Thursday, October 24, 2019

நீங்கள் சிரித்தால் தான் எனக்கு தீபாவளி




நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, கருப்பு வெள்ளை காலத்தில் பிறந்திருந்தாலும் அந்தக் கால தீபாவளியில் வர்ணங்களுக்குக்  குறை இருந்ததேயில்லை. நண்பர்கள் எவரும் பணக்கஷ்டத்தால்  தீபாவளி  இனிக்கவில்லை  என்று சொல்லி நான்  கேட்டதில்லை. ஆனந்தம் என்பது மனம் சார்ந்த விஷயம், பணம் சார்ந்ததல்ல.......என்ற உலகமகா தத்துவத்துடன் தொடங்குகிறேன்.



தொ(ல்)லைக்காட்சி 70/80 களில்  இல்லை என்பது முதல் மகிழ்ச்சி. 30 நொடி மங்கல  இசையைத் தொடர்ந்து 30 நிமிட விளம்பரம்.... பின் தீபாவளியின் சிறப்பு பற்றி அமி ஜேக்ஸனிடம்  சிறப்பு பேட்டி ....பின்  30 நிமிட விளம்பரம்... பின் "சேப்பங்கிழங்கு அல்வா " செய்வதெப்படி  என்ற  நாணஸ்ரீ ஸ்பெஷல் , தொடர்ந்து 30 நிமிட விளம்பரம், பின்பு உலகத்திலேயே முதன்முறையாக திரைக்கு வந்து சிலமணி நேரங்களே ஆன (9மணி காட்சி மாத்திரம் காண்பித்த நிலையில் தியேட்டரை விட்டு தூக்கி எறியப்பட்ட )  பவர்ஸ்டார் அவர்களின் காதல் காவியம், போன்ற இன்ன பிற தொல்லைகள் அற்ற நிம்மதியான காலம்.

வானொலியில் காலை 5 மணிக்கு இனிமையான நாதஸ்வர இசை, பின்பு அர்த்தமுள்ள பக்தி பாடல்கள், உபயன்யாசங்கள், இனிமையான புதுத் திரைப்படப்  பாடல்கள் என்று விளம்பர நிகழ்ச்சிகள் அற்ற காலம். 

தீபாவளிக்கு இன்னும் 103 நாட்கள் தான் என்று நமது வகுப்புத் தோழனின்  அறிவிப்பு என்ற மங்கல இசையோடு தொடங்கும் "கவுண்ட் டவுன்" . அவ்வளவு பக்கத்திலா ! என்று உடனே காலண்டரைத் தேடுவோம். 

அந்தக் காலத்து தீபாவளிக்கு அவ்வளவு பெரிய கவுண்ட்-டவுனுக்கு  காரணங்கள் இதோ:

  •  பல வீடுகளில் வருடத்திற்கு ஒரு முறை (ஒரே முறை) தீபாவளிக்கு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புதுத்துணிமணிகள் கிடைக்கும். மணி இன்று இங்கே சொல்லப்படுவது ஒரு அடுக்குச் சொல்தான்.  நிஜமான  மணி (பணம்) எல்லாம் கிடையாது. மணி என்பது பெற்றோர்களிடமே இருக்காது !
  •  பட்டாசு வெடிக்கலாம் 
  • விதவிதமான பக்ஷணங்கள் (பலகாரங்கள்). நம் வீட்டு தயாரிப்புகள் போதாதென்று அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து கிடைக்கும் இலவச இணைப்புகள்.
  • 3-4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் (பட்டாசு வெடித்து கையில் புண்ணாவது,  அதிக தீனியினால் வயிறு உபாதை, அதிகாலை எண்ணெய்  தேய்த்து குளித்ததால் ஜலதோஷம், போன்ற அத்தியாவசிய காரணங்களை கண்டு பிடித்து விடுமுறையை நீட்டித்துக் கொள்ளலாம்)

நம்மைப்போல் வாத்தியாருக்கு அஜீரணம் போன்ற காரணங்களால் விடுப்பு நீட்டிப்பு உண்டு என்பது மற்றோரு சுவாரசிய போனஸ். 

பொங்கலுக்கு கவுண்ட்-டவுன் கரும்புத் துண்டுகள் மெல்வது போல தீபாவளிக்கு கவுண்ட்-டவுன் படடாசுகளிலிருந்து தொடங்கும்.  மத்தியதர குடும்பத்தினர் எவராலும் தீபாவளிக்கு முன்பு பட்டாசு வாங்க முடியாது என்பதால்,  பொட்டு -கேப்பில் மங்களகரமாக துவங்கும். சாதாரணமாக பொட்டு -கேப் ஒரு சிறிய வட்ட வடிவ டப்பாவில் 50 பொட்டுகள் நிரப்பப் பட்டிருக்கும். அதை வெடிக்க நமது வசதிக்கேற்ப ஆயுதம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொட்டு -கேப் வாங்கிய அதே வாரத்தில் பட்ஜெட் இடம் கொடுக்காது என்பதால், வெடிக்க நல்ல கூழாங்கல்  தேவைப்படும்.

அடுத்த வாரத்திலிருந்து  வசதிக்கேற்ப 

(1) நட் ( இரண்டு  நாட்டுக்களுக்கு இடையே இரண்டு வாஷர்கள், அந்த இரண்டு வாஷர்களுக்கு  இடையே ஒரு கேப்பை  வைத்து நாட்டை லாவகமாக வைத்து இருக்கி தரையில் எறியவேண்டும்  - அதிக டைட்டாக இறுக்கினால் , கேப்பின் மரணம் நமது கையில். 

(2)  டெலிகாம் டவர் போன்று ஸ்ப்ரிங்  இணைக்கப்பட்ட "நட்" . கேப் பொருத்திய பிறகு தூக்கி எறிய  லேண்டிங்கில்  சப்தம் செய்யும்.  வெறும் நட்  அஸ்திரம் 3 பைசா என்றால் இது பத்து பைசா .

(3) ஃபைல் உள்ளே இருக்கும் கிளிப் போன்ற ஒரு உபகரணம்.  ஸ்ப்ரிங் தயவில் ஒரு தகரம் போய் கேப்பின் தலையில் தட்ட, கேப் வெடிக்கும் 


(4) துப்பாக்கி. இது ஆர்.டி.ஓ  (RTO)அலுவலகம், போலீஸ் உத்தியோகம் பார்க்கும் செல்வந்தர்களாலேயே வாங்க முடிவது. 50/ 75 காசு வரை  முதலீடு. ஏனென்றால்  இதை உபயோகிக்க ரோல்-கேப் வாங்கவேண்டும். பொட்டு கேப்பை துப்பாக்கியில் நிரப்பி வெடிக்க மன்மோஹன்  போன்ற பொறுமை தேவை.

நாங்களெல்லாம் 2,3, 4 வது தளவாடங்களை "சாய்ஸ்"சில்   விட்டு விட்டு "நட்டு ராஜா"வாக உலா வருவோம் !  நம்மில் வலியவர் உண்டெலெனில் நம்மில் வறியவரும் உண்டல்லவா ! சிலர் கூழாங்கல்லே  போதுமென்ற பொன்செய்யும் மருந்தாக இருக்க, நமக்கு ஒரு இறுமாப்பு  நாம் "நட்டு ராஜா" என்று !



அடுத்தது துணி வாங்கும் படலம். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என்றும் விரும்புவது "கோ -ஆப் டெக்ஸ்" . அப்படி ஒரு சிறந்த தரமா என்று கேட்காதீர்கள். அங்குதான் கடன் அடிப்படையில் ஜவுளி வாங்க முடியும்.  க்ரெடிட் கார்ட் தோன்றாத காலம். நாம் ஆசைப்படும் நேரத்தில் வாங்கிவிட முடியாது. குடும்பத்தில் எல்லோரும் ஒன்று சேரவேண்டும்.  ஒரு முறைக்கு மேல்  கடன் கிடையாது.

துணிக்கடைக்கு போகும்முன்  நமது மனது "சோளா-பூரி" போல் பூரித்திருந்தால், திரும்பி வரும் போது  ஃபூல்கா  ரொட்டி போல் அமுங்கி இருக்கும்.



போகும்போது  சிவப்பு ரோஜாக்கள் கமல், இ.ஊ .ஆடுகிறது ரஜினி நினைவுக்கு வருவார்கள், (38" பெல்பாட்டம் என்ன, மார்பு வரை தொங்கும்  பாபி காலர் சூரியகாந்திப் பூ  போட்ட சட்டை  என்ன ). போருக்கு  குதிரையில் செல்லும் அக்கினேனி  நாகேஸ்வர ராவ் போல மேல் நோக்கிய தலை, சற்றே  23 1/2 டிகிரி   சாய்ந்த பார்வை....   "என்னடா மாப்ளெ, தீபாவளிக்கு துணி எடுக்க போறாப்ல இருக்கு" என்று பத்து பேர் கேட்க மாட்டார்களா என்ற ஏக்கம் ! இத்யாதி இத்யாதி .....


திரும்பி வரும்போது ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி,  70 களின்  பவர் ஸ்டார்  சுதாகர் போன்றோர் நம்மை சுற்றி சுற்றி வருவார்கள். "கோ -ஆப் டெக்ஸ்" கலெக்ஷன் அப்படி !  ரூபாய்க்கு மூணு மீட்டர் லெவலுக்குத்தான் நம் பெற்றோர்களே பார்ப்பார்கள்... அவர்களையே ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு கவுண்டரில் இருக்கும் பெருசு "வெளையாட்டு  பசங்க எப்படியும் அளுக்கு பண்ணியிடுவாங்ய ....சாமி!  நீங்க  பேசாம அளுக்கு கலர் துணியையே வாங்கிக்குங்க. 10 வருஷம் ஆனாலும் கிழியாது  நிறம் மாறாது " என்பார்  ! ஏம்ப்பா அதுல போறதுக்கு  கலர் என்னப்பா இருக்கு ...சொல்வது ஊமையான நம்  மைண்ட் வாய்ஸ்.

அழுக்கு கலர் சட்டையும் சாணிகலர் பேண்டும் போட்டால் சிவப்பு ரோஜாக்கள் கமல் தெரிய மாட்டார்....லாரி ட்ரைவர் ராஜாக்கண்ணு  தான் தெரிவார் ! எடுத்த துணிகளை நண்பர்களுக்கு காண்பிக்காமல் தப்பிக்க முடியாது. நாம் வீடு திரும்பியதை மோப்பம் பிடித்து வந்து விடுவார்கள்.  பார்த்துவிட்டு " என்னடா தீபாவளிக்கு துணி எடுத்துத் தர்ரேன்ன்னுட்டு ஒங்க வீட்ட்க்கராங்ய  யூனிஃபார்ம்  எடுத்துக் கொடுத்துட்டாங்ய " என்று வசனிக்கும்  போது  அவன் மார்பில் சாய்ந்து ஓ வென்று அழலாம்  போலிருக்கும் . 

இது போதாதென்று சகோதரர்கள் எல்லோருக்கும் ஒரே நிற, ஒரே டிசைனில் சட்டை, ட்ரவுசர்.... திருவிழாவில் காணாமல் போனால் தேட வசதியாக! 

இளைய சகோதரனாக இருந்து விட்டால் அண்ணன்  சட்டையையும்  தலையில் கட்டப்பட்டு கிடடத்தட்ட ஆறேழு வருடங்களுக்கு அதே சட்டை.


அடுத்த படையெடுப்பு அந்த மாநகராட்சி  ஆபரணங்களை தைக்ககொடுக்க.. பூமிநாதன் டெய்லர்  நியாயஸ்தர். 120 செமீ  அரைக்கை சட்டைக்கு தேவையென்றால், 130செமீ  துணியெடுத்துக் கொடுத்திருந்தால் கூட லாகவமாக முழுச்சட்டை தைத்துவிடுவார் .  சாதாரண நாட்களில் கண்ட்ரோல்  துணியைக் (நியாய விலை துணி) கூட 24 மணி நேரத்தில் தைத்து விடுமளவு பிஸியானவர். ஆனால்  தீபாவளிக்கு 30 நாட்கள் முன்னால் கொடுத்து விட்டால் கூட, என்ன தம்பி இவ்வளவு லேட்டு. நீ தீபாவளி முதல் நாள் ராத்திரி படுக்கப் போகுமுன் வந்து வாங்கிக்கோ  என்பார். தைத்துக் கொடுப்பதே பெரிது என்ற நிலையில் டிசைனாவது  கத்திரிக்காயாவது.....சர்க்கார் அடிதான் . அவர் வெட்டினதுதான் மாடல், தெச்சதுதான் டிசைன். 

அது வரை கனவில் வந்து கொண்டிருந்த கமலஹாசன் அவரது சப்ஸ்டியுட்  ஆக அவரை விட 20 வயது மூத்த சாருஹாசனை அனுப்பி வைப்பார்.  விதி வலியது !

இது போதாதென்று சட்டையில் உள்  பாக்கெட்டும்,  கால்சராயில் டிக்கெட் பாக்கெட்டும் வைக்கவேண்டும் என்று அவசர உத்தரவு பெற்றோர்களிடமிருந்து  டெய்லருக்கு  போகும்!

பதினைந்து பதினாறு வயது வரை பூமிநாதனை  பூமியை சுற்றும்  செயற்கைக் கோளாக சுற்றி வந்து கொண்டிருந்தவர்கள் புதிய டெய்லர்களை நாட ஆரம்பித்தோம்.  படாடோபமான கடை, இண்டர்லாக்கிங் மிஷின் என்று படம் காட்டியவர்களிடம் மனம் நாடியது. அதை விட முக்கியம் அந்த கடையில் நம்மை  "வாங்க போங்க" என்பார்கள், பூமிநாதன் நம்மை குழ்ந்தையான நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததால் அதை எதிர் பார்க்க முடியாது. நமது ஈகோவுக்கு தேடிய இதம் புதிய டெய்லர் கடைகளில் கிடைத்தது (பின்னாளில் தான் புரிந்தது:  மதுரையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களை முன்பே தெரிந்தவர்கள் கூட மரியாதையுடன்  வாங்க போங்க என்பார்கள் என்று )

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பூமிநாதன் போன்ற "குடும்ப டெய்லர்கள்"  வாங்கிய தையற்கூலிக்கு மற்றவர்கள் காஜா கூட போட்டுத் தர மாட்டார்கள்  என்பது நினைவு கூற வேண்டிய சமாச்சாரம் (அருஞ்சொற்பொருளகராதி :  குடும்ப டெய்லர்- இன்று தையல் நாளை ரொக்கம் என்ற வகையில் நம் குடும்பத்தார் அனைவருக்கும் தைத்துக் கொடுப்பவர்)

புது சகவாசமான நியூ கோல்டன் டெய்லர் நல்ல ஒரு தேர்வுதான், (சுப்பிரமணியபுரம் பாலிடெக்னிக் அருகில்) .  முஸ்லீம் குடும்பத்து மூன்று சகோதரர்களின்  முயற்சி.  முதலாமவர்க்கு அனுபவம் உண்டு. மற்ற சகோதரர்களுக்கு நம்மை வைத்து  அனுபவம். சாதாரண நாட்களில் பெரியபாய்   துணி  வெட்டிக் கொடுப்பதால் நன்றாக இருக்கும்,  தீபாவளிக்கு துணி தைக்கக் கொடுத்தால்,  கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல் இடைபாய், கடைபாய் என்று  எல்லோரும் கைவண்ணத்தை காண்பிப்பார்கள். அவர்களிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் டெய்லர்கள் போதாதென்று டீ.கல்லுப்பட்டி,   நெய்க்காரப்பட்டி போன்ற மெகா-சிட்டி யிலிருந்து (அன்று வரை கை -மிஷினில்  தைத்துக் கொண்டிருந்த) டெய்லர்கள் இறக்குமதி செய்யப்படுவார்கள் ! 

"அண்ணே  ! தீபாவளிக்கு தலைக்கு எண்ணெய்  வச்சுட்டு ஒரு நடை கடைக்கு வாங்க ஒங்க துணி தெச்சு , தேச்சு,  ஷோ-கேஸ்ல ரெடியா இருக்கும்" என்பது அவர்கள் கடையின் தீபாவளி ஜிங்கிள்.   எண்ணையும்  தலையுமாக வந்து நிற்பவர்கள் எதிர்பார்த்தது போல் ஷோ-கேஸில்  துணி இருக்கும்.  பல நூறு துணிகளுடன் நம்மைப் பார்த்து சிரிக்கும், வெட்டப்படாமல் !.  

வசந்தா நாடா ஜட்டி, பனியனுடன் தீபாவளி நடந்தேறும். (நீ தானே சொன்னே ... ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கமல் கனவுல வந்தாருன்னு. அவர் எண்ணைக்குப்பா  முழு ட்ரெஸ்ஸோட வந்திருக்காரு! அந்தக் கனவு தான் நனவாயிருக்கு)

 துணி தைக்கும் படலத்திற்கு  பிறகு பட்டாசு படலம். மதுரை வாசிகளுக்கு பட்டாசு படலத்தை இரண்டு உப-படலங்களாக பிரிக்கவேண்டும். சிவகாசி பட்டாசு படலம் மற்றும் விளக்குத் தூண் பட்டாசு படலம். 

சிவகாசி பட்டாசு படலம்: தீபாவளிக்கு பதினைந்து நாட்கள் முன்பே பட்டாசுக் கடைகளில் கெஞ்சிக்   கெஞ்சி அச்சடிக்கப்பட்ட லிஸ்ட் 2 அல்லது 3 வாங்கி வந்திருப்போம். அந்த லிஸ்ட்டை  படிப்பது தமிழக சராசரி "குடி" மகனுக்கு கிடைக்கும் பெரியதாத்தா, சின்னம்மா பிராண்ட்   குவார்டடரை விட அதிக போதை தரும்!  படிக்கப்படிக்க இன்பம் இறுதி வரை!


அந்த லிஸ்டை  "through proper channel" அம்மா மூலமாக அப்பாவுக்கு அனுப்புவோம்.  குடியரசுத் தலைவர்  கையில் கொடுக்கப்பட்ட மரண தண்டனை கைதியின் கருணைமனு போல அது நிலுவையில் வைக்கப்படும். 

மதுரையில் எல்லாம் அநியாய விலை, அடுத்த வாரம் சிவகாசி டூர் போகும்போது அங்கே வாங்கி வருகிறேன் என்று அவர் சொல்வது, சிவகாசி பட்டாசு அல்ல திருநெல்வேலி அல்வா என்பது நமக்குத் தெரியும். சே ! "through proper channel" மனு கொடுத்தாலும் சில நேரம் வேலை செய்ய மாட்டேன் என்கிறதே. ....அவர் கஷ்டம் நமக்கு அன்று புரிந்திருக்கவில்லை !

தீபாவளிக்கு ஒரு வாரம் வரை மேற்படி சிவகாசி டூர் நடந்தேறியிருக்காது என்பது   சூரியனை தெர்மோகோல் கொண்டு தடுத்தவருக்குகே தெரியும் !

அடுத்த வீட்டுப் பசங்களெல்லாம் மஞ்சள் பையில் வழிய வழிய பட்டாசு எடுத்துச் சொல்வதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் நம் வயது பெண்கள் (அவர்களது சிலபஸ்ஸில்இல்லாத பட்டாசை)   வீட்டு வாசலில்  காயவைத்துக் கொண்டிருப்பது, (அ)தர்மசங்கடமாக இருக்கும்.  இருந்து இருந்து இந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டோமே என்று நமது கோத்திரத்தின் மேலே கோபம் வரும். கௌரவப் பிரச்சனையாச்சே !

தீபாவளிக்கு ஒரே  வாரம் இருக்கும் தறுவாயில், மாநில தேர்தல் நேரத்தில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை கையில் எடுப்பது போல், நமது வீட்டுத் தலைவர் நமது பட்டாசு லிஸ்டை கையில் எடுப்பார்.  அவரது முதல் டயலாக்....(நம்மை ஆழம் பார்க்க)....தீபாவளி அண்ணைக்கு  பத்து மணிக்கு மேலே  பட்டாசு பாதி விலைக்கு  கிடைக்குமாமே !

(கம்பர் கண்ட)  அண்ணல் ராமன் நோக்கியபோது நிலம் நோக்கிய சீதாதேவி போல, நாம் பதிலற்று நிலம் நோக்குவோம் !

இப்போல்லாம்  கண்ட கண்ட பட்டாசு வருது...பாதி  ஆபத்தானது. நாங்களெல்லாம் சின்னப்பசங்களா இருந்த  போது  பனை ஓலை வெடி கிடைக்கும். ஒரு  ஈர்குச்சியிலே வெடியை சொருகி ஒரே இடத்தில் உட்கார்ந்து 2 மணி நேரம் வெடிக்கலாம். செலவும் கம்மி. ஒரு படி காலணாதான் (ஆமாம் மதுரையில் படியில் அளந்து பட்டாசு 80களில்  கூட விற்கப்பட்டது. விளக்குத் தூண்  படலத்தில் காண்க !). அவரது வாலிபப்பிராய அனுபவங்கள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும். ஒரு வேளை  கால் படி ஓலை வெடியோட நம்மை ஓய்ச்சுடுவாரோ !

மரணதண்டனைக் கைதி கருணை மனு நிராகரிப்பு அளவுக்கு பயமாக இருக்கும்.

ஏதோ  முன்வினைப்பயன் அவர் மனது மாறி நமது லிஸ்டில் பாதியை அடித்து விட்டு மீதியை எண்ணிக்கையை குறைத்து......நமது பட்டாசு லிஸ்ட் எனப்பட்டது ஆண்  மயில் தோகை  போல தொடங்கி  பெண் மயில் தோகை  லெவலுக்கு மொட்டையாக வந்து நிற்கும். ஒரு வழியாக வாங்கி வரப்பட்ட பட்டாசுகளை உடனே பாத்தியதை கொண்டாட முடியாது. பட்டாசுகளை எட்டாக பாகப்பிரிவினை செய்யப்பட்டு , ஒரு அராஜகமான அரைக்கால் பகுதி வீர மரபில் வந்த நம் போன்ற ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப்படும்! அந்த எட்டு பேரில் 75வயது பாட்டி, அம்மா, அப்பா, ஐந்து சகோதர-சகோதரிகள்  எல்லோரும் அடக்கம். 

பாட்டி, அம்மா, அப்பா பங்கு (சேந்தி)பரணில் மறைக்கப்பட்டு கார்த்திகை அன்று இறக்குமதி செய்யப்படும். கார்த்திகைக்கு தனியாக பட்டாசு வாங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பது நாம் பட்ஜெட் போடும் இந்த நாட்களில் தான் இந்த மரமண்டையில் ஏறுகிறது !

பட்டாசு வெடிப்பதை விட முக்கியம் அக்கம் பக்கத்து மனிதர்கள் பார்வையில் படுமாறு பட்டாசை காயவைப்பது. பிஜிலி வெடி, ஊசி வெடி உதிரி இவைகளை தனித்தனியாக வரிசையாக ஒவ்வொன்றாக காயவைத்தால்தான்  நிறைய பட்டாசு நம் கைவசம் இருப்பதாக ஊருக்குத் தெரியும் !  (ஹூம்....இவ்வளவு புத்திசாலித்தனத்தை படிப்பில் பயன்படுத்தியிருந்தால் ஒழுங்காக வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருக்கலாம் )

விளக்குத் தூண்  படலம் : மதுரைக்காரர்களுக்கு என்னதான் செலவு செய்து பட்டாசு வாங்கினாலும் விளக்குத் தூணில்  பட்டாசு வாங்க வில்லையென்றால் ஜென்மசாபல்யம் (பிறவிப்பயன்)  அடையாது!   பெற்றோர்கள் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யமாட்டார்கள்.  முறைசாரா பட்ஜெட் இதற்குத் தேவை. ஒரு சில வீடுகளில்  தீபாவளிக்கு பாக்கெட் மணி தரும் பழக்கம் உண்டு. எங்கள் பெற்றோர்கள் அப்பேற்பட்ட பெற்றோர்களை பார்த்தாலே பத்து கிலோமீட்டர் ஓடி விடுவது நம் கர்மவினைப்பயன்.  எனவே பாக்கெட் மணி தேறாது .

முறைசாரா பட்ஜெட்டுக்கு இளைஞர்கள் நாடுவது, இளகிய மனசு கொண்ட தாத்தா, அன்பே உருவான பாட்டி, மூத்த சகோதரிகள், மற்றும் மண் உண்டியல்.

கிடைத்ததைக்  கொண்டு நமது வயது நண்பர்கள் புடை சூழ விளக்குத்தூண் பயணம் தீபாவளி முன்  தினம் இரவு 8 மணிக்குத் தொடங்கும். 9மணிக்குள் படுத்துக் கொண்டு விட வேண்டும் என்ற உத்தரவு மீறப்படும். நான் கொஞ்சம் முன்னப் பின்ன ஆனால் மொட்டை மடியிலே படுத்துகிறேன் என்று அவர்கள் காதில் பட்டும் படாமல் சொல்லிவிட்டு தலைமறைவாவோம்.

இக்காலத்தில் ஹைப்ரிட் கார் பிரபலம். காரை சிறிது தூரம் பெட்ரோல் துணை கொண்டு ஒட்டி விட்டால், அதிலுள்ள பேட்டரி சார்ஜ் ஏறி மீதி தூரம் பயணம் செய்யலாம் என்ற தத்துவம் விளக்குத் தூண் யாத்திரையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்று நாசாவும், இஸ்ரோவும் நிச்சயப்படுத்துகின்றனர் !.

சுப்பிரமணியபுரத்தில்  இருந்து நடை தொடங்கி திண்டுக்கல் ரோடு வரை நடந்து ஜோதியில் கலந்து விட்டால், அங்கிருந்து நடக்காமலேயே மேல, தெற்கு மாசி வீதி வழியாக விளக்குத்தூண் வரை தள்ளு-சக்தியிலேயே பிரயாணித்து விடலாம். அவ்வளவு கூட்டம். நடுவில் ஏதாவது கடைக்குள் நுழைய வேண்டுமென்றால் இக்கால மெட்ரோ ரயில் முன்னறிவிப்பு போல, நண்பன் ஒருவன் சொல்ல, நூறு கெஜம் முன்பு திட்டமிட்டு, கூட்டத்தில் இருந்து பிதுங்கி, மதுரைக்கே உரித்தான "அஷ்டோத்திர அர்ச்சனைகளை" காது குளிர கேட்டு ஒதுங்க வேண்டும்.

விளக்குத் தூண் கடைகளில்  சாதாரண நாட்களில் மற்ற இடங்களை போன்ற விலைதான் . தீபாவளி அன்று கடைநிலை மக்களை எதிர்பார்த்து நடைபாதைகளில் போடப்படும் விலை குறைவான எல்லாவிதமான பொருட்களுக்கும் பிரபலம்.  பத்து ரூபாயில் ஜார்ஜெட் புடவை, 25ரூபாயில் பட்டுப் புடவை, என அமர்க்களப்படும். இதில் பள்ளி மாணவர்களைக் கவர்வது மலிவான பட்டாசுதான்  !

லைசன்ஸ் இல்லாமல் குடிசைத்தொழில் போன்று தயாரிக்கப்படும் பட்டாசுகள் விளக்குத் தூணில் பிரசித்தம். பிரபல கம்பெனி பெயர்களில் தயாரிக்கப்படும் போலிகளும் அடக்கம்.  மற்ற பட்டாசுகளை விட பாதிக்கும் குறைவான விலை. பல வெடிக்காது. சில வெடிக்கும். குருவி வெடி, லட்சுமி வெடி போன்றவை பாதிக்கு பாதி வெடிக்காது. புஸ்ஸ்ஸாகிவிடும் .....ஆனால் புஸ்  வாணம்  கண்டிப்பாக வெடிக்கும் (?!?).

திரியே இல்லாமல் இருக்கும் அவுட் மற்றும் வெங்காய வெடி வகைகள் தடை செய்யப்பட்டவை. ஆனால்  அவைகள் உங்களது படைக்கலத்தில் இல்லையென்றால் மதுரை வீரர்களுக்கு இழுக்கு. அதற்காகத் தான் இந்த விளக்குத் தூண் நோக்கி நீண்ட பயணம்.

அவுட் என்பது திரியில்லாத ஒரு வெடி, ஆபத்தானது ஆனால் வெங்காய வெடியை விட சற்று பரவாயில்லை.

ஒரு காலத்தில் அவுட் மற்றும் வெங்காய வெடி படியில் அளந்து விற்கப் பட்டுக்கொண்டிருந்தது .  பின்பு எண்ணிக்கை அடிப்படையில் 

அவுட் என்பது ட்ரம்ப் என்றால் வெங்காய வெடி என்பது வடகொரியா அதிபரைப்போல ! கூட இருப்பவனையே காலி செய்து விடும்  வெங்காய வெடி சற்று அழுத்திப் பிடித்தாலே வெடித்து விடும்.  சத்தமும்  அதிகம். வெடியை பக்கத்து வீட்டு சுவரில் எறிந்து  அவர்களை தொந்திரவு செய்வது ஒரு ஆனந்தம்.  (பின்னாளில்  நம்பர் 8 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு தெரு, துபாயில் வேலை பார்த்த பொது, சீன  வெடிகள் ரகசியமாக வாங்கினேன். வெங்காய வெடியும் அதில் அடக்கம்... நம்மூர் வெங்காய வெடி பெரிய வெங்காயம்  என்றால் சீன  வெடி வெள்ளைப் பூண்டு. ஆனால் TAS  ரத்தினம் பட்டணம் போடி போல காரம்+மணம் + குணத்திற்கு குறைவில்லை. என் கையிலேயே வெடித்தது. மதுரை நாட்கள் நினைவுக்கு வந்தது)

அவுட் என்பது  நரசிம்மராவ் போல் .....முதலில் அமைதி காத்து பின்பு பெரிய சத்தத்துடன் வெடிக்கும்.  ராவ் தானே என்று அலட்சியம் செய்த சோனியா குடும்பத்தினருக்கு ஆனது போல புஸ்ஸாகிவிட்டது என்று அலட்சியமாக அருகில் நின்றால் பின் விளைவுகள் அதிகம். அடுத்த 5 வருடங்களுக்கு தலை காட்ட முடியாது.  தலை மட்டுமல்ல !

டிரம்ப், கிம்-ஜோங்-உன்,  மற்றும் நரசிம்மராவ் இல்லாத தீபாவளி மதுரை வீரர்களுக்கு தீபாவளியே இல்லை.

தீபாவளி அன்று அதிகாலையில் யார் முதலில் பட்டாசு வெடிக்கிறார்கள் என்பதில் இருந்து தொடங்கும் பங்காளி சண்டை. நாம் வெடிக்கும் முன் பக்கத்து வீட்டுப் பையன் வெடித்துவிட்டால் கௌரவக்குறைச்சல் என்பதால் படுப்பதற்கு முன்பே சுமார் 2:30/2:45க்கு ஒரு பெரிய அணுகுண்டு போட்டு விட்டு தூங்கப்போவோம். 2:45க்கு வெடி வெடித்ததற்கு யாராவது பெருசை  சாட்சியாகக்  கொள்வோம்.

தூங்கப் போகுமுன் பக்கத்து வீட்டு வாசலில் இருக்கும் பட்டாசுக்  குப்பையை காலால் நம் வீடு வாசலுக்கு தள்ளுவோம். அதிக குப்பை இருந்தால் தானே அதிக வெடி வெடித்ததாக ஆகும் ! குப்பை அள்ளினால்தானே பெயர். இக்காலத்தில் மட்டுமல்ல, அக்காலத்திலும்  ! ஹி ஹி ஹி !

காலை ஆறு வரை மத்தாப்பு வகைகள், எட்டு வரை காதைப்  பிளக்கும் வெடி வகைகள், பின் காலை டிஃபன், 12 மணி வரை விளக்குத் தூண் வெடி , பின் தூக்கம், ஆறு வரை வெடி, மாலையில் மத்தாப்பு வகைகள் என்று வரிசைப்படுத்திக் கொள்ளுவோம்.

விளக்குத் தூண் வெடிகள்  பாதி லாலு பிரசாத் போல  புஸ்ஸாகி விடும்.  நடுவில் ஓய்வு கிடைக்கும் நேரம் (ஓயாத உழைப்பு, உழைப்பு , உழைப்பு) அவற்றை எல்லாம்    ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தி, சுட்ட வெடி,  சுடாத வெடி என அவ்வைப்பிராட்டியை  நினைவு கூர்ந்து, வெடிகளை பிரித்து மருந்துப்  பொடிகளை ஒன்று சேர்த்து சொக்கப்பானை கொளுத்தும் வைபவம்! 

ஐம்பது சதவிகிதம் ஏதாவது ஒரு தீப்புண் இலவச இணைப்பாகக் கிடைக்கும். அதை வீட்டுக் தெரியாமல் மறைக்கவேண்டும்.

இதற்கு நடுவில் தீபாவளி  வாழ்த்து சமாசாரம் ....  அடுத்தடுத்த வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட போஸ்ட் ஆபிஸ் போய் ஸ்டாம்ப் ஒட்டி, விலாஸம் எழுதி  வாழ்த்து அனுப்புவது ஒரு சுகானுபவம். நம்மால் வாழ்த்தப்பட்டவர்கள் நமக்கு பதில் வாழ்த்து அனுப்பவில்லையென்றால் அவர்களுக்கு அடுத்த முறை வாழ்த்து “கட்” . பதிலுக்கு வாழ்த்தும் இங்கிதம் தெரியாதவர்களாயிற்றே அவர்கள் !

வாழ்த்து என்ற சமாசாரத்தை விட நம் பெயரைச் சொல்லி ஒரு மத்திய அரசு ஊழியர் யூனிபார்மில்(அதாங்க போஸ்ட் மேன்) ஒரு கவரை கொடுத்துச் செல்வது எப்பேற்பட்ட கௌரவம் ! .

என் நண்பன் ஒருவனு(ரு)க்கு அவரது பள்ளித்தோழன்(ர்)  வாழ்த்து அனுப்பியிருந்தார். என் நண்பனும் பெருமையாக எல்லோரிடமும் காண்பித்தான். நமக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைக்கவில்லையே என்று எனக்கெல்லாம் பெரிய வருத்தம் !

வாழ்த்து அனுப்பிய நண்பன் பின்குறிப்பியிருந்தான் “கிருஷ்ணா ! நீயும் மறக்காமல் பதிலுக்கு எனக்கு  தபாலில் வாழ்த்து அனுப்பிவிடு”!

இது தவிர அக்கம் பக்கம், உற்றார் உறவினர்கள் வீட்டிற்கு விஜயம். சில பல கிலோ பலகாரங்களை உள்ளே தள்ளி,  மாமூல் சாப்பாட்டிற்கு ஓய்வு கொடுத்து, குளுக்கோமீட்டரை எகிறவைத்து,  கொலஸ்டிராலே  நாணும்  அளவு நெய் , எண்ணெய் பலகாரங்களில் மூழ்கி  நமது ஜீரண சக்திக்கு சவால் விட்டு.....என பயங்கர பிஸி .

மீந்து போன மற்றும் அக்கம் பக்கத்தார்களால் பகிரப்படும் பக்ஷண வகைகள், இன்னும் ஒரு மாதத்திற்கு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள தாராளமாக வழங்கப்படும். இதிலிருந்து எவரும் தப்ப முடியாது.

மாநகராட்சி சுகாதார  ஊழியர்கள்,  கூர்க்கா போன்று தலையை சொறிந்து  கொண்டு வருபவர்களின் எதிர்பார்ப்பு ஏதாவது பணம் கிடைக்குமென்று ! ஆனால்  அவர்களை தின்பண்டங்களால் அடிப்பார்கள் குடும்பத்தலைவிகள் (அவன் ரிடையர் ஆகும்வரை நம் வீட்டுப் பக்கம் தலை காட்டுவானா !)

தீபாவளிக்கு திரைப்படம் பார்ப்பது எங்களது குடும்பத்தினருக்கு பழக்கம் இல்லாத ஒன்றாயிருந்தாலும், தீபாவளி அன்று புதுப்படம் பார்ப்பது மதுரை மக்களுக்கு ஒரு முக்கியமான வாடிக்கை. ரஜினியின் முரட்டுக்காளை ஓடும் தியேட்டருக்கு அருகில் இருக்கும் அவர்களது தியேட்டரிலேயே குறைந்த செலவில்  எடுக்கப்பட்ட விஜயன் திரைப்படமோ அல்லது குறைந்த வாடகையில்   எடுக்கப்பட்ட புத்தம் புதிய காப்பியான பக்த பிரகலாதா, சாந்த ஜக்குபாய் போன்ற படங்களை ஓட்டுவார்கள். ரஜினி படத்துக்கு வந்து டிக்கெட் கிடைக்காமல் திரும்புபவர்களை அனுசரித்து இந்த ஏற்பாடு. குடும்பத்தோடு வந்து நல்ல நாளும் அதுவுமா ஏமாற்றம் அடையாக கூடாது என்று குடும்பங்களை மடக்கி கண்டிப்பாக பார்க்கவைத்து ரம்பம் போடுவார்கள். அந்த தியேட்டர் ஆபரேட்டர் கூட கண்ணில் திரை கட்டிக்  கொண்டே ரீல்களை மாற்றுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் டிக்கெட் கவுண்டரில் நிற்பவர்களின் தலை மேல் ஏறி ஓடும் காட்சியை நேரில் நிஜமாகப் பார்த்திருக்கிறேன்!

பலவகை ரசங்கள் நிரம்பிய  (பட்டாசு கையை சுட்ட "சோக ரசம்" உட்பட) தீபாவளி என்பது இந்திய பண்டிகை, இந்துப் பண்டிகை மட்டும்  அல்ல.

எம் தலைமுறை போல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இத் தலைமுறை போல் பட்டாசு அற்ற, மாசற்ற தீபாவளி கொண்டாடவும்.

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் e-greetings, வாட்ஸ்ப் வாழ்த்த்துச் செய்தி, "Dear All, Wishing all a Happy Diwali" போன்ற முகமற்ற சம்பிரதாய வாழ்த்துகளை  கடனே என்று அனுப்பாமல், ஓரிருவரை தொடர்பு கொள்ள முடிந்தாலும் நேரிலேயோ அல்லது நேரடி தொலைப்பேச்சின் மூலமாகவோ வாழ்த்து தெரிவிக்கவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...