Tuesday, August 22, 2017

Indian Names & Airport boarding troubles

Indian Names & Airport boarding troubles


My first name in passport was far more complicated for a typical American immigration official to pronounce. He did not dare to call out my name. Reason: My name in passport (including my father’s name) is Rangaswami Anantha Rama Krishnan.  The first name had a spelling mistake and read as Rangaswmi with a missing A. Even an Indian will find it difficult to pronounce the name with that kind of spelling.

But it posed a different, interesting, problem, when I was travelling with my father to Sharjah (my father’s only foreign trip). My father and I were waiting at the boarding hold for departure. An announcement, shook my father. It said, Mr Rangaswami, passenger bound for Sharjah, please report to the counter no ###. My father was wondering why of all people he should call an old man aged 82.

I consoled him saying, he is not calling you dad, he is calling me. For that matter all your children will only be called Rangaswami, be sons or daughters.

Then I told him, "if they ever wanted to call  you they will say “Mr Sholavandan, report to boarding counter” . He countered, if they did will all those whose belonging to Sholavandan not throng to the counter….should he not call me by name ? I clarified, that the confusion is because, he has listed the village name as the first name in passport. His initials were “S.K” which expanded to “Sholavandan Krishnaiyer”



Thursday, August 17, 2017

மீனாக்ஷி நிவாஸ் மஹாத்மியம்















மீனாக்ஷி நிவாஸ் மஹாத்மியம் – என் பார்வையில்
-    அனந்த ராம கிருஷ்ணன் (ரவி)

(இந்தக் கட்டுரை நினைவுகளை மலர வைப்பதற்கே.
எழுதிய என்னை முதன்மைப்படுத்த அல்ல!. புரிதலுக்கு நன்றி)

ஏண்டா ரவி, உன் பார்வையில் என்று தொடங்கியிருக்கிறாயே, உனக்கு 12ம் கிளாஸில் இருந்து கண்ணாடியாச்சே என்று கடிக்கவேண்டாம்.

மீனாக்ஷி நிவாஸ் எனது தாத்தா, அம்மம்மா(அம்மா வழிப் பாட்டி) கட்டியது. சுமார் 2 கிரவுண்ட் நிலத்தில், ஒரு கிரவுண்டில் வீடுகள், ஒரு கிரவுண்ட் காலி நிலம், பிற்காலத்தில் விரிவாக்கும் திட்டம்.

வீடு கட்ட ஆரம்பத்த நாட்களில் (1957-58) ராமேஸ்வரம் ரயில்வே லைனில் ரயில் போவது தெரியும் என்பார் எனது அம்ம்ம்மா.

இப்பே(ர்)ற்ப்பட்ட வனாந்திரத்தில் நிலம் வாங்கினது தான் வாங்கினோம் ஒரு பெரிய வீடு கட்டலாம் என அம்ம்ம்மாக்கு ஆசை. தாத்தா சரி சரியென தலையாட்டிவிட்டு, பிளான் எல்லாம் வரைந்தபிறகு, அம்ம்ம்மாவை ஊருக்கு அனுப்பிவிட்டு தாத்தா மைசூர்பாக் துண்டுபோலான ஐந்து வீடுகள் கட்ட அவசர அவசரமாக வாணம் தோண்டினார்.

அம்ம்ம்மா வந்து பார்த்துவிட்டு சண்டை போட்டார் என்று பெயர் சொல்லவேண்டாமென கேட்டுக்கொண்ட என் உறவினர் சொன்னார்.

சொந்த பங்களா கட்டுமளவுக்கு வசதியான குடும்பம் இல்லை. கருப்பட்டி (சோழவந்தான் பக்கம்) கிராமத்தில் கொஞ்சம் நிலம் விற்று, கொஞ்சம் சேமிப்பில் வாங்கியது இந்த சுப்பிரமணியபுரம் நிலம். ஐந்து வீடு கட்டினால் கொஞ்சம் வாடகை கிடைக்குமென்பது அவர் கணக்கு. …………………நியாயமோ இல்லையோ, நம் தலையெழுத்து அந்த மைசூர்பாகு வீட்டில் குடித்தனம் செய்யவேண்டுமென்பது.

ஒரே ஒரு பெரிய வீடு கட்டியிருந்தால், பாரத விலாஸ் போல் ஒரு வாழ்க்கை நமக்கெல்லாம் கிடைத்திருக்காது. இத்தனை மீனாக்‌ஷி நிவாஸ் வாசிகள் பெருமையுடன் நினைவுகளை அசை போட வாய்ப்பில்லாமல் சப்பென்று இருந்திருக்கும்.

எங்களது குடும்பம் 1974ல் சிவகங்கையிலிருந்து மதுரை வர முடிவு செய்திருந்தது. என் அண்ணன் மேற்படிப்பிற்கு...... பியுசி யைத்தான் சொல்கிறேன். நான் அஞ்சாப்பிலிருந்து ஆறாப்பு.  (படம்: பர்வதவர்த்தினி மாமி குடும்பம் - 1964)

1974 ஜூன் சமீபம். முதலாவது வீட்டில் ஸ்ரீனிவாஸ ராவ் மாமா, இந்திராணி மாமி குடும்பம் (கன்னடம்),இரண்டாவது வீட்டில்  ஹரி, சீமா என்ற சிவராமன், சுந்தரி, கோகிலா குடும்பம் (தமிழ்), 3வது வீட்டில் ராமசாமி மாமா, அலமேலு டீச்சர் குடும்பம் (தெலுங்கு), 4 வது வீட்டில் வெங்கிடராமன் மாமா, சாவித்ரி மாமி குடும்பம் (தமிழ்), 5 வது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி மாமா, ஜெயா மாமி குடும்பம், ஆறாவது வீட்டில்.......ஆறாவது வீடா, எப்படி, தாத்தா 5 வீடுதானே கட்டினார்.  இப்போது வருகிறது சென்சாரால் வெட்டப்பட்ட கிளைக்கதை.(படம்: பழைய மீனாக்‌ஷி நிவாஸ் மொட்டைமாடி - 1976)

இந்தக் காலத்தில் பெரிய பெரிய அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் கட்டும்போது, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பார்ட்டி ஹால் போன்ற வசதிகளோடு கட்டுவது போல், அந்தக் காலத்தில் நயம் பிராமணாள் ஸ்டோருக்கு தேவையான இலக்கணத்தோடு தாத்தா வீடு கட்டினார்.  அவர் முதல் வீட்டில் குடியேர இருப்பதால், அவருக்கு பெரிய மைசூர் பாக் சைஸில் வீடு, மற்ற குடித்தனக்காரர்களுக்கு சின்ன மைசூர்பாக். அவருக்கு தனிக் கிணறு. மற்ற எல்லாவீடுகளுக்கும் அரைக்கிணறு. அதாவ்து ஒரு கிணறு இரண்டு வீடுகளுக்கு பொதுவாக.

அந்தக் காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் தாத்தாவுக்குத்தான் சிலை வைத்திருப்பார். ஜெ. பிரபலப்படுத்திய மழை  நீர் சேமிப்புத்திட்டத்திற்கென்றே செய்தது போல அந்த கிணறுகள். நல்ல நாட்களில் கிணற்றில் தண்ணீர் இருந்தோ அல்லது யாரும் உபயோகித்தோ நான் பார்த்ததேயில்லை. மழைகாலத்தில் மட்டும் தண்ணீர் சேரும்.

இது தவிர அவர் தொலை  நோக்குப் பார்வையுடன் கட்டியது “தூரமண்ணாள் ரூம்”. பெண்கள் தனித்திருக்கவென்றே இரு அறைகளுடன் (அறை(ரை) எனறு சொல்லமுடியாது, கால்தான்) கட்டப்பட்டஅந்த வீடுதான், பிற்காலத்தில் 6வது வீடாக வடிவெடுத்தது. இந்த ரூம் வந்து போக வசதியாக கிணற்றுக்கும் சுவருக்கும் மத்தியில் ஒரு நடைபாதை. என்னைபோன்ற கனபாடிகள் யாரும் நேராக நடக்க முடியாது. பல்லி போல் சுவரொட்டி பக்கவாட்டாகத்தான் போகவேண்டும். அந்த்க் கதவுக்கு ஒரு தாழ்ப்பாள் வேறு உண்டு.

இந்த கிளைக்கதைக்கான ஹீரோவான ஆறாவது வீட்டில் நாங்கள் வரும்போது சௌந்தர் குடும்பம் (தமிழ்), அதற்கு சற்றுமுன் அவர்களுக்கு உறவான சித்தன், சாமிநாதன் குடும்பம்.

அந்தக்காலத்தில் ஒருவர் வீடு காலிசெய்தால், அவர்கள் உறவினர்கள் யாரையாவது குடி வைத்துவிடுவார்கள். அப்படி வசதியான இடமா என்ன ?! இல்லை மற்ற இடங்கள் ரொம்பக் கேவலமோ?? இரண்டாவது தான் சரியாக இருக்குமெனப் படுகிறது.

ஹவுஸ் ஒனர் பெண் வருகிறார் என்பதால், பெரிய மைசூர்பாக் வீட்டில் குடியிருந்த ராவ் மாமாவிடம் கேட்டுக்கொண்டதனால், அவர்கள் ஜெயிந்திபுரம் குடிபோனார்கள் தாற்காலிகமாக. எங்கள் அம்ம்ம்மா ராவ் மாமாவிற்கு உத்தரவாதம் கொடுத்திருந்தார் ....முதலில் காலியாகும் வீடு உங்களுக்கு என்று. (ஏதோ White House என்று நினைப்பு).

வீட்டு ஓனரான என் அம்மம்மாவுக்கும், மாமாவுக்கும் நல்ல மனது, அவரது சகோதரியான என் அம்மாவிடம் வாடகை எதுவும் வேண்டாமென்றுதான் சொன்னார்கள். சுயமரியாதை காரணமாக என் அம்மா தான் வாடகை வாங்கிக்கொள்ள கட்டாயப்படுத்தினார். ஓரிரு வருடம் ஒழுங்காக வாடகை கொடுத்தோம், அப்பா 1976ல் ரிடையர் ஆனபின் தட்டுத்தடுமாறி ஆறு மாத பாக்கியுடனேயே காலம் தள்ளினோம். அம்மாவிடம் பெரிய அள்வு பாசமும், அப்பாவிடம் மரியாதையும் வைத்திருந்த மாமா பலமுறை வாடகை எல்லாம் வேண்டாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.  கேட்டால்தானே !

ஆறு மாதத்திற்குள்ளே  ஹரி குடும்பம் காலி செய்து (வசந்த நகரோ ??) போக ராவ் மாமா குடும்பம் 2வது வீட்டிற்கு குடி வந்தார்கள்.

மீனாட்சி நிவாஸ் முன்பாதியில் இருந்த காலி இடத்தில் யாருக்காவது சிலை வைக்க இடம் கொடுத்தால் நான் ராவ் மாமா இந்திராணி மாமிக்குத்தான் சிலை வைப்பேன். எங்கள் குடும்பத்தின் மேல் அவர்கள் வைத்திருந்த பாசத்தினால் இதைச் சொல்லவில்லை. எந்த விதமான விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு Clinical Detachmentஒடு இதைச் சொல்கிறேன். (Picture: Old Meenakshi Nivas in the background -1974/75)



பரோபகாரத்திற்கு மாமா என்றால், விருந்தோம்பலுக்கு மாமி.  மாமா டிவி சுந்தரம் அய்யங்காரிடம் 8 வயதில் வேலைக்கு சேர்ந்து, படிப்படியாக சம்பாதித்த நற்பெயரை, நல்மதிப்பை வைத்து எத்தனையோ பேருக்கு வேலை, பலருக்கு ஸ்காலர்ஷிப், இன்ன பிற உதவிகள் செய்திருக்கிறார்.

மதுரைக்கு வடக்குப்பக்கத்தில் இருந்து வந்தால் இவர்கள் வீட்டில் ஒரு இரவாவது மண்டகப்படி போடவேண்டுமென்பது ஒரு எழுதப்படாத சட்டம். கிட்டத்தட்ட நம் எல்லோர் வீடுகளிலும் இதே நிலைமைதான் என்றால்கூட, இவர்கள் வீட்டில் ரொம்ப ஓஓஓவர். தெற்குப்பக்கத்தில் இருந்து வருபவர்கள் கூட விதியை மீறக்கூடாது என்ற காரணத்தால் ஒரு காபி குடிக்கவாவது வருவார்கள். மொத்தத்தில் என்றாவது அவர்கள் குடும்ப டிக்கெட்டுகளான 5+2 மட்டுமே இருந்தால், மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த வடாம், துணிமணி எல்லாவற்றையும் எடுத்துவிடுவது உசிதம். மழை நிச்சயம்.

அந்தக் காலத்தில்  போனாவது ஒண்ணாவது. திடீரென்று இரவு 9 மணிக்கு யாராவது கதவைத்தட்டுவார்கள். அப்பொழுதுதான் அடுப்படியை மூடி வந்து படுத்துகொண்ட அம்மாமார்களுக்கு அடிவயிறு பகீரென்றிருக்கும். ஒரு பெரிய குடும்பமே உள்ளே நுழைவார்கள். என்ன சாப்பிட்டீர்களா என்று பதிலுக்கு காத்திராமல் அம்மாமார்கள் அடுப்பை பத்தவைப்பார்கள். பதில் தெரிந்திருக்கும்.


இந்தக் காலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 38 சாட்டிலைட்டுகளோடு ராக்கெட் கூட ஈஸியாக  ஏவிவிடலாம், ஆனால் கரி அடுப்போ, விறகு அடுப்போ பற்ற வைப்பது அவ்வளவு கஷ்டம். ஒரு வழியாக வந்தவ்ர்களுக்கு வடித்துக் கொட்டி வந்து படுத்தால் 3-4 மணி நேரத்தில் மறுபடியும் அடுப்பு பத்தவைக்கும் வைபோகம்.


இந்திராணி மாமியின் ஸ்பெஷாலிடி நார்த்தங்காய் குழம்பு, சேம்புமட்டை உசிலி, தின்மும் அரைத்துவிட்ட ரசம், ஹுளிசொப்பு எனப்படும் கீரைசாம்பார். ஏன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்துகொண்டிருந்தார்கள் என்று புரிந்திருக்கும்.

அவர்கள் வீட்டு ஆனந்த் எல்லோரையும் விட வயதில் பெரியவ(ரா)னாக்  இருந்தாலும் வாண்டுகள் கூட பேர் சொல்லிக் கூப்பிடுவார்கள்.  ஆனந்தை விட 8 வயது குறைந்த என்னையே அண்ணா என்று கூப்பிடும் பொடியர்கள் கூட ஆனந்தை ஒருமையில் தான் அழைப்பார்கள். காரணம், அவர்கள் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அண்ணா, அக்கா என்று அழைக்கும் பழக்கம் இல்லாமல் இருந்ததால் இருக்கலாம். ஆனந்தின் ட்ரெஸ் ஸென்ஸ் நன்றாக இருக்கும். அவனு(ரு)க்கு டிரெண்டியான உடுப்புகள் வாங்கிக் கொடுத்த அப்பாவுக்கு நாக்கு தள்ளியிருக்கும் !.

அந்தக் கால டிரெண்டான பெல்பாட்டம், பாபி காலர் சட்டை, எல்லாம்தான். பெல்பாட்டம் பாண்டின் காலுக்குள்ளே ஒரு வயது குழந்தை அனாயசமாக தவழ்ந்து போகலாம். நாம் போகும் முன்பு, பெல்பாட்டம் அரை கி.மீ முன்னே செல்லும்.  நரேந்திர மோடியின் “ஸ்வச்ச பாரத்” திட்டத்தை தொலை நோக்குப் பார்வையுடன் நடைமுறைப்படுத்தியது நாங்கள் தான். இருக்காதா பின்னே..., பெல்பாட்டம் பேண்ட் போட்டால் நாங்கள் செல்லும் பாதையில் ஒரு குப்பை கூட இருக்காது, சப்ஜாடாக பெருக்கிக் கொண்டு போய்விடும்.

அப்படி தெருப்பெருக்கிகொண்டு போவதனால் பேண்டில் கால்ப்பக்கம் தேய்ந்து கிழிந்துவிடும். அதைத் தடுக்க கீழே ஜிப் எல்லாம் வைத்துத் தைப்பார்கள். இடுப்பு பெல்ட் பகுதி கிட்டத்தட்ட, மேற்சட்டை முதல் பட்டன் லெவலில் இருந்து தொட்ங்கும். பெல்பாட்டம் போட்டுகொண்டால் என்.ஸி.ஸி ஷூ மாதிரி பெரிய செருப்பு ஷூ போட்டால்கூட தெரியாது.
சந்தேகம் இருப்பவர்கள் சமீபத்தில் வந்த “சுப்பிரமணியபுரம்” சினிமா பார்த்து தெளிவு பெறவும். அந்தப்படத்தில் நாம் வாழ்ந்த சுப்பிரமணியபுரத்தை கண் முன்னே கொண்டுவந்திருந்தது ஒரு மகிழ்ச்சி.

ராவ் மாமா வீட்டில் அடுத்தவர், பிரேமா(அக்கா என்றிருக்கவேண்டும், எனக்கும் பழக்க தோஷம் பேர் சொல்லிக் கூப்பிட்டே பழகிவிட்டேன்)....அமைதிப்பூஙகா. அதிகம் அதிர்ந்து பேசாத டைப். (எதற்கும் அவரது குழந்தைகளிடம் கேட்டு சரிபார்த்துக்கொள்ளவேண்டும்). புத்தகம் படிப்பது மிகவும் பிடித்த சமாசாரம் (குமுதம், கல்கி, விகடன் தான்). மிக வேகமாக படித்து முடிப்பது ஒரு பாராட்டப்படவேண்டிய சாமர்த்தியம். 15 நிமிடத்தில் ஒரு புத்தகத்தை படித்துமுடித்துவிட்டு, இந்தா என்று திருப்பிக் கொடுக்கும் வேகம்.

அவரது திருமணத்திற்கு பழனி சென்றது ஒரு அருமையான அனுபவம். பழனி போகும்போது நான், ஸ்ரீதர், PRC ராஜாராவ் மகன் ஸ்ரீராம்,  அவர்களது சொந்தமான ரங்கன், ஒரு கூலிங்கிளாசை ஆளுக்கு பத்து பத்து நிமிடம் அணிந்து, பஸ் ஜன்னல் வழியாக  வயல் வரப்புகளுக்கெல்லாம் ஸ்டைல் காட்டியது, இன்னும் சிரிப்பாக இருக்கிறது.

பழனியில் நெய்க்காரப்பட்டி மைனர் மடம்(கல்யாண சத்திரம்) எங்கு என்று கேட்டதற்கு, விதவிதமான வழிகாட்டல்கள். கிழக்கால போன, ஒருசந்து வரும், அதுல தெற்கால திரும்பி இத்யாதி, இத்யாதி. சாயஙகாலம் 7 மணிக்கு அ நான் சூரியனை எங்கே தேடி, கெழக்கப் பிடிச்சு, தெற்கால ஒடிச்சு, என மிரண்டோம்.

வேறு ஒருவர் எங்களுக்கு தெரிந்தபடி வழி சொன்னார். முதலில் ஈஸியாக இருந்தாலும், பின்பு புரிந்தது அவர் வழி சொல்வது, ஈரோடு பக்கத்தில் இருக்கும், நெய்க்காரப்பட்டி கிராமத்துக்கு என்று. தப்பித்து ஓடினோம். நல்ல வேளை உறவினர் ஒருவர் வரவே, ஒரு வழியாக சத்திரம் வந்து சேர்ந்தோம்.

நடந்து வரும் வழியில் கடலை சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதரிடம் ஒரு வயதானவர் ஏதோ கேட்டார் பரிதாபமான முகத்துடன். (கர்ண பரம்பரையில் போன ஜென்மத்தில் பிறந்த) ஸ்ரீதர் தயாள முகத்துடன் கையில் இருந்த பொட்ட(ண)லத்தை அப்படியே கொடுத்தான். கொடுத்தவன் தாத்தாவிடம்  நன்றாக வாங்கிக்கட்டிகொண்டான். ஏண்டா! ஒங்கிட்ட நான் மணிதானே கேட்டேன், நீ என்ன பிச்சக்காரன்னு நினச்சுட்டியா என்று கடலையை வீசி எறிந்துவிட்டுப் போனார்.

கல்யாண மாப்பிள்ளை எங்கே என்று தேடினால், அவர் அங்கே பின்கூடத்தில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த காட்சி எனக்கு ஷாக்கடித்தது. கல்யாணத்துக்கு வந்த இடத்திலேயே இப்படி சின்ஸியரா இருக்காரே, இத நம்ம வீட்டுக்காரங்ய பாத்தா நம்ம பொழப்பு நாறீடுமே என்று நழுவினேன். தோளில் இருந்த (சொரிந்து கொள்ள மட்டுமே பிரயோகக்கப்படுத்தப்பட்ட) பூணூல் அனலாய் சுட்டது).

ராவ் மாமா வீட்டில் அடுத்தது பிருந்தா. நிறைய சண்டை போட்டிருக்கிறேன். சண்டை போடாத அபூர்வமான நேரத்தில் நல்ல பிரண்ட்ஸ். ஒரு தடவை நமது தெருவில் ராமன் கடை பக்கத்தில் நண்பர்கள் அன்புக்குழு ஒன்று பாடல் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. நாஙகள் எல்லோரும் ஆளுக்கொரு மடக்கு நாற்காலி போட்டு, மீனாக்‌ஷி நிவாஸ் நுழைவாயில் இருக்கும் அகழி அருகில் (அதுதான் சாக்கடை) உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். பிருந்தா எழுந்து முன்னால் போய் ஏதோ பார்த்துவிட்டு திரும்ப நாற்காலியில் உட்காரும் முன்பு ஆண்டி ராபர்ட்ஸ் பௌன்ஸரில் சிக்ஸர் அடித்த காவஸ்கரின் லாகவத்துடன் (என்று கற்பனை செய்துகொண்டு) பிருந்தாவின் சேரை இழுக்க, பின் அவர் கீழே விழ....கச்சேரி பார்த்துக் கொண்டிருந்த என் பெற்றோர்கள் (கல்யாணமாக வேண்டிய பொண்ண இப்படியா தள்ளி விடுவே என்று தெலுங்கில் மாட்டலாடி) என் முதுகில் தனித்தனியாக தபேலா வாசித்தனர்.

பிருந்தா கல்யாண வைபோகம் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி. கரூர் அருகில் சிந்தலவாடி என்ற குக்கிராமத்தில்திருமணம். அந்த ஊர் முதல்வர் நரசிங்கப்பெருமாள். பெருமாள் தவிர அந்த ஊரீல் பத்து பேர்தான் குடியிருந்தார்கள்.

நான் போவதாக முதலில் பிளான் இல்லை. பிளான் என்ன பொல்லாத பிளான், போக வர பஸ் சார்ஜ் செலவாகுமே என்ற பீதிதான்,

கல்யாணத்திற்கு போக மாமா ஒரு பஸ் சொல்லியிருப்பதாகச்சொன்னார்கள். அவர்க்கு தெரிந்த ஒரு கம்பெனியில் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்.

பஸ்சைப்பார்த்தால் பகீரென்றது. சந்திரலேகா சினிமா எடுத்தகாலத்தில் ஜெமினி சினிமாக்கம்பெனி வேன் மாதிரி ஒரு அரதப்பழைய பார்கோ அல்லது பெட்போர்ட் வண்டி. கருப்புகலரில், பார்க்க போலீஸ் வேன் மாதிரி இருந்தது (கீழ்க்காண்பது மாதிரிப்படம், இவ்வளவு அழகாகவெல்லாம் அந்த பஸ் இல்லை)
சாமான் ஏற்ற உதவி செய்துகொண்டிருந்த ராவ் மாமா என்னடா நீ வரல்லையா என கட்டாயப்படுத்த, அடுத்த 5 நிமிடத்தில், ஒர் செந்தில் முருகன் ஜுவல்லர்ஸ் மஞ்சப்பை சகிதமாக நான் ரெடி. பஸ்சில் போவது படு ஜாலியாக இருந்தது. இந்த பஸ் தோற்றம் நிறத்தைப்பார்த்து போலீஸ் வேன் என்று நம்பி பலர் வழி விட்டனர். 55 நிமிடத்தில் திண்டுக்கல்லே போய் சேரும் நல்லமணி டிரான்ஸ்போர்ட் பஸ் கூட வழிவிட்டான்.

வழிவிட்டபின்னும் முன்னால் ஓவர்டேக் செய்து போகாததால் அந்த பஸ் டிரைவர்கள் மேலும் மிரண்டனர், தன்னை போலீஸ் துரத்துகிறதோ என்ற சந்தேகத்தில். ஓவர்டேக் செய்யாத காரணம் எங்களுக்குத் தான் தெரியும்.
பாண்டியனுக்கு கால் மாறி ஆடிய சிவபிரானைப்போல் ஒரு காலைத்தூக்கி மற்றொரு காலால்ஆக்சிலரேட்டரில் ஏறி டிரைவர் நின்றால் கூட வேகம் 13 கி.மீட்டரை தாண்ட மறுத்தது. ஒரு மாமாங்கத்துக்குப் பிறகு சிந்தலவாடி போய் சேர்ந்தோம்(சோர்ந்தோம்).

அருமையான பச்சைபசேலென்ற கிராமம், சிறிய ஆனால் அருமையான் கோவில். மற்றும்....மற்றும் வேறு எதுவும் கிடையாது. அவ்வளவுதான். பாத்ரூம் கூட 4 கி.மீ. தாண்டி இருக்கும் லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் போனாதான் உண்டு.
இரவு கோவில் மாடியில் தான் படுக்கை. கொசு அதிகமாக இருந்ததால் பலர் தூங்கவில்லை. சிலர் எழுந்து (5/ 6 பேர்), எழுந்து நடக்க ஆரம்பித்தோம், நடு ராத்திரியில். லாலாப்பேட்டை வரை கும்மிருட்டில்   நடந்து மின்மினிப்பூச்சிகளையெல்லாம் வேட்டையாடி (உயிருடன் பாட்டிலில் போட்டு) காலை 3 மணி சுமாருக்கு சிந்தலவாடி திரும்பினோம். ஒவ்வொருவரும் வீரர்கள்எனக்காட்டிகொள்ள பேய்க்கதைகளாகச் சொல்லிக்கொண்டு வந்தோம். நல்ல வேளை இருட்டு, இல்லையென்றால் ஒருவர் முகம் பயத்தில் பேஸ்த்து அடித்து இருப்பது மற்றவர்களுக்குத் தெரிந்து போயிருக்கும்.

அன்று ஜானவாசம், மறு நாள் திருமணம். நல்ல அருமையான நினைவுகள் எங்களுக்கு. பிருந்தாவும், மோகனும் தான் பாவம் மாட்டிக்கொண்டார்கள், திருமணம் என்ற பந்தத்தில்!

பிருந்தாவுக்கு அடுத்தவன், ஸ்ரீதர் என் நெருங்கிய தோழன். என்னால அவன் கெட்டானா அவனால நான் கெட்டேனா என்று தெரிந்து கொள்ள சாலமன் பாப்பையாவின் உதவியை நாடியிருக்கிறோம்.  பழனி எபிஸோட் மேலே திருக்குறளாக சுருக்கி சொன்னேன். 

8வது படிக்கும் காலம், சினிமா போகவேண்டுமென்றால் அவனது டிரிக்...என்னை அவன் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவனம்மாவிடம் அவன் ஒரு பொய் சொல்லுவான். “ரவி அம்மா அவன் மீனாட்சி தியேட்டர்ல படம் பாக்க சரின்னுட்டாங்க. நானும் போகட்டுமா” ! ம்பான். அவன் அம்மாவும் ஏதோ நான் நல்ல பையன்னு நம்பி, சரிம்பாங்க. அந்த அனுமதியை வைத்துக்கொண்டு, அதே டயலாக்கை புறட்டிப் போட்டு எங்கம்மாவிடம் சொல்லுவோம்.  என் அம்மா நாலு தடவைக்கு ஒரு தடவை அனுப்புவார். சேர்ந்து போவோம். பாக்கி 3 தடவை என்னை தலைமறைவாக  இருக்கச் சொல்லிவிட்டு அவன் மாத்திரம் போய் வருவான். சினிமாவில் இருப்பதைவிட இரண்டு மடங்கு ரீல் விடுவான்.

ஒரு தடவை பம்பர சீஸன். ஏப்ரல் உச்சிவெயிலில் செருப்பு கூட இல்லாமல் எப்படி நாள் பூரா விளையாடினோம் என்பது இன்றும் ஆச்சரியம். மதுரையில் ஒரு சீஸனில் இருக்கும் விளையாட்டு மறு சீஸனில் இருக்காது.  ஒரு சீஸனில் ஒத்த கோலிக் குண்டு என்றால், நாலு மாதம் கழித்து 5 குண்டு சீஸன்.  5வது வீட்டு குப்பு பாட்டியின் பேரன் சுரேஷ், (முருகன் தியேட்டர் பக்கத்திலிருக்கும்) புதுவீட்டிலிருந்து  பாட்டி வீட்டிற்கு வெகேஷனுக்கு வந்திருந்தான். அப்போழுது பம்பர சீஸன். எனக்கு பம்பரம் சரியாக விளையாட வராது. (சுண்டாட்டம்+குத்தாட்டம்)/2 என்ற படி ஒரு குத்துமதிப்பாக விளையாடுவேன், மற்றவர்கள் கேலி செய்வார்கள். நான் என்ன வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன், வரல்ல! கிரிக்கெட்டில் chucking, 15 டிகிரீ ஆங்கிள் போன்ற விதிகள் இல்லாததால் நான் தப்பித்தேன்.

ஸ்ரீதரிடம் சட்டிக்கட்டை என்று ஒரு பம்பரம் இருந்தது. பார்க்க, பஞ்சாயத்து சொம்பை கவிழ்த்தது மாதிரி பெரியதாக இருக்கும். இரண்டு தடவை விளையாடினால் தோள்ப்பட்டை பிறளும் அளவு கனம்.
5வது வீட்டு சுரேஷுக்கும் ஸ்ரீதருக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம். சுரேஷுக்கு விதி சட்டிக்கட்டை வடிவில் வந்தது. ஸ்ரீதருக்கு....??? அதே சட்ட்டிக்கட்டை விதி வடிவில் வந்தது. சுரேஷ் குனிந்து பம்பரம் எடுக்க திடீரென்று குனிய, ஸ்ரீதர், தயாரகவிருந்த தனது பம்பராஸ்திரத்தை வீச, அந்தப் பம்பரம் சுரேஷின் தலையில் ஆக்கர்பார் விளையாடியது. (ஸ்ரீதர் தான் சொல்லவேண்டும் இது Accident ஆ அல்லது Incidentஆ என்று). தலையைப்பிடித்துக் கொண்டு சுரேஷ் “குப்பவ்வா, ஸ்ரீதர் நா மண்டகாயனி விரிச்சேஸினாடு” என்று அலறிக்கொண்டு ஒடினான். தலை உடைந்ததை விட, ஸ்ரீதர் உடைத்துவிட்டான் என்று அழுத்தம் கொடுத்ததாக என் பாழும் மனதிற்குப் பட்டது.

என்றும் மாலை சூர்யாஸ்தமனத்திற்கு முன் தாயகம் திரும்பாத ஸ்ரீதர் அன்று 5.30 க்கே வீட்டில் நுழைந்து, பாடப்புத்தகத்தை எடுத்து படித்துக்கொண்டிருந்தது ஆபீஸில் இருந்து திரும்பிய ராவ் மாமாவுக்கு அதிர்ச்சி. அந்த நிமிடத்திற்கு காத்திருந்ததுபோல குப்பவ்வா, சுரேஷ் என்ட்ரி.

அடுத்த நாள் ராவ் மாமா புது பெல்ட் வாங்கினார் !

ஒரு விடுமுறைக்கு மெட்றாஸ் போனவன் திரும்பி வரும் முதல் நாள் அவனப்பாவுக்கு மதுரை திரும்புவதாகத் தகவல் சொன்னான். இலவச இணைப்பாக ஒரு தகவலும் சொன்னான். ஏதோ ஏலத்தில் கிரிக்கெட் பேட் வாங்கியிருப்பதாகவும், வரும் போது எடுத்து வருவதாகவும் சொன்னான். இன்றிரவு கனவில் பேட் மட்டுமே வந்தது. மாமாவிடம் முதல் நாளே கேட்டேன், நானும் ஸ்டேஷன் வரட்டுமா என்று. “பரவாயில்லையே, ஸ்ரீதர்மேல இத்தன பிரெண்ட்ஸ் பாசமா இருக்காங்களே, ஒரு நாலஞ்சு பேர் வரேன்னு சொன்னாங்க.”. சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு அவருக்கு தெரியல பாவம். அவரே போய் பாண்டியன் எக்ஸ்பிரசில் வந்த ஸ்ரீதரை அழைத்துக் கொண்டு வந்தார்.

தனுஷ்கோடி கடைப்பக்கத்தில் அவன் வரும் போதே என் கண் மலர்ந்தது. காரணம், கையில் நீளமான ஒரு பொருள்.  நியூஸ் பேப்பரெல்லாம் சுற்றி, கம்பீரமாக ராவணன் போர் வாள் போல் இருந்தது. அவ்னும் எங்களுக்கு ஹீரோவாகத் தெரிந்தான்.

அவன் வீட்டிற்கு வந்த்ததும் காபி குடிக்கக் கூட அவனை விடவில்லை. அவனும் ஆர்வமாக, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போர்வாளை உறையிலிருந்து கழற்றினான்.  கமலஹாசனை எதிர்பார்த்துக் காத்திருந்த போது லூஸ் மோகன் வந்த்து போல் ஒரு ஆண்டி-க்ளைமேக்ஸ். உள்ளே இருந்தது ஒரு பழைய பேட். ஒரங்கள் சிதைந்திருந்தன, ஒரிரு இடங்களில் பொக்கை, ஒரு சில இடங்களில் வழுக்கை. கேட்டால், மெட்றாஸில் ஏலத்தில் ஒரே ஒரு ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியதாகச் சொன்னான்.

அந்த பேட் மெள்ள மெள்ள ஓரங்கள் சிதைந்தாலும், பவர் குறையவில்லை. வெள்ளை பெயிண்டெல்லாம் அடுத்திருந்தோம்.  மெள்ள மெள்ள உடைந்து சிதைந்து கிட்டத்தட்ட ஒரு ஸ்டம்ப் மாதிரி மாறிக்கொண்டிருந்து. பள்ளம் விழுந்த அம்மிக்கல்லையே விடாத நமக்கு இது ஒரு பொருட்டா !

ஆசைப்பட்டவளுக்கு வாக்கபடமுடியாவிட்டால், வாக்கப்பட்டவளை ஆசையோடு பார்த்துக் கொள் என்ற புதுமொழிக்க்கேற்ப, அந்த மட்டையை மட்டம் தட்டுவதை நிறுத்திக்கொண்டு, கிரிக்கெட் வாழ்க்கையை அனுபவித்தோம். அதற்கு முன் வரை இருந்த பேட் களைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன்.

முதல் பேட், எஙகள் அம்மம்மா ஜபல்பூரில் இருந்து துணி துவைக்க வாங்கிவந்த கட்டை. தென்னகத்தில் துணியை கல்லில் அடித்துத்துவைப்போம், வடனாட்டில், துணியை கல்லில் வைத்து கட்டையால் அடித்துத் துவைப்பார்கள்.
இரண்டாவது பேட், 5வது வீட்டு சுரேஷ் குடும்பம் புது வீடு கட்டும்போது, மிஞ்சி இருந்த கட்டையில் பேட் ஜாடையில் செய்யப்பட்ட கட்டை.


மூன்றாவது கிருஷ்ணாவின் நண்பனின் அப்பா ஒரு சோப் தயாரிக்கும் தொழிலில் இருந்தார். அவர் சிலிக்கேட்டை மற்ற வேதிப்பொருட்களுடன் கலக்க உபயோகிக்க்கும் கட்டை, செம கட்டை, தூக்கவே முடியாது. கிட்டத்தட்ட என் இடுப்பு உயரம் இருக்கும்.


பின் பலவருடங்கள் பின் (1980 ?) சென்னையில் பெரியலீவுக்கு (annual vacation) அவன் பெரியப்பா வீட்டில் சைதாப்பேட்டையில் இருந்தான். எ நான் என் அக்கா வீட்டில் தாம்பரத்தில். அவனது பெரியப்பா கருணை உள்ளம் கொண்ட disciplininarian. ஒரு நாள் அவனும் அவனது அத்தைபையன் சேலம் சுரேஷும் சேர்ந்து 11மணி காட்சி போக முடிவு செய்து  பெரியப்பாவிடம் பெர்மிஷன் கேட்க பழைய உளுத்துப்போன அஸ்திரத்தையே உபயோகிக்க முடிவு செய்தார்கள்.(அதாவது, நானும் சுரேஷும் தாம்பரம் போய் ரவியைப் பார்த்துவிட்டு வருகிறோம் என்று) சரியென்ற பெரியப்பாவின் ( இரு பக்கத்தில் ஒரு பக்கமான) கருணாரஸத்துடன் சில பல 10 ரூ தாள்களைக் கொடுத்து அனுப்பினார். தாம்பரம் தூரமாச்சே....ரயில் சத்தம், டிபன் இத்யாதி இத்யாதி.

எல்லோருக்கும் 7 ½ நாட்டு சனியென்றால், ஸ்ரீதருக்கு 7 ½ நாட்டு ரவி. அவன் சினிமா புறப்பட்ட கால் மணியில், நான் பெரியப்பா வீட்டில் என்ட்ரி. அந்தக்காலத்தில், மொபைலா, எஸெம்மெஸ்ஸா.

“இப்பதானடா ஒன்னப்பாக்க தாம்பரம் வரைக்கும் போயிருக்காங்க அந்த ரெண்டு மடப்பசஙகளும்” என்று பெரியப்ப்பா என்னை உட்காரச் சொன்னார். காபி கீப்பி சாப்பிட்டு விட்டு நடையக்கட்டினேன். ஒரு வாரம் ஏதும் பேச்சு மூச்சு இல்லை. ஒரு வாரம் கழித்து நடந்ததை ஒரு நாள் சொன்னான்.

சினிமா பார்த்து வீடு திரும்பிய வீரர்களை உஷார் பெரியப்பா அருமையாக மடக்கினார்.


என்னடா ஸ்ரீதர், ரவி எப்படி இருக்கான் , என்ன சொன்னான் என்று பொறுமையாகக் கேட்டார். அவன் நல்லா இருக்கான் பெரியப்பா, ஒரு 2/3 மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அவங்க வீட்டில பாட்டி சாப்ப்பாடு எல்லாம் போட்டங்க, சாப்பிட்டுட்டு எலக்ட்ரிக்  ட்ரெயின் பிடிச்சு திரும்பி வந்தோம், இது ஸ்ரீதர்.

நாக்கை சாணை பிடித்துக் கொண்ட பெரியப்பா, நான் வந்து போனதை சொல்லாமல் அடுத்த கேள்வி, ட்ரெயின்ல என்ன படம்டா ஸ்ரீதர். மேலும் ஒரு சில இடக்குக் கேள்வி. நன்றாக மாட்டிக்கொண்டது புரிந்தது. நாம் சினிமா போனது இவருக்கு எப்படித் தெரியும் என்ற ஐயவினா வேறு.
பெரியப்பா தனது மறுபக்கத்தைக் காட்டினார். 

அவர்கள் வீட்டு கடைக்குட்டி கிருஷ்ணா. தினமும் அப்பா உள்ளே நுழைந்து ஐந்தாவது நிமிடத்தில் பாக்கெட்மணி (5 பைசா) கறப்பதில் கில்லாடி. பாக்கெட்மணி வாங்கி வீட்டை விட்டு  வெளியே வரும்போது, சூப்பர்சிங்கர் ஆடிஷன் முடித்து வெற்றியோடு வரும் பாடகன் போல் ஒரு பெருமிதத்தோடு வருவான். பச்சைக்கலர் பாலியெஸ்டர் பேப்பர் சுற்றியிருக்கும் நியுட்ரின்/ பேரி மிட்டாய் தான் சாக்லெட் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு உண்மையான சாக்லேட் என்றால் என்ன என்பதை அடையாளம் காட்டியவன். அடிக்கடி அப்பாவை தொந்திரவு செய்வது ஜெம்ஸ் சாக்லேட். ரொம்ப...ரொம்ப நல்லவன். அந்த ஜெம்ஸ் சாக்லேட் ஒன்றிரண்டு எனக்கும் தருவான்.

நவராத்திரிக்கு ஓரிரு நாள் முன்பு, இவன் பரண் ஏறி கொலு பொம்மைகளை எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தான். விளையாடப்போகும் அவசரம், பொம்மைகளை முரட்டுத்தனமாக நகர்த்திக் கொண்டிருந்தான். அவன் அம்மா  “ பேடா கண்ணா” என்றார். அந்த வார்த்தை பிடித்துப் போக, மாமியிடம் அதற்கு அர்த்தம் கேட்டேன். கன்னடம் ஈஸியாக இருப்பதாக தோன்ற, மெள்ள மெள்ள பேச ஆரம்பித்தேன் (பாவம் அவர்கெளெல்லாம்). பின்னாளில் நான் கர்னாடகா கன்னடம், எழுதுவது, படிப்பது எல்லாம் கற்றுகொள்ள அந்த பேடா கண்ணா அஸ்திவாரம் போட்டது. இதில் கிருஷ்ணா பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை (ஹி ...ஹி).

மூன்றாவது வீட்டில் ராமசாமி மாமா. அளவாகப்பேசுவார். காலை நேரங்களிலும், விடுமுறை   நாட்களில் மிகவும் ஜோவியலாக இருப்பார். மற்ற நாட்களிலும்,  நேரங்களிலும் வெகு சீரியஸ். அவருடைய ரா(ஹ்)லே சைக்கிளை சகாச்சக் என்று வைத்திருப்பார். டைனமோ வைத்த வண்டி. அந்தக் காலத்தில், டைனமோ வைத்த வண்டி ஒரு ஸ்டேடஸ் சிம்பல், வேறு சிலர் அந்த டைனமோ லைட்டுக்கு, மஞ்சள் கலரில் மப்ளர் துணியெல்லாம் கட்டியிருப்பார்கள்.

அலுவலகத்தில் இருந்து 8 மணிக்கு முன்னால் வீடு திரும்பமாட்டார். கடின உழைப்பாளி. இரவு சாப்பிட்டபின், தூங்கப்போகாமல், மீண்டும் வேலை. கைநிறைய சுமந்துகொண்டு வந்த பைல்களைப் பார்க்கத்தொடங்குவார். என்னைப்போல அப்பாவிகளை ஆங்கிலத்திலிருக்கும் அலுவலகக் கடிதங்களை (proof reading) சரிபார்க்கக் கூப்பிடுவார்.( அவர்கள் வீட்டுக் குழந்தைகளைக் கூப்பிட்டால், “போப்பா, தூக்கம் வருது என்று தப்பித்திருப்பார்கள் !!) என்னை மதித்து கூப்பிடுகிறாரே என்று  ஆனந்தமாகப் போவேன். இன்று ஆங்கிலத்தில் நல்ல பரிச்சயம் ஏற்பட அந்த ஒரு சந்தர்ப்பம் உதவியது. மாமாவுக்கு நன்றி.

அவர்கள் வீட்டில் ஆச்சரியமாக நினைத்துப்பார்க்கும் ஒரு விஷயம், மாமாவின் (எப்போதாவது வரும்) கோபமும் அவர் குழந்தைகளின் பிஹேவியரும். அவர் சாந்தமாய் இருக்கும் போது ஜாலியாக அவரை ஒண்டிக்கு ஒண்டியாக ஜாலியாக கலாட்டா செய்வார்கள், அவரும் அனுபவிப்பார். அவர் மூட் அவுட் எனறால், எல்லோரும் கவனமாக டீல் செய்வார்கள்.

வீட்டிலும் வேலை செய்துவிட்டு, அலுவலத்திலும் வேலை செய்யும் பெண்கள் இன்று பலர் இருந்தாலும், அந்தக் காலத்தில் அது மிகக் கஷ்டமான சமாசாரம். அலமேலு டீச்சர் அந்தக் காலத்தில் அதைச் செய்தது மிகவும் பாராட்ட வேண்டிய சமாசாரம். இந்தக் காலத்தில் பெண்கள் உதவிக்கு பல உபகரணங்கள் (கணவன் என்ற உபகரணத்தையும் சேர்த்து). அந்தக்காலத்தில் எந்த வித உபகரணங்களும் கிடையாது. எல்லாமே மேனுவல்தான். அடுப்பு பற்றவைப்பதே ராக்கெட் சயன்ஸை விட கஷ்டமானது என்று முன்பு பார்த்தோம். காப்பி போட்டு, சமைத்து, டிபன் பாக்ஸில் கட்டிக்கொடுத்து, (சாப்பிட்டு அல்ல) வயிற்றில் கொட்டிக்கொண்டு, நடந்தே அலுவலகம் செல்வது என்று எல்லாமே சோதனைதான். 

அந்தவிதத்தில் அலமேலு டீச்சர்,,என்னுடைய இரண்டு அக்காக்கள், மற்றும் அந்தக்காலத்தில் வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தையும் நிர்வகித்த பெண்மணிகளுக்கு சலாம்.

டீச்சர்  நன்றாகப் பாடுவார். எங்கள் வீட்டிற்கு வரும்போது என் அம்மா ஓரிரு பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்பார். ஒன்று...பஞ்சாக்‌ஷர பீடரூபிணி, மற்றொன்று காம்போஜியில் அமைந்தபாடல் (பல்லவி நினைவில்லை...)

அவர்களது முதல் பெண் ஜெயா, என் வயது. அவரிடம் பேசிக்க்கொண்ட  நாட்களைவிட சண்டைபோட்டுக்கொண்டு பேசாமல் இருந்த   நாட்களே அதிகம். அந்தக்காலத்தில் (இந்தக்காலதிலும் இருக்கலாம்) காரணமே இல்லாமல் சண்டைபோட்டுக்கொண்டு பேசாமல் இருப்பது சகஜம். பல மாதங்கள் கழித்து ஏன் சண்டை போட்டோம், எனிமி ஆனோம் என்றே மறந்துவிடும்.

எங்கள் வீட்டில் பரணின் மேல் ஏறச்சொல்லும்போதெல்லாம், அங்கு வைத்திருந்த மண்டைவெல்லத்தை சுவற்றில் ஒரு தட்டுத் தட்டி யாருக்கும் தெரியாமல் தின்று விட்டு வரும் எனக்கு ஜெயா வைத்த பட்டப்பெயர் வெல்லமண்டி. இந்த அரிய தகவல், ஜெயாவிடம் பிருந்தா சண்டைபோட்டு விட்டு பேசாமல் இருந்த ஒரு காலத்தில், ஆனால் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் சொன்னது. (உண்மையா ஜெயா ?)

ஆயக்கலைகள் 78 என்பது ரகுவை பார்த்தபிறகுதான் தெரியும். அதுவரை 64 என்றே எண்ணிக்கொண்டிருந்தேன். சங்ககால 64 கலைகளைத்தவிர சமகால கலைகளான கிரிக்கெட், கோலி (1 குண்டு, 5 குண்டு), கிட்டி, ஸ்லோ சைக்கிள், வாலிபால், சோளத்தட்டை பேட்மிண்டன், கேரம் எல்லாவற்றிலும் கில்லி. எல்லா வேலைகளையும் வலது கையால் செய்யும் ரகு, கோலி (ஒற்றைக்குண்டு) மாத்திரம் இடது கையால் விளையாடுவான் என்று நினைவு. அது தவிர படிப்பிலும் சமர்த்தன். வாத்தியார் புள்ள மக்கு என்ற பழமொழியை தகர்த்தவன்.  பல பொடியர்கள் அகராதித்தனமாகப் பேசும் போது அந்தக்கால்த்திலேயே நல்ல மெச்சூரிட்டியுடன் பேசுவான்.

அந்தக் காலத்தில் நான் படித்த எம்.ஸி. ஹை ஸ்கூலில் விவரம்  தெரிந்த எவரும் குழந்தைகளைச் சேர்க்கத்தயங்குவார்கள். அப்பேர்பட்ட ரெபுடேஷன். ரவுடி ஸ்கூல் என்பார்கள்.
ஆனால் அது உண்மையல்ல. ஓரளவு நல்ல பள்ளியே. என்ன....அமாவாசை, பௌர்ணமின்னா லீவு, ம்துரைக்கல்லூரி போர்ட் மெம்பர் செத்தா லீவுன்னு விடுமுறைகள் அதிகம்கொடுக்கும் பள்ளி. மகாளயம் 15 நாளும் காலை 11 மணிக்குத்தான் துவங்கும்.

முதலில் யாரையும் சேர்க்கத்தயங்கிய பள்ளியில் வரிசையாக நான், ஸ்ரீதர், கிருஷ்ணா, ரகு, சுரேஷ், மணி என்று சேர்ந்தார்கள். என் மனதில் என்னவொ நான் சேர்ந்ததினால் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் பெற்றொர்கள் வேறு விதமாய் நினைத்தார்கள் (இவனே இந்த ஸ்கூல்ல குப்ப கொட்றப்போ.... எம் புள்ள சாமர்த்தியசாலி,… ஜமாய்ச்சுடுவான்).

ரகுவுக்கு அடுத்த மீனா, எப்பொழுது சிரிப்புடன் இருக்கும் பெண். இப்பொழுதும் அப்படியே இருக்க வேண்டுகிறேன். ராமசாமி மாமாவுக்கு கொஞ்சுவதற்க்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாவிடம் தான் ஜாலியாகக் கொஞ்சுவார். சுபா பிறந்தவரை கடைக்குட்டியாக இருந்த காரணமாக இருக்கலாம்.

சுபாவின் வரவு வித்தியாசமானது. இது  வரை சொன்ன எல்லாக் குழந்தை, பெரியவர்கள், இந்த காலக்கட்டத்திற்கு முன் பிறந்தவர்கள். சுபா, என் வயதுக் குழந்தைகள் பார்க்க பிறந்தவள். என் நினைவு சரியென்றால், திருப்பரங்குன்றம் ரோட், க்ரைம் ப்ராஞ்ச் எதிரில் இருக்கும் நயினார் க்ளினிக்கில் ஞாயிறு அக்டோபர் 19, 1975 அன்று பிறந்தவள். இந்த தேதி சரியாக நினைவு கூர்வதிலிருந்தே எங்கள் மனதில் இந்த  நிகழ்ச்சி  எந்த அளவு நினைவில் நின்றிருக்கும் என்று தெரிந்திருக்கும்.
ரகுவின் பாட்டி (சாவித்திரியம்மாவா ?!) ஒரு நாள் சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்குவா, பாராயணம் இருக்கிறது என்று என் வய்துக் குழந்தைகளைத் திரட்டினார். பாராயணம்னா ஏதோ சுண்டல் மாதிரி ஏதோ திங்கிற சமாசாரம்ன்னு நினைத்துப் போன எனக்கு ஏமாற்றம். கந்தர் சஷ்டி கவசத்தை எல்லோரும் சேர்ந்து சொல்றதுக்குபெயர்தான் பாராயணமாம் !

நமது வீடுகளுக்கு ஓரிரு வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஒன்று “ஹரேராம ராம ராம” என்று மழலையுடன் பேசும் ஒரு பிச்சைக்காரர். முதலில் ஹரே ராம பாடுவார், பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பேர் சொல்லி கூப்பிடுவார் “ ஹரி, சீமா, கோகிலா, பிருந்தா, ஸ்ரீதர், ஜெயா, மீனா, ரகு என்பவர், பின்னர் சுபாவையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டார். அவருக்கு எப்படி விவரம் தெரியுமென்பது ஆச்சர்யம்.

அடுத்து சொல்ல இருப்பவரைபார்த்துதான் அருணாச்சலம் சினிமாவில் வரும் வடிவுக்கரசி ரோல் படைத்திருப்பார்கள் என்கிறேன். வயதாகி, உடல் கூனி, ஒரு ட்விஸ்ட் ஆகி, வெள்ளைகுடுமி வைத்து, “அண்ணாத்தே, பத்துத்தே” என்று அடிக்குரலில் இருந்து கூவுவார். நான் மதுரை வந்த புதிதில் இவரைப்பார்த்து பயந்து ஓடி ஒளிந்திருக்கிறேன். நம் வீட்டில் சொல்லி மிரட்டும் பூச்சாண்டியோ, ரெண்டுகண்ணனோ என்று ! சாண்க்யரின் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால் இவரை ஹீரோவாகப் போட்ட்டால் வேஷப்பொருத்தம் சூப்பராக இருக்கும். பின்னர் விசாரித்ததில் தெரிந்தது என்னவென்றால், அவர் வியாபாரி. அவர் கூவும் கோஷம் “ அரைஞாண் கயிறு, பட்டுக்கயிறு”. நல்லாக் கெளப்புறாங்கப்பா பீதிய” என்ற வடிவேலு நினைவுக்கு வ்ருகிறார்.

நாலாவது வீட்டு வெங்கடராமன் மாமா ஒடிசலாக இருப்பார் . பழைய ஹெர்குலிஸ் சைக்கிள் வைத்திருப்பார். அமைதியாக இருப்பார், கோபம் வந்தால் புயல். வீட்டில் எல்லோருக்கும் டெரர். பல ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளின் பள்ளிக்கூட பைக்கட்டுகளில் சர்ப்ரைஸ் சோதனை செய்வார். எல்லாப் புத்தகங்களும் , நோட்டுகளும் முத்லில் போட்ட அட்டையுடன் சரியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தனி ஆவர்த்தனம் வாசித்துவிடுவார்.  மிலிட்டரியில் கூட இப்படி செக்கிங் இருக்குமா தெரியவில்லை ! ...சிரமத்துக்கிடையில் காலம் தள்ளிக்கொண்டிருந்த நாமே கஷ்டஜீவனம் என்று சொல்லும்படியானது அந்தக் குடும்பத்தின் நிலை.

முதல் பெண் பெயர் மறந்துவிட்டது (சாந்தா அக்காவா?). இரண்டாமவர் பிரேமா அக்கா, பியூஸிக்கு பிறகு பி.ஏ. தமிழ் மதுரை தமிழ்ச் சங்கத்தில் படித்துக் கொண்டிருந்தார். அவரது திருக்குறள் புத்தகத்தை இரவல் வாங்கி 1974ல் பள்ளி திருக்குறள் போட்டியில் முதல் பரிசு வாங்கியது நினைவிருக்கிறது. பரிசை வாங்கிக்கொண்டு வரும் வழியில் அசோக்பவன் அருகில் என் சித்தி பையன்(ர்) வேணு அண்ணாவை பார்க்க, அவர் என்னைப்பாராட்டி, அசோக்பவனில் அரைக்கிலோ (கலர்கலரான) பூந்தி வாங்கிக் கொடுத்தது எக்ச்ட்ரா சந்தோஷம். வீட்டில் போய் இதைகாண்பிக்க எல்லோரும் பாராட்டியதைவிட என் பாட்டியின் (வெள்ளைப் புடவை கட்டியிருப்பார், குழந்தைகளுக்காக் தன் சௌகர்யங்களை மறந்த ஒரு கிரேட் பெண்மணி), “ஊருக்கு புதுசான ஒரு சின்னப்பையன், ராத்திரி 9 மணிக்கு தனியா வந்திருக்கான்” என்ற பாராட்டு, ஒரு உண்மையான் தாயின் மனதைக் காட்டியது.

உஷா மற்றும் ஸ்ரீராம், அந்த் வீட்டின் மற்றைய வாரிசுகள். இன்னொரு பெண் துன்னத்துடியில் இருந்ததாக நினைவு (ஸ்ரீராம் பல நாட்கள்  வரை மழலையாகப் பேசிக்கொண்டிருப்பான். அவன் பாஷையில் குன்னக்குடிதான் துன்னத்துடி)

அவர்கள் காலி செய்து போனபிறகு வந்தவர்கள் தான் அவர்களது உறவினர் பரமேஸ்வரன் மாமா, பர்வதம் மாமி குடும்பம். மோஹன், சுந்தர், புவனா, கீதா அவர்கள் குழந்தைகள்.
அவர்கள் வீட்டு நிலைக்க்தவு சாவி தொலைந்த கதை கிளைக்கதை என்பதால் நேயர்விருப்பமாக இருந்தால் பின்னர் சொல்லப்படும்.
1983ன் பின்னர் அவர்கள் தொடர்பு குறைந்தபிறகு, 1993-94ல் புவனா திருமண ரிசெப்ஷனில் அவர்களது உறவினர்களோடு சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
5வது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி மாமா, ஜெயா மாமி. லக்‌ஷ்மி, நளினி, சுரேஷ், மணி. மாமி செய்த சீடை இன்னும் நினைவிருக்கிறது. இனிப்பு சீடை கால்ப் பந்து சைஸிலும், உப்பு சீடை இலந்தைப்பழ சைஸிலும் இருக்கும், ஆனால் இரண்டுமே அருமை. எங்கள் வீட்டில் இரண்டும் ஒரே சைஸில் பார்த்த கண்களுக்கு இது வித்தியாசமாக இருந்தது. கோழி குருடாயிருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருந்தால் சரி என்ற அசைவப்பழமொழிக்கேற்ப, இரண்டு சீடையும் ரசித்துஅனுபவித்தோம்.

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த ஒரிரு நாட்களில், எல்லா பட்சணங்களையும் சுமந்து கொண்டு தினமணி தியேட்டரில் மேட்னி ஷோ “மாயா பஜார்” பார்த்தது இன்றும் மறக்கமுடியாது. மாயாபஜார் இன்றும் 3மாதஙகளுக்கு ஒரு முறை நான் பார்க்கும் அருமையான படம். புது டிஜிடைஸ்ட் பிரிண்ட், பாகுபலிக்கு சிம்மசொப்பனம் ! என் லேப்டாப்பில் இப்பொழுதும் உண்டு. மாயாபஜார் சினிமாவை பட்சணத்தோடு எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி மாமி.

ஜெயாமாமி குடும்பம் ஜெயிந்திபுரம் (ஜெய்ஹிந்த்புரம் என்று சொல்வது மதுரை மரபன்று) முருகன் தியேட்டர் அருகில் புது வீடு கட்டி குடியேறிய பின் (மீனாக்‌ஷி நிவாஸ் வழக்கப்படி) அவர்களது அம்மா, அப்பா குடியேறினார்கள்.

தாத்தா பெயர் மறந்து விட்டது. வயதான காலத்திலும் சளைக்காமல் மெடிகல் ரெப் வேலை பார்த்தார். எல்லோருக்கும் சாம்பிள் மருந்து தருவார். அதிர்ந்தே பேசமாட்டார்.

ஆறாவது வீட்டில் மீனா அக்கா, ராஜி, வெளியூரிலிருந்த அண்ணா, அவர்கள் அப்பா ,அம்மா(பொன்னம்மா ??). (அப்பா) அவர் நடந்து வரும்போது காலை தேய்த்து தேய்த்து நடப்பார். அது ஒரு விதமாக ஒலி எழுப்பும். அதனால் அவருக்கு வைத்த புனைப்பெயர் சரக், சரக், கிட்டா. இதை முந்தானாள் ஸ்ரீதர் போனில் பேசும்போது கூட நினைவு கூர்ந்தான். இதையெல்லாம் சரியாக நினவு வைத்திருக்கு ஸ்ரீதர் பாடங்களையும் நினைவு வைத்திருதால் பி.எச்டி வாங்கியிருக்கலாம் !
எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் தாண்டி படித்து முன்னேறி வெற்றி படைத்தவரில் முதல்வர் மீனா அக்கா.


அந்தக்காலத்தில், வீட்டுவாசலில் இருந்த நடைபாதையில் தான் நாங்கள் கிரிக்கெட் (கார்க் பால் வைத்துக்கொண்டு) விளையாடுவோம். அது எப்பேர்ப்பட்ட அராஜகம் என்று இன்று புரிகிறது. ஆறாம் வீட்டு வாசலில் தான் சுவற்றில் ஸ்டம்ப். ஸ்கொயர் கட் என்கிற பேரில் பல முறை அவர்கள் வாசல் (தகரமோ, ஜிங்க் ஷீட்டோ) கதவை பதம் பார்த்திருக்கிறேன்(றோம்). அன்று அவர்கள்  நிம்மதியை குலைத்தது இன்று மனம் நோகிறது.

விளையாடும் போது குறுக்கே வரும் யார் காலில் அடித்துவிட்டால், அவர்கள் பந்தைப் பிடுங்கி வைத்துக்கொள்வது அவர்களது தார்மீக உரிமை. எங்களை சில காலம் வெறுப்பேற்றிவிட்டு திருப்பித்தருவார்கள். ஒரு முறை 6வது வீட்டு மாமி வலது காலின் அருகில் பந்து செல்ல, மாமி இடது காலை பிடித்துகொண்டு டிராமா செய்து, பந்தை பிடுங்கி வைத்துக்கொண்டதும், நாங்கள் பதிலுக்கு கலாட்டா செய்ததும் நினைவுக்கு வருகிறது.

மற்றொரு நாள் எங்களில் யாரோ ஒருவர் கூக்ளி பற்றி ஏதோ பிதற்ற, மற்றொருவர் கூக்ளியென்றால் 27 தடவை பிட்ச் ஆகும் என்று ரீல் விட (இந்த மாதிரி கட்டுக்கதை எல்லாம்  ஸ்ரீதர் உபயமாகத்தான் இருக்கும்) பஞ்சாயத்து பண்ண ஒரு பெரிய தலை தேவைப்பட்டது.

“வளத்தியானவன் வஞ்சனையில்லாதவன்,....  நெட்டைய நம்பலாம், குட்டய நம்பக்கூடாது என்ற பழ(பொய்)மொழிக்கேற்ப, ராஜியின் உயரமான அண்ணனிடம் மத்யஸ்த்தத்துக்குப் போனோம். அவர் இரு தரப்பு வாதத்தையும் கேட்டுவிட்டு இந்தக்கால ஜட்ஜ் போலில்லாமல் தீர்ப்பை ஒத்திவைக்காமல் உடனே சொன்னார் “ ஆமாம் கூக்ளின்னா, 27 பிட்ச் ஆகி, பேட்ஸ்மேன சுத்தி வந்து ஸ்டம்ப அடிக்கும்னு அனகொண்டா தண்டிக்கு ஒரு ரீல் விட்டது, இன்று    நினைத்தாலும் சிரிப்பு.
மீனாக்‌ஷி நிவாஸ் மகாத்மியதை இரு பாகமாகப் பிரிக்கலாம், க.பி மற்றும். க.மு. க.மு என்பது கருப்பையா சேர்வை வாங்குமுன், க.பி.....என்பது கருப்பையா சேர்வை  வாங்கிய பின்.

சுமார் 1982ல் பாம்பேயில் இருக்கும் என் மாமா சென்னையில் வீடுகட்ட முடிவு செய்ய மீனாக்‌ஷி நிவாஸ் வீட்டை விற்க முடிவு செய்தார்.
நம்மில் பலர் உபதேசம் செய்தனர் “  நல்ல பிராமணாளுக்கு பார்த்து வித்துடுங்கோ”. அது சரி. பிராமணன்கிட்ட பணம் ஏது. அதுக்கும் மேலே   நல்ல பிராமணனுக்கு எங்கே போறது. பிரம்மாகிட்ட ஆர்டர் கொடுத்தாலும் நீங்க சொல்ற நல்ல பிராமணன் ரெடியாகி வர 40-50 வருஷமாகுமே!

80ஆயிரம் வரை வந்தால் சந்தோஷம் என்று நினைத்த காலகட்டத்தில், ஒரு லட்சம்குடுத்து கருப்பையா சேர்வை வாங்க ஒத்துக்கொண்டார். பழக்கடை (டோரிக்கண்ணு) மைக்கேல் தான் புரோக்கர். அன்றைய கணக்குப்படி கமிஷன் கிடைத்த 1000 ரூபாயை வைத்தே மைக்கேல் வாழ்க்கையில் செட்டில் ஆயிருப்பார். ஆயிரம் என்பது அவ்வளவு பெரிய தொகை.

வீடு விற்பனை ஆனபொழுது தான் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரே இடத்தில் ஒரு லட்சம் ரூபாயை பணமாகப்பார்த்தேன்.  நரேந்திரமோதி காலமாக இருந்தால், ஐம்பது 2000 நோட்டுக்களை அனாயசமாக மணீபர்ஸில் சொருகி நடையைக் கட்டிவிடலாம். மாமாவுக்கு எண்ணிக்கொடுத்து உதவும் சாக்கில் ஒரு லட்சரூபாயை ஸ்பரிசித்ததில் அற்ப சந்தோஷம்.

க. பிக்கும், க.மு வுக்கும் இடைப்பட்ட காலகட்டம் என்பது சுமார் 6 மாதம். வீட்டை இடித்துக் கட்ட வசதியாக, எல்லோரும் காலி செய்தோம. நாங்கள், மற்றும் ராவ் மாமா குடும்பம் ஜெயிந்திபுரம் 2வது தெருகோடியில் ராமையா தெரு அருகில் பக்கத்து பக்கத்து வீடு. மற்றவர்கள் வேறு வேறு திசையில்.

6 மாதம் பின் கருப்பையா நிவாஸ், மன்னிக்க மீனாக்‌ஷி நிவாஸ் தயாரானது. சிலர் திரும்பினோம். அநியாய வாடகை 200 ரூபாய். என்றோம். அறுபதிலிருந்து இருனூறு அதிகம்தான். பல விதஙகளில் மாற்றம், முன்னேற்றம் (அன்புமணி மன்னிக்க). ஓட்டுத்திண்ணை, கான்க்ரீட்டாக மாறியது, பெரியதுமானது. மழைநீர் சேமிப்புக்கு மட்டுமே பயன்பட்ட கிணறுகள் மூடப்பட்டு, தனித்தனி கழிவறைகள். குழாய் நீர்..  எங்கள் கிரிக்கெட் பிட்சான நடைபாதை, ஒத்தையடிப் பாதையாகச் சுருங்கியது.

ஒரு காலனி ஒழுங்காக இருக்க ஒரு டீச்சர் தேவை என்றதை புரிந்து கொண்டதாலோ என்னவோ, அலமேலு டீச்சர் இடத்தை நிரப்ப, கிருஷ்ணமூர்த்தி மாமா குடும்பத்தின் வாயிலாக உமா டீச்சர் எங்களுக்குக் கிடைத்தார். 

க.மு.வில் 6வ்து வீடுதான் மிகச்சிறிய வீடு,
க.பி. யில் 6 வது வீடுதான் மிகப்பெரியது. காற்றுதான், நாம் கையோடு எடுத்துச்செல்லவேண்டிய ஒரு வஸ்து. புயலே வந்தாலும் காற்று உள்ளே நுழையாது.

க.பி. யில், கிருஷ்ண்மூர்த்திமாமா தான் பெரிய பரோபகாரி. பிறர்க்கு உதவுவதில், ராவ் மாமாவுக்கு டப் பைட் கொடுப்பார்.

அவர்கள் வீட்டுக் குழந்தைகள் வித்யா, ராஜி, குட்டிகுமார் (சுபாவைப் போல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்) எல்லோரும் என் அக்கா குழந்தைகளைப் போல் அபிமானம். ராஜி நான் துபாயில் இருந்த போது, அருகில் (10கிமீ) இருந்தாள். வித்யா, ராஜி, குமார் இன்றும் அடிக்கடி தொடர்பில்.

நாங்கள் 5 வது வீட்டில்.... ராவ் மாமா 2 வது வீட்டில். முதல் வீட்டில் யாரோ வருவார்கள் போவார்கள், பின்னர் ராவ் மாமா குடும்பம் முதல் வீட்டுக்கு மாறினார்கள். நாலாவது வீட்டில் மோஹன், சுந்தர் குடும்பம்.
மற்ற வீடுகளுக்குள் அவ்வளவு அந்நியோன்னியம் கிடையாது, சண்டையும் கிடையாது.

இந்த எல்லா மாற்றங்களுக்கும் மத்தியிலும் மாறாது இருந்த ஒரே விஷயம் ஒன்றுதான். ராவ் மாமா வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் கூட்டம் குறையவில்லை, கூடத்தான் செய்தது !!!

எனக்குப் பரிச்சயமான மீனாக்‌ஷி நிவாஸ், சுமார் 44 வயது பழைய பாரம்பர்யம். நம்மில் சிலர் (1974க்கு முன் வந்தவர்கள்) அதற்கு மேலும் அனுபவித்திருப்பார்கள்.

திருமணங்கள், குழந்தைபிறப்பு வாயிலாக குடும்பத்தில்பலரை இணைத்திருக்குறோம், பலரை இழந்திருக்கிறோம். ஆனாலும் இன்னும் அந்த பழைய பந்தமோ, நெகிழ்ச்சியோ, இன்னும் மாறவேயில்லை. கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பின் முந்தானாள் பேசிய ஸ்ரீதர், கிருஷ்ணா, பிருந்தாவிடம், 32 வருடங்களுக்குப் பிறகு பேசிய ராமசாமி மாமா, அலமேலு டீச்சர் மற்றும் ரகுவிடம், நேற்று பேசிய பிரேமாவிடம், அன்று விட்ட அதே இடத்திலிருந்து இன்று தொடர முடிகிறதென்றால் ஏதோ ஒன்று ஸ்பெஷல் ! என்ன ஸ்பெஷல் என்று வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை.

நம்மில் பலரும் பல தடைகளைக் கடந்து படித்து, முன்னேறி, பின்னேறி-பின்-மீண்டு, நல்ல நிலைமையில் இருக்க அன்னை மீனாக்‌ஷி மட்டுமல்ல. மீனாக்ஷி நிவாசும் ஒருவகையில் காரணம்.

மீனாக்ஷியை   நம்பினோர் கைவிடப்படார். ,


(பின்குறிப்பு: (1) சுவைகூட்டுவதற்காக, (எனக்குத்தெரிந்து) எந்த கற்பனையையும் சேர்க்கவில்லை.   நகைச்சுவையாக நான் சொல்ல நினைத்து எவர் மனத்தையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனால், என்னை பழி வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒன்று உண்டு, நீங்கள் கண்ட மீனாக்ஷி நிவாஸ் அனுபவத்தை உங்கள் பாணியில் பகிர்ந்து என்னை நார்நாராகக் கிழிக்கலாமே)


(2) வேறு எந்த மீனாக்ஷி நிவாஸ் படங்கள் இல்லாததால் எங்கள் குடும்ப ஆல்பத்திலிருந்து சில படங்கள் இடம் பெற்றுள்ளன.

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...