பாடு நவராத்திரியில் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் “வாலண்டியர்” வேலை எடுத்துக் கொள்ள வைத்தது. மொத்தம் மூன்று வருடம் அந்த சேவை செய்தேன். அதன் பயன், சர்ட்டிபிகேட் கிடைப்பது தவிர 9 மணிக்கு மேல் விஐபி போல தரிசனம் செய்யலாம். மற்றபடி தண்ணீர், பிரசாதம், இயற்கையின் அழைப்பை ஏற்க 5 நிமிட இடைவெளிகூட கிடையாது

9 மணி டியூட்டி முடிந்து வீடு திரும்பும் போது வழியில் தென்படும் ஓவ்வொரு கோவிலும் ஒரு எக்ஸ்பிரஸ் தரிசனம் செய்து  வெளிப்படுவோம். சில நாட்களில், தெற்கு கோபுரம் எதிரில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். ஒரு  நாள் மதனகோபாலசுவாமி, ஒரு நாள் கூடலழகர், ஒரு நாள் சௌராஷ்ட்டிரா கிருஷ்ணன் கோவில், என பல கோவில்கள்.,….. சில கோவில்களில் சுண்டல் பிரசாதம், ஆனால் நான் போகும் அகால வேளைகளில், பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருப்பார்கள். நம் அதிருஷ்டம் கூடத்தானே வரும்..  ஹூம்....

மதுரையின் ஒரு தனித்தன்மை வீடுகளில் வைக்கப்படும் “கொலு” . எல்லா ஊர்களிலும் கொலு வைப்பார்கள் என்றாலும் பழைய மதுரையில் (கோவில் சுற்றி ஒரு கிமீ சுற்றளவில்) அது விசேஷம். எல்லா வீடுகளும் தனிவீடாக இருக்கும். ஒரு தெருவில் வாசல், அடுத்த தெருவில் கொல்லை. எல்லா (அதிகபட்சம்) வீடுகளிலும், திண்ணையில் தொடங்கி ஹால் வரையில் எல்லா அஙகணங்களிலும் கொலு வைத்திருப்பார்கள். அந்த வீடுகள், மாலை ஐந்திலிருந்து பத்து வரை திறந்தே இருக்கும், யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். வீட்டுக்கு சொந்தக்காரர்களை எங்கும் பார்க்க முடியாது. எல்லா அறைகளிலும் கொலு வைத்துவிட்டு அவர்கள் 6க்கு ஆறு அறைகளில் முடங்கி இருப்பார்கள்.

கொலுவில் ஒவ்வொரு வருடமும் ஒரு தீம் இருக்கும், இந்த வருட தீம் அடுத்த வருடம் பார்க்கமுடியாது....தசாவதாரம், திருவிளையாடல், இராமாயணம், முருகன் கோவில்கள்,  என விவித வண்ணங்களின், எண்ணங்களின்  வெளிப்பாடுகள்.

அக்கம் பக்கத்தார்களுக்குள் நட்பான போட்டி. சமயத்தில் உக்ரமான போட்டியாகக் கூட இருக்கலாம்!  ஓவ்வொரு பழைய பொம்மைகளும் கலை நயத்தின் வெளிப்பாடுகள். தத்ரூபமாக இருக்கும்.

சமீபத்தில் சென்னை மைலாப்பூர்  வடக்கு மாட வீதியில் தெருக்க்கடைகளில் பொம்மைகளை பார்க்கும் போது குமட்டிக்கொண்டு வந்தது. முக்கண்ணன் சிவனை ஒன்றரைகண்ணனாகவும் முருகன் வாட்ச்மேன் போலவும், பாற்கடல் எம்பெருமானை ஆஸ்பத்திரி நோயாளி போலவும் பார்க்க, எனது மூன்றாவது கண்ணும் நெருப்புப் பொறி கக்கியது. உள்ளூர் உபத்திரவம் போதாது என்று இந்த சீனாக்காரன் தொந்திரவு வேறு. எல்லாப் பொம்மைகளும் கண்கள் சொருகி ஏதோ கஞ்சாக் கேஸ் போல  இருக்கிறது.

நானும் பல விடுகளுக்குள் நுழைந்து பார்த்திருக்கிறேன். சில வீடுகளில் சுண்டல் வினியோகம் அமர்க்களப்படும். என்னை போன்ற பொடியர்கள் சிலர் மார்க்கெட் இண்டலிஜன்ஸ் வேறு தருவார்கள். கீழ ஆவணிவீதி 18ம் நம்பர் வீட்டில் இன்று மொச்சைக்கொட்டை சுண்டல், இன்னும் ஒரு ½ மணிக்குள் போனால் நன்மை தருவார் கோவிலில் கூட்டம் குறைவு போன்ற உபயோகமான தகவல்கள்.

ஒரு சில பணக்காரர்கள் வீட்டில் முந்திரிப்பருப்பு, பாதாம் சுண்டல் கூட தருவார்கள்  என்று கதை கட்டுவோம் ( நான் யாரைச்சொல்கிறேன் என்று அந்த நபருக்கு புரிந்திருக்கும்....மற்ற நபர்கள் யூகிக்கலாம். சரியான ஊகத்திற்கு பரிசு காத்திருக்கிறது.. வேறு என்ன பரிசு, சுண்டல்தான்)

ஒரு சில வீடுகளில் ஒரு முதியவரை திண்ணையில் உட்காரவைத்து, கொலு பார்த்து வெளியே வருபவர்களுக்கு சுண்டல் வினியோகம் செய்வார்கள். ........சில குசும்புக்கார பொடியர்கள், அந்தப் பெரியவரைப்பார்த்து “ “ஏய் பெருசு,  நாளைக்காவது உப்பு காரமா சுண்டல் செய்யச் சொல்லு” என்று கேலி பேசிவிட்டு மின்னாலாக ஓடி விடுவார்கள்.

கொலு வைப்பதில் ஜாதி வித்தியாசம், பொருளாதார வேறுபாடு என்று எதுவும் கிடையாது. சில தொழில் நிறுவனங்களும் இந்தப் பாரம்பரியத்தை கடைப்பிடித்தனர். இன்று சென்னையிலும் வங்கிகளில் இதைப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டு கொலுவுக்கு போகும்போது கேவலம் ஒரு 25 கிராம் சுண்டலுக்கு ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த அலைபாயுதே (ரஹ்மான் பாட்டு அல்ல) , வினாயகனே வினை தீர்ப்பவனே பாடல்களை ஆண்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற எந்த ஒரு சிந்தனையும் இன்றி ரெக்கார்ட் தேயத்தேயப் பாடியிருக்கிறேன். 

ஒரு சிலர் அதையும் பாரட்டும் போது, மற்றவர்கள் எப்படி கர்ணகொடூரமாகப்பாடி மக்களை சோதித்திருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ளமுடிந்தது. மதுரையில் சிவபெருமான் மட்டுமல்ல பாட்டுப்பாடும் ஓவ்வொருவரும் “ சோதிப்பது, சோதனக்குள்ளாக்குவது”  என்று திருவிளையாடுவது சோதனைதான்.

இந்த சீஸனில் அதிக சுண்டல் வினியோகத்தால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்தது என்று “நாசா” ஒரு அரிய தகவலை வழங்கியிருக்கிறது.

மதுரை வடபாகங்களிலும் (வைகைக்கு அந்தப்புறம்),, மற்ற நகரங்களிலும் இந்த அளவு இருக்குமா என்று எனக்குத்தெரியவில்லை, நான் பார்த்ததில்லை என்பதே உண்மை. ஊரே கொண்டாடும் அளவுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.

2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சரித்திர மாநகரில், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மதுரை சீர்கெடும் முன் பிறந்து வளர்ந்தது முற்பிறவியில் செய்த பூஜாபலன்.

அதே நேரத்தில், மீனாக்‌ஷி கோவிலும், மற்றைய கோவில்களும் இந்த சீர்கேட்டில் பாதிக்கப்படாமல் என்றும் போல் தெய்வீகமணத்துடன் இருப்பது, இந்த மாநகரம் பல நூற்றாண்டுகளாயினும் தனித்தன்மையை இழக்காது என்று நம்பிக்கை அளிக்கிறது.


அதானால்தோனோ என்னவோ கோவில் இல்லாத ஊர் பாழ் என்றார்களோ !






.

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...